ஒரு மரத்துண்டை கீதமிசைக்க வைப்பதற்குப் பல நாட்கள் ஆகிறது. அப்படி அதிலிருந்து இசை பொழிய தனித்துவமான திறமைமிகுந்த கைவினைஞர்கள் தேவைப்படுகிறார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கபேட்டை கிராமத்தில் நான்கு குடும்பங்கள் இன்னமும் கையாலேயே நாதஸ்வரம் செய்கிறார்கள். அவர்கள் அக்கலையில் தேர்ச்சி மிக்கவர்களாகத் திகழ்வதால் நாதஸ்வரம் உருவாக்குவது மிக எளிதான ஒன்று போலத் தோன்றுகிறது. அவர்களுடைய வீட்டுக் கொல்லைப்புறங்களில் நாதஸ்வரம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்கள் மரக்கட்டைகளைப் போல அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவர்களின் வீட்டுக்கு அடுத்துள்ள பட்டறைகளில் இந்த மரக்கட்டைகள் வெட்டி, வடிவம் தரப்பட்டு, செதுக்கி, இழைத்து, ஓட்டையிடப்படுகின்றன . இவை அசாத்தியமான துல்லியத்தோடு தயாராகின்றன. இது பழக்கத்தில் வருவது. ஒரே ஒரு நாதஸ்வரத்திற்காக இந்தப் பட்டறைகளில் பல்வேறு புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர்கள் தவம்கிடந்திருக்கிறார்கள். அந்த இசைக்கருவியைக் கொண்டு பல விருதுகளையும், பல்லாயிரம் ரூபாய் பரிசுப்பணத்தையும் அக்கலைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இக்கருவிகளைச் செய்யும் இந்த நாயகர்களுக்கு ஒரு கருவிக்கு ஆயிரம் ரூபாயே லாபம் கிடைக்கிறது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் கூடுதலாக ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும்.


என்றாலும், ஒவ்வொரு நாள் காலை பத்து மணிக்கு 53 வயதாகும் என்.ஆர்.செல்வராஜ் தன்னுடைய சிறிய பட்டறைக்கு வந்துவிடுகிறார். நான்காம் தலைமுறையாக நாதஸ்வரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு இரு உதவியாளர்கள் உதவுகிறார்கள். மெலிதாக, சுருள்முடியோடு காட்சி தரும் அவர்கள் இரண்டி அடி நீளமுள்ள இரும்பு அரங்களைப் பூஜை அறையிலிருந்து கொண்டு வருகிறார்கள். உருளை வடிவ மரக்கட்டையைப் பட்டறையின் மேல் லாவகமாக வைக்கிறார். இந்தக் காற்றுக்கருவியோடு தன்னுடைய கிராமத்திற்கு இருக்கும் நீண்ட நெடிய தொடர்பு குறித்துச் செல்வராஜ் பேசுகிறார். நாதசுவரம் இல்லாத தமிழ்த்திருமணமோ, கோயில் உற்சவமோ முழுமையடைவதில்லை.

 “நாதஸ்வரம் மங்கள வாத்தியம். அது எங்கள் பகுதியின் மாயவரத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் தான் தோன்றியது. என்னுடைய கொள்ளு தாத்தா கோவிந்தசாமி ஆச்சாரி அங்கே போய் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டார்.” என்று கையால் பட்டறையில் இருக்கும் லேத்தை திருகிக்கொண்டே செல்வராஜ் எப்படி இந்தக் கலை தன்னுடைய கிராமத்திற்கு வந்து சேர்ந்தது என விவரிக்கிறார். இந்த உலகத்திற்குச் செல்வராஜின் தந்தை ஒரு புதிய கருவியைத் தந்தார். “1955-ல் என்னுடைய தந்தை ரங்கநாதன் ஆச்சாரி மூலக்கருவியில் மாற்றங்கள் செய்து ஏழு ஸ்வரங்களும் பொழியும் கருவியை வடிவமைத்தார்.” என்று நினைவுகூர்கிறார்.


நாதஸ்வரங்கள் ஆச்சா (ஆர்டுவிக்கா ஃபின்னேட்டா அறிவியல் பெயர் ) மரங்களால் காலங்காலமாகச் செய்யப்படுகின்றன. “பச்சை மரத்தை பயன்படுத்துவதில்லை. மரம் குறைந்தபட்சம் 75-100 ஆண்டுகள் வயதுள்ளதாக இருக்க வேண்டும். இளசான மரங்கள் வளைந்து, நெளிந்து விடும். நாங்கள் இங்கே பயன்படுத்தும் கட்டைகள் எல்லாம் பழைய வீடுகளின் தூண்களாக, உத்தரங்களாக இருந்தவையே இவை.” என்று கொல்லைப்புறத்தில் குவிந்து கிடக்கும் மரக்கட்டைகளைக் காட்டுகிறார். “இந்தக் கட்டைகளை இங்கே கொண்டுவருவதற்கே சிரமப்படுகிறோம். சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு இந்தப் பழைய கட்டைக்கு ரசீது கேட்கிறார்கள். எந்த விற்பனையாளர் பழைய கட்டைக்கு ரசீது தருகிறார்கள்?” இதைவிட மோசமாகச் சந்தனமரம் கடத்துகிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. .

கட்டையைத் தேடி பெறுவதோடு கவலைகள் முடிவதில்லை. “ஒவ்வொரு நாதஸ்வரத்தை செய்யவும் மூன்று நபர்கள் தேவைப்படுகிறார்கள். மரம், கூலி எல்லாவற்றையும் கழித்து விட்டு பார்த்தால் கையில் மிஞ்சுவது வெறும் 1000-1,500 ரூபாய் தான்.” என்று வருந்துகிறார் செல்வராஜ்.

“நாதஸ்வர கலைஞர்கள் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நாதஸ்வரத்தை வாங்குகிறார்கள். அதைக்கொண்டு அவர்கள் லட்சம் லட்சமாகச் சம்பாதிக்க முடியும். ஆனால், சில வருடங்கள் கழித்து இன்னொரு நாதஸ்வரம் வாங்க வருகிற போது அவர்கள் தள்ளுபடி கேட்கிறார்கள்.” என்கிறார் செல்வராஜின் மாமாவான சக்திவேல் ஆச்சாரி. இவர் தெருமுனையில் நாதஸ்வரம் செய்கிற பட்டறை வைத்திருக்கிறார். அரசாங்கம் தங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பது குறித்தும் சக்திவேல் பொரிந்து தள்ளுகிறார். நாதஸ்வர கலைஞர்களுக்கே எல்லா விருதுகளும், அங்கீகாரமும் கிடைக்கிறது. ஆனால், ரங்கநாதன் ஆச்சாரியால் பாரி நாதஸ்வரம் பிறந்த தங்களுடைய கிராமத்தின் கைவினைஞர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்

 ஆனால், ரங்கநாதன் ஆச்சாரி இசைக்கு ஆற்றிய மகத்தான சேவையை மெச்சும் ஒரு கடிதம் வீட்டில் சட்டகம் செய்யப்பட்டுக் காட்சியளிக்கிறது. அதைச் சக்திவேல் ஆச்சாரி சுட்டிக்காட்டுகிறார். அது புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கைப்பட எழுதிய கடிதமாகும்.

மண் அடுப்பில் பட்டறையின் மரத்துண்டுகள், குப்பைக்கூளங்களை எரிபொருளாக்கி சமைக்கப்பட்ட மதிய உணவு பரிமாறப்படுகிறது. உணவை உண்டபடியே செல்வராஜின் மூத்தமகன் சதீஷ் வாகனங்கள் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார். “எல்லாரும் செல்போனில் சாமி படம், அப்பா அம்மா படத்தை வைத்திருப்பார்கள். நான் வேன் படத்தை வெச்சிருக்கேன!” ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷை சந்தித்த போது ஒரு சுற்றுலா வேனை வாங்கி ஓட்டுவது அவரின் கனவாக இருந்தது. இப்போதுய அவருடைய மாமன்மார்கள், சகோதரிகள், அம்மா ஆகியோரின் சமாதானம், கட்டாயப்படுத்தலால் குடும்பத் தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். “ஆனால், இதோடு சுற்றுலா தொழில், விவசாயத்திலும் ஈடுபடுவேன்.” என்கிறார் சதீஷ்.


சதீஷ் அந்தத் தொழில்களைச் செய்தே ஆகவேண்டும். (அவருடைய தம்பி பிரகாஷ் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்). நாதஸ்வரம் செய்வதையே முழு நேரத்தொழிலாக ஆக்கிக் கொண்டால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. குடும்பக் கவுரவத்தை முன்னெடுத்து செல்வதைக் கொண்டு கடன்களை அடைக்க முடியாது. நாதஸ்வர விற்பனையைக் கொண்டு ஒரு வண்டி விறகுக்கு ஆகும் செலவை கூட ஈடுகட்ட முடியாது.

குடும்பத் தொழிலை தொடரவேண்டுமா என்கிற ஊசலாட்டம் சக்திவேலின் குடும்பத்திலும் நிலவுகிறது. சக்திவேலின் ஒரே பேரனான சபரி படிப்பில் சுட்டியாக இருக்கிறார். சக்திவேலின் மகனான செந்தில்குமார் பதினைந்து வயதில் இருந்து நாதஸ்வரங்கள் தயாரிப்பவர். தன்னுடைய மகன் CNC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொழிலை நவீனப்படுத்துவான் என்று அவர் நம்புகிறார். தன்னுடைய வீட்டை எப்படி நவீனப்படுத்தி இருக்கிறார் என அவர் சுற்றிக்காட்டுகிறார். புதுப்பிக்கப்பட்ட மாட்டுக் கொட்டகை, கொல்லையில் இருக்கும் ஜெனரேட்டர், பட்டறையில் ஒரு குதிரைத்திறன் கொண்ட மோட்டாரில் ஓடும் லேத் ஆகியவற்றைக் காட்டுகிறார். “என் அப்பா உட்பட யாருமே இது வேலை செய்யும் என நம்பவில்லை. ஆனால், இது அவ்வளவு அழகாக வேலை செய்கிறது.” என்கிறார் செந்தில்குமார். இப்போதெல்லாம் தொழிலாளர்கள் கிடப்பதே பெரும்பாடாக இருப்பதால் இது பெரிதும் பயன்படுகிறது. “அவர்களுக்காகக் கை கட்டி பல நாட்கள் காத்துக்கொண்டு இருந்திருக்கிறோம்.” என்கிறார் சக்திவேல்.


விருப்பமிகுந்த தொழிலாளர்கள், இயந்திரமயமான லேத்களைத் தாண்டி இளைய தலைமுறை இந்தக் கலையைக் காப்பாற்ற வேறொன்று அவசியமாகிறது. “இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபடும் இந்த நான்கு குடும்பங்களுக்கும் விருதுகள் தரவேண்டும்.” என்று கோரிக்கை வைக்கிறார் செல்வராஜ். மேலும், நியாயமான விலையில் மரக்கட்டைகள் கிடைக்க வேண்டும், வயதான கைவினைஞர்களுக்கு ஓய்வூதியம் தரவேண்டும் என்றும் கோருகிறார். நாதஸ்வரத்தில் விரிந்து காணப்படும் கீழ்பகுதியான அணைசுவை புதிய நாதஸ்வரத்தில் பொருத்தி மரியாதையோடு அதனைக் காத்திருக்கும் வித்வானிடம் தருகிறார். அதைப்பெறுகிற கலைஞர் முருகானந்தம் சிக்கலான இசைக்கோர்வைகளைப் புதிய, ஆரம்பத்தில் சற்றே முரண்டுபிடிக்கிற கருவியில் வாசிக்கிறார். நரசிங்கபேட்டை நாதஸ்வரத்திற்கு ‘புவியியல் சார்ந்த குறியீடு’ (Geographical Indicator) தரக்கூடும் எனப் பேச்சிருக்கிறது என்கிறார் செல்வராஜ்.

“சில அதிகாரிகள் எங்களிடம் வந்து பேசிவிட்டுச் சென்றார்கள். புவியியல் சார்ந்த குறியீடு ட்ரேட்மார்க்கை போன்றது என்று கூறுகிறார்கள். அதனால் எங்களுக்கு என்ன லாபம் என்றுதான் புரியவில்லை.” மற்றவர்களுக்கும் இது குறித்துத் தெளிவில்லை. இந்த அங்கீகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்களுடைய தொழிலை தொடரமுடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் கவலையோடு எழுகிறார்கள். ஆச்சா மரம் கிடைக்குமா, தங்களுடைய மகன்கள் தங்களோடு உட்கார்ந்து வேலை பார்ப்பார்களா, தங்களுடைய கலையை அவர்கள் கற்றுக்கொள்வார்களா, அரசாங்கம் இசைக்குத் தங்களுடைய பங்களிப்பை அங்கீகரிக்குமா என்று பல கவலைகள் அவர்களை வாட்டுகிறது.


இக்கட்டுரை The Hindu நாளிதழில் முதலில் வெளியானது: http://www.thehindu.com/features/magazine/narasingapettais-nadaswaram-makers/article7088894.ece

இக்கட்டுரை  ‘Vanishing Livelihoods of Rural Tamil Nadu’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைத்தொடரில் வெளிவந்தது. இந்த தொடர் கட்டுரைகள்  ‘NFI National Media Award 2015’-ன் கீழ் உதவி பெற்றது.

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan