சரியாக காலை 4.45 மணிக்கு குஞ்ச் கிராம வீடுகளில் உள்ள  பாரம்பரிய அழகுபடுத்தப்பட்ட கதவுகள் ஒவ்வொன்றாக திறக்கின்றன. மக்கள் தண்ணீர் பாட்டிலை கையில் ஏந்தியபடி வெளியே வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை, தகரம் அல்லது ஸ்டீல் பாத்திரங்களை தங்கள் கையில் கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது இந்த தினசரி சடங்கிற்கு பிளாஸ்டிக் பாட்டில் உதவியாக இருக்கிறது.

ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து நலம் விசாரித்து விட்டு வெவ்வேறு திசைகளில் விவசாய நிலங்களுக்கு செல்கிறார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து விட்டதால் பல தரிசாக உள்ளன. இந்த அதிகாலை வேளையிலும், ஒரு சிலர் வெற்று பாட்டிலோடு வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

அடர்த்தியான மற்றும் உயரமான புதர்கள் சிறந்த இடமாக கருதப்படுகிறது. 3,200 மீட்டர் உயரத்தில் இவை சிதறுண்டப் பகுதியாக காட்சியளிக்கிறது. சீக்கிரமாக எழுந்து வெளியே வருபவர்களுக்கு சிறந்த இடம் கிடைக்கிறது. பனி மூடிய ஏபி மலைத்தொடர் செந்நிறமாக மாறுவதற்கு மற்றும் காலை வெயில் வறுவதற்கு முன்பாக, குஞ்ச் குடியிருப்புவாசிகள் தங்கள் காலை கடனை கழிக்க செல்கிறார்கள்.

அருகிலேயே குதி-யாந்தி நதி ஆர்பரித்து ஓடுகிறது. குதிரைகளின் மணிச் சத்தமும் கற்பாதைகளில் அதன் காலடி சத்தமும் ஒருசேர கேட்கின்றன. அதன் உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் 50கிமீ தொலைவிலுள்ள கார்பதாருக்கு இந்த விலங்குகளை அழைத்துச் செல்கிறார்கள். இந்திய-சீன எல்லை வர்த்தக ஏற்றுமதி பொருளை ஏற்றுவதற்கு இங்குதான் அவர்கள் காத்திருப்பார்கள். எல்லைப்பகுதி இன்னும் 22கிமீ தொலைவில்தான் உள்ளது.

The new make-shift toilets stand out among the two-hundred year houses of Gunji village
PHOTO • Arpita Chakrabarty
More make-shift toilets at the entrance of the village Gunji
PHOTO • Arpita Chakrabarty

குஞ்ச் நுழைவாயிலில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்குமான மூன்று கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளது; உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த கிராமத்திற்கு வந்தபோது அமைக்கப்பட்ட ஆறு கழிப்பறைகளும் கூட மூடப்பட்டுள்ளது.

குஞ்ச் நுழைவாயிலில் மூன்று கழிப்பறைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது சொந்த ஊரான இங்கு வந்தபோது கட்டப்பட்ட ஆறு தற்காலிக கழிப்பறைகளும் கூட பூட்டப்பட்டுள்ளது. இவை 200 ஆண்டு பழமையான கற்கூரை வீட்டிற்கு வெளியே உள்ளது. இந்த கழிப்பறைகளுக்கான சாவிகள் குஞ்ச் கிராம பஞ்சாயத்து தலைவரிடம் உள்ளது. ஆனால் அவர் பெரும்பாலும் இங்கிருந்து 70 கிமீ தொலைவிலுள்ள தாராச்சுலாவில்தான் இருப்பார்.

