"ஒரு நகராட்சி அதிகாரி, ‘மணி இந்தப் பாதுகாப்பு ஆடையைப் போட்டுகிட்டா நீ விண்வெளி வீரனாட்டும் இருப்பே’ அப்படினார். நான் மரியாதையோட, ‘நீங்க முதல்ல போட்டுக்குங்க ஐயா. அப்புறம் நான் கண்டிப்பா போட்டுக்கிறேன்னு’ சொன்னேன்.” என்கிறார் அறுபது வயதாகும் மணி. கோயம்புத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார் மணி. பாதாள சாக்கடைக்குள் நீந்தி, அதில் இருக்கும் அடைப்புகளை அகற்றுவது அவருடைய வேலையாகும்.

“இந்தியாவில எதாச்சும் ஒரு அதிகாரி பாதுகாப்பு உடை, ஆக்ஸிஜன் கவசம் மாட்டிக்கிட்டு மலக்குழியிலோ, சாக்கடை குழாயிலோ எங்களைக் குதிக்கச் சொல்லுறார்னா அவருக்கு விஷயம் தெரியலைன்னு அர்த்தம். இல்லை வெத்து ஜம்பம் காட்டுறார்னு அர்த்தம். இதெல்லாம் போட்டுக்கிட்டு அதுக்குள்ளே எல்லாம் இறங்க எங்க இடமிருக்கு? எங்க ஜட்டியை மட்டும் தான் போட்டுக்கிட்டு உள்ளே குதிக்க முடியும். எங்களை அவங்க முட்டாளாக்க பாக்குறாங்க. அந்த மலத்தில விழுறது எங்க உடம்பு தானே, இந்தப் பொழப்ப செய்யவே பொறந்த சாதி நாங்கன்னு நினைக்கிறாங்க.”

பல ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபடுவதால் மற்ற துப்புரவு பணியாளர்களுக்கு எப்படி மலக்குழியில் குதிப்பது, எப்படி நச்சு வாயுக்களில் இருந்து தப்பிப்பது குறித்து மணி வகுப்பெடுக்கிறார். இதனால் தன்னுடைய திறன்கள் குறித்து ஓரளவுக்கு மணி பெருமைப்பட்டாலும், “இப்பலாம் எங்களுக்கு எல்லாரும் பாடம் கத்துகொடுக்கப் பாக்கிறாங்க. எங்களுக்கு மத்த எல்லாரைவிடவும் நல்லாவே இந்தப் பிரச்சினை பத்தி நல்லாவே தெரியும். அரசாங்கம் சாக்கடை குழாய், மலக்குழிகள் இதையெல்லாம் நவீனப்படுத்தணும். மத்ததெல்லாம் வெத்துப்பேச்சு தான்.” என்கிறார்.

மணி சிறுவனாக இருந்த போது, அவருடைய பெற்றோர் சுப்பன், பொன்னியோடு கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் செல்வார். அங்கே அவர்கள் துப்பரவு பணியாளர்களாகப் பணியாற்றினார்கள். “நாங்க ஆஸ்பத்திரி வளாகத்திலேயே வாழ்ந்தோம். பள்ளிக்கூடம் முடிஞ்சப்புறம் நேரா ஆஸ்பத்திரி போய் ஈசிஜி, எக்ஸ் ரே எடுக்கிறது, போஸ்ட்மார்ட்டம் பண்ணுறதுக்குக் கூட உதவி பண்ணுவேன். ஒரு நாள் வேலைக்கு நாப்பது வருஷத்துக்கு முன்ன அஞ்சு பைசா, பத்து பைசா கொடுப்பாங்க. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அப்புறம் துப்புரவு பணியாளரா ஆகிட்டேன்.” என்கிறார் மணி

மணி சக்கிலியர் சாதியை சேர்ந்த தலித் ஆவார். அவருடைய வகுப்பில் ஆசிரியர்களும், மாணவர்களும் தோட்டி என்று அவரை இழிவுபடுத்திப் பேசியதோடு, வகுப்பில் தனியாக உட்கார வைத்ததால் வகுப்பை விட்டு நின்றார். அச்சொல் துப்பரவு பணியில் ஈடுபடும் சாதியினரை இழிவுபடுத்தும் சொல்லாகும். “நான் பிணத்தைச் சுத்தம் பண்ணுறது, மலம் அள்ளுறதுல எல்லாம் ஈடுபட்டதால என்னைக் கண்டபடி திட்டுவாங்க. வாத்தியாருங்க வகுப்புக்கு வெளியே உட்கார வைப்பாங்க.” என்று நினைவுகூர்கிறார் மணி

மாவட்ட ஆரம்பப்பள்ளி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக மாதம் 15,000 சம்பளத்தில் பணியாற்றுகிறார். அவருடைய அப்பா நேசய்யர், அம்மா கிருபாவும் துப்பரவு தொழிலாளர்கள் தான். “நான் ஆறாவது வரை செயின்ட் மேரி பள்ளியில படிச்சேன். அது மிஷனரி பள்ளிங்கிறதால அங்கே எந்தப் பாகுபாடும் இல்லை. ஆனா, வெளியுலகத்துக்கு நான் தீண்டப்படாதவ தான். நான் கிறிஸ்டியன் அப்படிங்கறதால எனக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதனால் எனக்கு நகராட்சியில எந்த வேலையும் கிடைக்கலை. சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகி, எனக்கு நாகம்மானு பேரு கிடைச்சது. இந்தப் பேரு இந்து பேரு மாதிரி இருக்கிறதால எனக்கு அரசாங்கத்தில துப்புரவு பணியாளரா வேலை கிடைச்சது.” என்கிறார் நாகம்மா. முப்பது வருடங்களாக இதே வேலையிலிருக்கும் 2020-ல் ஓய்வு பெறுகிறார்.

மணி இந்த வேலையில் இருபத்தி ஏழு வயதிலிருந்து இருக்கிறார். இப்போது அவருக்கு மாதம் 16,000 சம்பளம் வருகிறது. அதற்கு முன்னால், அதே வேலையை ஒப்பந்த தொழிலாளராகச் செய்து கொண்டிருந்தார். “இத்தனை வருஷத்தில சாக்கடை நாத்தம் எல்லாம் பழகிப்போச்சு. ஆனா, முதல்ல இதைச் செய்ய ஆரம்பிச்சப்ப உடுப்பை எல்லாம் கழட்டிட்டு, வெறும் அண்டர்வேரோட சாக்கடைக்குள்ள குதிக்கக் கஷ்டமா இருக்கும். ஒரு வருசத்துக்கு என்னமோ ரோட்டில அம்மணமா நிக்கிற மாதிரி கூனி குறுகி இருக்கேன். நேரம், கஷ்டம் பெரிய வாத்தியாரு இல்லையா. எங்க சாதி எங்க நெத்தியில எழுதியிருக்கு. அதான் எங்க விதி. தோட்டியா பொறந்தா, வாழ்நாள் முழுக்க மலத்தோட தான் வாழ்க்கைன்னு சபிச்சிருக்கு. சமூகம் எங்களை மலமள்ள வைக்காம விடாது. இதைவிட்டு வெளியே வர மனதைரியம், குடும்பத்தோட ஆதரவு ரொம்ப முக்கியம். எங்களால தான் தப்பிக்க முடியலை. எங்க பிள்ளைங்கள இதுல இருந்து காப்பாத்திட்டோம்.” என்கிறார் மணி.

மணி-நாகம்மா தம்பதியினர் தங்களுடைய சாதி தொழில் தங்களோடு தொலைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் அனுபவித்த அதே கொடுமைகளைத் தங்களுடைய பிள்ளைகள் அனுபவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. “இந்த நாத்தம், நச்சு வாயு இதுல இருந்தெல்லாம் எங்க பிள்ளைங்க தப்பிக்கணும் அப்படிங்கறது தான் என்னோட ஒரே கனவு. அந்தக் கனவை நனவாக்க நானும், என் பொண்டாட்டியும் அவ்ளோ பட்டிருக்கோம்.” என்கிறார் மணி. இவர்களுடைய மகள் துளசிக்கு திருமணமாகி விட்டது. ஒரு ஆடை நிறுவனத்தில், உற்பத்தி கட்டுப்பாட்டு மேலாளராகப் பணியாற்றுகிறார். மகன் மூர்த்தித் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்

Watch video: மணியும், அவருடைய மனைவி நாகம்மாவும் தங்களுடைய தொழிலும், சாதியும் எப்படி கேவலமாக பார்க்கப்படுகிறது என சொல்கிறார்கள்.

மணி ஒரு மலக்குழிக்குள் அடைப்பை எடுப்பதற்கு இறங்குவதற்கு முன்னால் எப்படி அங்கே நிலவும் நிலைமையை கணிக்கிறார் என்பதை நேராகச் செய்து காட்டுவதாகக் கூறியிருந்தார். அடுத்த நாள் மாவட்ட நீதிபதி அலுவலகத்துக்கு அருகே அடைபட்டு இருக்கும் சாக்கடைக்கு அருகில் வருமாறு காலையில் அழைத்தார். ஒரு ட்ரக்குக்குப் பின்னால் போய், அன்டர்வேரோடு வருகிறார் மணி. மெலிதாகச் சிரித்துவிட்டு, “இந்த நரகத்துக்குள்ள நான் இறங்காத நாளில்லை. ஆனா, திரும்பி உசுரோட வர மாட்டோம்ங்கற அதே பயம் அப்படியே இருக்கு. ஒவ்வொருமுறை குதிக்கிறதுக்கு முன்ன கண்ணை மூடிகிட்டு, என் மகளோட முகத்தை நினைச்சுப்பேன். எங்க வீட்டு அதிர்ஷ்ட லட்சுமி என் பொண்ணு. எதாச்சும் அடைப்பை எடுக்க முடியாம, உயிருக்கு ஆபத்தா ஆகுதுன்னா அவங்க பேரை சொல்லிக்கிட்டு வெளியே வர முடிவு பண்ணிருவேன். இதுவரைக்கும் உயிரோட பத்திரமா இருக்கேன்.” என்று கலங்க வைக்கிறார் மணி.

ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் 1 – ஜூலை 10 காலத்தில் மட்டும் இந்தியாவில் சாக்கடைகள், மலக்குழிகள் ஆகியவற்றில் இறங்கிய 39 துப்புரவு பணியாளர்கள் இறந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மனிதர்களே மனிதர்களின் கழிவை அள்ளும் கொடிய வழக்கத்தை முடிவு கட்டுவதற்குப் பாடுபடும் மக்கள் இயக்கமாகும்.

மணி மலக்குழிக்குள் இறங்க தயாராகிறார். பிற துப்புரவு பணியாளர்கள் தீக்குச்சியைப் பற்ற வைத்து நச்சு வாயுக்கள் இருக்கிறதா எனச் சோதிக்கிறார்கள். எதுவும் இல்லை என்று அவர்கள் சமிக்ஞை தந்ததும் மணி குழிக்குள் இறங்கி குதிக்கிறார்

ஒரு வேளை மணி உயிரோடு திரும்பாவிட்டால் என்னாகும். மற்ற துப்புரவு பணியாளர்கள் அமைதியாக நிற்பதாகத் தோன்றுகிறது. இது எப்போதும் நடக்கிற ஒன்றுதான் என்பது போல அவர்கள் இருக்கிறார்கள். நாகம்மா சொன்னவை என் காதுகளில் ஒலிக்கின்றன, “ஒவ்வொரு நாளும் பயத்தோட தான் வாழுறோம். இவ்ளோ மன அழுத்தத்தோட எப்படி நிம்மதியா வாழ முடியும்? மணி தினமும் குடிக்கிறாரு. அதுக்காக அவர்கூடச் சண்டை போடுவேன். ஆனா, இவ்ளோ கஷ்டமான, மனிதாபிமானம் இல்லாத வேலையைக் குடிக்காம செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியுது. யாராச்சும் சாக்கடையில, மலக்குழியில இறங்கி செத்துட்டாங்கன்னு கேள்விப்படுறப்ப எல்லாம் அவ்ளோ வலிக்கும். சாக்கடைக்குள்ள இறங்குறவரு பொண்டாட்டிய இருக்கிறதுனா என்னனு எனக்குத் தெரியும். எங்க சாதியை யாரும் மனுசங்களா மதிக்கிறதே இல்லை. இந்தச் சாதின்னா கேவலம்ங்கற சுமையைச் சுமந்துகிட்டே தான் நாங்க செத்து ஒழியணும்.” என்று நாகம்மா புலம்பினார்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, மணி மலக்குழியை விட்டு வெளிவருகிறார். அவருடைய உடல் முழுக்க சகதி, கழிவு, மலம் அப்பியிருக்கிறது. தன்னுடைய முகத்தைக் கையால் துடைத்தபடி, கண்கள் திறந்து, “இந்த முறையும் நான் தப்பிச்சிட்டேன்.” என்று என்னிடம் சொல்கிறார்.

புகைப்படங்கள் : பாஷா சிங்

தமிழில்: பூ.கொ.சரவணன்

Bhasha Singh

Bhasha Singh is an independent journalist and writer, and 2017 PARI Fellow. Her book on manual scavenging, ‘Adrishya Bharat’, (Hindi) was published in 2012 (‘Unseen’ in English, 2014) by Penguin. Her journalism has focused on agrarian distress in north India, the politics and ground realities of nuclear plants, and the Dalit, gender and minority rights.

Other stories by Bhasha Singh
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan