2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பகுப்பாய்வுப் புள்ளி விவரங்களைப் பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள நடுமுதலைக்குளம் கிராமத்துப் பெண்கள் குழம்பிப் போவார்கள். இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், கிராமப்புறங்களில் பெண்களின் வேலைப்பங்களிப்பு 30.02 சதவீதம்தான் என்று கூறுகிறது. ஆனால், கிராமப்புற ஆண்களின் வேலைப் பங்களிப்பு 53. 03 சதவீதமாக இருப்பதாக கூறுகிறது.
ஆனால், உண்மை என்னவோ முற்றிலும் வேறு. மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்தில், ஏறத்தாழ அனைத்துப் பெண்களும் வீட்டிலும் வயலிலும் பாடுபடுகின்றனர் என்பதே நிசர்சனம். வீட்டு வேலைகளுக்கு ஊதியம் இல்லை. வயல் வேலைகளில் பெண்களின் கூலி, ஆண்களுக்கு அளிக்கப்படும் கூலியில் பாதி அளவே. இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பலவீனமான பாலினம்’ என்று முத்திரை குத்தப்பட்ட பெண்கள்தான், வயல்- வரப்புகளில் மிகவும் கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
வயலை பண்படுத்தும் வேலையில், ஆண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இந்த வேலைகளுக்கு எப்போதும் அதிகமாகவே கூலி வழங்கப்படும். ஆனால், தற்போது இது போன்ற வேலைகளுக்கு அதிக அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நாற்று நடுதல், களையெடுத்தல் போன்ற பாரம்பரிய வேலைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வேலைகள் தற்போதும் பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வேலைகள், முதுகு, கால், கைகளுக்கு அதிகப் பளுவை கொடுக்கும் வேலைகள்.
போதுமணி, 3.5 ஏக்கர் நிலத்தில் தனது கணவர் சி. ஜெயபாலுடன் (விவசாயி மற்றும் நீச்சல் பயிற்சியாளர்) சேர்ந்து விவசாயப் பணிகளை செய்கிறார். இவரது கணவர் சொந்த நிலத்தில் உழைத்தது போக, மற்ற நேரங்களில் விவசாய கூலியாகவும் வேலை பார்க்கிறார். இது அவர்களின் குடும்ப வருமானத்தை சற்றே உயர்த்துகிறது. நான்கு மணி நேர உழைப்புக்கு ரூ. 100 (காலை 8 மணி முதல் 12 மணி வரை) கூலி கிடைக்கும்.
போதுமணியின் காலைப் பொழுதுகள் எப்போதும் பரபரப்பானவை. காலை 5 மணிக்கு எழுந்து, சமையல் வேலைகளை முடித்து, பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்குச் சாப்பாடு காட்டிக் கொடுக்கும் வேலைகளில் பரபரப்பாக இருப்பார். அதன் பின்னர் தொடங்கும் அவரது, விவசாய வேலைகள். சீக்கிரம் வயலுக்குச் செல்வதற்காக கம்மாயில் மார்பளவு நீரில் நடந்து செல்கிறார்.
சொந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தொடங்கி, நடவு, களைஎடுத்தல், அறுவடை என அனைத்துப் வேலைகளையும் அவரே செய்கிறார். அதோடு, வளர்க்கும் மாடு, ஆடுகளுக்கு தீவனம் வைப்பது, அவற்றைக் கவனிப்பது என்று அவரது மிச்ச நேரமும் உழைப்பிலேயே கழிகிறது. இதற்கிடையே, மறந்து போன மதிய உணவைத் தாமதமாகவும் அவசரமாகவும் சாப்பிடுகிறார். இரவில் வீட்டுக்கு வந்ததும், குடும்பத்தாருக்காகச் சமையல் செய்கிறார்.
நம்மிடம் மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார் போதுமணி. அவரது உழைப்பை கணவர் அங்கீகரித்துப் பேசியபோது, அவரது புன்னகை இன்னும் மலர்ந்தது. தங்கள் குழந்தைகள், நிலத்தில் அல்ல, அலுவலகத்தில் அதிகாரிகளாக வேலை செய்ய வேண்டும் என்பதில் தம்பதியர் உறுதியாக உள்ளனர். நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை என்று சொன்ன போதுமணியின் கண்கள் குளமாயின. அதை மறைக்க தனது முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
சாம்பார் சாதத்தை உருட்டிக் கொண்டே பேசும் லோகமணிக்கு ஆவலோடு ‘ஆ’ காட்டுகிறாள் 4 வயது மகள் ஷோபனா. அவளுக்கு அம்மா கையால் சாப்பிடுவது மிகவும் அரிதான விசயமாகிப் போனது. அவளது அம்மாவுக்கு நேரம் கிடைப்பதில்லை. இவளைத் தவிர லோகமணிக்கு, மூத்த குழந்தைகள் 2 பேர் உள்ளனர். லோகமணி தனது சக்திக்கு மீறி தனது சொந்த வயலிலும், விவசாய கூலியாகவும் வேலை பார்கிறார். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது, காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் லோகமணி குழந்தைகள் வீடு வந்து நீண்ட நேரம் கழித்தே திரும்புகிறார்.
‘சிறு குழந்தைகளாக இருந்தபோது, அவர்களையும் வயலுக்கு அழைத்துச் சென்று விடுவேன். கை குழந்தையாக இருந்தபோது, மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைப்பேன்.கொஞ்சம் வளர்ந்து 8 மாதக் குழந்தைளாக இருந்த போது, வரப்பில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.’ என்று லோகமணி தனது குழந்தைகள் வளர்ந்த விதத்தைக் கூறுகிறார். இங்கு பெண்கள். பிரசவத்துக்கு முதல் நாள் வரை வேலை செய்கிறார்கள். குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் அவர்கள் மீண்டும் வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
தான் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடி நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கும் 29 வயது லோகமணி, "எங்களுக்கு அரசு ஆஸ்பத்திரி இருக்கு, எங்க குழந்தைகளுக்கு அரசாங்க பள்ளிக்கூடம் இருக்கு. தனியார் பள்ளிக் கூடத்துக்கோ, ஆஸ்பத்திரிக்கெல்லாம் எங்களுக்கு வசதி இல்ல." என்று ஆற்றாமையுடன் சொன்னார்.
"எனக்கு அப்போ 14 வயசு, அவருக்கு 30 வயது. எனக்கு என்ன தெரியும்…" என்று தனது திருமணம் பற்றி உள்ளே புதைந்து கிடக்கும் வலியுடன் வருத்தத்துடன் கூறினார் நாகவள்ளி திருநாவுக்கரசு. 20 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவருக்கு இப்போது 3 குழந்தைகளுடன், கறவைமாடு, விவசாய கூலி வேலையும் இருக்கிறது. அவரது கணவர் ஒரு லாரி டிரைவர். தினமும் ரூ.150 சம்பாதிக்கிறார். வேலை காரணமாக, 25 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை நகரில் அவர் தங்கியிருக்கிறார். விவசாய கூலியாக வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 100-ம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 140 ம் ஊதியமாக ஈட்டுகிறார் நாகவள்ளி. இவர்கள் இருவரின் வருமானமும், குடும்பம் நடத்துவதற்கான தினசரித் தேவைகளை பூர்த்தி செய்யவதற்கே சரியாக இருக்கும். பி.ஏ ஆங்கிலத்தில் 2ம் ஆண்டு படிக்கும் மகள் டீச்சராக விரும்புவதை நினைத்து நாகவள்ளி பெருமைப்படுகிறார்.
"என் மகள்களோட வாழ்க்க நல்லபடியா இருக்கணும். அவர்கள் படிக்கணும். சின்ன வயசுல கல்யாணம் பண்ணக் கூடாது", என்றார் உறுதியாக. இவரது 2வது மகள், உயர்நிலைப்பள்ளியில் வணிகவியல் மாணவி. கடைசி பையன், தற்போது 8ம் வகுப்பு படிக்கிறார். "இந்த பையன் வயல்ல வேலை செய்ய உதவிக்கே வரமாட்டான். பெண்ணுக உதவிக்கு வருவாங்க. ஏதோ நாம கூப்பிடும் போதாவது…" என்று தனது குழந்தைகளைப் பற்றி கூறினார் நாகவள்ளி.
அந்தக் கிராமத்தில் பெரு நிலமுதலாளிகளில் குறிப்பிடத்தக்கவர் ஒச்சம்மா கோபால், தனக்கு இருக்கும் 15 ஏக்கர் நிலத்தில், கூலிப்பெண்கள் வேலை செய்வதை மேற்பார்வையிடுவது அவரது வழக்கம். புத்திசாலியான அவரை அனைவரும் மதித்தனர். தனது நிலத்தில வேலை செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 கூலி கொடுக்கிறார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை கிடைத்தால், அங்கு வேலைக்குச் செல்லவே விரும்புகின்றனர். ஏனென்றால், அங்கு ஒரு நாளுக்கு ரூ. 40 கூடுதலாக கிடைக்கும். மேலும், 100 நாள் வேலையில் மேற்பார்வையாளர்கள், வரப்பில் நின்று கொண்டு சதா கட்டளை இட்டுக் கொண்டு இருக்க மாட்டார் என்பதையும் வேலை செய்யும் பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
70 வயதான கண்ணம்மாள் சின்னத்தேவர், அழகான நீல நிறப் புடவை உடுத்தி, தனது தங்கத் தண்டட்டியையும் போட்டுக் கொண்ட பின்னர் தான் நம்மை, புகைப்படம் எடுக்கவே விட்டார். நாங்கள் கண்ணம்மாளைச் சந்தித்தபோது, மாலை 3 மணியாகி விட்டது. அப்போது தான் விவசாயக் கூலி வேலையை முடித்துக் கொண்டு கண்ணம்மாள் வீடு திரும்பி இருந்தார். ரவிக்கை இல்லாமல், மதுரை பாணியில் நீலச் சேலையைக் கட்டி இருந்தார். அவரது முதுகு நேராக நிமிர்ந்து இருந்தது. அவரது தோலின் சுருக்கங்கள் ஆழகைக் கூட்டியது. பூத்துப்போன கண்களுடன், சற்று சப்தமாக பேசினால் மட்டுமே கேட்கும் காதுகளுடனும் இருக்கும் கண்ணம்மாள் அடிக்கடி சிரித்துக் கொண்டும் தலையாட்டிக் கொண்டும் இருந்தார். போதுமான பண வசதி இருந்தும், அவர் தினமும் வேலைக்குப் போவதாக மகன் ஜெயபால் என்னிடம் கூறினார். "அவங்கிட்ட நகை இருக்கு. பணமும் வட்டிக்கு விடறாங்க. என்னைய நம்பி அவங்க இருக்கல." என்றி கூறி சிரிக்கிறார் ஜெயபால்.
பெண்கள் அனைவரும் வயலில் உழைத்துக் கொண்டு இருக்கும் போது ஆண்களும் மறறொரு பக்கம் பிசியாகத்தான் இருக்கிறார்கள். வேப்ப மரத்துக்கு அடியில் உட்கார்ந்து முதியவர்கள் சீட்டாடுகிறார்கள். அவர்களில் வலது பக்கம் உட்கார்ந்திருப்பவரைக் காட்டி,, அது தன்னுடைய அப்பா என்று அறிமுகப்படுத்துகிறார் ஜெயபால். அவரது வேட்டியும், முடியும் ஒரே வெள்ளை நிறத்தில் இருந்தன. அவருக்கு பின்னால் இருந்து, இளைஞர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்படியானால், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதை நம்பினால், தேசிய அளவில் பெண்களின் வேலைப்பங்களிப்பு 25.51 சதவீதம். ஆண்களின் பங்களிப்பு 53.26 சதவீதம் ஆகும். கிராமப்புறங்களில் பெண்களின் வேலைப்பங்களிப்பு 30 சதவீதம், ஆண்களின் பங்களிப்பு 53 சதவீதம் என்றும், நகர்புறங்களில் பெண்களின் பங்களிப்பு 15.44 சதவீதம், ஆண்களின் பங்களிப்பு 53.76 சதவீதம் என்றும் கணக்கெடுப்பில் கூறப்பட்டதை ஏற்க வேண்டும்.
இந்த கணக்கெடுப்பில் ‘வேலை’ என்ற எதைக் கருதினார்கள் என்பதை நடுமுதலைக்குளம் கிராமத்தில் உள்ள பெண்கள் நிச்சயம் அறிந்து கொள்ள விரும்புவார்கள்…
தமிழில் மொழியாக்கம்
இந்த இணையதளப் பதிப்பிலிருந்து
.