மராத்வடாவின் சிறந்த பயிர் தாகம்தான். கரும்பை விடுங்கள். தாகம், மனிதன் மற்றும் வணிகம் எதையும் மறைத்து விடும். தாகத்தை அறுவடை செய்பவர்கள் கோடிக்கணக்கில் ஒருநாளுக்கு இப்பகுதியில் சம்பாதிக்கிறார்கள். சாலையில் தென்படும் வேன்களில் நீங்கள் காணும் காய்ந்துபோன கரும்புகள் கால்நடைத் தீவனமாக மிஞ்சும். அதே சாலைகளில் நீங்கள் பார்க்கும் “டேங்கர் லாரிகள்” லாபம் தேடி டவுன்களுக்கும் கிராமங்களுக்கும் ஆலைகளுக்கும் சென்று கொண்டிருக்கும். தண்ணீர் சந்தைகள்தான் பெரிய சந்தைகள். டேங்கர்கள் அவற்றின் அடையாளம்.

ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள் தினமும் மராத்வடாவில் குறுக்கும் மறுக்குமாக செல்கின்றன. தண்ணீர் சேகரிக்கின்றன. கொண்டு செல்கின்றன. விற்கின்றன. அரசின் ஒப்பந்தத்துக்கு இயங்குபவை சொற்பம்தான். அவற்றில் சில காகிதத்தில் மட்டும்தான் இருக்கும். தனியார் இயக்கும் டேங்கர் லாரிகள்தான் வேகமாக விரிவடையும் தண்ணீர் சந்தைகளுக்கு முக்கியமானவை.

எம்எல்ஏக்களும் நிறுவன முதலாளிகளாக இருந்து ஒப்பந்ததாரர்களாக மாறியவர்களும் ஒப்பந்ததாரர்களாக இருந்து நிறுவன முதலாளிகளாக மாறியவர்களும் டேங்கர் லாரி பொருளாதாரத்துக்கு முக்கியமானவர்கள். அதிகாரிகளும் கூட. பலர் டேங்கர் லாரிகளின் நேரடி உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அல்லது பினாமி பயன்படுத்துகிறார்கள்.

டேங்கர் என்பது என்ன? உண்மையில் பெரிய ட்ரம்களாக உருட்டப்பட்ட இரும்புத் தகடுகள்தான், டேங்கர்கள். 10,000 லிட்டர் தண்ணீர் டேங்கரில் 5 X 18 அடி தகடுகள் மூன்று இருக்கும். ஒவ்வொன்றின் எடையும் 198 கிலோவாக இருக்கும். உருட்டப்பட்ட இரும்புத் தகடுகள் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும். இவற்றை ட்ரக்குகளிலோ லாரிகளிலோ பிற பெரிய வாகனங்களிலோ கிடத்தி மாட்டி எடுத்துச் செல்ல முடியும். சிறு வாகனங்கள் சிறு கொள்ளளவு கொண்ட உருளைகளை சுமந்து செல்லும். ஒரு 5,000 லிட்டர் உருளையை ஒரு பெரிய வேனுக்கு பின்னால் பொருத்த முடியும். அந்த கொள்ளளவு 1000 மற்றும் 500 லிட்டர் ட்ரம் வரை இருக்கின்றன. சிறு ட்ராக்டர்களிலும் திறந்த ஆட்டோக்களிலும் மாட்டு வண்டிகளிலும் கூட கொண்டு செல்ல முடியும்.

தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிப்பதால் நூற்றுக்கணக்கான உருளைகள் ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் உருவாக்கப்படுகின்றன. ஜல்னா மாவட்டத்தின் ஜல்னா டவுனில் கிட்டத்தட்ட 1,200 டேங்கர்களும் ட்ரக்குகளும் ட்ராக்டர்களும் ஆட்டோக்களும் வெவ்வேறு கொள்ளளவு உருளைகளுடன் பறந்து கொண்டிருக்கின்றன. நீராதாரங்களுக்கு இடையேயும் தேவையுடன் இருக்கும் பொதுமக்களின் பகுதிகளிலும் அவை ஓடிக் கொண்டிருக்கின்றன. ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களுடன் செல்பேசிகளில் பேரம் பேசுகிறார்கள். ஆனாலும் அதிக அளவிலான தண்ணீர் அதிகமாக பணம் கொடுக்கும் ஆலைகளுக்குதான் செல்கிறது. “டேங்கர் உரிமையாளர்கள் ஒருநாளில் 60 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்கின்றனர்,” என்கிறார் மராத்தி தினசரியான லோக்சட்டாவின் லஷ்மண் ரவுத். “அந்தளவுக்கு தண்ணீர் சந்தை மதிப்பு வாய்ந்தது.” ரவுத்தும் அவரின் சக செய்தியாளர்களும் இந்தப் பகுதியின் தண்ணீர் வர்த்தகத்தை பல ஆண்டுகளாக செய்தியாக்கி இருக்கின்றனர்.

உருளைகளின் அளவு மாறும். ”ஆனால் இந்த டவுனில் அவற்றின் சராசரி கொள்ளளவு 5,000 லிட்டராக இருக்கிறது,” என்கிறார் ரவுத். இந்த 1,200 வாகனங்களில் ஒவ்வொன்றும் ஒருநாளில் குறைந்தது மூன்று பயணங்களை மேற்கொள்கிறது. 24 மணி நேரங்களில் அவை கிட்டத்தட்ட ஒரு கோடியே எண்பது லட்ச லிட்டர் தண்ணீரை சுமக்கின்ற்ன. தற்போதைய விலையான ஒரு லிட்டர் 350 ரூபாய் என்ற கணக்கில் பார்த்தால் ஒருநாளில் 60 லட்சத்துக்கும் அதிக வணிகம். அந்த விலைகளும் வீட்டுத் தேவை, கால்நடை, தொழில் நிறுவனம் என பயன்பாட்டுக்கு ஏற்ப மாறும்.”

டேங்கர் பொருளாதாரத்தை பஞ்சம்தான் இயக்குகிறது. டேங்கர்கள் உருவாக்கப்படுகின்றன. பழுது பார்க்கப்படுகின்றன. வாடகைக்கு விடப்படுகின்றன. விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன. ஜல்னாவுக்கு சென்று கொண்டிருக்கும்போது பரபரப்பாக இருந்த ஓர் இடத்தைக் கண்டோம். அகமது நகர் மாவட்டத்தில் இருந்த ரகுரி பகுதி. ஒரு 10,000 லிட்டர் கொள்ளளவு டேங்கரை உருவாக்க இங்கு 30,000 ரூபாய் ஆகிறது. இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. ரகுரி ஆலையில், டேங்கர் தொழில்நுட்பத்தைப் பற்றிய உடனடி கல்வி பெற்றுக் கொண்டோம். “ஒவ்வொரு 5 X 18 அடி தகடும் 3.5 மிமீ தடிமன் கொண்டது,” என்கிறார் தயாரிக்கும் யூனிட்டின் உரிமையாளரான ஷ்ரீகாந்த் மெலாவானே. மனித சக்தி கொண்டு தகடுகள் உருட்டப்படும் இயந்திரத்தை எங்களுக்குக் காட்டுகிறார்.

PHOTO • P. Sainath

இந்த இயந்திரம் 15 X 18 அடி தகடுகளை உருட்டுகிறது. அவை பின்னர் ஒட்டப்பட்டு ரகுரி ஆலையின் பின்னணியில் இருக்கும் டேங்கர்களாக மாற்றப்படுகின்றன

“10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் 800 கிலோ எடை கொண்டது,” என்கிறார் அவர். அதற்குத் தேவையான மூன்றுத் தகடுகளின் விலை கிட்டத்தட்ட 27,000 ரூபாய் (ஒரு கிலோ ரூ.35 என்கிற கணக்கில்). உழைப்பு, மின்சாரம் மற்றும் பிற செலவுகள் என 3,000 ரூபாய் அதிகமாகிறது. “10,000 லிட்டர் டேங்கரை தயாரிக்க ஒரு முழு நாள் தேவைப்படுகிறது,” என்கிறார் அவர். “இந்த நேரம் பரபரப்பான நேரம். மூன்று மாதங்களில் நாங்கள் 150 (வெவ்வேறு அளவுகளில்) டேங்கர்கள் உருவாக்கியிருக்கிறோம்.” அவரது ஆலை போல ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் நான்கு உள்ளன. அவையும் அதே வேகத்தில்தான் டேங்கர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் இதே வேலையைச் செய்யும் 15 ஆலைகள் இருக்கின்றன.

“20,000 லிட்டர் டேங்கர்கள் மாட்டுப் பண்ணைகளுக்கும் ஆலைகளுக்கும் செல்லும்,” என்கிறார் மெலாவனே. “10,000 லிட்டர் டேங்கர்கள் நகரங்களுக்கும் பெரிய டவுன்களுக்கும் செல்லும். நான் செய்த சிறியவை வெறும் 1,000 லிட்டர் மட்டுமே பிடிக்கும். சிறியவைகளை தோட்டக்கலை செய்பவர்கள் வாங்குவார்கள். பெரும்பாலும் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு கட்டுபடியாகாத மாதுளை விளைவிப்பவர்கள் வாங்குவார்கள். இந்த ட்ரம்களை அவர்கள் மாட்டு வண்டிகளில் கொண்டு செல்வார்கள். அவர்களே நீர் விடுவதை நான் பார்த்திருக்கிறேன்.”

ஆனால் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மூர்க்கமான நிலத்தடி நீர் உறிஞ்சலிலிருந்து வருகிறது. தனியார் ஆழ்துளைக் கிணறுகள் தொடங்கி, பஞ்சத்தில் காசு பார்க்கவென தோண்டப்பட்ட சிலப் புதிய கிணறுகள் வரை தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நிலத்தடி நீரில் பற்றாக்குறை ஏற்பட்டால் இது இல்லாமல் போகும். தண்ணீர் கிடைக்கும் கிணறுகளை பலர் வாங்கிப் பணம் பார்க்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஜல்னாவில் இருக்கும் சில தண்ணீர் குடுவை ஆலைகள் புல்தானாவிலிருந்து தண்ணீர் கொண்டு வருகின்றன. அதுவே தண்ணீர் நெருக்கடி கொண்ட மாவட்டம்தான். எனவே பஞ்சம் அருகாமைப் பகுதிகளுக்கு விரைவிலேயே பரவி விடும். சிலர் பொது நீராதாரங்களிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் திருடுகின்றனர். டேங்கர் உரிமையாளர் 10,000 லிட்டர் நீரை 1000-லிருந்து 1,500 ரூபாய் வரைக் கொடுத்து வாங்குகிறார். அதே அளவை அவர் 3,500 ரூபாய்க்கு விற்று 2,500 ரூபாய் லாபம் பார்த்துக் கொள்கிறார். ஒருவேளை அவரிடமே ஆழ்துளைக் கிணறு இருந்தால் அவருக்கான செலவு இன்னும் குறையும். நீராதாரங்களை திருடினால் அவருக்குச் செலவே கிடையாது.

“50,000க்கும் மேலான (பெரிய மற்றும் நடுத்தர) டேங்கர்கள் இந்த வருடத்தில் மாநிலம் முழுக்கத் தயாரிக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் முன்னாள் மக்களவை உறுப்பினரான பிரசாத் தான்புரே. “கடந்த வருடங்களில் தயாரித்த ஆயிரக்கணக்கானவற்றையும் மறந்து விடாதீர்கள். எனவே இப்போது எத்தனை பயன்பாட்டில் இருக்குமென யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.” அனுபவம் நிறைந்த அரசியல்வாதியான தான்புரேக்கு இங்கிருக்கும் தண்ணீர் பிரச்சினை பற்றி நன்றாக தெரியும். புதிய டேங்கரின் விலை 1 லட்ச ரூபாய் வரை சொல்லப்படுகிறது.

50,000 புதிய டேங்கர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், 200 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் கடந்த சில மாதங்களில் மட்டும் மாநிலம் முழுக்க நடந்திருக்கிறது என அர்த்தம். வேறு இடங்களில் பாதிப்புகள் நேர்ந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “கட்டுமான வேலைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. தோண்டுதல், தூண் கட்டுதல் என எந்த வேலையும் நடக்கவில்லை,” என்கிறார் மெலாவனே. அதே போல இந்த கவர்ச்சி மிகுந்த சந்தையில் புதிதாக வருபவர்களும் இருக்கின்றனர். ஜல்னாவில் டேங்கர் உருவாக்கும் வேலை செய்யும் சுரேஷ் பவார் சொல்கையில், “கிட்டத்தட்ட 100 டேங்கர் தயாரிப்பாளர்கள் இந்த டவுனில் இருக்கின்றனர். அதில் 90 பேர் இந்த வேலையை முன்பு செய்தவர்கள் கிடையாது. புதிதாக தொழிலுக்கு வந்திருப்பவர்கள்,” என்கிறார்.

ஷெல்காவோன் கிராமத்தின் விவசாயியான (உள்ளூர் அரசியல்வாதியும் கூட) தீபக் ஆம்போர் ஒரு நாளுக்கு 2,000 ரூபாய் செலவழிக்கிறார். “ஒவ்வொரு நாளும் ஐந்து டேங்கர் தண்ணீரை என்னுடைய 18 ஏக்கர் நிலத்துக்கு பயன்படுத்துகிறேன். அதில் ஐந்து ஏக்கர் சாத்துக்குடி தோப்பும் அடக்கம். வட்டிக்காரரிடமிருந்து நான் கடன் வாங்க வேண்டும்.” பயிர் கைகொடுக்கவில்லை என தெரிந்த பிறகு ஏன் அதிகப் பணத்தை செலவழிக்க வேண்டும்? “இப்போதைக்கு என் தோப்பேனும் அழியாமல் இருக்க வேண்டும்.” இங்குக் கொடுக்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் வருடத்துக்கு 24 சதவிகிதத்தையும் தாண்டும்.

விஷயங்கள் மோசமாக இருந்தாலும் கொடூரத்தை எட்டவில்லை. இன்னும் எட்டவில்லை. ஜல்னாவிலிருக்கும் பலர் டேங்கர்களின் உதவியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சிக்கலின் பரிமாணங்களும் டேங்கர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் இருக்கின்றன. கொடுமையான விஷயங்கள் இன்னும் நேரவில்லை. அந்தக் கொடுமை மழைப் பொழிவைச் சார்ந்தது மட்டுமில்லை. ஒரு அரசியல் தலைவர் கிண்டலாக, “10 டேங்கர்களுக்கு நான் சொந்தக்காரனாக இருந்திருந்தால், நானும் இந்த வருடம் பஞ்சம் வர பிரார்த்திப்பேன்,” என்கிறார்.

இக்கட்டுரை முதன்முதலாக The Hindu -வில் மார்ச் 27, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.

மீதமுள்ள பாதி வறண்டது எப்படி யும் படியுங்கள்

பி.சாய்நாத்தின் இக்கட்டுரை இடம்பெற்ற தொடருக்காக 2014ம் ஆண்டு World Media Summit Global Award for Excellence விருது அவருக்குக் கிடைத்தது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan