’என்னுடைய பெயர் இந்து, ஆனால் என்னுடைய முதல் ஆதார் அட்டையில் அது `ஹிந்து’ என எழுதப்பட்டிருந்தது. எனவே நான் புதிய அட்டைக்கு (தவறை சரி செய்வதற்காக) விண்ணப்பித்தேன், ஆனால் அவர்கள் மீண்டும் `ஹிந்து’ என்றே அச்சிட்டிருந்தனர்.’

எனவே, ஜே. இந்து, என்கிற பத்து வயது தலித் பெண்ணுக்கும், அமாடகுரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் மற்ற நான்கு மாணவர்களுக்கும் இந்த வருடத்திற்கான உதவித் தொகைக் கிடைக்கவில்லை. ஆதார் அட்டையில் அவர்களது பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.  மற்ற நான்கு மாணவர்களில் மூன்று பேர் இந்துவைப் போலவே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொருவர் முஸ்லீம். ஆந்திரபிரதேசம் அனந்த்ப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகவும் ஏழ்மையான மண்டல்களில் அமாடகுர் ஒன்றாகும்.

பிரச்சனை ஆரம்பித்தபோது, ஜகரசுபாளி இந்து படிக்கும் பள்ளிக்கூடமும், அவளுடைய பெற்றோரும் அவளுக்காக புதிய அட்டைக் கேட்டிருக்கிறார்கள். அவளுடைய பிறந்த தேதியும், புதிய புகைப்படமும் மீண்டும் பதிவு செய்யப்பட்டதோடு புதிய ஆதார் அட்டையும் வழங்கப்பட்டது. ஆனால் அவளுடைய பெயர், இந்த அட்டையிலும் `ஹிந்து’ என்றே குறிக்கப்பட்டிருந்தது.  அவளது பள்ளிக்கூடம், இந்துவின் சார்பாக கணக்கு திறப்பதற்கு இது தடையாக இருந்தது – ஆதார் அட்டையில் அவளுடைய பெயர் சரியாக உச்சரிப்புடன் இருக்க வேண்டும் என்பது இதற்கு அவசியமாகும். மற்ற நான்கு மாணவர்களுக்கும் – அனைவரும் பையன்கள் – இதே நிலைமைதான். . 

ஆந்திரபிரதேச மாநிலத்தில் பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிலிருந்து அரசாங்க உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ 1200 பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். அமாடகுர் பள்ளியில் இருக்கும் 23 மாணவர்களில் ஒரே ஒரு மாணவர் மட்டும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர். இந்து மற்றும் இருபத்தியொரு மாணவர்களின் உதவித் தொகை பிப்ரவரி மாதம் முதல் வழக்கமாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த ஐந்து மாணவர்களுக்கு மட்டும் வங்கியில் கணக்கு இல்லை.

இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளிகள். அவர்கள் அவ்வப்போது வேலைக்காக பெங்களூருக்கு இடம் பெயர்வது வழக்கம். பள்ளித் தலைமையாசிரியர் எஸ். ரோஷையா, `இந்த உதவித் தொகையைக் கொண்டு பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு அரசாங்கம் வழங்காத பொருட்களான பேனா, உபரி புத்தகங்கள், சில வேளைகளில் துணியும் கூட வாங்குவதுண்டு’ என்றார். இந்துவுக்கும் அவளுடைய நான்கு வகுப்புத்தோழர்களுக்கும் இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியானதாக இல்லை.

சித்தார்த்தன் சுந்தரம், பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஒரு சந்தை ஆய்வாளர், தொழில்முனைவோர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் சுமார் பதினோரு புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதோடு பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Other stories by Rahul M.