uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/9.jpg


கடந்த பத்து ஆண்டுகளாக வடக்கு ஒடிசாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் மாங்கனீசையும் இரும்பையும் வெட்டி எடுப்பது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் சீனாவிற்கான நம்முடைய ஏற்றுமதியால் ஏற்பட்ட சந்தை வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு விரிவாக சுரங்கப்பணியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. பெரும்பாலான இந்த சுரங்க வேலைகள் பல சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் மீறி செய்யப்படுகின்றன; அந்தப் பகுதிகளின் இயற்கை வளங்கள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுகின்றன; இதனால் பொதுப்பணம் வீணடிக்கப்பட்டு சுரங்க முதலாளிகள் நம்பவே முடியாத அளவில் லாபம் பார்க்கிறார்கள்!


மொத்தம் 59,203 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமவளங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளன என்று ஒடிசா அரசு நீதிபதி ஷா ஆணைக்குழுவிடம் தாமதமாகத்தான் ஒப்புக்கொண்டது. ஒப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒடிசாவின் மொத்த மாநில உற்பத்தியில் அது கிட்டத்தட்ட கால்வாசி பங்கு!

நடைமுறையில் இந்த சுரங்கக் கொள்ளை கண்டுகொள்ளப்படாமல் இருக்க தெளிவில்லாத சட்டங்களும் வெளிப்படையற்ற அரசாங்கமும் மட்டும் காரணம் அல்ல. எந்த அரசாங்கம் வந்தாலும் அந்தப் பகுதியில் விளிம்புநிலையில் உள்ள ஆதிவாசி மக்களை அது அலட்சியத்தோடு அணுகுவது ஒரு முக்கியக் காரணம். உள்ளூர் மக்கள்தொகையில் ஆதிவாசிகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் சுரங்கம் தோண்டுவது, அது உள்ளூரில் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுவது ஆகியவற்றில் அவர்களின் குரல்கள் பெரும்பாலும் காது கொடுத்துக் கேட்கப்படுவதே இல்லை.


ஷா ஆணைக்குழுவின் அறிக்கை 2014 பிப்ரவரி 10 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது தொடர்பாக அங்கு ஒரு விவாதமும் நடைபெறவில்லை. எடுத்த நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்றை மத்திய அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துடன் இணைந்து தயாரித்தது. அதில் முறையான அனுமதியின்றி காடுகளில் சுரங்க வேலை செய்வது போன்ற முறைகேடுகளை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியது.


சட்டவிரோதமாக மாங்கனீசையும் இரும்பையும் எடுத்த சுரங்கக் குத்தகையாளர்களுக்கு 146 பணமீட்பு அறிவிப்புகளை அனுப்பியுள்ளதாக ஷா ஆணைக்குழுவிடம் ஒடிசா அரசு கூறியது. மாநில சுரங்க இயக்குனரங்கத்தை சேர்ந்த ஒரு அதிகாரி இந்தப் பணம் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஆனால் சில சுரங்கக் குத்தகையாளர்கள் நீதிமன்றத் தடையாணையைப் பெற்று முழு பணமும் மீட்கப்படுவதைத் தாமதப்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.


இதுபோக பல சுரங்க வேலைகளில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளை சி.பி.ஐ. மூலம் விசாரிக்க வேண்டும் என்ற ஷா ஆணைக்குழுவின் பரிந்துரையை ஒடிசா அரசு திடமாகத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதே பரிந்துரையை ஒரு கோரிக்கையாக ‘Common Cause’ லாபநோக்கற்ற நிறுவனத்தின் ஆலோசகரான பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல வழக்காகத் தொடுத்தார். அது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


சட்டவிரோத சுரங்க வேலைகளுக்கு எதிராக 2008-லிருந்தே குரல் கொடுத்து வரும் வனவிலங்கு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆர்வலரான பிஸ்வஜித் மோஹன்டி, இந்த அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் இன்றுவரை எடுக்கவில்லை என்பதற்கான சாட்சிகளாக இவற்றை சொல்கிறார். ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்பிலான அரசாங்க சொத்து கொள்ளையடிக்கப்பட்டாலும் இதுவரை அது தொடர்பாக எந்த ஒரு அரசு அதிகாரியும் தனியார் அலுவலரும் கைது செய்யப்படவில்லை; இன்னும் ஒரு சுரங்க உரிமம் கூட ரத்து செய்யப்படவில்லை; இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை!


சுந்தர்கர்க் மாவட்டத்தின் போனாய் பகுதியில் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள் கனிமவளங்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடங்களுக்கும் இதுவரை சுரங்கம் அமைக்கப்படாத இடங்களுக்கும் இடையேயான வித்தியாசத்தைக் காட்டும்.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/1.jpg

வடக்கு ஒடிசாவின் வளம் மிக்க இலையுதிர் காடுகளும் மலைத் தொடர்களும் இந்தியாவின் மொத்த haematite இரும்புத்தாதுக்களில் மூன்றில் ஒரு பங்கு அளவைக் கொண்டுள்ளன. ஆனால் அவை கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி இரும்புச் சுரங்க இடமாகவும், அம்மாநிலத்தின் மிகப்பெரிய ஊழலின் ஊற்றாகவும் மாறிப்போயிருக்கின்றன.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/2.jpg

போனாய் சுரங்க நகரத்தில் ஒரு சுரங்க நிறுவனம் காட்டின் ஊடாக சாலை அமைக்கிறது. அதிகாரப்பூர்வப் பதிவுகளின் படி வடக்கு ஒடிசாவில் 45,000 ஹெக்டேர் பரப்பளவிற்கும் மேலாக மாங்கனீசும் இரும்பும் வெட்டியெடுக்கப்படுகின்றன. அவற்றில் 34,000 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/3.jpg

இந்தப் பகுதியில் இரும்புத்தாதுக்களை ஏற்றிச்செல்லும் லாரிகளின் அதீத போக்குவரத்தால் சாலையில் பாதசாரிகளால் நடக்கக்கூட முடிவதில்லை. நாங்கள் நிம்மதியாக தேவாலயத்திற்கும் சந்தைக்கும் செல்ல வேண்டும் என்ற கிராம மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் லாரிகள் இயங்குவதில்லை.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/4.jpg

குர்மிதார் மலைத்தொடரில் இருக்கும் சுரங்கத்திற்குச் செல்வதற்காக லாரிகள் சாலையில் வரிசையாகக் காத்திருக்கின்றன. இரும்புத்தாதுக்கள் வெட்டியெடுக்கப்படும் வேகத்தை வைத்து இன்னும் 35 வருடங்களில் தரமான இரும்பு தாதுக்கள் இந்தப் பகுதியில் தீர்ந்துவிடும் என்று ஷா ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. இதனை ஒடிசா அரசாங்கம் மறுத்து வருகிறது.

/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/6.jpg

உள்ளூர் பவுரி பூய்யன் சமூகத்தைச் சேர்ந்த பிரபு சகாய் டொப்போனோ ஒரு வற்றிய மலை ஓடையைக் கடந்து செல்கிறார். சுரங்கத்தின் ஓரத்தில் இருக்கும் தன் குக்கிராமத்திற்கு இங்கிருந்துதான் தண்ணீர் வரவேண்டும். கடந்த ஏழே ஆண்டுகளில் இந்த ஓடையில் இருந்த மீன்கள் ஒட்டுமொத்தமாகக் காணாமல் போய் விட்டதாக அங்கு குடியிருப்போர் சொல்வதாகச் சொல்கிறார். மேலும் மழைக்காலத்தில் சுரங்கக்கழிவுகள் இந்த ஓடையோடு கலந்துவிடுவதால் பருவமழைப் பயிர்களை அவர்களால் பயிரிட முடிவதில்லை. “பார்க்கச் செக்கச் செவேலென்று இருந்த அந்த மாசுபட்டத் தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடம் காட்டி புகார் அளித்தோம். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை”, என்கிறார் டொப்போனோ.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/7.jpg

பல கிராமங்கள் எளிதில் அணுகமுடியாதபடியும் மிகத் தொலைவாகவும் இருப்பது சுரங்க நிறுவனங்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, வனத்தின் மரங்களை வெட்டுவதற்கு ஒப்புதல் தருவது போன்ற பழங்குடி மக்களுக்கு இருக்கும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்புச் சட்டங்கள் மிகச் சுலபமாக சுரங்க நிறுவனங்களாலும் அரசு அதிகாரிகளாலும் மீறப்படுகின்றன.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/8.jpg

இப்பகுதியின் உள்ளூர் பழங்குடிச் சமூகம் அரக்கு, இலுப்பை, குங்கிலியம் போன்ற வனப்பொருட்களை உணவிற்காகவும் எரிபொருளிற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பெரிதும் சார்ந்துள்ளது.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/9.jpg

ஒடிசா சுரங்க நிறுவனத்தின் இரும்பு சுரங்கத்தில் ஒன்பது மணி நேர வேலைக்குப் பிறகு ஜைத்ரு கிரியும் அவர் குடும்பத்தினரும் சுரங்கத்தின் எல்லையில் இருக்கும் அவர்களின் குடிசைக்கு வருகிறார்கள். சட்டவிரோத சுரங்கப்பணி மூலமாக அளவுக்கு அதிகமாக லாபம் ஈட்டினாலும் இந்த சுரங்க நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு - பெரும்பாலும் பழங்குடியின ஆண்களும் பெண்களும் - நியாயமான ஊதியமோ வேறு பயன்களோ தருவதில்லை என்று ஷா ஆணைக்குழு விமர்சித்தது.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/10.jpg

இரும்புத்தாதுக்கள் அதிகம் நிறைந்த 3,000 மீட்டர் உயரமுள்ள இந்த செலியடோகா மலைத்தொடரை மேகங்கள் சூழ்கின்றன. சமீபத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு மாநில அரசு சுரங்கவேலையைப் பரிந்துரைத்தது. ஆனாலும் தற்போது தென் கொரிய பெரும் நிறுவனமான பாஸ்கோ(POSCO)வின் 2,500 ஹெக்டேர் சுரங்கத் திட்டத்திற்கு இப்புகைப்படத்தில் உள்ள புல்ஜாரைப் போல் இம்மலைத்தொடரை சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுடைய முதன்மையான பயம், இந்த சுரங்கத் திட்டத்தால் இந்த மலைப்பகுதியில் உள்ள மலை ஓடைகளுக்குச் சுற்றுச்சூழல் பாதிப்பு வந்துவிடுமோ என்பதுதான். இந்த மலை ஓடைகள் அவர்களின் வயல்களுக்கு நீர்பாய்ச்சுவதால்தான் அவர்களால் வருடம் முழுவதும் பயிரிட முடிகிறது.


/static/media/uploads/Articles/Chitrangada/Illegal Minings Ground Zero/11.jpg

ஒடிசாவின் இரண்டாவது பெரிய அருவியான 800 அடியுள்ள கண்டாதர் அருவி செலியடோகா மலை த்தொடரில்தான் பிறக்கிறது.

இக்கட்டுரையின் ஒரு பதிப்பு மே 2014 Down To Earth இதழில் முதலில் வெளிவந்தது . அதை இங்கு காணலாம் . எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரி : [email protected]


தமிழில்: விஷ்ணு வரதராஜன்)


Chitrangada Choudhury

Chitrangada Choudhury is an independent journalist.

Other stories by Chitrangada Choudhury