போலீசார்  மிக மோசமாக லத்தியில் அடிக்காமல் இருந்திருந்தால், உத்ரபிரதேசத்தின் பாக்பட் மாவட்டத்தில் போராடி வந்த விவசாயிகள் ஜனவரி 27ம் தேதி தங்கள் போராட்ட களத்தில் இருந்து விலகியிருக்க மாட்டார்கள். “40 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது“ என்று பிரிஜ்பால் சிங் கூறுகிறார். அவர் போராட்டம் நடந்த பராவுட் நகரைச் சேர்ந்த 52 வயதான கரும்பு விவசாயி.

“அது சாலைமறியல் போன்ற போராட்டம் கூட இல்லை, எங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட நாங்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்தோம். ஜனவரி 27ம் தேதி இரவு, திடீரென போலீசார் எங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். எங்கள் கூடாரங்களை கிழித்து, எங்களின் பாத்திரங்கள் மற்றும் துணிமணிகளை எடுத்துக்கொண்டனர். அவர்கள் முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அனைத்தையும் செய்தனர்“ என்று பிரிஜ்பால் மேலும் கூறினார். அவருக்கு பாரவுட்டில் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது.

அன்று இரவு வரை, மாவட்டம் முழுதிலிருந்தும் வந்திருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாக்பட்- ஷஹாரன்பூரில் உள்ள பாரவுட்டில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அறிமுகப்படுத்திய புதிய வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான விவசாயிகளுள் இவர்களும் அடங்குவர்.

பாக்பட் மற்றும்  உத்ரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாயிகள், விவசாயிகளுக்கான தங்களது ஆதரவை தெரிவித்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியின் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு குறிப்பாக பஞ்சாப் – ஹரியானா விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து இங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எங்களுக்கு அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வந்தது“ என்று பிரிஜ்பால் கூறுகிறார். அவர், பாக்பட் மண்டலத்தில் உள்ள தோமர் குலத்தில் உள்ள அனைத்து ஆண் கூட்டமைப்பின் உள்ளூர் தலைவர். “மாவட்ட நிர்வாகம் எங்களின் வயல் முழுவதிலும் தண்ணீர் நிரப்புவதாக அச்சுறுத்தியது. அதற்கு நாங்கள் அஞ்சாதபோது, நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த இரவு வேளையில் எங்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். நாங்கள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டோம்“ என்று அவர் கூறுகிறார்.

The Baraut protest was peaceful, says Vikram Arya
PHOTO • Parth M.N.

பிரிஜ்பால் சிங்(இடது) மற்றும் பல்ஜோர் சிங் ஆர்யா, அவர்களுக்கு பாரவுடில் போராட்டத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தல் வந்ததாக இருவரும் கூறுகிறார்கள்

அவரது காயங்கள் ஆறுவதற்கு முன்னரே, அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி ஷதாரா மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பிப்ரவரி 10ம் தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஜனவரி 26ம் தேதி தேசிய தலைநகரில் நடந்த குடியரசு தினவிழா டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து, கேள்விகள் கேட்கப்படும் என்று அந்த நோட்டிசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“அந்த நேரத்தில் நான் டெல்லியில் கூட இருக்கவில்லை. நான் பாரவுடில் நடந்த தர்ணாவில் ஈடுபட்டிருந்தேன். இங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் வன்முறை நடந்தது“ என்று பிரிஜ்பால் கூறுகிறார். அதனால் அவர் போலீசாரின் நோட்டிசுக்கு பதில் கூறவில்லை.

ஜனவரி 27ம் தேதி இரவு வரை பாரவுடில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது என்று பாக்பட்டின் கூடுதல் மாவட்ட நிதிபதி உறதிப்படுத்துகிறார்.

பாரவுட்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 8 விவசாயிகளுக்கும் டெல்லி போலீசாரிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. “நான் செல்லவில்லை“ என்று 78 வயதான பல்ஜோர் சிங் ஆர்யா கூறுகிறார். இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்தவர். அவர் கிழக்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள பாண்டவ் நகர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 6ம் தேதி ஆஜராகவேண்டும் என்று நோட்டிசில் குறிப்பிட்டிருந்தது. “நான் பாக்பட்டில் இருக்கிறேன். இதில் நான் ஏன் தொடர்புபடுத்தப்படுகிறேன் என தெரியவில்லை என்று பல்ஜோர் கூறுகிறார். அவர், மாலக்பூர் கிராமத்தில் உள்ள தனது, இரண்டு ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

பாக்பட்டின் விவசாயிகள், டெல்லி சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேக வட்டத்தில் உள்ளார்கள் என்று பாண்டவ் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நீராஜ் குமார் கூறினார். “விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது“ என்று அவர் பிப்ரவரி 10ம் தேதி என்னிடம் கூறினார். “நோட்டீஸ் அனுப்பியதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறமுடியாது“ என்று சீமாபுரி ஆய்வாளர் பிரசாந்த் ஆனந்த் கூறினார். “அவர்கள் டெல்லியில் இருந்தார்களா, இல்லையா என்பதை நாங்கள் விசாரித்துக்கொள்கிறோம். எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாங்கள் நோட்டிஸ் அனுப்பினோம்“ என்று கூறுகிறார்கள்.

