மும்பையில் நான் வளர்ந்த குடிசைப் பகுதிக்கு அருகே இருக்கும் மளிகைக் கடை தினமும் மாலை 6 மணி அளவில் நிரம்பியிருக்கும். அது 2000ம் ஆண்டு. அந்த பெரிய கடையில், கால் கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு மிளகாய்த் தூள், உப்பு, இரண்டு ரூபாய்க்கு சமையல் எண்ணெய், 25 காசுக்கும் 50 காசுக்கும் கடுகு, மஞ்சள் தூள், ஒன்றிரண்டு வெங்காயம், கால் கிலோ பருப்பு, கோதுமை மாவு, அடுப்புக்கான மண்ணெண்ணெய் கொஞ்சம் ஆகியவற்றை வாங்குவதற்காக சிறு வாடிக்கையாளர்கள் குவிந்திருப்பார்கள்.

மக்கள் தங்களின் தினக்கூலியான 150 ரூபாயில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பொருட்களை வாங்குவார்கள். அன்றைய நாட்களில் 25 காசு, 50 காசு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அந்தக் கடையில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும், 24 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பும் வாங்க முடியும். பெரும்பாலும் கால் கிலோ அல்லது அரைக் கிலோ தான் வாங்குவார்கள். ஏன் நம்முடைய ரேஷன் கடைகள் சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றை மட்டுமே தருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஏனைய பொருட்களை நாங்கள் தனியார் மளிகைக் கடையில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

காலை 8 மணி முதல் இடையறாது உழைத்துக் களைத்த அந்த வாடிக்கையாளர்கள், 3-4 பேர்களுக்கான பசியைப் போக்க, ரூ.70-80க்கு மளிகைப் பொருட்களை வாங்குவார்கள். மாதக் கடைசியில், வீட்டு வாடகை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற செலவுகள் போக, மீதமுள்ள தொகையை – பெரும்பாலும் ரூ.2000க்கு குறைவாக – கிராமத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்கு, அஞ்சலகம் மூலமாகவோ அல்லது தெரிந்தவர்கள் ஊருக்குப் போகும்போது கொடுத்தனுப்பவோ செய்வார்கள்.

அன்றாடம் சம்பாதிக்கவும், அன்றாடம் செலவிடவுமாக அவர்களது வாழ்க்கை கழியும். எங்களுடைய வீட்டிற்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை விற்பனை செய்து கிடைக்கும் அன்றாட சம்பாத்தியம்தான். என் அம்மா மிளகாய்த் தூள், உப்பு, அரிசி போன்றவற்றை வாங்க தினமும் என்னை கடைக்கு அனுப்புவாள். கடையில் இருக்கும் வயதான பாட்டி, “உனக்கு என்ன வேணும்?” என்று என்னைப் பார்த்து கேட்கும் வரைக்கும் நான் நின்று கொண்டே இருப்பேன்.

ரேஷன் கடைக்கு வரும் பெரும்பாலான முகங்கள் எனக்குப் பரிச்சயமானவை. எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொள்வோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு தெரிந்த ஒரே மொழியான மராத்தி பேசாதவர்கள். அவர்கள் சினிமாவில் பேசுவதைப் போல இந்தி பேசுவார்கள். அவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் இல்லை; வெளி மாநிலத்தவர்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது.

நாங்கள் 10க்கு 10 அளவுள்ள ஒண்டிக்குடித்தனத்தில் இருந்தோம். அதைவிடவும் சிறிய, அடுக்கி வைக்கப்பட்ட குழாய்களைப் போன்ற தங்குமிடங்கள் இப்போது நகரத்தில் பெருகிவிட்டன. இத்தகைய அறைகளில் 10-12 நபர்கள், பெரும்பாலும் ஆண்கள் தங்கியிருப்பார்கள். சில இடங்களில் இந்த சிறிய அறைகளில் குடும்பமாகவும் தங்கியிருப்பார்கள்.

ஓவியம்: அந்தார ராமன்

அவர்கள் எங்கள் வீட்டைக் கடந்து போகும்போது, “அண்ணி, சாப்பிட்டீர்களா?” என்று என் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே செல்வார்கள். எப்போதாவது என்னிடம், “வீட்டுப் பாடம் முடித்தாயிற்றா?” என்று கேட்பார்கள். வேலையில்லாமல் வீட்டிலிருக்கும் நாட்களில், வாசல் படிகளில் அமர்ந்துகொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். “சொல்றதுக்கு என்ன இருக்கு அண்ணி? ஊரில் விவசாயம் சரியாக இல்லை, குடிக்கக்கூட தண்ணீர் இல்லை, கிராமத்தில் வேலை இல்லை. எனவே நான் நண்பர்களுடன் பம்பாய்க்கு வந்துவிட்டேன். என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தர வேண்டும்.”

இந்திப் படங்களைப் பார்ப்பதன் மூலமே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிப்போம். அவர்களுக்கு என் அம்மா அரைகுறை இந்தியில் பதில் அளிப்பாள். ஆனால், ஒருவருக்கொருவர் உடனான விசாரிப்புகளும், உரையாடல்களுக்கு நின்றதே இல்லை. அவர்களின் குழந்தைகள் எங்களுடன் மராத்தி-வழிக் கல்வியில் படித்தார்கள். நாங்கள் சேர்ந்து விளையாடுவதன் மூலமும், சேர்ந்து படிப்பதன் மூலமும் ஒருவருக்கொருவர் மொழியைப் புரிந்துகொள்வோம்.

ஆனால், அடுத்த ஓர் ஆண்டில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

எங்களுடைய அக்கம்பக்கத்தினர் அனைவரும் தொழிலாளர்கள், தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வானளாவிய கட்டுமானங்கள், அழகான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், பல்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், அனைத்துமே அவர்களின் இடையறாத உழைப்பால் விளைந்தவை. நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் அவர்களின் வலிமையாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்தபடி இருக்கிறார்கள். இன்று ஓர் இடம், நாளை இன்னோர் இடம். அது மும்பையாக இருக்கலாம், அல்லது வேறு நகரமாக இருக்கலாம் – அவர்கள் ஒருபோதும் நிலையாக தங்குவதில்லை.

அனைத்தும் நிரந்தரமற்றவை. தங்குவதிலிருந்து சாப்பிடுவது வரை.

இரு பத்தாண்டுகளுக்கு முன்பு சில ரூபாய்களாக இருந்த அவர்களின் தினசரி செலவுகள் இப்போது நூற்றுக்கணக்கில் அதிகரித்து விட்டன. என்னைப் பொருத்தவரை, இந்த 2020ன் கொரோனா நோய்த் தொற்றும் பொது முடக்கமும் இன்னமும் நான் 2000வது ஆண்டிலேயே நிற்பதுபோல் தோன்றுகிறது.

என் வீட்டின் அக்கம்பக்கத்தில் இருந்த தொழிலாளர்களின் முகங்கள் மாறிவிட்டன, ஆனால் அவர்களின் துயரங்கள் மாறவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ, அப்படியே இன்னமும் இருக்கிறது. அவர்கள் இங்கிருந்து இப்போது கிளம்பி விட்டார்கள், ஆனால் வழக்கம்போல அவர்களால் வேலை தேட முடியாது. அவர்கள்  வேறு வழியின்றி, தங்களுடைய கிராமங்களை நோக்கி, ஆபத்தும் ஆதரவின்மையும் நிறைந்த பாதையில் சென்றுவிட்டனர்.

வெறும் வயிற்றில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் ஒரு மனிதன் எத்தகைய துன்பத்தை அனுபவித்திருப்பான் என்பது, அரசாங்கம், நிர்வாகம், அமைப்பு, நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து அனைத்தையும் நிர்வாகம் செய்தவர்கள் என யாருக்குமே தெரியாது. அயற்சியும், சோர்வும் மேலுட்ட உடலோடு, அவர்கள் சாலையிலும் கருங்கல் பாதையிலும் அவற்றை காலுக்கான மெத்தை போல் நினைத்துக் கொண்டு நடந்தார்கள், ஓய்வெடுத்தார்கள், தூங்கினார்கள். பயணத்தின் நடுவில் அவர்களுக்கு எது நடந்தாலும், அவை அந்த கடினமான நிலப்பரப்பிலேயே நடந்திருக்க வேண்டும். மிருகத்தனமான அமைப்புக்கும், முட்டாள்தனமான முடிவுகளுக்கு இடையில் உண்மையிலேயே கசக்கிப் பிழியப்பட்டவர்கள் – யாரென்றால், இந்த ‘புலம்பெயர் தொழிலாளர்கள்’தான்.

ஓவியர்: அந்தார ராமன், பெங்களூரின் சிருஷ்டி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட், டிசைன் அண்ட் டெக்னாலஜியில், காட்சித் தொடர்பியல் துறையில் சமீபத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். கருத்தாக்க ஓவியமும், கதை சொல்லலும் அவருடைய ஓவியங்களிலும், வடிவங்களிலும் பெரிய அளவில் வெளிப்படுகின்றன.

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Jyoti Shinoli

ஜோதி ஷினோலி, பாரியின் முதுநிலை செய்தியாளர். இதற்கு முன்பு மி மராத்தி, மகராஷ்டிரா1 போன்ற செய்தி தொலைகாட்சிகளில் வேலைப் பார்த்திருக்கிறார்.

Other stories by Jyoti Shinoli