முகமது ஹஸ்னன், டெல்லியில் தொழிலாளராக பணியாற்றுகிறார். கட்டிட வேலை, சுமை தூக்குவது என கடந்த 25 வருடங்களாக கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கிறார். நகரின் வடகிழக்கில் உள்ள ரமிலா மைதானில் கூடாரம் அமைக்கும் பணியைப் பார்வையிட்ட படியே, இன்று எல்லாம் மாறிவிட்டது எனக் கூறுகிறார். நவம்பர் 28 இரவு முதல் இங்கு விவசாயிகள் வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 29 மற்றும் 30ம் தேதி நடைபெறவுள்ள கிசான் முக்தி மோர்ச்சாவில் கலந்துகொள்ள நாடெங்கிலும் இருந்து விவசாயிகள் வருகை தர உள்ளார்கள்.

“நானும் விவசாயிதான். எங்கள் நிலத்தில் போதுமான விளைச்சல் இல்லாததால் நானும் வேறு வழியின்றி உத்தரபிரதேசத்திலுள்ள மொராதாபாத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்துள்ளேன். நாளை மிகப்பெரிய பேரணியைப் பார்க்கலாம் என நம்புகிறேன். மொரதாபாத்தைச் சேர்ந்த சில விவசாயிகளை சந்திக்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.”

நவம்பர் 28, புதன்கிழமை காலையிலிருந்து 65-70 தொழிலாளர்கள் ரமிலா மைதானில் வேலை செய்து வருகிறார்கள். கூடாரத்திற்குச் சற்று தொலைவிலேயே 6-8 பேர் மும்முரமாக உருளைக்கிழங்கை உறித்துக் கொண்டும் பெரிய பாத்திரத்தில் பால் காய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அருகிலுள்ள ஹல்வாயில் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்தின் போர்சா கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்சந்திர சிங், 35, இந்த வேலைகளை மேற்பார்வை செய்துக் கொண்டிருக்கிறார். “குறைந்தது 25,000 பேருக்காவது (இன்றிரவு மைதானில் தங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது) டீயும் சமோசாவும் நாங்கள் தயார் செய்ய வேண்டும்” என அவர் கூறுகிறார்.

laborers preparing for farmers march
PHOTO • Shrirang Swarge

மேலே இடது: “நானும் விவசாயிதான்” என்கிறார் முகமது. மேலே வலது, கீழே இடது மற்றும் வலது: இன்றிரவு மைதானில் தங்கப்போகிற 25,000 மக்களுகாக ஹரிஷ்சந்திர சிங்கும் மற்றவர்களும் டீயும் சமோசாவும் தயார் செய்கிறார்கள்.

விவசாயப் பேரணிக்காக மைதானை தயார் செய்யும் பல தொழிலாளர்கள் விவசாயக் குடும்பங்களைச் சார்ந்தவர்களே. ஆனால் வேறு வழியின்றி வேலைக்காக புலம்பெயர்ந்துள்ளனர். மொரதாபாத் புறநகர் பகுதியில் ஹஸ்னனுக்கு ஆறு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் அரிசியும் கோதுமையும் பயிர் செய்துள்ளார். அவர் கூறுகையில், “இப்போது என் மனைவி விவசாயத்தை பார்த்துக் கொள்கிறாள். இங்கு நான் தனியாக வாழ்கிறேன். இந்த வேலையும் இல்லாவிட்டால் உயிர் வாழ்வதே சிரமமாகப் போகும். விவசாயத்தில் வருமானமே இல்லை. முதலீடு செய்த தொகையைக் கூட எங்களால் திரும்ப எடுக்க முடியாது.”

1995 முதல் 2015 வரை, 3,00,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. மோசமான பயில் விலைகள், வீழ்ச்சியடைந்த கடன் அமைப்பு, வளரும் கடன் போன்ற பல பிரச்சனைகளால் உண்டான விவசாயப் பிரச்சனை விவசாயத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளை வெளியேற்றியுள்ளது. 2014-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த செண்டர் ஃபார் டெவலப்பிங் சொசைட்டீஸ் நடத்திய கணக்கெடுப்பில், இந்தியாவிலுள்ள 76 சதவிகித விவசாயிகள் தங்கள் வேலையை விட்டுச் செல்ல விரும்புவதாக தெரிய வந்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 1991 மற்றும் 2011-க்கு இடைப்பட்ட காலத்தில் விவசாயத்தை விட்டு 15 மில்லியன் விவசாயிகள் வெளியேறியுள்ளனர். பலர் மற்றவர்களின் நிலத்தில் விவசாயக் கூலியாகவோ அல்லது ரமிலா மைதானில் உள்ள பல தொழிலாளர்கள் போல் வேறு நகரங்களுக்கோச் சென்றுவிட்டனர்.

அதிகரிக்கும் விவசாயப் பிரச்சனை மீது கவனத்தை திருப்ப, 150 - 200 விவசாய குழுக்கள் மற்றும் சங்கத்தின் கூட்டுறவு அமைப்பான அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு, இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை ஒன்று திரட்டியுள்ளது. நவம்பர் 29 அன்று டெல்லி வழியாக அவர்கள் பேரணி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று மாலையே ரமிலா மைதானை அடைந்து, நவம்பர் 30 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணிச் செல்ல உள்ளார்கள். அவர்களது ஒட்டுமொத்த கோரிக்கை: விவசாயப் பிரச்சனை குறித்து 21 நாள் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும்.

laborers preparing for farmers march
PHOTO • Shrirang Swarge

மேலே இடது: தங்கள் நிலத்தை விட்டு, பல நாட்கள் தங்கள் தினசரி கூலியை கைவிட்டு, பணம் செலவு செய்து எத்தனை பேரால் இங்கு வர முடியும்? என நம்மிடம் கேட்கிறார் சகிர். கீழே இடது: விவாயிகள் சிக்கலில் உள்ளார்கள் என்பதையே அரசாங்கம் ஒத்துக்கொள்ள மறுப்பதாக கூறுகிறார் காவலாளியான அரவிந்த் சிங்.

எங்கள் முழு ஆதரவும் விவசாயிகளுக்கு உண்டு என ரமிலா மைதானில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள். நீங்களும் உங்கள் சகபணியாளர்களும் இந்த பேரணியை ஆதரிக்கிறீர்களா என நான் கேட்டதற்கு, நாங்களும் விவசாயிதான் என கூறுகிறார் சகிர் (தன்னுடைய முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துமாறு விரும்புகிறார்). அவர் கூறுகையில், “ஆனாலும், தன்னுடைய பகுதியில் உள்ள பல விவசாயிகளால் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள முடியாது என்கிறார் சகிர். விவசாயக் கூலியை நம்பியே அவர்கள் உள்ளார்கள். தங்கள் நிலத்தை விட்டு, பல நாட்கள் தங்கள் தினசரி கூலியை கைவிட்டு, பணம் செலவு செய்து எத்தனை பேரால் இங்கு வர முடியும்?”

பீகாரின் புர்னியா மாவட்டத்தின் சிர்சி கிராமத்தைச் சேர்ந்த சகிர், 42, கூறுகையில், அங்கு வாழ்வாதாரத்திற்கான எந்த வசதியும் இல்லை. எங்களிடம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே உள்ளது என கூறியபடியே, கீழே கிடக்கும் கம்பத்தை எடுத்து ஏணியில் மேலே நிற்கும் மற்றொரு நபரிடம் கொடுக்கிறார். “அதனால்தான் இங்கு பயணம் செய்து வருபவர்களை நான் மதிக்கிறேன்.”

மைதானில் உள்ள தொழிலாளர்கள் தங்களை விவசாயிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு, விவசாயப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவர்களிடம் நம்பிக்கை காணப்படவில்லை. அங்கு காவலாளியாக இருக்கும் அரவிந்த் சிங், 50, கூறுகையில், “அக்டோபர் 2 அன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி சென்றபோது கண்ணீர் புகை கொண்டும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் வரவேற்றார்கள். விவசாயிகள் பிரச்சனையில் உள்ளார்கள் என்பதையே அரசாங்கம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. நாங்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டது. எனக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் உள்ளது. இன்றுவரை எதுவும் நடக்கவில்லை. நான் முக்கியமாக உருளைக்கிழங்கையும் கொஞ்சம் நெல்லும் பயிர் செய்துள்ளேன். என்னுடைய அப்பா காலத்தில், எங்களிடம் 12 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில், மருத்துவச் செலவு, என் மகள் திருமணம் மற்றும் விவசாயக் கடன் என கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டோம். இன்று, எங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எப்படி என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” என்கிறார். இவர் உத்தரபிரதேசத்தின் கனோஜ் மாவட்டாத்தில் உள்ள தெராராகி கிராமத்தைச் சேர்ந்தவர்.

Tent poles at Ramlila Maidan
PHOTO • Shrirang Swarge

சிங்கிற்கு மூன்று மகள்களும் மூன்று மகன்களும் இருக்கிறார்கள். அவர் கூறுகையில், “நான் மாதம் ரூ. 8,000 சம்பாதிக்கிறேன். சில நேரங்களில் இதைவிட அதிகம் கிடைக்கும். இங்கு நான் வாடகை கொடுக்க வேண்டும், சாப்பாடு வாங்க வேண்டும், வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் எப்படி என்னால் குழந்தைகளுக்காக சேமிக்க முடியும்? எங்களைப் பற்றி அரசாங்கம் நினைத்துப் பார்த்ததுண்டா? இந்தப் போராட்டம் விவசாயிகளுக்கு உதவுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்தப் பேரணி எங்களைக் குறித்து யோசிக்க வைக்கும். இப்போதைய நிலையில், வசதி படைத்தவர்களே பணம் ஈட்டுகிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை” என்கிறார்.

அவரோடு பணியாற்றும் மன்பால் சிங், 39, கூறுகையில், “எங்கள் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கேட்கிறீர்கள்? விவசாயிகளின் வாழ்க்கையே பிரச்சனைதான்.”

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Other stories by Parth M.N.