“ நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைத்திருப்பதாகவும் அரசின் திட்டங்கள் மூலமாக அவர்களின் வாழ்க்கை நன்றாக இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்” என்கிறார் கவுரி. “டிவி விளம்பரங்களில் நான் இதைப் பார்த்தேன்”

இதெல்லாம் யாருக்கு கிடைச்சது என்பது பற்றி கவுரி வகேலாவுக்கு எதுவும் தெரியாது. விளம்பரங்கள் சொல்வது போல அவரது வேலை தொடர்பான விஷயங்களும் மாறவே செய்தன. “அரசாங்கம் கொடுத்த திறன் வளர்ப்பு பயிற்சியை நான் கற்றுக்கொண்டேன். தற்போது என்னால் தையல் மிஷினை கையாள முடியும்” என்கிறார் 19 வயதான அவர். “எனக்கு ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலையும் கிடைத்தது. எட்டு மணிநேர வேலைக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளம். ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அது இருந்தது. அதில் சம்பாதித்தது எல்லாம் போய்வருவதற்கும் சாப்பாட்டுக்குமே எல்லாம் போய்விட்டது. இரண்டு மாதங்களுக்கு அப்பறம் நான் அதனை விட்டுவிட்டேன்”. என்று சிரிக்கிறார் அவர். “இப்போ நான் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு துணி தைச்சு தர்றேன். ஒரு பீஸூக்கு 100ரூபாய் வாங்கிறேன். இங்கிருக்கிற மக்கள் இரண்டு செட் துணிகள் தைச்சா மொத்த வருடத்துக்கும் அதையே வைச்சுக்குகிறாங்க. அதனால எனக்கு போதுமான பணத்தை சம்பாதிக்க முடிவதில்லை”

பூஜ் நகரத்தின் ராம்நகரியில் உள்ள பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கியிருப்பவர்கள் வசிக்கும் இளம்பெண்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். கஜ் மாவட்டம் அது. ஏப்ரல் 23இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றி பேச்சு திரும்பியது.

கஜ் தொகுதியில் 15.34 வாக்காளர்கள் உள்ளனர். 2014 தேர்தல்களில் 9.47 வாக்காளர்கள் வாக்களித்தனர். பாஜக அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. கஜ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோத் சாவ்தா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர் தினேஷ் பார்மரை விட 2.5 லட்சம் வாக்குகளுக்கும் மேலாக பெற்று வெற்றிபெற்றார். 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99- ஐ பாஜக வென்றது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை பெற்றது.

Puja Vaghela’s house in Ramnagari slums, Bhuj city, where we met the young women
PHOTO • Namita Waikar
Standing Left to Right: Gauri Vaghela, Rekha Vaghela, Usha Parmar, Tara Solanki, Kanta, Champa Vaghela, girl from neighbourhood, Jasoda Solanki
Sitting Left to Right: Girl from neighbourhood, Puja Vaghela, Hansa Vaghela, Jamna Vadhiara, Vanita Vadhiara
PHOTO • Namita Waikar

பூஜ் நகரின் ராம்நகரியில் பூஜா வகேலாவின் வீடு (இடது) நாங்கள் பேசிக்கொண்டிருந்த 13 பெண்களில் பூஜா மட்டும்தான் முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்திருக்கிறார்.

ராம்நகரியில் குடியிருப்பவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களிலிருந்து இங்கே இடம்பெயர்ந்து வந்தவர்கள். வேலை தேடியும் வாழ்வில் முன்னேறுவதற்காகவும் இங்கே வந்தவர்கள். பூஜ் நகரத்தில் இதுபோல 78 பகுதிகள் இருக்கின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கே 1லட்சத்து 50ஆயிரம் பேர் வசிக்கின்றனர் என்கிறார் இங்கே உள்ள பெண்களிடையே பணியாற்றும் குட்ஜ் மகிளா விகாஸ் சங்கதன் எனும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அருணா தோலாகியா.

17 வயது முதல் 23 வயது வரையான 13 பெண்களை நாங்கள் சந்தித்தோம். சிலர் இங்கேயே பிறந்தவர்கள். மற்றவர்கள் அவர்களின் பெற்றோருடன் இங்கே வந்தவர்கள். பூஜா வகேலா மட்டும்தான் 2017 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தவர். 18 வயதுக்கு மேலான மற்ற யாரும் வாக்காளர்களாக தங்களை பதிந்துகொள்ளவில்லை.

எல்லாப் பெண்களுமே ஆரம்பப்பள்ளிக்கு போயிருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும்போது கவுரியைப் போலவே பாதியிலேயே நின்றுவிட்டவர்கள். கவுரி ஆறாம் வகுப்பு வரை படித்தவர். பூஜ் தாலுகாவின் கோட்கி கிராமத்தின் அரசுப் பள்ளியில் படித்தவர். கவுரியின் தங்கைதான் பத்தாவது வரை போயிருக்கிறார். ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் உள்பட பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நன்றாக வாசிக்கவோ எழுதவோ வரவில்லை.

Women reading the Gujarati bimonthly magazine Bol samantana (Words of equality)
PHOTO • Namita Waikar

5 நாட்களுக்கு ஒருமுறை வரும் பத்திரிகையான ‘போல் சமன்டானா (சமத்துவத்தன் வார்த்தைகள்) வாசிப்பதில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்கள். பெரும்பாலான இளம்பெண்கள் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியிலிருந்து பாதியில் நின்றுவிட்டவர்கள். அவர்களில் பாதிப்பேருக்கு சரியாக வாசிக்கவோ எழுதவோ தெரியாது.

ஐந்தாம் வகுப்போடு வனிதா வாதியாராவின் பள்ளி நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன. ஒரு பையன் அவள் எங்கு போனாலும் பின்னாடியே வருகிறான் என்று அவளின் தாத்தாபாட்டியிடம் சொன்னவுடன் அவளது பள்ளிக்கூடம் நின்றுபோனது. அவள் நல்ல பாடகி. ஒரு இசைக்குழுவிலும் அவளுக்கு பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. “ஆனால் அங்கே நிறைய பையன்கள் இருந்தார்கள். அதனால் எனது பெற்றோர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை” என்கிறார் வனிதா.அவள் ஆடைகளில் அலங்காரம் செய்கிற வேலையை செய்கிறாள்.  வண்ணம் தீட்டும் ஆயிரம் புள்ளிகளுக்கு 150 ரூபாய் என்ற கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அவர் சம்பாதிப்பார்.

22 வயதானாலும் அவளுக்கு வாக்களிப்பது என்பது தங்களது வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் கொண்டுவரும் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. “அநேக வருடங்களாக எங்களுக்கு கழிவறைகள் கிடையாது. நாங்கள் திறந்தவெளியில் தான் மலம் கழிப்பதற்காகப் போவோம். ராத்திரி நேரங்களில் வெளியில் போக நாங்கள் பயப்படுவோம். வீட்டுக்கு வெளியில் தற்போது எங்களுக்கு கழிவறைகள் உள்ளன.  அவற்றில் பலவற்றுக்கு பாதாள சாக்கடை வசதிகள் கிடையாது. அதனால் பயனில்லாமல் கிடக்கின்றன. சேரிகளில் உள்ள பரம ஏழைகள் இன்னமும் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர் என்றார் அவர்.

சமையல்காரர்கள், ஆட்டோக்காரர்கள், பழ வியாபாரிகள், தினக்கூலிகள் ஆகிய குடும்பங்களிலிருந்து வந்த பெண்கள்தான் நாங்கள் கூட்டியிருந்த கூட்டத்தில் இருந்தார்கள். பல இளம்பெண்கள் ஓட்டல்களில் உதவியாளர்களாகவோ அல்லது வீட்டு வேலை செய்பவர்களாகவோ இருந்தனர். “எனது அம்மாவும் நானும் மாலை 4 மணிமுதல் நடுஇரவு வரை நடக்கிற விருந்துகளின் உதவியாளர்களாக இருந்துள்ளோம். ரொட்டிகளைத் தயார் செய்வோம். பாத்திரங்களைக் கழுவுவோம்.” என்கிறார் 23 வயதான பூஜா வகேலா. “ ஒரு நாளைக்கு ஆளுக்கு 200ரூபாய் எங்களுக்குக் கிடைக்கும். ஒரு நாள் வேலைக்குப் போகலைன்னாலும் சம்பளம் இல்லை. அதிகமான நேரம் வேலை செஞ்சா அதுக்கு அதிகம் தரமாட்டாங்க. ” என்கிறார் அவர்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் தங்களைப் போன்றவர்கள் பற்றிய கூடுதல் பொறுப்புணர்வோடு இருப்பதாக இந்தப் பெண்கள் நினைக்கிறார்கள். “நாம ஏழைங்க. நாம தலைவர்களாக ஆகனும்னா நிறைய பணம் வேண்டும் ”என்கிறார் கவுரி. “நாடாளுமன்றத்தில் பாதி உறுப்பினர்கள் பெண்கள்தான் என்றால் அவர்கள் வீடு வீடாக போவார்கள். பெண்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வார்கள். ‘இப்போது யாராவது ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டால் அவரது அப்பாவோ கணவரோதான் முக்கியமான பிரமுகர்களாக மாறிவிடுகிறார்கள். அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது.”

பெரிய கம்பெனிகள் அவர்களை தாங்களே பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு ஏன் அரசாங்கம் உதவவேண்டும். அவர்களின் கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டதாக டிவியில் நான் கேட்டேன்.

வீடியோவைக் கவனியுங்கள்.

இந்தச் சந்தேகம் ஐம்பது கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் எதிரொலித்தது. கஜ் மாவட்டத்தின் நாகட்ரானா தாலுகாவின் தாதர் கிராமத்தில் எதிரொலித்தது. “இந்த ஜனநாயகத்தில் மக்கள் எல்லாம் 500க்கும் 5000த்துக்கும் 50ஆயிரத்துக்கும் விலைபோய் விடுகின்றனர் என்கிறார் 65வயதான காஜி இப்ராகிம் கபூர். அவர் 20 ஏக்கர் வைத்துள்ள விவசாயி. இரண்டு எருமைகள் வைத்துள்ளார். ஆமணக்கு பயிரிட்டுள்ளார். “ஏழைகள் பிரிந்துகிடக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. ஒரு சமுதாயத்தின் தலைவர் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மக்களிடம் பணம் பெறுகிறார். அவரது செல்வாக்கின் கீழ் இருப்பவர்களுக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் தங்களது வாக்குகளை தானமாகத் தருகிறார்கள்.”

இதே தாலுகாவில் உள்ள வாங் கிராமத்தில் நாங்கள் தேவிசர் கிராமத்தைச் சேர்ந்த நன்துபா ஜடேஜா என்னும் பெண்ணைச் சந்தித்தோம்.   அரசாங்கத்துக்கு அவரிடம் ஒரு அறிவுரை இருக்கிறது. “ உண்மையாகவே அரசாங்கம் மக்களுக்கு உதவ விரும்பினால் விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் உள்ள கடன்களை தள்ளுபடி செய்யுங்கள். அவர்களால்தான் நாம் நமது வேலைகளை செய்கிறோம். அவர்களிடமிருந்து நமக்கு சாப்பாடு கிடைக்கிறது. பால் கிடைக்கிறது. அந்த மக்களுக்கு உதவுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்”

குஜ் மகிளா விகாஸ சங்கதன் அமைப்பில் பணியாற்றுபவர் 60 வயதான நந்துபா. “பெரிய கம்பெனிகள் தங்களது பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு எதற்கு அரசாங்கம் உதவ வேண்டும்?” என்று கேட்கிறார் அவர். “ அவர்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்திருப்பதாக டிவி மூலம் கேள்விப்பட்டேன். விவசாயிகள் தங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு கோரினால் அது தங்களின் விதிமுறைக்கு உள்ளே வராது என்கிறார்கள் இந்த அரசாங்கத்தினர். மக்கள் விவசாயத்தினால்தான் உயிர் வாழ்கிறார்கள்.  கம்பெனிகள் உற்பத்தி செய்கிற பிளாஸ்டிக்குகளைத் தின்ன முடியாது”

ராம் நகரி முதல் தாதர் மற்றும் வாங்க், இந்த விவகாரங்கள் மக்களால் தெளிவாக பேசப்படுகின்றன. ஆனால், சமீபத்திய தேர்தல் வெற்றியால் வாக்களிக்கும் போக்கு இந்த விவகாரங்களால் மாறுமா?

குஜ் பகுதியில் பணியாற்றும் மகிளா விகாஸ் சங்கதனின் குழுவினருக்கும் குறிப்பாக சபனா பதான் மற்றும் சகி சங்கினி அமைப்பின் ராஜ்வி ராபரி மற்றும் சாய்ரே ஜோ சங்கதன் அமைப்பைச் சேர்ந்த ஹகிமாபய் தேபா ஆகியோரின் உதவிகளுக்கு இந்த கட்டுரையாசிரியர் நன்றி தெரிவிக்கிறார்.

தமிழில்: த. நீதிராஜன்

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan