பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் எழுப்பப்படவிருக்கும் 3,600 கோடி மதிப்பிலான சிவாஜி சிலைக்கு டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டினார். வெறும் 24 மணி நேரம் கழித்து 200 கிலோமீட்டர் தொலைவில், நாசிக் மாவட்டம் தொண்டேகான் கிராமத்தில் யஷ்வந்த், ஹிராபாய் பெண்ட்குலே, அவர்களின் பண்ணையில் இருந்த தக்காளிக் கொடிகளை வேரோடு  பிடுங்கி எறிந்துகொண்டிருந்தனர். நன்றாக இருக்கும் கொடிகளை, அதுவும் 20,000 ரூபாயையும், உடல் உழைப்பையும் கொட்டி உருவாக்கிய கொடிகளை எதற்காக அந்தப் பழங்குடியினத் தம்பதியர் அழிக்க வேண்டும்? “கடந்த ஒரு மாதத்தில் தக்காளி விலை பெரும்  வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. தக்காளிக் கொடிகளை நட்டு வைத்திருந்தாலே நஷ்டம் என்ற நிலை வந்துவிட்டது. எனவே பராமரிக்க முடியாமல் அதைப் பிடுங்கி எறிந்து கொண்டிருக்கிறோம்”, என்று யஷ்வந்த் முணுமுணுத்தார். அவற்றை அப்புறப்படுத்தியதும் அந்நிலத்தில் கோதுமையைப் பயிரிடப் போகிறார்கள். “அப்போதுதான் பனிக்காலம் முடிந்ததும் குறைந்தபட்சம் வயிற்றைக் கழுவ கொஞ்சம் அரிசியாவது  மிஞ்சும்”, என்றார் ஹிராபாய்.

மோடியின் நவம்பர் 8 அறிவிப்பால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையில் ஏற்கனவேயே தக்காளி விலை சரிந்துவிட்டது. நாசிக் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிர்னாரே மண்டியில், தக்காளி குறைந்தபட்சம் கிலோ 50 பைசாவிற்கும் அதிகபட்சம் 2 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலைக்கு விற்றால் போட்ட முதல் கூடத் திரும்பி வராது. அறுவடை, போக்குவரத்து செலவு எல்லாம் போக விவசாயிகளுக்குப் பெறும் நஷ்டம் ஏற்படும். சில்லறை விற்பனை கிலோ 6 முதல் 10 ரூபாய் வரை போகிறது. காய்கறித் தோட்டத் தொழிலுக்கு பெயர் பெற்ற நாசிக் மாவட்டத்தில் இப்பொழுது நடப்பதோ பெரும் சோக நிகழ்வு. விரக்தியடைந்த விவசாயிகள் நல்ல கொடிகளை அறுத்தும், விளைந்த தக்காளிகளைக் குப்பையில் கொட்டியும், மாடுகளைக் காய்கறித் தோட்டத்திற்குள் மேய விட்டும் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். பின்னே ஏக்கருக்கு 30,000 முதல் 1.5 லட்சம் வரை செலவு செய்து, லாபம் வரவில்லையென்றால் வேறென்ன செய்வார்கள்?


காணொளியைக் காண்க: தொண்டேகான் கிராமத்தில் பழங்குடியினத் தம்பதியர் ஹிராபாய் மற்றும் யஷ்வந்த் பெண்ட்குலே தங்கள் தோட்டத்துத் தக்காளிக்கொடிகளை அறுக்கிறார்கள்


சென்ற வருடம் நல்ல வியாபாரம். 20 கிலோ கூடை 300 முதல் 750 ரூபாய் வரை விலை போனது. அதனால் பல விவசாயிகள் நம்பிக்கையுடன் இந்த வருடம் பருவமழையை எதிர்பார்த்து தக்காளிகளைப் பயிரிட்டிருந்தார்கள். அக்டோபர் வரை வானிலையும் ஒத்துழைத்தது, பூச்சித் தாக்குதல்களும் இல்லை. எனவே ஏராளமாக உற்பத்தி ஏற்பட்டு, சென்ற வருடத்தைவிட சற்றே விலை குறைந்தாலும் லாபம் உறுதி என்று விவசாயிகள் உறுதியாக நம்பினர். தசரா, தீபாவளி பண்டிகைகளை ஒட்டி கூட கூடை 130 ரூபாய்க்கு விலை போனது.

நவம்பர் மாத துவக்கத்தில் உற்பத்தி உச்சத்தில் இருந்தது. இந்த நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவிக்க, திடீரென்று பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை வீழ்ச்சியடைந்தது. “நவம்பர் 11 வாக்கில் விலை சரிந்தது. இன்றுவரை நிலைமை சீராகவில்லை”, என்றார் கிர்னாரேவைச் சேர்ந்த விவசாயி நிதின் காய்கார். இப்பொழுது கூடை விலை 10 முதல் 40 ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது. விவசாயிகள், மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள், போக்குவரத்து ஓட்டுனர்கள், கூலியாட்கள் இவர்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றம் அனைத்தும் ரூபாய் நோட்டுகள் மூலமாகத்தான் நடக்கின்றன. இப்படி ரூபாய் நோட்டுகள்தான் மொத்த கிராம விவசாயப் பொருளாதாரத்தையே செலுத்தி வந்தன என்று அவர் சுட்டிக்காட்டினார்.


02-IMG_0362-AA&CC-Notebandi takes the sauce out of Nashik's tomatoes.jpg

உற்பத்தி உச்சத்தில் இருந்த சமயத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவிக்க , திடீரென்று பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை வீழ்ச்சியடைந்தது


மாவட்ட அதிகாரிகள் இந்நிலைமையைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் தெரியவில்லை. “சந்தைப் பொருளாதாரம் என்றால் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் விலையை நம்மால் கட்டுப்படுத்திக்கொண்டிருக்க முடியாது. சந்தையின் தேவைக்கேற்ப விலைகள் அமைகின்றன”, என்றார் நாசிக்கின் மாவட்ட ஆட்சியர் பி.இராதாகிருஷ்ணன்.

ஆனால் நடந்துவரும் நிகழ்வுகளைக் கண்டு கிராமங்களில் கவலை அதிகரித்தபடி இருக்கிறது.  “என் இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு லட்சம் செலவழித்து தக்காளி பயிரிட்டேன். இன்னும் 30,000 கூட வரவில்லை”, என்றார் கணேஷ் பாப்தே. “வாங்குவதற்கு யாருமே இல்லை. இனி என்ன நடந்தால் என்ன என்று என் மாடுகளைத் தோட்டத்தில் மேயவிட்டுவிட்டேன்”, என்றார் சோம்நாத் தீட்டே விரக்தியுடன். அந்த அழகிய தோட்டத்திற்குள் ஒரு நடை சென்றபோது மூன்று மாடுகள் கொடிகளைக் கடித்து சுவைத்துக்கொண்டிருந்தன.


03-Somnath-Thete-Cow-AA&CC-Notebandi takes the sauce out of Nashik's tomatoes.jpg

தக்காளியைக் கொள்முதல் செய்ய யாரும் இல்லாத நிலையில் , சோம்நாத் தீட்டே தன் தோட்டத்தில் மாடுகளை மேய அனுமதித்திருக்கிறார்


பத்து ஏக்கர் தக்காளி பயிரிட்ட யோகேஷ் காய்கார் வெளிப்படையாகவே குமுறினார்.  “இதுவரை 2,000 கூடைகளை விற்றுள்ளேன், எல்லாமே நஷ்டம்தான். எல்லாம் இந்த நோட்டுகளை ஒழித்த குழப்பத்தினால் வந்தது. எல்லாம் கூடி வந்து சரியாக நாங்கள் காசு பார்க்கிற சமயத்தில், மோடி உள்ளே வந்து அதைக் கெடுத்துவிட்டார்.”

இந்த வருடம் நாட்டின் மொத்த பருவகால விளைச்சலில், நான்கில் ஒரு தக்காளி நாசிக்கிலிருந்து வந்திருக்கிறது. செப்டம்பர் 1, 2016-லிருந்து ஜனவரி 2, 2017 வரை எடைக்கு விற்கப்பட்ட மொத்த தக்காளிகளில், 24 சதவீதம் நாசிக்கிலிருந்து வந்தவை, என்கிறது மத்திய அரசின் ஒரு புள்ளிவிபரம் (அதாவது 14.3 லட்ச டன்களில் 3.4 லட்ச டன்கள்).

‘அக்ரோவன்’ என்ற மராத்தி விவசாய நாளிதழின் நாசிக் நிருபர் தியானேஷ்வர் உகாலே, “குறைந்த விற்பனை, உற்பத்தி வீணாதல், இவை யாவும் விவசாயிகளுக்குப் புதிதல்ல. ஏறி இறங்கும் விலைகளுக்கும், பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்கும் காலம் காலமாகப் பழகியவர்கள் அவர்கள். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நல்ல தக்காளிக் கொடிகளே நஷ்டத்தினால் அழிக்கப்படுவதை இந்தப் பகுதி இப்பொழுதுதான் பார்க்கிறது”, என்று கலக்கத்துடன் பதிவு செய்கிறார். “ஒரு தக்காளிக் கூடையை உற்பத்தி செய்ய சராரியாக 90 ரூபாய் ஆகிறது. அதை விற்றால் விவசாயிக்கு 15 முதல் 40 ரூபாய்தான் கிடைக்கிறது என்றால் அவர்களுக்கு நேரும் நஷ்டத்தைக் கற்பனை செய்து பாருங்கள்”

நாசிக்கின் ஐந்து மண்டிகளில் இறங்கியிருக்கும் தக்காளி மூட்டைகளை வைத்து, இதுவரை மொத்தம் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஆகியிருக்கும் என்று கணிக்கிறார் உகாலே. அதிகாரப்பூர்வக் கணக்கீடு என்ன சொல்கிறது? அதிகாரப்பூர்வமாகக் கணக்கிட்டால்தானே? தக்காளி உற்பத்தி பற்றிய கணக்கீடு கடைசியாக 2011-12--ம் ஆண்டில்தான் செய்யப்பட்டது. “விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கணக்கிட எந்த முறையும் தற்போது இல்லை. தங்கள் லாபத்தைக் குறித்து வைப்பதுபோல் விவசாயிகள்தான் தங்கள் நஷ்டத்தையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்”, என்றார் நாசிக் மாவட்ட விவசாயக் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் விவசாய மேற்பார்வையாளர் பாஸ்கர் ரகானே.


காணொளியைக் காண்க: “தற்போதைய தக்காளி விலையின் மூலம் நாங்கள் போட்ட முதலைக் கூடத் திரும்பி எடுக்க முடியாது” , என்கிறார் பழங்குடியின விவசாயி டட்டு பெண்ட்குலே


தக்காளி வியாபாரத்தின் முக்கிய மையமான கிர்னாரே மண்டி ஒரு பெரும் மைதானத்தில் இருக்கிறது. பொதுவாக வியாபாரிகளின் நடமாட்டத்தால் மைதானம் முழுக்கப் புழுதி கிளம்பியபடி இருக்கும். ஆனால் இந்த வருடம் அதிகம் கூட்டமில்லாமல் மண்டி அமைதியாக இருக்கிறது. மண்டிக்கு செல்லும் பாதையில் பொதுவாக தக்காளி ஏற்றப்பட்ட டிராக்டர்கள் நெரிசலில் ஊர்ந்து செல்லும். இப்பொழுது அந்த சாலையே வெறிச்சோடிக் காணப்பட்டு, ஏதோ பெரும் அபாயம் ஏற்படப்போகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை மகாராஷ்டிரத்திற்கு வெளியேயிருந்து வரும் வியாபாரிகள், இங்கு சில நாட்கள் தங்கியிருந்து தக்காளிகளை ஏற்றிச் செல்வார்கள். அங்கிருந்து அத்தக்காளிகள் இந்தியா முழுக்க செல்லும். ஆனால், இந்த வருடம் அவர்களில் பெரும்பாலானோர் சீக்கிரமாகவே தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவிட்டார்கள்.

