வீட்டுக்குத் திரும்பும் இந்த பயணம் கடினமானது. அதனால், அப்பெண்கள் இரவு பாட்பெடாவிலேயே தங்கிவிட்டு, மீண்டும் காலையில் நடக்கத் தொடங்கி, மாலை வேளையில் ராஜ்நாரியின் மலையுச்சி குடிசைப்பகுதியை அடைவார்கள். ஹாட்டில் (வாரச்சந்தை) இருந்து அவர்களின் கிராமத்திற்குத் திரும்புவதற்கு முழுதாக இரண்டு நாட்களாகும். ஆர்ச்சாவில் இருக்கு வாரச் சந்தைக்கு தொடர்ச்சியாக நடந்து வருவதற்கு இரண்டு நாட்கள் எடுத்ததைப்போலவே , சந்தையிலிருந்து திரும்புவதும் கடினமானது.
இந்த நடைமுறையைப் பொறுத்தவரை, அபுஜ் மரியா பழங்குடியினச் சமூகத்தின் பெண்கள், மைய இந்தியாவின் சத்தீஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தின் அடர்த்தியான காடுகளின் கரடுமுரடான பாதை வழியே கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் நடைபயணம் செய்து கடக்கிறார்கள். மாவோயிஸ்ட் கொரில்லாக்கள் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடக்கும் பயங்கர மோதல்கள் நடக்கும் அபுஜ்மத் பகுதி 4000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இந்த பிரச்சனையின் காரணமாக மக்கள் சந்தேகத்துக்கும், பயத்துக்கும் ஆளாகியிருப்பதால், நாங்கள் இங்கு அவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை.
முன்பாக, ஆர்ச்சாவில் நடக்கும் வாரச் சந்தையில் சில பெண்களிடம் பேசினோம். மேல்சட்டையைச் சுற்றி துண்டு போன்ற ஆடையை அணிந்திருந்தார்கள். ஒயிட் மெட்டல் மற்றும் வெள்ளியால் ஆன ஆபரணங்களை அணிந்திருந்தார்கள். குழந்தைகளுக்கு வைப்பதற்கு ஊஞ்சல் போன்ற அமைப்பை தங்கள் மார்போடு சேர்ந்து அணிந்திருந்தார்கள். ஆண்கள் பலர் லுங்கியும் சட்டையும் அணிந்திருந்தார்கள். சட்டையும் கால்சட்டையும் அணிந்த பிறர், அரசு அதிகாரிகளாகவும், வெளிநபர்களாகவும், வணிகர்களாகவும், சாதாரண உடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளாகவும் இருந்தனர்.
முதலில் கூச்சமடைந்த அந்த பெண்கள், சிறிது நேரத்தில் நம்மிடம் கோண்டி மொழியில் பேசினர். இரண்டு கோண்ட் பழங்குடியின சிறுவர்கள், அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து நமக்குச் சொன்னார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் கிடைக்கும் விளைபொருட்களை சந்தையில் விற்க வந்திருப்பதாக அப்பெண்கள் தெரிவித்தனர். மூங்கில் துடைப்பங்கள், சரோலி விதைகள், புளி மற்றும் உள்ளூர் வாழை வகைகள் மற்றும் தக்காளிப்பழங்கள் ஆகியவற்றை சிறு அளவில் கொண்டு வந்திருந்தார்கள்.
பட்டுப்பூச்சி கூடுகளைக்கூட விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தார்கள். அபுஜ்மத்தில் பட்டுப்பூச்சிக் கூடுகள் அதிக அளவில் கிடைக்கும். பிலாஸ்பூர், ராய்கர் மற்றும் கோர்பா ஆகிய சத்தீஸ்கர் வடக்கு நிலப்பரப்பில் நெய்யப்படும் பிரபலமான கோசா பட்டுப்புடவைகளுக்கான உதிரிப் பொருட்களே பட்டுப்பூச்சிகள்தான்.
இவற்றை விற்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் சற்றேறகுறைய 50 ரூபாய் பணத்தில் எண்ணெய், மிளகாய்கள், உப்பு, உருளைக்கிழங்குகள், வெங்காயம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள். அவர்கள் விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்களைப் போலவே, வாங்கும் பொருட்களையும் அளவில் குறைவாக வாங்கி அவர்களது தொங்கும் பைகளில் அடுக்கிக்கொள்கிறார்கள்.
ஆர்ச்சா சந்தையில், பருவநிலைக்கான வேர்கள், பச்சை இலைகள், நாட்டு வகைப் பழங்கள், விலை மலிவான மொபைல்ஃ போன்கள், சோலார் விளக்குகள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், மேசை விளக்குகள் மற்றும் தேடுவிளக்குகள் ஆகிய பல பொருட்கள் அங்கு கிடைக்கிறது. மினி-இன்வெர்ட்டர் கூட இங்கு விற்கப்படுகிறது. ஏனெனில், மத் கிராமங்கள் பலவற்றில் மின்சார இணைப்புகளே இல்லை.
மலைப்பிரதேச குக்கிராமங்களில் செல்பேசி நெட்வர்க்குகளும் இல்லாமல் இருப்பதால், பழங்குடியினர் மொபைல் ஃபோன்களை பாட்டு கேட்பதற்கும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கும், டார்ச் லைட்டுக்காகவும்தான் பயன்படுத்துகிறார்கள் என உள்ளூர் வியாபாரி ஒருவர் சொல்கிறார்.
அபுஜ்மத் - இந்த வார்த்தைக்கு மர்மமான குன்று அல்லது தெரியாத ஒன்று என்பது பொருள். மேற்கில் மஹாராஷ்ட்ராவின் கட்சிரோலியில் இருந்து, கிழக்கில் பஸ்தார் மற்றும் தெற்கில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டங்கள் வரை விரிந்திருக்கிறது இந்த குன்றுகள். இந்தியப் பழங்குடியின சமூகங்களான கோண்ட், முரியா, அபுஜ் மரியா மற்றும் ஹல்பா ஆகிய சமூகங்களுக்கு இந்த மலைதான் பிறப்பிடம். சுயாதீனமாகவும், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையிலும் அபுஜ் மரியா மக்கள்தொகை, குறைந்துகொண்டே வருகிறது.
ஓடைகளும், அடர்ந்த காடுகளும் கொண்ட நிலப்பகுதிகள் இவை. மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும், கனிவானவர்களாகவும் இருக்கிறார்கள். பார்க்க அழகான இந்த இடம் பயணம் செய்வதற்கும், வாழ்நிலைக்கும் கடினமானதாக இருக்கிறது. பிபிசி செய்தியாளராக அபுஜ்மத்தைக் குறித்த செய்திகளை பலமுறை சேகரித்திருக்கும் சுவோஜித் பக்சி “மழை காரணமாக அபுஜ்மத் பகுதி வெளியுலகிலிருந்து நான்கு மாதங்களுக்கு துண்டித்துவிடப்பட்டதாகவே இருக்கும். அந்த காலங்களில் பலர் இங்கு வயிற்றுப்போக்கால் இறக்கிறார்கள். வருடம் முழுவதும் பலர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் சொல்லித்தரும் பள்ளிகளையோ, சிகிச்சை அளிக்கப்படும் சுகாதார நிலையங்களையோ அங்கு பார்க்கமுடியாது. உள்ளூரில் இருக்கும் சில வைத்தியர்களும், மாவோயிஸ்ட் படையினரின் நடமாடும் மருத்துவக் குழுக்களும் மட்டுமே அங்கு இருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்கிறார்கள்,” என்கிறார்.
குக்கிராம பகுதிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் காவல்துறை நடவடிக்கைகளுக்கு பயந்தே வாழ்கிறார்கள். இந்தக் கிராமங்கள் மிக அழகாக காட்டப்படுவதெல்லாம், மானுடவியலாளர்களின் பழைய குறிப்புகளில்தான். நிஜத்தில் இல்லை” என்கிறார் சுவோஜித் பக்சி.
அபுஜ்மத்தின் சாலைகள் ஆர்ச்சாவில் முடிகின்றன. இந்த மிகப்பெரும் பரப்பளவில் இருக்கும் ஒரே சந்தையான ஹாட்டை அடைவதற்கு, உள்ளூர்வாசிகள் 70 கிலோமீட்டர்களைக் கடந்து செல்லவேண்டும். இந்தப் பழங்குடியினர், இந்தச் சந்தையில்தான் தங்களின் நியாயவிலை ரேஷன் பொருட்களைக் கூட வாங்கமுடியும். மதிய சத்துணவான சோற்றையும், பருப்பையும் பெறுவதற்கும் பள்ளிக் குழந்தைகள் இங்கு வருகிறார்கள்.
சிறிது நாட்கள், ராமகிருஷ்ண மிஷனின் தன்னார்வலர்கள் சிலர் இந்தப் பகுதிக்குள் வருவதற்கு அனுமதி பெற்றிருந்தார்கள். அதற்குப் பிறகு, பழங்குடியினருக்கு தானியங்களை விநியோகிப்பதாகக் காரணம் கூறி அவர்களையும் அரசு தரப்பில் தடுத்திருக்கிறார்கள்.
சந்தையில் இருக்கும் பல குழந்தைகள் மிகவும் சத்துக்குறைவாக காணப்படுகிறார்கள். உள்ளூரில் இருக்கும் பழங்குடியின ஆஸ்ரமப் பள்ளியில் இருந்து வரும் சிறுமிகள் காய்கறிகள் வாங்குவதற்காக வருவதையும் காணமுடிகிறது. அபுஜ்மத்தின் மிகத் தொலைவான கிராமப் பகுதியிலிருந்து தங்கள் பெற்றோருடன் வரும் குழந்தைகளுடன் யுனிசெஃப் தன்னார்வலர்கள் சிலரையும் பார்க்கமுடிகிறது. பெண்கள், குறிப்பாக தாய்மார்கள் பலரும் சத்துக் குறைபாடு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். வாரச் சந்தையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, சந்தைக்கு வருபவர்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். இல்லையெனில் இந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடைக்காது என்று கூறுகின்றனர் யுனிசெஃப்பின் தன்னார்வலர்கள்.
ஆர்ச்சா ஹாட்டில் இன்னும் ஒரு முக்கியப் பொருளும் கிடைக்கும்: அரிசியால் ஆன மது (லோண்டா), சுல்ஃபி, டாடி, மஹுவா மற்றும் உள்ளூர் பானங்கள் இவையெல்லாம் லோண்டா சந்தை என்னும் பகுதியில் கிடைக்கின்றன.
கிராமவாசிகளுக்கு ஒரு நாள் பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும், மது குடிப்பதற்கும் இந்த சந்தைதான் உதவுகிறது. இளைஞர்களும், பெரியவர்களும் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து சம அளவில் மது குடித்து, சோகமான மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு, எந்த கிராமத்திலும் கிடைக்காத தகவல்களை சேகரிப்பதற்கான இடமாக ஹாட் சந்தை இருக்கும். விவசாய உற்பத்திகள், இறக்குமதி செய்த பொருட்கள், விற்பனை, வாங்குதல், பண்டமாற்றம் செய்தல், வாழ்தல் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை இங்குதான் தெரிந்துகொள்வோம்.
தமிழில்:: குணவதி
ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ருச்சி வர்ஷ்னேயா.