உத்தரகாண்டின் பித்தோராகார்க் மாவட்டத்திலுள்ள தாராச்சுலா வட்டாரத்தின் மேலடுக்கு இமாலய கிராமங்களில் ஒன்றாக குஞ்ச் இருக்கிறது. இங்குள்ள மக்கள் பருவகாலத்தில் புலம்பெயர்பவர்கள். ஒவ்வொரு வருடமும் நவம்பார் மாதம், தங்கள் விலங்குகளோடு குடும்பங்கள் அனைத்தும் தாராச்சுலாவில் உள்ள தங்களது குளிர்கால வீடுகளுக்கு சென்று விடுவார்கள்.

மே மாதம் பனி குறைந்ததும், 60-70 கிமீ மலை ஏற்றப்பாதையில் நான்கு நாட்கள் நடந்து குடும்பத்தோடு குஞ்ச் திரும்பி தங்கள் விவசாய பருவத்தை தொடங்குவார்கள். நன்றாக மழை பெய்தால் (கடந்த இரண்டு வருடங்களாக போதிய அளவில் அல்லது முற்றிலுமாக மழை பெய்யவில்லை), மரக்கோதுமை, பீன்ஸ், பட்டாணி மற்றும் பிற பயிர்களை அக்டோபர் மாதம் விளைவிப்பார்கள். பின்னர் தங்கள் விலங்குகளோடு குளிர்கால வீடுகளுக்கு சென்று விடுவார்கள்.

Another entrance of the village Gunji
PHOTO • Arpita Chakrabarty

குஞ்ச் ஒன்றும் தெரியாத பகுதியும் அல்ல – இந்திய-சீன எல்லையில் இருக்கும் மிகப்பெரும் கிராமங்களில் இதுவும் ஒன்று.

எனினும், இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளை வைத்திருக்கும் வசதி எல்லா குடும்பங்களுக்கும் இல்லை. ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் நடுங்கும் குளிரில் வேறு வழியின்றி குஞ்சில் தங்குகிறார்கள். கோடை காலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கிறது.

குஞ்ச் ஒன்றும் தெரியாத பகுதியும் அல்ல, இந்திய – சீன எல்லையில் இருக்கும் மிகப்பெரிய கிராமங்களில் இதுவும் ஒன்று. இங்கு இந்தோ திபெத்திய காவல் முகாம், சாஸ்த்ரா சீமா பால் முகாம், சுங்கத்துறை அலுவலகம் ஆகியவை உள்ளன. அதுமட்டுமல்லாமல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கும் ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா மற்றும் தபால் அலுவலகத்தின் தற்காலிக கிளைகளும் உள்ளன.

கிராமத்தில் 194 குடும்பங்கள் (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) இருந்தாலும் ஒரு கழிப்பறை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அதுவும் உளவுத்துறை அலுவலகத்தில்தான் இருக்கிறது. சர்வதேச எல்லை அருகாமையில் இருப்பதாலும், முறைகேடாக வர்த்தகம் நடைபெற வாய்ப்பு இருப்பதாலும், கைலாஷ் மன்ஸரவோர் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் குஞ்ச் வழியாக செல்வதாலும் இங்கு உளவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. எனினும், உளவுத்துறை அலுவலக கழிப்பறையில் கூட தண்ணீர் குழாய் கிடையாது. கழிப்பறையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியிலிருந்து வாளியில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டும்.

கிராமத்தில் ஒரேயொரு தண்ணீர் குழாய் மட்டுமே உள்ளது. அருகில் ஓடும் குதி-யந்தி ஆற்றோடு இது இணைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடிக்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். குளிர் காலத்தில் குஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள மலைகள் பனியால் சூழ்ந்திருக்கும் போது குழாயில் தண்ணீர் உறைந்து விடும். பிறகு, இங்கிருந்து 1.5கிமீ தொலைவிலிருக்கும் மனிலாவில் உள்ள ஜெனரல் ரிசர்வ் எஞ்சீனியர் ஃபோர்ஸ் (GREF) குஞ்ச் கிராமத்தினருக்கு அவ்வப்போது தண்ணீர் வழங்குவார்கள்.

குஞ்சில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் இருக்கும் கழிப்பறையில் கூட தண்ணீர் குழாய் கிடையாது. கழிப்பறையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் நீங்கள் வாளியில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டும்.

வீடியோ பார்க்க: ‘போதிய தண்ணீர் இல்லாமல் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம்’: குஷ்மா தேவி

“சில நேரங்களில் குளிர்காலத்தில் GREF எங்களுக்கு தண்ணீர் விநியோகிப்பார்கள். ஆனால் பிற சமயங்களில் நாங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்” என கூறுகிறார் மங்கல் குஞ்ச்வால். கடுமையான உறைபனி காலத்திலும் இவர் தன் குடும்பத்தோடு இங்கு வசிக்கிறார். மேலும் இவர் கூறுகையில், “வருடம் முழுவதும், குறிப்பாக குளிர் காலங்களில் எங்கள் கிராமத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும். இந்த மலைகளின் வழியாக பனிக்காற்று வீசுகையில், தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில், இருக்கும் ஒரே தண்னீர் குழாயும் பனி அல்லது கற்பாறைகளால் உடைந்துவிடும். குதி-யாங்கதி ஆற்றிலிருந்து வாளியில் (பல முறை நடந்து) தண்ணீர் பிடித்து வருவோம். ஆனால் ஆறும் உறைந்து விடும். பிறகு தேநீர் தயாரிக்கவும் குடிநீருக்காகவும் பனியை சூடாக்கி கொள்வோம்”.

Phal Singh Gunjiyal of village Gunji
PHOTO • Arpita Chakrabarty

“எங்களிடம் இங்கு எந்த கழிப்பறையும் கிடையாது. ஏனென்றால் எங்களிடம் தண்னீர் கிடையாது” என்கிறார் பால் சிங் குஞ்ச்வால். இவர் குளிர்காலத்தில் குஞ்சில் வசிக்கிறார்.

குஞ்ச் கிராமம் அமைந்துள்ள பித்தோராகார்க் மாவட்டம் திறந்தவெளி மலம் கழிப்பதிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் ஏப்ரல் 15, 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஸ்வாச் பாரத் திட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழிப்பதிலிருந்து முற்றிலும் விடுபட்ட நான்காவது மாநிலமாக (சிக்கிம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை மற்ற மாநிலங்கள்) கிராமப்புற உத்தரகாண்ட் அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக உத்தரகாண்டில் 15,751 கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என ஸ்வாச் பாரத் பிரச்சாரம் கூறுகிறது.

தாராச்சுலா வட்டார அலுவலகத்திலுள்ள தூய்மை இந்தியா திட்ட ஆவணங்களின்படி, குஞ்சில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தாராச்சுலாவில் உள்ள தங்கள் குளிர்கால வீடுகளில் கழிப்பறை வசதியை கொண்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் தங்கள் குளிர்கால வீடுகளில் கூட திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறோம் என கிராமத்தினர் கூறுகிறார்கள்.

“எங்களிடம் எந்த கழிப்பறைகளும் கிடையாது. ஏனென்றால், எங்களிடம் தண்ணீரே கிடையாது. கோடை காலத்தில் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கும். ஆனால் அந்த சமயத்தில் அனைவரும் தாராசுலாவிலிருந்து குஞ்ச் வந்திருப்பதால், ஒவ்வொரு நபருக்கும் குறைவான நீரே கிடைக்கும்” என்கிறார் குளிர்கால மாதங்களில் குஞ்சில் வசிக்கும் பால் சிங்.

The permanent toilets in Gunji villag are also locked
PHOTO • Arpita Chakrabarty

“தண்ணீர் இல்லாததால், கிராமத்தினர் அழுக்காக்கி விடுவார்கள்” என்ற காரணத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை மூடி வைத்துள்ளார் குஞ்ச் கிராம பஞ்சாயத்து தலைவர்.

ஸ்வாச் பாரத் மிஷனின் திட்ட மேலாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பளருமான தீப் சந்திரா புனிதா கூறுகையில், “மகாத்மா காந்தி தேசிய கிராம உறுதி திட்டம் உள்பட பல திட்டங்களின் கீழ் சமூக கழிப்பறைகள் இமாலய கிராமங்களில் கட்டப்படுள்ளது. மலை உச்சியில் இருக்கும் கிராமங்களில் போதிய இடங்கள் இல்லாததால், புலம்பெயரும் கிராமங்களான தாராச்சுலாவில் 21 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன”.

தண்ணீர் வழங்காமல் கழிப்பறை கட்டி என்ன பயன்? புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள் ஏன் பூட்டப்பட்டுள்ளன? இதற்கு குஞ்ச் பஞ்சாயத்து தலைவர் அர்ச்சனா குஞ்ச்வால் விசித்திரமான காரணத்தை கூறுகிறார்: “இவையெல்லாம் புதிய கழிப்பறைகள். தண்ணீர் இல்லாத காரணத்தால், கிராமத்தினர் அசுத்தமாக்கி விடுவார்கள்”. சரி, அப்படியென்றால் எப்போது குழாய் மூலம் தண்ணீர் வழங்குவார்கள்? “அதற்கு கொஞ்ச காலம் ஆகும். அதிகமான தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும்; அதுவரை நாம் இந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாது” என்கிறார்.

Sukhmati Devi of village Kuti
PHOTO • Arpita Chakrabarty

எங்கள் மூதாதையர்கள் இப்படிதான் வாழ்ந்து வந்தார்கள். இதை எப்படி நாங்கள் நிறுத்த முடியும்? என கேட்கிறார் சுக்மதி தேவி.

இதற்கிடையில், கிராமத்தில் உள்ள கழிப்பறைகள் செயல்பாட்டில் உள்ளது என அரசாங்க ஆவணங்கள் கூறினாலும் மக்கள் தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழித்து வருகிறார்கள். குஞ்சிலிருந்து 19கிமீ தொலைவில், 4500மீ உயரத்தில் உள்ள குதி கிராமத்தில் 363 பேர் வசித்து வருவார்கள். இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு கழிப்பறைகள் என மொத்தம் நான்கு உள்ளது. ஆனால் இதில் இரண்டு மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. மற்ற இரண்டில் கழிவுகள் செப்டிக் டேங்கை சென்றடைய வேண்டும், ஆனால் அதற்கு தண்ணீர் குழாய் கிடையாது. “மலம் கழிக்கும்போது நாங்கள் கழிவறைகள் பயன்படுத்துகிறோம். சிறுநீர் கழிக்க தரிசு நிலங்களை பயன்படுத்துகிறோம். இரவு நேரத்தில் வீட்டிற்கு அருகில் சிறுநீர் கழிக்கிறோம்” என கூறுகிறார் குதி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி தேவி. இவரது கனவர் இந்தோ – திபெத்திய எல்லை காவல்படையிலிருந்து ஓய்வு பெற்றவர்.

சில சந்தர்ப்பங்களில், கிராமத்தில் உள்ள மக்களே மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “எங்கள் மூதாதையர்களும் நாங்களும் பல வருடங்களாக இப்படிதான் வாழ்ந்து வருகிறோம். வெளியாட்கள் கூறுவதை கேட்டு நாங்கள் எப்படி உடனடியாக மாற முடியும்?” என கேட்கிறார் குதி கிராமத்தின் மூத்த விவசாயி சுக்மதி தேவி.

‘தூய்மை இந்தியா’ என்ற தங்களின் குறிக்கோளை அடைந்துவிட்டோம் என அக்டோபர் 2019-ம் ஆண்டு ஸ்வாச் பாரத் திட்டத்தின் பிரச்சாரம் கூறுகிறது. ஆனால் எந்த தன்ணீர் வசதியுமின்றி மேலும் மேலும் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. ஆனால் மக்கள் இதை சிறுநீர் கழிக்க கூட பயன்படுத்துவதில்லை.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja