“பெண்கள் விமானத்தையே ஓட்டுகிறார்கள், ஆட்டோ ஓட்டுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது?” என கேட்கிறார் சாந்தினி பார்மர். 2018-ம் ஆண்டு இவர் ஆட்டோ ஓட்ட தொடங்கும் போது, பூஜ் நகரில் ஆட்டோ ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அப்போது வெறும் 20 வயது மட்டுமே. இரண்டாவதாக, இவரை விட ஒரு வயது மூத்தவரான ஆஷா வகேலா. இருவருமே உறவினர்கள் கூட; ஆஷா, சாந்தினியின் சித்தி.

இவர்கள் ஓட்டும் வாகனம் சக்கடா என அழைக்கப்படுகிறது. மூன்று சக்கரம் கொண்ட இந்த வாகனத்தில் 10 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம். குஜராத் கட்ச் மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் பூஜ் நகரலிருந்து 25கிமீ சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல இது பயன்படுகிறது. இது டாக்ஸி மீட்டர் இல்லாமல் ஓடுவதால், கூடக் குறைய கட்டணம் வாங்குகிறார்கள். “குறைந்த தூரத்திற்கு 20-30 ரூபாய் வாங்குவோம். நீண்ட தூர பயணத்திற்கு அதைவிட சற்று அதிகமாக வாங்குவோம். சில சமயங்களில் அதிக தூரம் சென்றால் 300 ரூபாய் வரை வாங்குவோம்” என்கிறார் ஆஷா.

முதலில் இவர்களது குடும்பங்கள், முக்கியமாக ஆஷாவின் பெற்றோர்கள் தங்கள் மகள்களை வெளியே அனுப்ப தயக்கம் காட்டினார்கள். இதற்குமுன் தங்கள் குடும்பத்திலோ அல்லது பூஜ் நகரிலோ எந்த பெண்ணும் இதுபோல் செய்ததில்லை என்பதால் அவர்கள் பயந்தார்கள். ஆனால் குடும்ப பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு சாந்தினியை ஆட்டோ ஓட்ட கற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதித்தார்கள்.

நான்கு சகோதரிகளுக்கும், இரண்டு சகோதரர்களுக்கும், தங்கள் பெற்றோர்களுக்கும் மூத்த குழந்தையாக இருக்கும் சாந்தினி, பூஜ் ரயில்நிலையத்திற்கு அப்பாலுள்ள புட்டேஷ்வர் நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு ஞாயிற்று கிழமை மாலை என்னை அழைத்துச் சென்றார். அவரது வீட்டிற்குச் செல்லும் பாதை மேடும் பள்ளமுமாக மிக மோசமாக உள்ளது. “என்னை தவிர, எந்த ஆட்டோ ஓட்டுனரும் இந்தப் பகுதிக்கு வர மாட்டார்கள். அதனால் எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பலரும் நகரத்திற்கு செல்ல எனக்கு வாடிக்கையாளராக உள்ளார்கள்” என்கிறார்.

Asha Vaghela (left) followed her niece Chandni Parmar (right) in ferrying passengers in their three-wheelers, called chakadas, in Bhuj. There were no women driving chakadas in the city before they hit the roads
PHOTO • Namita Waikar
Asha Vaghela (left) followed her niece Chandni Parmar (right) in ferrying passengers in their three-wheelers, called chakadas, in Bhuj. There were no women driving chakadas in the city before they hit the roads
PHOTO • Namita Waikar

தனது சகோதரி மகளான சாந்தினி பார்மரை (வலது) பின்பற்றும் ஆஷா வகேலா (இடது), தன்னுடைய மூன்று சக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கிறார். இவை பூஜ் நகரில் சக்கடா என அழைக்கப்படுகிறது. இவர்கள் வருவதற்கு முன் இந்த நகரத்தில் எந்த பெண்ணும் ஆட்டோ ஓட்டியதில்லை

ஒப்பந்த தொழிலாளரான அவரது தந்தை பாரத் பார்மர், திருமணம் மற்றும் இதர விஷேசங்களுக்கு மூங்கில் மற்றும் துணி பந்தல் அமைப்பவர். “எங்கள் இருவருக்கும் படிப்பறிவு கிடையாது. ஆனால் எங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என விரும்புகிறோம். இப்போது எங்கள் குடும்பத்தில் உள்ள எட்டு பேரும் பள்ளிகோ அல்லது வேலைக்கோ வெளியே சென்று விடுகிறோம்” என சிரித்துக்கொண்டே கூறுகிறார் சாந்தினி அம்மா பாபி பார்மர். ஹோட்டலில் சமையலராக இருக்கும் இவர், தினமும் நூறு சப்பாத்தி உருட்டுகிறார்.

சாந்தினியோடு கூட பிறந்தவர்கள் அனைவரும் பள்ளியில் படிக்கிறார்கள். அவரது சகோதரர்கள் ராகுல் எட்டாம் வகுப்பும் பாவிக் ஏழாம் வகுப்பும் படிக்கிறார்கள். 12-ம் வகுப்பு முடித்துள்ள கீதா, பூஜ் நகரிலுள்ள அரசாங்க தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கணினி அறிவியல் படிக்கிறார். மற்றொருவரான தக்ஷா, ஒன்பதாம் வகுப்பும் இளைய சகோதரி ரீதா, மூன்றாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். “சில சமயங்களில் என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருக்கும் போது, அனைவரையும் என் ஆட்டோவில் சவாரி அழைத்துச் செல்வேன்” என சந்தோஷத்துடன் கூறுகிறார் சாந்தினி.

“ஆஷாவைப் போல எனக்கும் எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு செல்ல ஆர்வம் இல்லை. அதனால் நாங்கள் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டோம்” என என்னிடம் கூறுகிறார். பள்ளியிலிருந்து நின்றதும் வீட்டு வேலைகளில் தனது அம்மாவிற்கு உதவியாக இருந்துள்ளார் ஆஷா. இவர்களது வீடு பூஜ் நகரிலுள்ள கோமதி சாலையில் இருக்கும் ராம்தேவ் நகரில் உள்ளது.

நான்கு வருடங்களாக மின்சார விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றினார் சாந்தினி. சாதாரண தொழிலாளராக இருந்த அவருக்கு, பணி செய்யும் நாளின் எண்ணிக்கையை பொருத்து மாதத்திற்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை கிடைக்கும். அதுவொரு தற்காலிக பணி. ஆலையை நிரந்தரமாக மூடும்போது அவரது வேலையும் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இரண்டு வருடம் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். கட்ச் நகரில் உள்ள பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிக்க, சமூக பணியாளர்கள் சாந்தினியின் பகுதிக்கு வருகை தந்தனர். இப்படிதான் அவருக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வேலையும் சுயாதீனமான வருவாயும் அவர்களுக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்துள்ளது. சிறிய விஷயங்களான ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிவதற்கு இனி அவர்களின் பெற்றோர் அனுமதி தேவைப்படாது.

வீடியோ பார்க்க: ஆட்டோ ஓட்டுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது?

பாரம்பரிய கைத்தொழில்களான பூத்தையல், துணி தைத்தல் அல்லது அப்பளம் போன்ற உலர் உணவுகளை தவிர்த்து வேறு எந்த தொழில் செய்ய ஆர்வமாக உள்ளீர்கள் என சாந்தினியையும் ஆஷாவையும் பெண்கள் குழுவினர்  கேட்டனர். ஓவியம், புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு போன்ற பயிற்சிகளில் அவர்களுக்கு பெரிதாக ஆர்வம் அல்லது திறமை இல்லை. உடனடியாக மற்றும் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், ஆட்டோ ஓட்டுவது சரியான வாய்ப்பாக அவர்களுக்கு தெரிந்தது.

பூஜ் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், இவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வாகனங்கள் வாங்குவதற்கு கடனும் கொடுத்தது. சாந்தினியும் ஆஷாவும் மூன்று வாரங்களிலேயே ஆட்டோவையும் பெரிய சக்கடா வண்டியையும் ஓட்ட கற்றுக் கொண்டார்கள். 2018-ம் ஆண்டு இறுதியில், இரு பெண்களும் ஆளுக்கொரு சக்கடா வண்டியை வாங்கினார்கள். இதற்காக இருவரும் தனித்தனியாக 2,30,000 ரூபாய் வட்டியில்லா கடனாக பெற்றுள்ளார்கள். 2019 பிப்ரவரியிலிருந்து மாதந்தோறும் ரூ.6,500 வட்டி செலுத்தி வருகிறார்கள். முழு கடனை அடைக்க இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்.

தினமும் காலை எட்டு மணிக்கு வேலையை தொடங்கும் இவர்கள், இரவு 7.30 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். சந்தினிக்கு நிலையான சவாரி இருப்பதால் அவருக்கு வருமானம் ஈட்டுவதில் பிரச்சனையில்லை. கடந்த சில மாதங்களாக, வார நாட்களில் தினமும் கட்ச் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் ஒருவரை அழைத்துச் சென்றார். மாலையும் அவரே வீட்டிற்கு அழைத்து வந்தார். 2019 நவம்பர் மாதம் நாங்கள் அவரை சந்தித்த போது, பார்வை குறைபாடு கொண்ட பெண்ணை, அவரது பணியிடத்திற்கும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சவாரி மட்டுமே சாந்தினியிடம் இருந்தது. ஒரு சவாரிக்கு மாதம்தோறும் ரூ.1,500 முதல் 3,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

Top left: Asha features in a poster of a women's group. "People of the samaj can question me as much as they want. By driving the chakada I can tell the other girls that no profession is meant only for men, women can do it too." Top right: The 'Glory of Bhuj' trophy awarded to Chandni by Bhuj Municipality on International Women's Day in 2019. Bottom: Chandni and Asha (right) at Asha’s home
PHOTO • Namita Waikar

மேலே இடது: பெண்கள் குழுவின் போஸ்டரில் ஆஷாவின் புகைப்படம். “சமாஜில் உள்ள மக்கள் என்னிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டு கொள்ளட்டும். ஆட்டோ ஓட்டும் நான் மற்ற பெண்களிடம் கூறிக் கொள்வதெல்லாம், எந்தவொரு தொழிலும் ஆண்களுக்கு மட்டும் கிடையாது, பெண்களாலும் செய்ய முடியும்.” மேலே வலது: 2019-ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பூஜ் நகராட்சி சாந்தினிக்கு கொடுக்கப்பட்ட ‘குளோரி ஆஃப் பூஜ்’ விருது.  கீழே: ஆஷாவின் வீட்டில் சாந்தினியும் ஆஷாவும் (இடது) இருக்கிறார்கள்

மற்ற ஓய்வு நேரங்களில், இவரின் ஆட்டோ வாடகைக்கு தயாராக இருக்கிறது. ஆஷாவின் வாகனம் நாள் முழுதும் வாடகைக்கு தயாராக இருக்கிறது. அதிகமான வாடிக்கையாளரை பிடிக்க வேண்டும் என, பூஜ் நகரின் பிரபலமான பகுதியான சுவாமி நாராயன் கோயிலில் தங்கள் ஆட்டோவை அவர்கள் நிறுத்தியுள்ளார்கள். இருவரும் தினமும் சராசரியாக 600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். இதில் 200 ரூபாய் எரிபொருள் வாங்க செலவாகிறது. மீதமுள்ள தொகை, வாங்கிய கடனுக்கு தவணை கட்டுவதற்கும் தனிப்பட்ட மற்றும் வீட்டுச் செலவுக்கும் போய் விடுகிறது.

மும்பை, தானே, புனே, கொல்கத்தா, இந்தூர் போன்ற நகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்கள் இருப்பார்கள். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமான கட்ச் தலைநகரமான பூஜ் நகரில், சாந்தினி மற்றும் ஆஷாவுக்கு முன் எந்த பென்ணும் ஆட்டோ ஓட்டியதில்லை.

வாகனத்தை ஓட்டுவது ஒன்றும் பெரிய விஷயம்ல்ல, அது எளிமையானதே. ஆனால் சமாஜ்வாலாக்களின் – இவர்கள் சார்ந்த சமூகத்து மக்கள் – கருத்துக்களையும் தீர்ப்புகளையும் மீறி ஆட்டோ ஓட்டுனர்களாக இருப்பதுதான் மிகப்பெரிய சவால். “எப்படி பெண்கள் ஆட்டோ ஓட்டலாம்? இது ஆண்கள் வேலை தானே? அவர்களுக்கு வெட்கமே இல்லையா? இதுபோன்ற கேள்விகளை அருகிலுள்ளோர் கேட்பார்கள்” என சாந்தினி கூறுகிறார். “சில சமயம் யாருடனோ நாங்கள் ஊர் சுற்றுவதாக கதைகட்டி விடுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் எங்கள் ஆட்டோவில் வாடகைக்கு பயணம் செய்வதவர்களாக இருப்பார்கள்” என கோபத்தோடு கூறுகிறார் ஆஷா.

Left: Chandni with her parents and siblings at their home. She is the oldest of four sisters and two brothers. Right: Chandni and Asha with Asha's parents, brother, niece and a neighbour, at Asha's home
PHOTO • Namita Waikar
Left: Chandni with her parents and siblings at their home. She is the oldest of four sisters and two brothers. Right: Chandni and Asha with Asha's parents, brother, niece and a neighbour, at Asha's home
PHOTO • Namita Waikar

இடது: தனது வீட்டில் தன்னுடைய தம்பி, தங்கைகள் மற்றும் பெற்றோர்களோடு சாந்தினி. நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுக்கும் இவரே மூத்தவர். வலது: ஆஷாவின் பெற்றோர்கள், சகோதரர், உறவினர்களோடு ஆஷாவும் சாந்தினியும்

“முதலில் வீட்டை விட்டு வெளியே தனியாக செல்லக்கூட நாங்கள் பயப்படுவோம். எப்படி இவ்வுளவு தைரியம் எங்களுக்கு வந்தது என தெரியவில்லை” என்கிறார் சாந்தினி. ஆஷா கூறுகையில், “இதற்கு காரணம் எங்கள் குடும்பம் எங்களுக்கு பக்கபலமாக இருந்தது. அவர்களிடமிருந்து சக்தியை பெற்றதோடு எங்களைப் பற்றி மற்றவர்கள் கூறும் தேவையில்லாத விஷயங்களை காதுகளில் வாங்காமல் புறக்கணித்தோம்”.

வேலையும் சுயாதீனமான வருவாயும் இவர்களுக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்துள்ளது. “உங்கள் புது வேலையை ரசித்து அணுபவியுங்கள். இப்போதைக்கு திருமணத்திற்கு எந்த அவசரமும் இல்லை” என சாந்தினியின் தந்தை கூறியுள்ளார். “எல்லா பெற்றோர்களுக்கும் நான் கூறிக்கொள்வது, உங்கள் மகள்களை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்காதீர்கள். இந்த உலகம் மிகப்பெரியது. வெளியே சென்று உலகத்தை பார்ப்பது மிகவும் முக்கியம்” என்கிறார் சாந்தினி.

“பெண்கள் பலவீனமானவர்கள் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் நாங்கள் பலகீனமானவர்கள் அல்ல, எங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என ஆஷா கூறுகிறார். ஆட்டோ ஓட்டுனர்களாக இருப்பதாலும் நாங்களே வருமானம் ஈட்டுவதாலும், எங்களுக்கு ஒரு சுதந்திர உணர்வை கொடுத்துள்ளதாக கூறுகிறார் சாந்தினி.

“நான் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து வாடிக்கையாளர்கள் பாராட்டும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். தெருவில் நடக்கும் பெண்களை என் ஆட்டோவில் கடந்து செல்லும் போது, அவர்கள் என்னைப் பார்த்து கை தூக்கி வெற்றி அடையாளத்தை காட்டும்போதோ அல்லது பெண் சக்தி, வாழ்த்துக்கள் என உரக்க கூறும்போதும் உண்மையில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்கிறார்.

பூஜ் நகரில் உள்ள கட்ச் மகிளா விகாஸ் சங்கதம் மற்றும் சகி சங்கினி குழுக்கள் செய்த உதவிகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறார் கட்டுரையாசிரியர்.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja