”எங்களின் தந்தைக்கு இறுதி மரியாதை கொடுக்க முடியாதே என கவலைப்பட்டோம்.”
பஞ்சநாதன் சுப்ரமண்யம் இறந்து இரண்டு மாதங்களாகியும் அவரது மகன் எஸ்.ரமேஷ் இன்னும் துக்கத்திலிருந்து மீளவில்லை. “கோவிட்19 அறிகுறிகள் தென்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது, திரும்ப அவரை உயிரற்ற சடலமாக கொண்டு வருவோம் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.”
இந்திய ராணுவத்தில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற 68 வயது சுப்ரமண்யத்துக்கு பெரிய ஆரோக்கிய குறைபாடு எதுவும் வந்ததில்லை. ராணுவத்தில் இருந்ததை பெருமையாக கருதிய அவர், “உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டார். தினசரி நடைபயிற்சியை நிறுத்தியதில்லை. உணவில் கவனமாக இருப்பார்,” என்கிறார் கும்பகோணத்தை சேர்ந்த 40 வயது ரமேஷ். “மருத்துவமனையில் சேர்க்கும்போது கூட குணமாகி விடுவார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.”
சுப்ரமண்யம் மரணமுற்ற ஆகஸ்ட் 14ம் தேதி, ரமேஷ்ஷும் அவரும் குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயிருந்தனர். அந்த நிலைகுலைவு இறப்பினால் மட்டும் அவர்களுக்கு ஏற்படவில்லை. கோவிட்19 பாதித்து இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் பற்றி இருந்த கற்பிதங்களும் மாநிலமெங்கும் அதற்கு இருந்த எதிர்ப்புணர்வும் அடுத்து என்ன செய்வது என தெரியாத குழப்பத்தில் அவர்களை நிறுத்தியிருந்தது. “உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை,” என்கிறார் ரமேஷ். “கொரோனாவால் நேர்ந்த மரணம் என்பதால் அவர்களுக்கு இருந்த தயக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.”
அப்போதுதான் முற்றிலும் எதிர்பார்க்காத திசையிலிருந்து உதவிக்கரம் நீண்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. சுப்ரமண்யம் மரணமடைந்த கொஞ்ச நேரத்திலேயே ஆறு தமுமுக தன்னார்வலர்கள் வந்தனர். மருத்துவமனையிலிருந்து உடலை பெறுவதில் தொடங்கி, சொந்த ஊர் கும்பகோணத்தில் முறையான இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யும் வரை (சில இந்து சமூகங்கள் எரியூட்டுவதற்கு பதிலாக புதைப்பதுண்டு) குடும்பத்துக்கு உதவினார்கள்.
குடும்பத்தை பொறுத்தவரை அது மிகப் பெரும் அதிர்ஷ்டம். தமுமுகவுக்கோ புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முழுக்க அவர்கள் மேற்கொண்ட 1100 இறுதிச்சடங்குகளில் சுப்ரமண்யத்தின் இறுதிச்சடங்கும் ஒன்று. இன்ன சாதி, மதமென பாராமல் எல்லா மரணங்களுக்கும் அவரவரின் மத நம்பிக்கைக்குரிய சடங்குகள் மற்றும் குடும்பத்தின் விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்19 மரணங்களில், உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் முறைகளை பின்பற்றி எட்டடி ஆழத்தில் உடல்களை தமுமுகவினர் புதைக்கின்றனர்.