பிரிஜ்பால் மற்றும் பல்ஜோர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து டெல்லி காவல் நிலையங்களின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச்சட்டத்தின், கலவரத்தில் தொடர்பு, சட்டத்திற்கு புறம்பான கூடுகை, அரசு ஊழியர் மீது தாக்குதல், திருட்டு மற்றும் கொலை முயற்சி  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகள் தங்கள் உரிமைகளை மட்டுமே கோருகிறார்கள் என்று 68 வயதான விக்ரம் ஆர்யா கூறுகிறார். இவர் பாரவுடில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவாஜா நக்லா கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஆவார். “போராட்டங்களாலும், கிளர்ச்சிகளாலும் நிறைந்தது நம் நிலம். ஒவ்வொரு அமைதி போராட்டத்திலும் காந்தி உள்ளார். நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம்“ என்று விக்ரம் கூறுகிறார். அவர் பாரவுட் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். “மத்திய அரசு காந்தி எதெற்கெல்லாம் துணை நின்றாரோ, அவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என நினைக்கிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

நாடு முழுவதிலும் விவசாயிகள் எதிர்த்து வரும் அந்த 3 சட்டங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் , வேளாண்மை உற்பத்தி மற்றும் வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகியவையாகும்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள். இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்து இந்தியரையும் பாதிக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவான 32, சட்ட உதவி பெறும் உரிமை யை முடக்கி முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறது.

Brijpal Singh (left) and Baljor Singh Arya say theyreceived threats to stop the protest in Baraut
PHOTO • Parth M.N.

பாரவுட்டில் நடந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக விக்ரம் ஆர்யா கூறுகிறார்

புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று அரசு கூறுவதை விக்ரம் நம்பவில்லை. “தனியார் நிறுவனங்கள் வந்த பின்னர் பிஎஸ்என்எல்லின் நிலை என்ன ஆனது? நம் நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளின் நிலை என்ன? மாநில மண்டிகள் குறைந்தால், சரியாக அதே நிலைதான் ஏற்படும். அவை மெல்ல அழியும்“ என்று அவர் கூறுகிறார்.

மாநில மண்டிகள் குறையும் என்ற கவலை ஒருபுறம் இருந்தபோதும், விக்ரம் மற்றும் பல்ஜோர் போன்ற விவசாயிகளுக்கு, வேளாண் சந்தையில் பெரு வணிக நிறுவனங்களின் இருப்பு அச்சுறுத்தலாக உள்ளது. “எங்களின் விளைச்சலுக்கு அந்த நிறுவனங்கள் முழு உரிமை கொள்ளும் மற்றும் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் கூறுவார்கள்“ என்று விக்ரம் கூறுகிறார். “தனியார் நிறுவனங்கள் லாபத்தைத்தவிர வேறு எதையாவது சிந்திக்குமா?. அவர்கள் எங்களை நல்ல முறையில் நடத்துவார்கள் என நாங்கள் எப்படி நம்ப முடியும்?“ என்று அவர் மேலும் கேட்கிறார்.

மேற்கு உத்ரபிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் முக்கிய பயிர் கரும்பாகும். தனியார் பெரு வணிக நிறுவனங்களுடன் தொடர்புவைக்கும்போது என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் என்று பல்ஜோர் கூறுகிறார். “நாங்கள் கரும்பு ஆலைகளுடன் ஒப்பந்தத்தில் உள்ளோம். மாநில அரசு, விலை நிர்ணயக்குழு மூலம் விலையை முடிவு செய்யும். உத்ரபிரதேச சர்க்கரை சட்டப்படி, 14 நாட்களுக்குள் எங்களுக்கு ஆலைகள் பணத்தை வழங்கிவிடவேண்டும். கடந்த ஆண்டு விற்ற கரும்பிற்கான தொகையை 14 மாதங்கள் கழித்தும் நாங்கள் இன்னும் பெறவில்லை. மாநில அரசு அதற்கு ஒன்றும் செய்யவில்லை“ என்று பல்ஜோர் கூறுகிறார்.

பல்ஜோர் ராணுவத்தில் 1966-73ம் ஆண்டு வரை பணியாற்றினார். அரசால் ராணுவத்தினரும் விவசாயிகளுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளது குறித்து ஆத்திரம் கொள்கிறார். “ராணுவத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் தவறான தேசியவாதத்தை விற்றுவிட்டனர். ஒரு முன்னாள் ராணுவத்தினராக நான் இதை வெறுக்கிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

“விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்குவதாக சித்தரிப்பதிலே ஊடகங்கள் குறியாக உள்ளன. அரசியல் கட்சிகள் அரசியல் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? இந்த போராட்டம் விவசாயிகளை தட்டி எழுப்பியுள்ளது. நாட்டில் 70 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். எவ்வளவு காலம் இந்த பொய்கள் வேலை செய்யும்“ என்று அவர் கேட்கிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.