உமேஷ் கேதர், தன் அரிவாளை எடுத்து, கரும்புச் செடியின் அடியை வெட்டுக்கிறார். உடனே, அடுத்த செடிக்கு செல்கிறார்; பின்னர் மற்றொன்றுக்கு; பின்பு அடுத்தொன்றுக்கு! கரும்புகளை வெட்ட உடல்பலமும், ஆற்றலும் அவசியம். அவர் நான்கு ஏக்கர் நிலத்தில் கடும் வெயிலில் இப்பணியைச் செய்துக்கொண்டிருக்கிறார். “நாங்கள் காலை 5:30 மணிக்கு ஆரம்பித்தோம், இந்த வேலை மாலை 7 மணி வரை இழுக்கும்.”, பணியில் இருந்து சற்றும் கண் எடுக்காமல் அவர் கூறுகிறார். “கடந்த இரண்டரை மாதங்களாக (நவம்பர் மாதம் முதல்) இப்படிதான் என் நாட்கள் இருக்கின்றன. அடுத்த இரண்டரை மாதங்களுக்கும் இப்படித்தான் இருக்கும்”.
அவரின் மனைவி முக்தா, கரும்பு தண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பத்து பத்தாக அடுக்கி, கரும்பு தழையைப் பயன்படுத்தி சேர்த்து கட்டி வைக்கிறார். பின்னர், அதனை கொத்தாக எடுத்து, தன் தலையில் சரியாக வைத்துக்கொண்டு, வயலில் நின்றுக்கொண்டிருக்கும் சரக்கு வண்டியை நோக்கி செல்கிறார். அந்த பாதை துண்டாகப்பட்ட கரும்புகளுடன் வழுக்கும் நிலையில் உள்ளது. “சிறிது நேரம் கழித்து, நாங்கள் பணிகளை மாற்றிக்கொள்வோம். இந்த சமயத்தில் எங்களின் தோல்பட்டையும் கைகளும் மிகவும் வலிக்கும். சில நேரங்களில் தொடர்ந்து வேலை செய்ய நாங்கள் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம்.”, என்று அவர் கூறுகிறார்.
மகராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் வட்வானி தாலுகாவிலுள்ள சன்னகோடா கிராமத்தின் வயல்களில் கிட்டதட்ட 10 தம்பதியர்கள் பணி செய்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து கரும்புகளை வெட்டும் அரிவாளின் சத்ததில் வயல்கள் அதிர்த்துக்கொண்டிருந்தன. உமேஷ் மற்றும் முக்தா போன்று சிலர் அங்கு விவசாயிகளே; மற்றவர்களுக்கு தங்களுக்கென நிலங்கள் இல்லை. பஞ்சு விவசாயத்தில் சுமாரான வருவாய்கூட இல்லாமல், மூன்று ஏக்கர் நிலத்தில், கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக, கரும்புகள் வெட்டுபவர்களாக இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். “இந்த கரும்பு வெட்டும் வேலையில் எங்களுக்கு கிடைக்கும் பணம் போதுமானதாக இல்லை. ஆனால், குறைந்தப்பட்சம் எங்களுக்கு வருமானம் வருகிறது”, என்கிறார் உமேஷ்.







