இன்று, மே 1, உலகத் தொழிலாளர் நாள்; ஆனால், பெங்களூருவில் நம்ம மெட்ரோ எனப்படும்- பெருநகரத் தொடர்வண்டித் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு மார்ச்சிலிருந்து ஊதியம் கிடைக்கவில்லை; இதனால், பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்று வெளியிடப்படும் சபூட்/ சாட்சி எனும் 13 நிமிட ஆவணப்படம், பொதுமுடக்கத்தில் நகரத்தின் பெருநகர த் தொடர்வண்டித் திட்டப் பணியாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைக் காட்டுகிறது. புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்க்கை, வேலை நிலையை முதன்மையாக வெளிப்படுத்த முனைகிறது.

”வீட்டுக்குப் போய் நாங்கள் இறந்துபோனால், அதில் ஒரு பிரச்னையும் இல்லை. இங்கே இறந்துபோனால் ஒருவரும் எங்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை. எனக்கு பயமாக இருக்கிறது” என்கிறார், அந்தத் தொழிலாளர்களில் ஒருவர். அவர், தன் ஊரைவிட்டு வந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. பொதுமுடக்கம் வந்ததும் வந்தது அவர் தன்னுடைய குடும்பத்தினரைச் சந்திக்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்ததை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டது. தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க அவர்கள் முயன்றாலும்கூட, 10- 15 பேர் ஒரே அறையைப் பகிர்ந்துகொண்டு உள்ளனர். உலோகத் தகடால் ஆன வீடுகளில்தான் அவர்கள் அனைவரும் வசிக்கிறார்கள்.

சபூட்/ எவிடென்ஸ்- ஆவணப்படத்தைப் பார்க்க

ஏதோ கொள்ளைநோய் வந்து அவர்களின் வாழ்க்கை இப்படி ஆகிவிடவில்லை. அவர்களை வேலைக்கமர்த்தியவர்களை ஒழுங்குபடுத்தும் அரசு அமைப்பின் செயலின்மை, ஒப்பந்தகாரர்களின் சுரண்டல், அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியம் ஆகியவைதான் தொழிலாளர்களை இப்படி நிர்கதியாக விட்டிருக்கிறது. 

பெங்களூரு பெருநகர இரயில் நிறுவனத்தின் பெருநகரத் தொடர்வண்டி மஞ்சள் பாதை அமைக்கும் பணியானது, மார்ச் 24 அன்று கர்நாடகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் ஒரேயடியாக நிறுத்தப்பட்டது.  

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் கட்டுமானத் தளத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போவதற்கு எந்த வழியும் இல்லை. ” 15 நாள்கள் ஆகிவிட்டன; எங்கள் முதலாளி இதுவரை சும்மா ஒரு எட்டுவந்து எங்களைப்  பார்க்கக்கூட இல்லை.” என்கிறார் ஒரு தொழிலாளர்.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்த் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் ஊருக்குத் திரும்பலாம் என ஏப்ரல் 29 அன்று மைய உள்துறை அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக மறுநாள் கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால் பெருநகரத் தொடர்வண்டித் திட்டப் பணியாளர்களை இதுவரை யாரும் தொடர்புகொள்ளவே இல்லை. 

இந்தப் படத்தில் தொழிலாளர்களே விவரணை தருகிறார்கள். கொரோனா வைரசின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவர்கள் தங்களின் முகத்தை மூடிக்கொள்கிறார்கள். ஆனால், உருவாகியுள்ள சமூக, பொருளாதார, தனிநபர் நெருக்கடிகள்..? இந்த ஆவணப் படம் இதைத்தான் கேட்கிறது: நெருக்கடியிலிருந்து இவர்களை யார், எப்படி பாதுகாக்கப் போகிறார்கள்?

எழுத்தும் இயக்கமும் யஷஸ்வினி மற்றும் ஏக்தா
திரையில்: பெங்களரூ மெட்ரோ பன்ணியாளர்கள்
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் -  யஷஸ்வினி

தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.

Yashashwini & Ekta

யாசாஸ்வினி, 2017 பேரி நல்கையாளரும் படமாக்குநரும் ஆவார். அண்மையில், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்சகாடெமீ வான் பீல்டென்டி குன்ஸ்டனில் வளாகப் பயிற்சி ஒன்றை அளித்துமுடித்துள்ளார். ஏக்தாவும் ஒரு படமாக்குநர்; பெங்களுருவில் உள்ள ஊடக மற்றும் கலைகளுக்கான மரா அமைப்பின் இணை நிறுவனர்.

Other stories by Yashashwini & Ekta