அப்படி ஊர் திரும்பியவர்களில் ஒருவர்தான் உத்தரப் பிரதேசம் அம்ரோகாவைச் சேர்ந்த ரகத் ஜான். “எனக்கு நாசிக் நகர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் கணக்கு இருக்கிறது. ஆனால் எட்டு நாட்களில் 50,000 ரூபாய்தான் தந்தார்கள். எனக்கு தினசரி வியாபாரத்திற்கே ஒன்றிலிருந்து மூன்று லட்சம் வரை தேவை”, என்று தொலைபேசியில் தெரிவித்தார். மேலும், “பழைய ரூபாய் நோட்டுகளை விவசாயிகளும் பெட்ரோல் நிலையங்களும் ஏற்றுக்கொண்ட வரை நிலைமையை சற்று சமாளிக்க முடிந்தது. என் கணக்கில் உள்ள என் பணத்தை நான் கேட்ட அளவு வங்கி தந்திருந்தால் மேலும் பதினைந்து நாட்கள் தங்கியிருந்து தக்காளிகளை வாங்கிச் சென்றிருப்பேன்.”, என்றார்.

வெளி மாநில வியாபாரிகள் குறைவாக வாங்கிச் சென்ற நிலையில், தற்பொழுது மண்டிக்கு உள்ளூர் வியாபாரிகளும், மும்பைக்கு அருகே உள்ள வஷி, விரார் போன்ற பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது வருகிறார்கள். அவர்களும் குறைந்த விலையாலும் பணப் பற்றாக்குறையாலும் கஷ்டப்படுகிறார்கள். அங்கு பிம்பல்கானைச் சேர்ந்த வியாபாரி கைலாஷ் சால்வே 100 கூடை தக்காளிகளை 4,000 ரூபாய்க்கு வாங்குவதைப் பார்த்தோம். “இதற்கு மேல் என்னால் வாங்க முடியாது. என்னிடம் இவ்வளவுதான் பணம் இருக்கிறது”, என்று கைகளை விரித்த அவர்,  தன்னிடமிருந்து தக்காளிகளை வாங்க குஜராத் மாநிலம் சூரத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தேடி வருவதாகக் கூறினார்.

“சென்ற வருடம் இந்த சமயத்தில் 50 லட்சத்திற்கு வியாபாரம் செய்து 3 லட்சம் லாபம் ஈட்டினோம். இந்த வருடம் இதுவரை 10 லட்சம்தான் வியாபாரமே ஆகியிருக்கிறது. அதிலும் நஷ்டம்தான் அடைந்திருக்கிறோம்”, என்றார் சால்வே வருத்தத்துடன். இரண்டு நாட்கள் கழித்து சூரத்தில் ஒரு வியாபாரியிடம் தன் தக்காளியை அவர் நஷ்டத்திற்கு விற்றிருக்கிறார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தப் பகுதியில் திராட்சைக்கு அடுத்தபடியாகத் தக்காளிதான் விருப்பத்திற்குரிய பயிராக இருந்து வருகிறது. நிலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், கொஞ்சம் முதலும், பாய்ச்ச நீரும் இருந்துவிட்டால் அங்குள்ள பெண்ட்குலே போன்ற பழங்குடியின விவசாயிகளுக்கும், காய்கார் போன்ற மராத்திய விவசாயிகளுக்கும் தக்காளிதான் முதல் தேர்வாக இருக்கிறது. இதன் விளைவாகத் தக்காளி சந்தையில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. ஜான் போன்ற சில வியாபாரிகள், அதிக உற்பத்தியாலும் விலை குறைத்திருக்கிறது என்று வாதிடுகிறார்கள். ஆனால் விவசாயிகளோ, “வேறொரு நாளில் இது சரியாக இருக்கலாம், ஆனால் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படும் பிற காய்கறிகளும் அடிமாட்டு விலைக்குதான் விலை போகின்றன”, என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.


04-AA&CC-Notebandi takes the sauce out of Nashik's tomatoes.jpg

இடப்புறம்: “எல்லாம் கூடி வந்து சரியாக நாங்கள் காசு பார்க்கிற சமயத்தில் , மோடி உள்ளே வந்து அதைக் கெடுத்துவிட்டார்” , என்றார் யோகேஷ் காய்கார். வலப்புறம்: நாசிக்கின் யஷ்வந்த் பெண்ட்குலேவைப் போன்றவர்களுக்குத் தக்காளிக் கொடிகளை நட்டு வைத்திருந்தாலே நஷ்டம் என்றாகிவிட்டது


“காளி ஃபிளவரைப் பாருங்கள், கத்தரிக்காயைப் பாருங்கள், கொத்தமல்லியைப் பாருங்கள், சுரைக்காயைப் பாருங்கள். கடந்த வாரங்களில் அதன் விலைகள் குறைந்தனவா?”, என்று மேடை முழக்கம் போல் கிண்டலாகக் கேட்டார் தொண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறு விவசாயி நானா அச்சாரி. இருபது நாட்களுக்கு முன் 20 கூடை கத்தரிக்காயை நாசிக் மண்டிக்கு எடுத்துச் சென்று, அங்கு வாங்க எவரும் இல்லாததைக் கண்டதும் மீண்டும் தன் கிராமத்திற்கே திரும்பி வந்துவிட்டார். அடுத்த நாள் மொத்தக் கூடைகளையும் வஷி மண்டியில் 500 ரூபாய்க்குத் தள்ளிவிட்டார். போக்குவரத்து செலவுகளையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், கடைசியில் அவர் கையில் 30 ரூபாய்தான் மிஞ்சியது. வட்கான் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான கேரு காஸ்பே, எட்டு நாட்களுக்கு முன் வஷியில் 700 கிலோ கத்தரிக்காயை விற்றதாக எங்களிடம் கூறினார். அவருக்கு 200 ரூபாய்தான் லாபம் வந்தது.

சில வியாபாரிகள் விவசாயிகளுக்குக் காசோலையின் மூலம் பணம் தருகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வங்கியில் பணத்தை செலுத்தி, பிறகு அதை எடுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க நேரமில்லை. அந்தப் பணத்தில்தான் டீசல், உரங்கள் வாங்க வேண்டும், கூலி தரவேண்டும். ஒரு முறைக்கு வெறும் 2,000 ரூபாய்தான் கொடுத்தால், அதுவும் அதை 2,000 ரூபாய் நோட்டாகக் கொடுத்தால், அதை வைத்து எப்படி இவற்றையெல்லாம் வாங்குவது? மேலும் விவசாயிகள் காசோலைகளை நம்புவதில்லை. வியாபாரியிடம் பணம் இல்லாததால் விஜய் காஸ்பே வேறு வழியில்லாமல் அவரிடமிருந்து காசோலையாகப் பெற்றிருக்கிறார். “அந்தக் காசோலையை மட்டும் வங்கி திருப்பியனுப்பிவிட்டால், எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை”, என்று எங்களிடம் கலக்கத்துடன் கூறினார்.


05-Shivaji-Kasbe-cheque-AA&CC-Notebandi takes the sauce out of Nashik's tomatoes.jpg

விஜய் காஸ்பேவின் தந்தையில் பெயருக்கு எழுதப்பட்டிருக்கும் காசோலை. வியாபாரியிடம் பணம் இல்லாததால் வேறு வழியில்லாமல் காசோலையாகப் பெற்றிருக்கிறார். அதை வங்கி திருப்பியனுப்பிவிட்டால் அவருக்கு உதவ யாரும் இல்லை


விலை வீழ்ச்சியும் பணப் பற்றாக்குறையும் பல தொடர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பழங்குடியினத் தொழிலாளர்களுக்குப் போதிய வேலை இல்லை. அவர்கள் கையில் தரப்படும் 2,000 ரூபாய் நோட்டு, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. “அதை வைத்து 1,100 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால்தான் கடைக்காரர் சில்லறை தருகிறார். 300 ரூபாய்க்குக் குறைவாகப் பெட்ரோல் போட்டால் சில்லறை தர முடியாது என்கிறார்கள்”, என்று புலம்புகிறார் ராஜாராம் பெண்ட்குலே. அருகே அவரது அத்தை இருண்ட முகத்துடன் சொல்கிறார். “அந்தப் பெட்ரோலை பாட்டிலில் பிடித்துக் கொண்டு வா. அனைவரும் அதைக் குடித்துவிட்டு சாகலாம்!”

விவசாய மூலப் பொருட்களை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் பதட்டத்துடன் காணப்படுகிறார்கள். “என் மொத்த வியாபாரமும் இதை நம்பித்தான் இருக்கிறது”, என்று மண்டியை நோக்கிக் கை காட்டியபடிக் கூறினார் அபா கடம். “இரண்டு பக்கத்திலிருந்தும் அடி விழுகிறது. ஒரு புறம் விவசாயிகள் பயிர்களை அழிப்பதால் என்னிடம் பொருட்களை வருவதில்லை. மறு புறம் பயிர் காலத்தின்போது அவர்களுக்குப் பொருட்களைக் கடனாகக் கொடுத்திருந்தேன். விளைச்சலில் அவர்களால்  லாபம் பார்க்க முடியாததால், தற்பொழுது என்னால் கடனைத் திரும்பப் பெற முடியவில்லை”, என்று செய்வதறியாது திகைத்தார்.

டிசம்பர் 30ம் தேதியன்று மோடி இந்நாட்டு மக்களிடம் கேட்ட 50 நாள் கால அவகாசம் முடிவிற்கு வந்தது. புது வருடம் பொதுவாக எதிர்பார்ப்புகளோடு பிறக்கும். இந்த வருடம் அதோடு சரிசமமாகத் துன்பமும் சேர்ந்திருக்கிறது. “நாங்கள் சந்திக்கும் நஷ்டத்திற்கு ஈடாக மோடி எங்கள் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டும்”, என்றார் ஒரு விவசாயி. வேறொரு விவசாயி  தங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றார். இன்னொருவர் பயிர்க்கடன் குறைந்த வட்டிக்குத் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். ஆனால் இந்நாட்டு மக்களுக்கான டிசம்பர் 31 பிரதமர் உரையில், விவசாயிகள் படும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் பற்றி மோடி பேசவேயில்லை.

இப்பொழுது அனைவரின் கண்களும் ஜனவரி முடிவில் அறுவடையாகவிருக்கும் திராட்சைக் கொடிகளின் மீதுதான் இருக்கிறது. நல்ல விலை அமைந்தால் திராட்சை விவசாயிகள் சிறிது லாபமடைவார்கள். கடம் போன்ற சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் வழங்கிய கடன்களை சிறிதளவு மீட்பார்கள். ஆனால் வியாபாரிகளிடம் சிறிதும் நம்பிக்கையில்லை. பணத் தட்டுப்பாடு விரைவில் சரியாகாவிட்டால், தன்னால் விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்க முடியாது என்று கவலைப்படுகிறார் ஜான். திராட்சை விலையும் சரியும் என்று கணிக்கும் சால்வே, அந்நாளை எதிர்நோக்கி இறுக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

படங்கள் மற்றும் காணொளிகள்: சித்ரங்கதா சௌத்ரி

தமிழில்: விஷ்ணு வரதராஜன்

Aniket Aga is an anthropologist. He teaches Environmental Studies at Ashoka University, Sonipat.

Other stories by Aniket Aga
Chitrangada Choudhury

Chitrangada Choudhury is an independent journalist.

Other stories by Chitrangada Choudhury