2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.

"நான் இதைச் சொன்னால் மக்கள் என்னை பைத்தியம் என்று கூறுவார்கள்" என்று 53 வயதான ஞானு காரத் ஒருநாள் பிற்பகல் வேளையில் தனது கல் வீட்டின் மண்தரையில் அமர்ந்தபடி கூறுகிறார். ஆனால் 30 - 40 ஆண்டுகளுக்கு முன்பு, மழையின் போது ஏற்படும் பெருவெள்ளத்தில் எங்களது வயல்களுக்கு மீன்கள் அடித்துக்கொண்டு வரும் (அருகில் உள்ள ஓடையில் இருந்து). "நான்  அவற்றை என் கைகளாலேயே பிடித்து இருக்கிறேன்" என்கிறார்.

இது ஜூனின் நடுப்பகுதி, நாங்கள் அவரது வீட்டை அடைவதற்கு சிறிது தூரத்திற்கு முன்பு 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கர் காரத் வஸ்தி குக்கிராமத்தில் உருண்டு கிடந்தது. காரத் அவரது மனைவி பூலாபாய் மற்றும் அவர்களது கூட்டு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கிடைக்கக்கூடிய அனைத்து பாத்திரங்களிலும், பானைகளிலும், கேன்களிலும், ட்ரம்களிலும் தண்ணீரை சேமிப்பதில் மும்முரமாக இருந்தனர். டேங்கர் ஒரு வாரம் கழித்து வந்திருக்கிறது, இங்கு தண்ணீர் பற்றாக்குறை மிகவும் கடுமையாக இருக்கிறது.

"நீங்கள் நம்ப மாட்டீர்கள், 50 - 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மிகக் கடுமையாக மழை பெய்யும், மழையில் நனையும் ஒருவரால் கண்களை கூட திறக்க முடியாது," என்று 75 வயதான கங்குபாய் கூலிக் எங்களிடம் கூறினார், அவர் சங்கோலி தாலுகாவிலுள்ள காரத் வஸ்தி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கௌடுவாடி கிராமத்திலுள்ள தனது வீட்டின் அருகில் உள்ள வேப்பமர நிழலில் அமர்ந்த படி எங்களிடம் பேசினார், இக்கிராமத்தில் சுமார் 3200 மக்கள் வசிக்கிறார்கள்.  ”நீங்கள் இங்கே வரும் வழியில் கருவேல மரங்களை பார்த்தீர்களா? அந்த முழு நிலமும் சிறந்த மட்கியை (சிறுபயறை) உற்பத்தி செய்தது. முரும் என்று அழைக்கப்படும் பசால்டிக் பாறை மழை நீரை தக்க வைத்துக் கொண்டு எங்களது நிலத்தில் இருந்து நீரூற்றாகத் தொடங்கும். ஒரு ஏக்கரில் 4 வரிசையில் கம்பு விதைத்தால் 4 - 5 மூடைகள் (2-3 குவின்டால்கள்) விளையும். இந்த மண் அவ்வளவு வளமானது."

மேலும் தனது 80களில் இருக்கும் ஹவுசாபாய் ஆல்டர், கௌடுவாடிக்கு அருகிலுள்ள ஆல்டர் வஸ்தி என்னும் குக்கிராமத்தில் உள்ள தனது குடும்ப பண்ணையில் இருக்கும் இரட்டை கிணறுகளைப் பற்றி நினைவு கூர்ந்தார். "இரு கிணறுகளிளும் (60 ஆண்டுகளுக்கு முன்பு) மழைக்காலத்தில் நீர் நிரம்பி இருக்கும். ஒவ்வொன்றிலும் இரண்டு மோட்டுகள் (காளை மாடுகளைக் கொண்டு தண்ணீர் இரைக்கும் அமைப்பு) இருந்தது, மேலும் அவை நான்கும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியதாக இருந்தது. இரவோ பகலோ எந்த நேரமாக இருந்தாலும், தேவை என்று வருபவர்களுக்கு எனது மாமனார் நீரை வாரி வழங்குவர். இன்றோ, ஒரு பானை தண்ணீர் கூட முழுதாக கிடைக்காது. எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது" என்கிறார்.

PHOTO • Sanket Jain

கூட்டுக்குடும்பமாக காரத் குடும்பம், ஞானு ( இடது ஓரம்) மற்றும் பூலாபாய் (கதவின் இடப்புறம்): அவரது வயலில் மீன்கள் மிதந்ததை அவர் நினைவு கூர்கிறார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சங்கோல் தாலுகா மழை மறைவுப் பிரதேசத்தில் (மாண்தேஷில்) அமைந்திருந்தாலும்( மழை காற்றை தடுக்கும் அரணாக மலைகள் அமைந்திருப்பது), இது போன்ற கதைகளால் நிரம்பியிருக்கிறது. சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சங்கோல் (பொதுவாக சங்கோல என்று அழைக்கப்படுகிறது) மற்றும் மல்ஷிராஸ் ஆகிய தாலுகாக்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன; சாங்லி மாவட்டத்தின் ஜாட், அட்பாடி, காவதேமாஹங்கள் ஆகிய தாலுகாக்கள் மற்றும் சதாரா மாவட்டத்தில் உள்ள மாண் மற்றும் கட்டவ் தாலுகாக்களும்  இப்பகுதியில் அடங்கும்.

நல்ல மழையும் வறட்சியும் இங்கு நீண்ட நாட்களாக சுழற்சி முறையில் மாறி மாறி வரும், மேலும் பற்றாக்குறைகளின் காலத்தைப் போல மக்கள் நினைவுகளில் ஏராளமான நினைவுகள் பொதிந்துள்ளன. ஆனால் இந்த கிராமங்களில் இப்போது "எல்லாம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது", ஏராளமாக கிடைத்ததெல்லாம் இப்போது இறந்த காலம் ஆகிவிட்டது, பழைய சுழற்சி முறை எப்படி உடைந்தது என்பது போன்ற கதைகள் இந்த மக்களிடையே ஏராளமாக உள்ளது. இவ்வளவு ஏன், "எங்களது கனவுகளில் கூட மழை வருவது நின்றுவிட்டது", என்கிறார் கௌடுவாடி கிராமத்தைச் சேர்ந்த நிவ்ருத்தி ஷென்ஜ்.

கௌடுவாடி கிராமத்தில், மே மாத பிற்பகல் வேளையில் கால்நடை முகாமில் அமர்ந்தபடி தனக்கு பான் தயாரித்துக் கொண்டிருக்கும், 83 வயதான தாத்யா என்று பிரியமாக அழைக்கப்படும், விதோப சோமா கூலிக், "இப்போது முகாம் இருக்கும் இந்த நிலம், கம்பு விளைச்சலுக்கு பிரபலமானது. கடந்த காலத்தில் நான் கூட அதை விளைவித்து இருக்கிறேன்," என்றார். மேலும் "இப்போது எல்லாம் மாறிவிட்டது" என்கிறார் கவலையுடன். "மழை எங்களது கிராமத்தில் இருந்து மறைந்துவிட்டது," என்கிறார்.

தலித் ஹோலார் சமூகத்தைச் சேர்ந்த தாத்யா, தனது குடும்பத்தை சேர்ந்த 5-6 தலைமுறை முன்னோர்களைப் போலவே அவரும் தன் வாழ்நாள் முழுவதையும் கௌடுவாடி கிராமத்தில் கழித்துள்ளார். இது ஒரு கடினமான வாழ்க்கை. 60 வருடங்களுக்கும் மேலாக அவரும் அவரது மனைவி கங்குபாயும், கரும்பு வெட்டுவதற்காக சாங்லி மற்றும் கோலாப்பூர்க்கு குடிபெயர்ந்தனர், அங்கு அரசுக்குச் சொந்தமான பண்ணைகளிலும் பிற மக்களுக்கு சொந்தமான பண்ணைகளிலும் வேலை செய்தனர். "எங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை 10 -12 வருடங்களுக்கு முன்புதான் வாங்கினோம். அது வரை, நாங்கள் மிகக் கடுமையாக உழைத்தோம்," என்கிறார் அவர்.

PHOTO • Sanket Jain

கௌடுவாடி கிராமத்தில் மே மாதத்தில் கால்நடை முகாமில், விதோபா கூலிக் அல்லது தாத்யா என்று அழைக்கப்படுபவர்,  'மழை, எங்களது கிராமத்தில் இருந்து மறைந்து விட்டது,' என்று கூறுகிறார்.

தற்போது, மாண்தேஷில் நிலவும் தொடர்ச்சியான வறட்சி குறித்து தாத்யா கவலை கொள்கிறார். இயற்கையாக சுழற்சி முறையில்  பின்னர் பெய்யும் நல்ல மழை 1972 க்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பி வரவே இல்லை, என்று  அவர் கூறுகிறார். "இது ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது. எங்களுக்கு (போதுமான) அளவிற்கு பருவமழைக்கு முந்திய மழையோ(வாலிவ்) அல்லது திரும்பும் பருவ மழையோ கிடைக்கவில்லை. மேலும் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வருடம் (2018ல்) குறைந்தது நல்ல வாலிவ் மழையாவது எங்களுக்கு கிடைத்தது, இந்த வருடம் இதுவரை ஒன்றும் பெய்யவில்லை.  பின்னர் நிலம் எப்படி குளிர்ச்சியடையும்?" என்று வினவுகிறார்.

கௌடுவாடி கிராமத்தில் வசிக்கும் பல வயதான கிராமவாசிகள் 1972 வறட்சியை தங்கள் கிராமத்தின் மழை மற்றும் வறட்சியின் சுழற்சி முறையில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையாக நினைவு கூர்ந்தனர். அந்த ஆண்டு சோலாப்பூர் மாவட்டம் வெறும் 327 மில்லி மீட்டர் மழையையே பெற்றது (இந்திய  நீர் நிலைகளின் நிலையைப் பற்றிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி) 1991க்கு பிறகு இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.

கங்குபாயைப் பொருத்தவரையில் 1972 ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் நினைவுகள் கடின உழைப்பின் நினைவுகள் ஆகும் - அவருடைய வழக்கத்தை விட  மிகக் கடுமையான பணி மற்றும் பசி. "(வறட்சியின் போது கூலிக்காக) நாங்கள் சாலைகள் அமைத்தோம், கிணறுகள் தோன்றினோம், கற்களை உடைத்தோம் என்கிறார். உடம்பில் தெம்பு இருந்தது வயிற்றில் பசி இருந்தது. 100 குவின்டால் கோதுமை அரைக்க 12 அணா (75 பைசா) நான் சம்பளமாக பெற்றேன். அந்த வருடத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகியது," என்று கூறுகிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Medha Kale

2018 ஆம் ஆண்டில் சங்கோலில் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு மழையையே பெற்றது, மேலும் தாலுகாவிலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஒரு மீட்டருக்கும் மேல் சரிந்தது.

85 வயதான தாதா கடாடே, கால்நடை முகாமிலுள்ள டீக்கடையில் அமர்ந்தபடி, "வறட்சி மிகவும் கடுமையாக இருந்தது நான் எனது 12 கால்நடைகளுடன் 10 நாட்கள் தனியாக நடந்தே கோலாப்பூரை அடைந்தேன்," என்று கூறினார். "மீரஜ் சாலையிலுள்ள அனைத்து வேப்ப மரங்களும் மொட்டையாக இருந்தன. அதன் அனைத்து இலைகளும், தளிர்களும் கால்நடைகளுக்கும், செம்மறி ஆடுகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டன. அதுவே என் வாழ்நாளின் மிக மோசமான நாட்கள். அதன் பிறகு இயல்புநிலைக்கு எதுவுமே திரும்பவில்லை," என்று கூறுகிறார்.

2005 ஆம் ஆண்டில் நீடித்த வறட்சி, சோலாப்பூர், சாங்லி, மற்றும் சத்தாரா ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து வறட்சிக்குட்பட்ட பகுதிகளை பிரித்து மாண்தேஷ் என்னும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கோரிக்கையை எழுப்புவதற்கு வழிவகுத்தது.( இந்த பிரச்சாரத்தின் போது அதன் தலைவர்கள் சிலர் இந்தப் பிராந்தியத்திற்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற பிரச்சனைகளில் கவனத்தை திசை திருப்பிய போது இந்த பிரச்சாரம் அதன் சூட்டை இழந்தது)

1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி தான் என்றாலும், கௌடுவாடி மக்கள் பலர் அதனை இன்றும் அதனை ஒரு மைல்கல்லாக நினைவு கூர்கின்றனர், சோலாப்பூர் மாவட்டத்தின் அரசாங்க வலைதளத்தின் தரவுகள் 2003 ஆம் ஆண்டில் (278.7மி.மீ) மற்றும் 2015 ஆம் ஆண்டில் (251. 18 மி.மீ) மழையையும் பெற்றது, இது இன்னும் குறைவான அளவு மழையை பெற்றிருப்பதை காட்டுகிறது.

மேலும் 2018 ஆம் ஆண்டில் சங்கொலி வெறும் 241.6 மி.மீ மழையே பெய்தது, இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு, வெறும் 24 மழை நாட்களை மட்டுமே பெற்றது, என்று மகாராஷ்டிராவின் வேளாண்மை துறையின் 'மழைப்பொழிவு பதிவு மற்றும் பகுப்பாய்வு' வலைதளம் கூறுகிறது. இந்தப் பகுதியில் ஒரு 'சாதாரண' மழைப்பொழிவு என்பது 537 மி.மீ என்பதாகும், என்கிறது வேளாண் துறையின் குறிப்பு.

எனவே, நீர் நிறைந்த காலங்கள் குறைந்துவிட்டதாகவோ அல்லது மறைந்துவிட்டதாகவோ தான் தோன்றுகிறது, அதே நேரத்தில் வறண்ட நாட்களும், வெப்பமும் மற்றும் நீர் பற்றாக்குறையான மாதங்களும் அதிகரித்து வருகின்றன.

PHOTO • Medha Kale

பயிர் இழப்பு மற்றும் உயர்ந்து வரும் வெப்பம் ஆகியவை மண்ணின் வறட்சிக்கு மேலும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் கௌடுவாடியில் உள்ள கால்நடை முகாமில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை எட்டியது. அதீத வெப்பத்தினால் காற்றும் மண்ணும் அதிகமாக சூடாகின்றன. நியூயார்க் டைம்ஸின் பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய ஒரு ஊடாடும் தரவு 1960களில் தாத்யாவுக்கு 24 வயதாக இருந்தபோது சங்கோல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடிய 144 நாட்களைக் கொண்டிருந்தது. இன்று அந்த எண்ணிக்கை 177 ஆக உயர்ந்திருக்கிறது, மேலும் அவர் 100 வயது வரை வாழ்ந்தாரானால், அதாவது 2036 ஆம் ஆண்டில், அது 193 நாட்களை எட்டும் என்கிறது.

கால்நடை முகாமில் உட்கார்ந்து கொண்டு, தாத்யா, "முன்னர், எல்லாம் சரியான நேரத்தில் நிகழ்ந்தது" என்று நினைவு கூர்ந்தார். மிரிக் மழை(மிருக் அல்லது ஓரியன் விண்மீன் கூட்டத்தின் வருகையுடன் பெய்யும் மழை) எப்போதும் சரியாக ஜூன் 7 அன்று ஆரம்பிக்கும் மேலும் நல்ல மழை பொழிவை தந்து பிவ்காட்டில்( ஓடையில்) பாஷ் (ஜனவரி) வரை நீரோடும். நீங்கள் ரோகிணி (மே மாத இறுதியில் தோன்றும் விண்மீன் கூட்டம்) மற்றும் மிரிக் மழையில் விதைக்கும் போது அந்தப் பயிர் வானத்தால் பாதுகாக்கப்படுகிறது. அந்தப் பயிர் சத்தானதாகவும் மேலும் அதை உண்பவர் ஆரோக்கியமாகவும் இருப்பார். ஆனால் பருவங்கள் இப்போது முன்பு போல் இல்லை."

கால்நடை முகாமில் அவருடன் அமர்ந்திருக்கும் மற்ற விவசாயிகளும் அதனை ஆமோதிக்கிறனர். மழைப் பொழிவின் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையைப் பற்றி அனைவரும் கவலையுடன் இருக்கிறார்கள். "கடந்த ஆண்டின் பஞ்சாங்கம் (சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்ட இந்து பஞ்சாங்கம்) 'கவீல் டு பவீல்' என்று கூறியது - சரியான நேரத்தில் விதைப்பவர் நல்ல விளைச்சலைப் பெறுவார். ஆனால் மழை இப்போது அங்குமிங்குமாக பெய்கிறது, அது எல்லா வயல்களுக்கும் போதுமானதாக இருக்காது," என்று தாத்யா விளக்குகிறார்.

50 வயதான பூலாபாய், தாங்கர் சமூகத்தைச் (நாடோடி பழங்குடியினராக பட்டியலிடப்பட்ட இனம்) சேர்ந்தவர், சாலையின் குறுக்கே முகாமில் உள்ள தனது கூடாரத்தில் அமர்ந்திருந்தார், மேலும் தன்னுடைய மூன்று எருமைகளையும் அழைத்து வந்திருந்தார் - "சரியான நேரத்தில் எல்லா விண்மீன் கூட்டங்களும் மழையை கொண்டுவரும்" என்று அவர் கூறுகிறார், "தோண்டுயாச்சா மஹினாவின் (இந்து சந்திர நாட்காட்டியில் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் உள்ள ஒரு கூடுதல் மாதம்)  வருகையின் போது மட்டுமே, மழை சற்று குறைவாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்கு நல்ல மழை பெய்யும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே எப்பொழுதும் போல் அல்லாமல் மழை மிகவும் குறைவாகவே பெய்கிறது," என்கிறார் அவர்.

இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, பல விவசாயிகள் தங்கள் சாகுபடி முறையை மாற்றியுள்ளனர். வழக்கமான பயிர் முறையைப் பற்றி, இங்குள்ள விவசாயிகள் கூறுகையில் காரிப் பருவத்திற்கான பயிர்களாக சிறுபயறு (மட்கி), கொள்ளுப்பயறு(ஹுலாஜ்), கம்பு மற்றும் துவரை ஆகியவற்றை கூறினர், மேலும் ராபி பருவத்திற்கான பயிர்களாக கோதுமை, கொண்டைக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை கூறினர்.  கோடையில் விளைவிக்கக்கூடிய பயிர் வகைகளான சோளத்தையும், மக்காச்சோளத்தையும் தீவனப்பயிர்களாகப் பயிரிட்டனர்.

"கடந்த 20 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் (பாரம்பரிய ரக) சிறுபயறை விதைக்கும் எந்த ஒரு நபரையும் நான் காணவில்லை. அதே நிலைமை தான் பூர்விக கம்புக்கும், துவரைக்கும். கபிலி வகை கோதுமையையோ, கொள்ளையோ, எள்ளையோ யாரும் விதைப்பதே இல்லை," என்று கூறுகிறார் ஆல்டர் வஸ்தி குக்கிராமத்தில் இருக்கும் ஹவுசாபாய்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: 'ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மழை அமைதியாகவே இருக்கிறது..' என்று பூலாபாய் காரத் கூறுகிறார்.

வலது: '1972 க்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது' என்று கூறுகிறார் கங்குபாய் கூலிக்.

இப்போதெல்லாம் பருவமழை தாமதமாக வந்து - ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் கூட - விரைந்து வெளியேறிவிடுகிறது மாதத்தில் மழையை காண்பது அரிதாகிவிட்டது - அதனாலேயே இங்குள்ள விவசாயிகள் குறுகியகால கலப்பின வகை பயிர்களுக்கு மாறிவிட்டனர். " பாரம்பரிய 5 மாத (நீண்ட கால) பயிர் வகைகளான கம்பு, சிறுபயறு, சோளம் மற்றும் துவரை ஆகியவை மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால் அழியும் தருவாயில் உள்ளது என்கிறார் நவ்நாத் மாலி. அவர் கௌடுவாடியைச் சேர்ந்த மற்ற 20 விவசாயிகளுடன் கோலாப்பூரில் உள்ள அமிகஸ் அக்ரோ குழுவில் உறுப்பினராக உள்ளார், இவர்கள் கட்டண முறை சேவையாக குறுந்தகவல்கள் மூலம் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகின்றனர்.

மற்ற பயிர்களாவது தங்களுக்கு அதிர்ஷ்டம் தருமா என்று சோதிக்க, இங்குள்ள விவசாயிகள் சிலர் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாதுளையை பயிரிடுவதற்கு மாறினர். மாநில அரசு வழங்கிய மானியங்கள் அதற்கு உதவியாக இருந்தது. காலப்போக்கில் பாரம்பரிய வகைகளிலிருந்து விவசாயிகள் கலப்பின பாரம்பரியம் அல்லாத வகைகளுக்கு மாறினர். "நாங்கள் ஆரம்பத்தில் (சுமார் 12 ஆண்டுகளுக்கு) முன்பு ஒரு ஏக்கருக்கு 2-3 லட்சங்கள் சம்பாதித்தோம். ஆனால் கடந்த 8 - 10 வருடங்களாக பழத்தோட்டங்களில் தெல்யா (பாக்டீரியா பிளைட்) நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாறிவரும் வானிலையின் காரணமாக இது ஏற்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். கடந்த வருடம் எங்களது கிலோ ஒன்றுக்கு 25 - 30 ரூபாய்க்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இயற்கையின் விருப்பத்தை மீறி நாம் என்ன செய்ய முடியும்?", என்று வினவுகிறார் மாலி.

பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய மழைக்கால மாற்றங்களால் பயிர் முறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பருவ மழைக்கு பிந்தைய மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை சங்கோலில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெகுவாக குறைந்துள்ளது. வேளாண்மை துறையின் தரவுகளின் படி, 1998 முதல் 2018 வரையிலான இரண்டு தசாப்த காலத்தில் பெய்த சராசரி மழை அளவான 93.11 மி.மீ க்கு எதிராக 2018 ஆம் ஆண்டில் இப்பகுதியில் பெய்த பருவமழைக்கு பிந்தைய மழையின் அளவு வெறும் 37.5 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய மழைக்காலங்கள் மறைந்து கொண்டே போவது முழு மாண்தேஷ் பிராந்தியத்திலும் மிகவும் கவலையான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது, என்று கூறுகிறார் மாண் தேஷி அறக்கட்டளையின் நிறுவனர் சேத்னா சின்ஹா, இந்த அறக்கட்டளை கிராமப்புற பெண்களுக்கும் விவசாயம் கடன் மற்றும் நிறுவன பிரச்சனைகள் ஆகிய விஷயங்கள் குறித்து பணியாற்றுகிறது. (இந்த அறக்கட்டளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி சத்தாரா மாவட்டத்தின் மாண் வட்டத்திலுள்ள மாஸ்வாட்டில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மாநிலத்தில் முதல் முறையாக முகாம் அமைத்து அடைக்கலம் தந்தது). "திரும்பும் பருவமழையே எங்களின் உயிர்நாடியாக  இருந்து வருகிறது, ஏனெனில்  நாங்கள் உணவு தானியங்களுக்கும், கால்நடை தீவனப் பயிர்களுக்கும் நாங்கள்  ராபி பயிர்களையே நம்பி உள்ளோம். பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் திரும்பும் பருவமழை இல்லாதது மாண்தேஷில் உள்ள இடையர் மற்றும் பிற சமூகத்தினரிடம் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

வறண்ட காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது சங்கோலில் கால்நடை முகாம்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஆனால், இங்கே சாகுபடி முறைகளில் அனேகமாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது கரும்பு பயிரிடுவதே ஆகும். 2016-17 ஆம் ஆண்டில் சோலாப்பூர் மாவட்டத்தில் 100,505 ஹெக்டேர் நிலத்தில் 6 லட்சத்து 33 ஆயிரம் டன் கரும்பு விளைவிக்கப்பட்டதாக மகாராஷ்டிர அரசு நிதி மற்றும் புள்ளிவிவர இயக்குனரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில செய்தி அறிக்கைகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், அக்டோபரில் துவங்கிய கரும்பு நசுக்கும் பருவத்தில், சோலாப்பூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்தது, மாவட்டத்திலுள்ள 33 பதிவுசெய்யப்பட்ட சர்க்கரை ஆலைகள் (சர்க்கரை ஆணையர் தரவு) மூலம் 10 மில்லியன் டன்களுக்கும் மேலாக கரும்பு நசுக்கப்பட்டது என்று கூறுகிறது.

ஒரு டன் கரும்பை நசுக்குவதற்கு சுமார் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று சோலாப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், நீர் பாதுகாப்பு ஆர்வலருமான ரஜ்னீஷ் ஜோஷி கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால் கடந்த கரும்பு நசுக்கும் பருவத்தில் - அக்டோபர் 2018 முதல் ஜனவரி 2019 வரை - சோலாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 15 மில்லியன் கன மீட்டருக்கு மேற்பட்ட தண்ணிர் கரும்பு நசுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பணப்பயிரின் மீது மிக அதிகமான அளவு நீரைப் பயன்படுத்துவதால், மற்ற பயிர்களுக்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு, ஏற்கனவே குறைந்த மழை பொழிவையும், பாசன வசதியும் இல்லாத இப்பகுதியில் மிகக் கடுமையாகக் குறைத்துள்ளது. கௌடுவாடி கிராமத்தில் உள்ள 1361 ஹெக்டேர் (2011 கணக்கெடுப்பின் படி) நிலத்தில் பெரும்பகுதி சாகுபடிக்கு உட்பட்டது அதில் 300 ஹெக்டேரில் மட்டுமே பாசன வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது மீதமுள்ள நிலங்கள் மழைப்பொழிவையே நம்பியுள்ளது, என்று மதிப்பிடுகிறார் நவ்நாத் மாலி. சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள 7 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஹெக்டேர் நிலப்பரப்பில், மொத்த நீர்ப்பாசன திறனில், 2015 ஆம் ஆண்டின் படி வெறும் 39.49% மட்டுமே பாசன வசதி செய்யப்பட்டது என்று அரசாங்க தரவு காட்டுகிறது.

மேலும், பயிர் இழப்பு (குறைந்து வரும் மழையை சமாளிப்பதற்கான ஒரு உத்தியாக குறுகிய காலப் பயிர்களுக்கு மாறுவதால் ஏற்படுவது) அத்துடன் உயர்ந்து வரும் வெப்பநிலையும் மண்ணை மேலும் வறட்சியுடையதாக ஆக்குகிறது என்று இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். இப்போது மண்ணில் உள்ள ஈரப்பதம் "ஆறு அங்குல ஆழம் கூட இல்லை," என்று கூறுகிறார் ஹவுசாபாய்.

PHOTO • Medha Kale

கௌடுவாடியில் மட்டும், 150 தனியார் ஆழ்துளை கிணறுகள் இருப்பதாகவும், அவற்றில் 130 கிணறுகள் வறண்டு போய்விட்டன என்றும் மதிப்பிடுகிறார் நவ்நாத் மாலி.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. நிலத்தடிநீர் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சாத்தியமான நீர் பற்றாக்குறை அறிக்கை, 2018 ஆம் ஆண்டில், சங்கோலில் உள்ள அனைத்து 102 கிராமங்களிலும், நிலத்தடி நீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் மேல் சரிந்துள்ளது என்பதை காட்டுகிறது. ”நான் ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட முயற்சித்தேன், ஆனால் 250 அடி ஆழத்தில் கூட தண்ணீர் இல்லை. நிலம் முற்றிலும் வறண்டு விட்டது” என்கிறார் ஜோதிராம் கண்ட்காலே, இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலமும், கௌடுவாடியில் சொந்தமாக முடி திருத்தும் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். "கடந்த சில ஆண்டுகளாக காரீப் மற்றும் ராபி பருவங்களில் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று அவர் மேலும் கூறுகிறார். கௌடுவாடியில் 150 தனியார் ஆழ்துளை கிணறுகள் இருப்பதாகவும், அவற்றில் 130 கிணறுகள் வறண்டு போய்விட்டன என்றும், மேலும் மக்கள் தண்ணீரைப் பெற 1000 அடி ஆழம் வரை தோண்டி வருகிறார்கள் என்றும் மதிப்பிடுகிறார் மாலி.

உணவு பயிர்கள் இடம் இருந்து விலகிச் செல்வதற்கு கரும்பு விளைச்சலுக்கு மக்கள் மாறுவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. 2018 -19 ஆம் ஆண்டுக்கான ராபி பருவத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் 41 சதவீத சோள சாகுபடியும் மற்றும் 46 சதவீத மக்காச்சோள சாகுபடியும் மட்டுமே பதிவாகியுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சோளம் பயிரிடப்படும் பகுதி 57 சதவீதமாகவும், மக்காச்சோளம் பயிரிடப்படும் பகுதி 65 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக, 2018 -19 ஆம் ஆண்டிற்கான மாநில பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும் இரு பயிர்களின் விளைச்சலும் 70% வரை குறைந்திருப்பதாகவும் கூறுகிறது.

இந்த இரண்டு பயிர்களுமே, மனிதர்களுக்கு உணவு தானியமாகவும், கால்நடை தீவனத்தின் முக்கிய ஆதாரமாகவும் இருக்கிறது. தீவன பற்றாக்குறையால் சங்கொலி வறட்சியான மாதங்களில் கால்நடை முகாம்களை துவங்க அரசாங்கத்தையும் (மற்றும் பிறரையும் கட்டாயப் படுத்தியுள்ளது ) 2019 ஆம் ஆண்டில் இதுவரை 50,000 கால்நடைகளைக் கொண்ட 105 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மதிப்பிடுகிறார் போபட் கடாடே. இவர் ஒரு பால் கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குனராவார், மேலும் கௌடுவாடியில் கால்நடை முகாமைை ஆரம்பித்தவரும் இவரே. இந்த முகாம்களில் கால்நடைகள் எதை உண்கின்றன? ஹெக்டேருக்கு 29.7 மில்லியன் லிட்டர் தண்ணீரை விழுங்கும் (மதிப்பீடுகள் காட்டுவது போல) அதே கரும்பை தான் உண்கின்றன.

எனவே, சங்கோலில் பல பின்னிப்பிணைந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, இது 'இயற்கையின்' ஒரு பகுதியாகும். ஆனால் மனிதனால் அது இன்னும் அதிகமாக துரிதப்படுத்தப்படுகிறது. இதில் மழைப்பொழிவு குறைதல், குறைவான மழை நாட்கள், உயர்ந்து வரும் வெப்பநிலை, அதிகமான வெப்ப நாட்கள், இல்லாமலே போய்க்கொண்டிருக்கும் முன் மற்றும் பின் பருவமழை மற்றும் மண்ணில் ஈரப்பதம் குறைதல் ஆகியவை எல்லாம் அடங்கும். இத்துடன் பயிர் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் - அதிகமான அளவு குறுகிய கால ரகங்களை பயிர்செய்தல், பயிர் இழப்பின் விளைவு, குறைந்த அளவு பாரம்பரிய ரகங்களை பயிர் செய்தல், சோளம் போன்ற உணவுப் பயிர்களை குறைந்த அளவு சாகுபடி செய்தல் மற்றும் கரும்பைப் போன்ற பணப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்தல் - இத்துடன் மோசமான நீர் பாசன வசதி, குறைந்து கொண்டே வரும் நிலத்தடி நீர் நிலைகள் - மற்றும் பல.

இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டபோது கௌடுவாடி கிராமத்தில் உள்ள கால்நடை முகாமில் இருந்த தாத்யா புன்னகைத்துக் கொண்டே "மழைக் கடவுளின் மனதை மட்டும் நம்மால் படிக்க முடிந்தால் இதற்கான விடை கிடைக்கும்! மனிதன் பேராசை பிடித்தவனாகிவிட்ட பிறகு, எப்படி மழை பெய்யும்? மனிதர்கள் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளும் பொழுது, இயற்கை மட்டும் தன் சொந்த வழியை எப்படி பின்பற்றும்?" என்று வினவுகிறார்.

PHOTO • Sanket Jain

சங்கோல் நகரத்திற்கு வெளியே வறண்டுபோன மாண் ஆற்றின் பழைய தடுப்பணை.

சமூக ஆர்வலர்களான ஷஹாஜி கடாஹைர் மற்றும் தத்தா கூலிக் அவர்களின் நேரத்துக்கும், மதிப்புமிக்க உள்ளீடுகளுக்கும் இவர்களுக்கு ஆசிரியர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

கவர் படம்: சங்கேத் ஜெயின் / பாரி

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Reporter : Medha Kale

Medha Kale is based in Pune and has worked in the field of women and health. She is the Marathi Translations Editor at the People’s Archive of Rural India.

Other stories by Medha Kale
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Series Editors : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose