“ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க என்று மக்கள் கூறுவார்கள். அரசு ராணுவ வீரர்களை வேண்டுமானால் நன்றாக பாரத்துக்கொள்ளலாம், ஆனால், விவசாயிகளை அதிகளவில் புறக்கணிக்கிறது”, என்று வடக்கு டெல்லியின் கிஷான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த, காய்கறி சந்தையின் வியாபாரியான, 36 வயதான மாற்றுத்திறனாளி பப்பு குமார் ரத்தோர் கூறுகிறார். விவசாயிகள் வேளாண் தொழிலில் முதலீடு செய்ததை திரும்ப பெறுவதில்லை. மேலும் இது லாபகரமான தொழில் கிடையாது. இதனால்தான் நிறைய பேர் விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். 

“விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், விவசாயத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது”, என்று அவர் மேலும் கூறினார். “நாங்கள் மொத்த விற்பனை கடைகளில் விவசாயிகளை சந்திக்கின்றோம். எனக்கு தெரியும் நிறைய விவசாயிகள் தற்போது கூலித்தொழிலாளர்களாகிவிட்டனர். அவர்களின் பிரச்னைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் நமக்கு உணவு வழங்குபவர்கள்”. 

மேலும் மொத்த வியாபாரக் கடையில், ராஜஸ்தானில் உள்ள கரவ்ளியில் காய்கறி வியாபாரியாக உள்ள ராதேஸ்யாம் ரத்தோர் கூறுகையில், “எங்களுடைய குடும்பம் விவசாயக்குடும்பம். விவசாயம் மட்டும் நன்றாக இருந்திருந்தால், எங்கள் தந்தை டெல்லிக்கே வந்திருக்க மாட்டார். தற்போது நாங்கள் சகோதரர்கள் மூன்று பேரும் காய்கறி விற்பனையில் உள்ளோம்” என்று கூறினார். 

அவரை அடுத்து 57 வயதான ஓம்பிரகாஷ் ரைஸ்வால் உள்ளார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விற்பவர். அவர் கூறுகையில், “நாங்களும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூதாதையர்களின் சொத்துக்களை, எங்கள்  தந்தையின் சகோதரர்களுடன் பிரித்துக்கொண்டதில், அது குறைந்துவிட்டது. அதனால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தை ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள கொலானா மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து, வாழ்வாதாரம் தேடி டெல்லிக்கு எங்கள் குடும்பத்தினருடன் வந்துவிட்டார். அதனால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். தற்போது விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் லாபத்தை எடுத்துக்கொள்கிறார்கள். விவசாயிகள் வாழ்வதற்கே போராடுகிறார்கள்” என்றார். 

vegetable sellers in Delhi's market
PHOTO • Purusottam Thakur

இடது மேலே: பாப்பு குமார் ரத்தோர், வலது மேலே: ராதேஷ்யாம் ரத்தோர். இடது கீழே: ஓம்பிரகாஷ் ரைஸ்வால்

தமிழில்:  பிரியதர்சினி R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Other stories by Purusottam Thakur