“எங்கள் வேலை ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது,” என்கிறார் மேற்கு டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த குயவர் ஜக்மோகன். ஓராண்டிற்கு முன் மரம் மற்றும் மரத்தூளில் இயங்கும் மட்பாண்ட உலைகளை அகற்ற மாநில அரசு உத்தரவிட்டதைக் குறிப்பிட்டு அவர் இப்படிச் சொல்கிறார். “இதனால் பல குயவர்களும் மட்பாண்டங்கள் செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர், சிலர் வியாபாரிகளாக மாறிவிட்டனர், சிலர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது விற்பனையின் உச்ச காலத்தில் [மார்ச் முதல் ஜூலை வரை] இந்த தொற்று, பொதுமுடக்கம் காரணமாக தொழில் இன்னும்  மோசமடைந்துள்ளது.”

48 வயதாகும் ஜக்மோகன் (மேலே உள்ள முகப்புப் படத்தில் இருப்பவர்; தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) முப்பதாண்டுகளுக்கும் மேலாக மட்பாண்டத் தொழில் செய்துவருகிறார். “மட்பாண்டங்களுக்கு இந்தாண்டு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம், இது நல்ல விஷயம். [கோவிட்-19 குறித்த அச்சத்தால்] குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் குடிநீரை மக்கள் தவிர்த்து வருகின்றனர். பொதுமுடக்கத்தின்போது எங்களுக்கு களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டது, எங்களால் போதிய சரக்கு இருப்பு வைத்துகொள்ள முடியவில்லை.” பொதுவாக 2-3 நாட்களில் சுமார் 150-200 மட்பாண்டங்களை குடும்ப உறுப்பினர்கள் உதவியோடு ஒரு குயவர் செய்து விடுகிறார்.

காலனியின் தெருக்கள் எங்கும் உலர்ந்த களிமண் குவிக்கப்பட்டுள்ளது - பரபரப்பான காலங்களில் குயவர்கள் சக்கரம் சுற்றுவது, பானைகளை தட்டுவது என சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பலரது வீட்டின் முகப்பிலும் நூற்றுக்கணக்கான கைவினைப் பானைகள், விளக்குகள், சிலைகள் போன்றவை காய வைக்கப்பட்டுள்ளன. காய்ந்த பிறகு அவற்றுக்கு கெரு எனப்படும் சிவப்பு நிற திரவ களிமண் பூசப்பட்டு, அந்த டெரகோட்டாக்களுக்கு இயற்கை வண்ணம் கொடுக்கப்படுகிறது. வேக வைப்பதற்கு முன், வீட்டின் மேல்தளத்தில் பாரம்பரிய மண் உலையில் உள்ள பட்டியில் வைக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பல மட்பாண்டங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அருகமைப் பகுதியான பிரஜாபதி காலனி என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கும்ஹார் கிராமில் 400-500 குடும்பங்கள் வசிப்பதாக காலனியின் தலைவர் ஹர்கிஷன் பிரஜாபதி மதிப்பிடுகிறார் “உத்தரபிரதேசம், பீகாரிலிருந்து தான் பல குயவர்களும், உதவியாளர்களும் வந்தனர். அவர்களில் பலரும் வேலை இல்லாத காரணத்தால் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிவிட்டனர்,” என்கிறார் 1990ஆம் ஆண்டு தேசிய விருதும், 2012ஆம் ஆண்டு அரசின் ஷில்ப் குரு விருதும் வென்ற 63 வயதாகும் பிரஜாபதி.

Narendra Prajapati (left): "...this virus has hit our work hard'. In Uttam Nagar, Ramrati and Rekha (right) have have been working on diyas but 'the joy is missing'
PHOTO • Courtesy: Narendra Prajapati
Narendra Prajapati (left): "...this virus has hit our work hard'. In Uttam Nagar, Ramrati and Rekha (right) have have been working on diyas but 'the joy is missing'
PHOTO • Srishti Verma
Narendra Prajapati (left): "...this virus has hit our work hard'. In Uttam Nagar, Ramrati and Rekha (right) have have been working on diyas but 'the joy is missing'
PHOTO • Srishti Verma

நரேந்திரா பிரஜாபதி (இடது) : "...இந்த வைரஸ் நம் வேலையை மோசமாக பாதித்துவிட்டது. உத்தம் நகரில், ராம்ரதி, ரேகா (வலது) ஆகியோர் 'மகிழ்ச்சியின்றி' கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர்

“விநாயகர் சதுர்த்தி நேரத்தில் தொடங்கும் வேலை, தீபாவளி வரை நீடிக்கும். பொதுவாக நாங்கள் அப்போது பரபரப்பாக இருப்போம்,” என்கிறார் அவர். “இந்தாண்டு சந்தை குறித்து சந்தேகமாகவே உள்ளது, பொருட்களை மக்கள் வாங்குவார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. பணத்தை செலவிட [சிலை போன்ற மட்பாண்ட பொருட்களுக்கு] விரும்ப மாட்டார்கள். குயவர்கள் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களிடம் விற்கும் என்ற நம்பிக்கை இல்லை.”

பிராஜாபதியின் மனைவியான 58 வயதாகும் ராம்ரதி, அவரது மகளான 28 வயதாகும் ரேகா ஆகியோர் விளக்குகளைச் செய்து வருகின்றனர், “ஆனால் மகிழ்ச்சி மட்டும் இல்லை” என்கிறார் அவர். “ உத்தம்நகர் குயவர்களின் குடும்பப் பெண்கள் களிமண்ணை பிசைந்து அச்சில் சேர்த்து விளக்குகளைச் செய்கின்றனர். பிறகு செதுக்கி வர்ணம் பூசுகின்றனர்.

“பொதுமுடக்கத்தின் ஆரம்பத்தில் [மார்ச்-ஏப்ரல்] களிமண் கிடைக்காததால் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. எங்கள் சேமிப்பைச் கொண்டு குடும்பத்தை சமாளித்துக் கொண்டோம்,” என்கிறார் 44 வயதாகும் ஷீலா தேவி. பச்சை களிமண்ணை கைகளால் உடைத்து, பொடியாக்கி, சலித்து மாவாக பிசையும் பணியில் அவர் ஈடுபடுகிறார்.

அவரது குடும்பத்தின் மாத வருமானம் ரூ.10,000-ரூ.20,000 வரை இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ரூ.3000-4000 என சரிந்தது. பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வியாபாரிகள் காலனிக்கு வந்து பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டனர்.

பொதுமுடக்கத்தின் தாக்கம் குறித்த ஷீலா தேவியின் கவலை, காலனி முழுவதும் எதிரொலிக்கிறது - அது குயவர்களின் சக்கரம் சுழல்வதை விட சத்தம் நிறைந்தது. “ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது,” என்கிறார் 29 வயதாகும் குயவரான நரேந்திரா பிரஜாபதி. “ஆனால் இந்த வைரஸ் எங்கள் வேலையை பாதிக்கச் செய்துள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு நாங்கள் 100 விநாயகர் சிலைகள் வரை விற்போம், இந்தாண்டு வெறும் 30 தான் விற்றுள்ளது. களிமண், எரிபொருட்கள் [மரக் கழிவுகள் மற்றும் மரத்தூள்] ஆகியவற்றின் விலையும் ஊரடங்கின்போது அதிகரித்துவிட்டது - ஒரு ட்ராலியின் [ஒரு டிராக்டர் அளவு]  விலை ரூ.6000ஆக இருந்தது இப்போது ரூ.9000.” (உத்தம்நகரின் மட்பாண்ட பொருட்களுக்கு ஹரியாணாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலிருந்து தான் அதிகளவில் களிமண் வருகிறது.)

'Many potters and helpers from UP and Bihar have gone back to their villages...,' says Harkishan Prajapati (left), the  colony's pradhan
PHOTO • Rekha Prajapati
'Many potters and helpers from UP and Bihar have gone back to their villages...,' says Harkishan Prajapati (left), the  colony's pradhan
PHOTO • Srishti Verma

'உ.பி, பீகாரிலிருந்து வந்த மட்பாண்டக் கலைஞர்களும், உதவியாளர்களும் தங்கள் கிராமங்களுக்கே திரும்பிவிட்டனர்…,' என்கிறார் காலனியின் தலைவர் (இடது) ஹர்கிஷன் பிரஜாபதி

“உள்ளூர் தொழில்களை வளர்ப்பது பற்றி அரசு பேசுகிறது, ஆனால் எங்கள் உலைகளை மூடச் சொல்கிறது. உலைகளின்றி எங்கள் வேலைகளை எப்படிச் செய்வது?“ என கேட்கிறார் நரேந்திரா. “ஆலைகளை மூடிவிட்டு எங்களை வருவாயின்றி தவிக்க விடுவது இதற்கு தீர்வாகுமா?” இப்போது சிக்கலில் இருக்கும், வழக்கமான மண் உலைகளை அமைப்பதற்கு ரூ.20,000-25,000 வரை மட்டுமே ஆகிறது, இதற்கு மாற்றாக, எரிவாயு உலைகளை அமைக்க வேண்டுமானால், அதற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும். பிரஜாபதி காலனியின் பல குயவர்களால் இத்தகைய பெருந்தொகையை செலவிட முடியாது.

“குறைந்தபட்ச செலவைக் கூட அவர்களால் ஏற்க முடியாது,” என்கிறார் ஹர்கிஷன் பிரஜாபதி. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை (ஏப்ரல் 2019) எதிராக வாதிடுவதற்காக வழக்கறிஞரை நியமிப்பதற்கு குயவர் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தலா ரூ.250 கொடுத்ததை அவர் குறிப்பிடுகிறார். மர உலை விஷயத்தில் உண்மை நிலவரத்தை அளிக்குமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்து உலைகளையும் அகற்றுமாறு இக்குழு உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குயவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தினால் நிச்சயமற்றத் தன்மை மேலும் அதிகமாகிவிட்டது - உத்தம்நகரில் ஏற்பட்ட தேக்கம் நாட்டின் பிற பகுதி மண்பாண்டக் கலைஞர்களின் குடியிருப்புகளிலும் எதிரொலிக்கிறது.

“ஆண்டுதோறும் இந்நேரம் [மார்ச் முதல் ஜூன் வரை, மழைக்காலத்திற்கு முன்பு] நாங்கள் உண்டியல், மண் அடுப்புகள், தண்ணீர் பானைகள், சப்பாத்தி கற்கள் போன்றவற்றை தயார் செய்து குவித்து வைத்திருப்போம்,” என்று சில வாரங்களுக்கு முன்பு என்னிடம் கும்பார் ராம்ஜூ அலி கூறினார். “ஊரடங்கிற்கு பிறகு மக்கள் இதுபோன்ற பொருட்களில் செலவிட தயங்குகின்றனர், இதனால் வியாபாரிகளும் அதிகம் கேட்பதில்லை. ஆண்டுதோறும் ரமலான் மாதங்களில் இரவுப் பகலாக வேலை செய்வோம். இரவு முழுவதும் பானைகளை தட்டும் சத்தத்தை நீங்கள் கேட்கலாம். இந்தாண்டு ரமலானின் போது [ஏப்ரல் 24 முதல் மே 24] அப்படி இல்லை…”

Potter Ramju Ali Kumbhar and son Amad Kumbhar (top left) say: '...getting clay for our work is not so easy now'. Business has slumped for Kachchh's potters, including Kumbhar Alarakha Sumar (top centre) and Hurbai Mamad Kumbhar (top right)
PHOTO • Srishti Verma

குயவர் ராம்ஜூ அலி கும்பார், மகள் அமத் கும்பார் (மேல் இடது): '...வேலைக்கான களிமண் இப்போது எளிதாக கிடைப்பதில்லை. கும்பார் அலரகா சுமர் (மேலே நடுவில்), ஹூர்பாய் மமத் கும்பார் (மேல் வலது) போன்ற பானை செய்யும் குயவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது

குஜராத்தின் கச் மாவட்டத்தில் உள்ள புஜ்ஜில் வசிக்கிறார் 56 வயதாகும் ராம்ஜூபாய். சித்திரை மாதம் (ஏப்ரல்) முதல் திங்கட்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜிபிர் திருவிழாவிற்காக ரூ.25,000 மதிப்பிலான மட்பாண்டங்கள் விற்றதை அவர் நினைவுகூர்கிறார். இந்தாண்டு பொதுமுடக்கத்தால் இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.

அவரது மகனான 27 வயதாகும் கும்பார் அமத் பேசுகையில், “பொதுமுடக்கத்தின் போது உணவகங்கள், உணவுத்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் கோப்பைகள், கிண்ணங்கள் போன்ற மட்பாண்ட பொருட்களுக்கான தேவைகள் குறைந்துவிட்டது. கிராமப்புறங்களில் பல குயவர்களும் இப்போது வாழ்வாதாரத்திற்காக கோப்பைகளை செய்து வருகின்றனர்.”

துயரத்தின் மற்றொரு குரலாக பேசிய ராம்ஜூ அலி, “எங்கள் வேலைக்கு இப்போதெல்லாம் களிமண் கூட எளிதாக கிடைப்பதில்லை. செங்கல் தொழில் எங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் (ஹரிப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில்) அனைத்து களி மண்ணையும் தோண்டி எடுத்துவிடுகின்றனர். எங்களுக்கென்று எதையும் விட்டுவைப்பதில்லை.”

புஜ்ஜில் லக்குராய் வட்டாரத்தில் ராம்ஜூபாய் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி வசிக்கிறார் சிறிது கண்பார்வை பாதிக்கப்பட்ட 62 வயதாகும் கும்பார் அலரகா சுமர். அவர் என்னிடம் பேசுகையில், “உள்ளூர் வங்கியில் எனது தங்கச் சங்கிலியை அடைமானம் வைத்து [முடக்கத்தின்போது] கொஞ்சம் பணம் வாங்கி, ரேஷன் பொருட்கள், பிற செலவுகளை பார்த்துக் கொண்டேன். என் மகன்கள் வேலைக்குச் செல்ல தொடங்கியதும் மெதுவாக கடனை அடைத்து வருகிறேன்.” அவருக்கு மூன்று மகன்கள்; இருவர் கட்டுமானத் தொழிலாளர்கள். ஒருவர் மட்பாண்டத் தொழில் செய்கிறார். “ஊரடங்கின் தொடக்க மாதங்களில் [மார்ச் முதல் மே வரை], முகமூடி செய்தேன், எதுவும் விற்காமல் வீட்டில் தேங்கிவிட்டன. வேறு வேலையின்றி வீட்டில் பல நாட்கள் உட்கார்ந்திருந்தேன்.”

புஜ்ஜிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோடாய் கிராமத்தில் வசிக்கிறார் 56 வயதாகும் கும்பார் இஸ்மாயில் ஹூசைன். அவர் பேசுகையில்,“ நாங்கள் பொதுவாக பாரம்பரியமான நாட்டுப்புற ஓவியங்களால் [அக்குடும்பங்களின் பெண்கள் செய்வது] தீட்டிய சமையல் பாத்திரங்களை செய்கிறோம். எங்கள் பணிகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்டர் கொடுப்பார்கள். ஊரடங்கினால் கடந்த மூன்று மாதங்களாக எங்கள் கிராமத்திற்கு யாரும் வரவில்லை…” சராசரியாக மாதம் ரூ.10,000 சம்பாதித்து விடுவேன். ஏப்ரல் முதல் ஜூன் வரை எந்த விற்பனையையும் செய்யவில்லை, சில குடும்ப பிரச்னைகளால் இன்னும் தொழிலுக்கு திரும்பவில்லை” என்கிறார் இஸ்மாயில்பாய்.

In the potter's colony in West Bengal's Panchmura village, local Adivasi communities were the only buyers during the lockdown for traditional votive horses (right)
PHOTO • Srishti Verma
In the potter's colony in West Bengal's Panchmura village, local Adivasi communities were the only buyers during the lockdown for traditional votive horses (right)
PHOTO • Srishti Verma

மேற்குவங்கத்தின் பஞ்ச்முராவில் உள்ள குயவர் காலனியில், உள்ளூர் பழங்குடியின சமூகத்தினர் வந்து பாரம்பரிய மண் குதிரைகளை வாங்கிச் சென்றனர் (வலது)

இந்தாண்டு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து பேசுகிறார் லோடாய் கிராமத்தில் வசிக்கும் 31 வயதாகும் கும்பார் சலே மமத். “ஊரடங்கு தொடக்கத்தில் புற்றுநோய்க்கு எனது சகோதரியை பறிகொடுத்தோம். அம்மாவிற்கு சிறுகுடலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால் உயிர் பிழைக்கவில்லை… கடந்த ஐந்து மாதங்களாக குடும்பத்தில் எந்த வேலையும் இல்லை.”

அவரது 60 வயது தாய் ஹூர்பாய் மமத் கும்பார் மட்பாண்டத் தொழிலுடன் பாரம்பரிய பூத்தையல்களை போடும் திறனையும் பெற்றிருந்தார். அவரது கணவர் மமத் காகா கடந்தாண்டு முடக்குவாதத்தால் முடங்கியது முதல் குடும்பத்தின் தூணாக அவர் இருந்து வருகிறார்.

மேற்குவங்கத்தின் பங்குரா மாவட்டம் பஞ்ச்முரா கிராமத்தில் உள்ள குயவர் காலனியில் வசிக்கும் 55 வயதான பால்தாஸ் கும்பகார் என்னிடம் பேசுகையில், “சில மாதங்களாக கிராமமே வெறிச்சோடியுள்ளது. ஊரடங்கால் யாரும் வெளியிலிருந்து வருவதில்லை, நாங்களும் வெளியே செல்வதில்லை. வழக்கமாக வெளியிலிருந்து வருபவர்கள் எங்கள் வேலையை பார்த்துவிட்டு ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்வார்கள். இந்தாண்டு யாரும் வருவார்கள் என தோன்றவில்லை.” பஞ்ச்முரா மிரித்ஷில்பி சமபாய் சமிதி எனும் குயவர்களுக்கான விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. 200 உறுப்பினர்கள் கொண்ட இச்சங்கத்தில் பால்தாசும் ஒருவர்.

தல்தங்கரா தாலுக்காவின், அதே பஞ்ச்முரா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் ஜகந்நாத் கும்பகார் பேசுகையில், “ நாங்கள் அதிகளவில் சிலைகள், சுவர் டைல்கள், உள்அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை செய்கிறோம். பொதுமுடக்கம் தொடங்கிய முதல் இரண்டு மாதங்களில் எந்த ஆர்டரும் எங்களுக்கு வரவில்லை. உள்ளூர் பழங்குடியின சமூகத்தினர் தான் தங்களுக்கு என பிரத்யேகமான பானைகள், மண் குதிரைகள், யானைகள் போன்றவற்றை வாங்க வந்தனர். ஏப்ரலுக்கு பிறகு தான் பல குயவர்களும் வேலையைத் தொடங்கினர். வரவிருக்கும் பண்டிகைக் கால விற்பனைக்கு சரக்குகளை தயார் செய்தனர். ஆனால் இந்தாண்டு மன்சாச்சலி, துர்க்கை சிலைகளுக்கான [ஆண்டு துர்க்கை பூஜைக்காக] ஆர்டர்கள் மிக குறைவான அளவே வந்துள்ளன. கொல்கத்தா போன்ற பகுதிகளில் இந்தாண்டு அவ்வளவு சிறப்பாக கொண்டாட்டம் இருக்காது.”

தமிழில்: சவிதா

Srishti Verma

Srishti Verma is crafts designer and researcher based in New Delhi. She works with NGOs and institutions on documenting material culture, social design and sustainability, and rural crafts and livelihoods.

Other stories by Srishti Verma
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha