இரவுணவை முடித்த பிறகு எப்போதும் போல தொலைக்காட்சி பார்க்கக் கூடாது என முடிவெடுத்தாள். இன்று இரவு சாப்பாட்டுக்கு ஸ்கெஸ்வான் சாஸ்ஸில் காய்கறிகளும் வேண்டும் என குழந்தைகள் கேட்டிருந்தனர். காய்கறிக்காரரிடம் சிவப்பு குடைமிளகாயும் இல்லை. மஞ்சள் குடைமிளகாயும் இல்ல. “மண்டி பந்த் கர் தியா மேடம். லாக்டவுன் தொ ஹை ஹி, உபர் சே கர்ஃபியூ. சப்சி கஹான்சே லாயென்? யே சப் பி அபி கெத் செ லெ கெ ஆதே ஹை (மார்க்கெட் மூடியிருக்கிறது மேடம். இந்த ஊரடங்கு நேரத்தில் எங்கே போய் காய்கறி வாங்குவது? இந்த காய்கறியை எல்லாம் விவசாய நிலங்களிலிருந்து வாங்கி வருகிறேன்),” என பழைய காய்கறிதான் இருக்கிறது என்ற அவளின் புகாருக்கு அவன் புலம்பினான்.

அதற்குப் பிறகு வாழ்க்கையின் சோதனைகளை பற்றி அவன் பேச ஆரம்பித்ததும் அவள் கவனிப்பதை நிறுத்தினாள். அவளுடைய மனம் மாலை உணவை எப்படி ருசியாக சமைப்பது என யோசிக்கத் தொடங்கியது. சைனீஸ்-தாய் குழம்பு மற்றும் கோக் என்ற அவளது யோசனை குழந்தைகளை மாலை நேர உணவில் அமைதிப்படுத்தியதில் சந்தோஷமடைந்தாள். தொலைக்காட்சி பார்ப்பது அவளுக்கு சமீப நாட்களாக சந்தோஷத்தை கொடுக்கவில்லை.

செய்திச் சேனல்களை அவள் வெறுத்தாள். திரும்பத் திரும்ப ஒரே படங்கள்தான் காண்பிக்கப்படுகின்றன. குடிநீரின்றி தவிக்கும் ஏழை மக்கள், பாதுகாப்பு இல்லாத துப்புரவு பணியாளர்கள், வீடுகளுக்கு செல்லும் வழிகளிலும் நகரங்களில் மாட்டிக்கொண்டும் பசியால் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவ வசதி மற்றும் உணவு இன்றி இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சிலர் மற்றும் தெருக்களில் பல கோரிக்கைகளை முன் வைத்து போராடுபவர் என பல காட்சிகள்.

எவ்வளவு நேரம்தான் மனம் பேதலித்து செயல்படும் பூச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பது? சமையற்கலையில் புதியவைகளை விவாதிக்கும் வாட்ஸ் அப் குழுக்களுக்கு அவள் திரும்பி விடுவாள்.  சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை உள்ளிடுகிறாள். இன்னொரு குழுவில் மும்பையின் ப்ரீச் கேண்டி க்ளப்புக்கருகே இருக்கும் கடலில் தோன்றும் டால்ஃபின்கள், நவி மும்பையின் ஃப்ளமிங்கோ பறவைகள், கோழிக்கோட்டு சாலைகளில் அலையும் பூனை வகை மிருகம், சண்டிகரில் தென்பட்ட சம்பர் வகை மான் முதலிய காணொளிகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். திடீரென மொபைல் ஃபோனிலிருந்து வரிசையாக சிவப்பு எறும்புகள் வருவதை அவள் பார்த்தாள்…..

இந்த கவிதையை சுதனவா தேஷ்பாண்டே வாசிப்பதை கேட்க

The paintings with this poem is an artist's view of the march of the 'ants'. The artist, Labani Jangi, is a self-taught painter doing her PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata

புகைப்படம்: கவிதைக்கான இந்த ஓவியங்கள் எறும்புகளின் அணிவகுப்பை பற்றிய ஒரு ஓவியரின் பார்வை. சுயாதீன ஓவியராக இருக்கும் லபானி ஜங்கி கொல்கத்தாவின் சமூக அறிவயல் படிப்புகளுக்கான மையத்தில் தொழிலாளர்களின் இடப்பெயர்வு பற்றிய ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொண்டிருக்கிறார்

சிவப்பு எறும்புகள்

சிறிய சிவப்பு எறும்புகள்
வெளியே வந்தன
சமையலறை கதவிடுக்கின்
கீழுள்ள வலதுமூலையிலிருக்கும்
சிறு ஓட்டையிலிருந்து  
சிவப்பு எறும்புகள்.
ஒற்றை வரிசையில்
மேலாக முதலிலும் 
பிறகு இடப்பக்கமும்
அதன்பிறகு கீழும்
பிறகு மீண்டுமொரு நேர் வரிசையில்
சமையல் மேடையின் குறுக்காக
ஒன்றன் பின் ஒன்றாக
அணிவகுத்து சென்று கொண்டிருந்தன
ஒழுங்கான தொழிலாளர்களைப் போல்.

அம்மா சர்க்கரையைக் கொட்டும்
ஒவ்வொரு நேரமும்
கரப்பான்பூச்சி செத்துக்கிடக்கும்
எல்லா நேரமும்
தவறாமல் வந்து விடுகின்றன.
ஒவ்வொரு துகளையும் எடுத்து
அல்லது மொத்த பூச்சியையும் இழுத்து
மீண்டும் அதே ஒழுங்குமுறையில்
அணிவகுத்து செல்வதை பார்க்கையில்
அவளுக்கு தலை கிறுகிறுக்கிறது.
அம்மா ஓடி வருமளவுக்கு
அவளை அலற வைத்து விடுகிறது.

இன்றும் கணக்கு தீர்ப்பதைப் போல
வீட்டில் அவை படையெடுத்தன.
நள்ளிரவில் தோன்றும் 
கெட்டக்கனவைப் போல்
அவை சரியாக அங்கிருப்பது
எப்படியென்பது அவளுக்கு புரியவில்லை.
வரிசை ஏதுமில்லாமல்
ஒழுங்கும் ஒன்றுமில்லாமல்
மருந்து போட்டதும் வருவதைப் போல
ஆவேசத்துடனும் குழப்பத்துடனும்
மூச்சுவிடத் திணறிக் கொண்டும்
அவற்றின் இடங்களிலிருந்து
வெளியேறி வீட்டுக்குள் படையெடுத்தன.

வீட்டிலிருந்து வெளியே
தோட்டத்தை நோக்கி
அவற்றை பெருக்கித் தள்ளி
கதவை மூடினாள் அவள்.
பிறகும் அவை தோன்றின.
எவருக்கும் தெரிந்திடாத
ஜன்னலின் இடுக்கிலிருந்து
கதவின் கீழிலிருந்து 
கதவுச் சட்டகத்தின் வெடிப்பிலிருந்து
சாவித் துளையிலிருந்து
குளியலறையின் வடிகாலிலிருந்து
சிமெண்ட்டின் இடைவெளியிலிருந்து
தரையின் ஓடுகளிலிருந்து
சுவிட்ச்போர்டின் பின்னாலிருந்து
சுவர்களின் ஈரவிரிசல்களிலிருந்து
கம்பிவடங்களிலிருந்து
அலமாரியின் இருளிலிருந்து
படுக்கைக்கு அடியிலிருந்து 
இருப்பிடம் தேடி.
உடைந்துபோய் அழிக்கப்பட்டு
விரல்களுக்கிடையே நசுக்கப்பட்டு
காலடிகளில் மூச்சு திணறி
பசியிலிருந்து
தாகத்திலிருந்து
கோபத்திலிருந்து
வாழ்க்கைகளைத் தேடி
லட்சக்கணக்கில்
வெளியே வருகின்றன
பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து
சிவப்புக் கடிகளோடு
சிவப்பு எறும்புகள்.

- எழுத்தாளரால் அவருடைய குஜராத்தி கவிதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
குரல்: சுதன்யா தேஷ்பாண்டே ஒரு நடிகராகவும் ஜன நாட்டிய மஞ்சில் இயக்குநராகவும் லெஃப்ட்வேர்ட் புக்ஸ்ஸில் ஆசிரியராகவும் இருக்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்.

Pratishtha Pandya

பிரதிஷ்டா பாண்டியா அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார். குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார். பாரிக்கு எழுதவும் மொழிபெயர்க்கவும் செய்கிறார்.

Other stories by Pratishtha Pandya