தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் அய்யம்பட்டி கிராமம். நாற்பது டிகிரி உச்சி வெயிலில் பாசனத்திற்காகப் பல கிணறுகள் தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உள்ளே எட்டிப்பார்த்தால் வெப்பம், புகை, துளையிடும் இயந்திரத்தின் நாராச சத்தம் ஆகியவை நம் புலன்களைத் தாக்குகின்றன; பெரும் சித்திரவதையாக இருக்கிறது. ஆனால் உள்ளே கிணறு வெட்டிக்கொண்டிருக்கும் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் இவற்றையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல். ஒரு மண்வெட்டியின் மூலம் ஒரு சட்டியில் கற்களையும் மண்ணையும் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கூட இங்கு பத்து பதினைந்து அடியிலேயே தண்ணீர் வந்தது”, என்கிறார் கிணற்றை ஆழப்படுத்தும் ஒப்பந்ததாரரான தங்கவேல். அவரின் தாய் சிரங்காயி, கற்கள் நிரம்பிய சட்டியைத் தலையில் சுமந்தபடி கிணற்றிலிருந்து வெளியே வருகிறார். தங்கவேலுக்கு முன் அவர் தந்தை இயந்திரங்கள் ஏதும் இன்றி உடல் உழைப்பின் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்.

உணவிற்கும் கட்டடக்கலைக்கும் பெயர் பெற்ற செட்டிநாடு பகுதியைச் சேர்ந்ததுதான் சிவகங்கை. தமிழ்நாட்டில் மழை மிகவும் குறைவாகப் பெய்யும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு தண்ணீர் எப்பொழுதுமே ஒரு பிரச்னையாகத்தான் இருந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த இரு ஆண்டுகளாக மழை பொய்த்துப்போய் அங்கு வாழும் மக்களுக்குக் கடுந்துயர் ஏற்பட்டிருக்கிறது. எங்களைச் சுற்றிப் பனை மரங்கள் செத்துக்கொண்டிருந்தன; நெல் வயல்கள் தரிசாகிக் கொண்டிருந்தன; குளங்கள் முற்றிலுமாக வற்றிவிட்டது. பாசனத்திற்காக ஆழ்துளைகள் ஆயிரம் அடிகள் வரை தோண்டப்படுகின்றன. அவை அவ்வப்போது மேலும் ஆழப்படுத்தப்படுகின்றன.

மேலே ஒரு பனியனும் அதன் மேல் புழுதி படர்ந்த துண்டு ஒன்றையும் அணிந்தபடி தங்கவேல் ஒரு மண்மேட்டில், தன் தாய் சிரங்காயிக்கு அருகே அமர்கிறார். தன் தலையில் இருந்த இரும்பு வாளியைக் கீழே வைத்து, கிணறு வெட்டுவதன் கடினத்தை விளக்குகிறார். அவருக்கும் அங்கே இருந்த மூன்று பெண்மணிகளுக்கும் யார் மீது புகார் இல்லை. சிரங்காயியின் வயதைக் கேட்டால் அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை. சிரங்காயிக்கே தெரியவில்லை. 80 வயது என்று வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள். சூரியனால் கறுத்திருக்கும் முகம், ஒடிசலான தோள்கள், மேலே கண்டாங்கி சீலை. ஆனால் அவர் கண்களின் இருந்த ஏதோ ஒன்று, அவர் மீது வைத்திருந்த பார்வையை எடுக்க விடாமல் செய்கிறது. அந்தக் கண்கள் உற்றுப் பார்க்கின்றன; அவற்றில் பயமில்லை. உச்சி வெயிலில் ஒரு நாற்பது அடி கிணற்றின் விளிம்பில் நின்றபடி அவர் கீழே பார்க்கிறார். கிணற்றுக்கும் அவர் காலுக்கும் வெறும் இரண்டடிதான் இடைவெளி. அவருடைய நிழலை அந்தக் கிணறு  விழுங்குவதுபோல் இருக்கிறது. ஆனால் அவர் கண்களில் பயமில்லை.

கிரேன் கருவியை இயக்கி அதன்மூலம் ராட்சத இரும்புத் தட்டுகளைத் தூக்குவதுதான் அங்கு பெண்களின் வேலை. கிணற்றிற்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் அக்கருவியை இரண்டு பெண்கள் இயக்கி, தட்டை ஒரு ஓரத்திற்குக் கொண்டு செல்ல, மற்றொரு பெண் அதிலிருப்பவற்றை அப்புறப்படுத்துகிறார். மிகவும் கடினமான வேலை அது. ஆனால் வெயிலில் எட்டு மணிநேர உடல் உழைப்புக்கு 150 ரூபாய் கிடைக்கிறது என்பதால் அவர்களின் முகங்களில் சோர்வில்லை.

கடுமையான உடல் உழைப்பு என்பதால் பெண்களுக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன. ஒரு 25 அடி கிணற்றிற்குள் எட்டிப் பார்க்கிறோம்; அதற்குள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இன்னும் 15 அடி ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். பெரிய கற்களை இயந்திரங்கள் இன்றி கைகளால் எடுத்து தட்டில் போட்டு, அதில் சங்கிலியைக் கட்டி கிரேன் இழுப்பவரிடம் சைகை காட்ட, தட்டு மேலே தூக்கப்படுகிறது. அதைக் கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தில், தொப்பி ஏதும் இன்றி சில நொடிகள் அண்ணாந்து பார்க்கிறார்கள். பிறகு மீண்டும் குனிந்து மேலும் தோண்ட ஆரம்பிக்கிறார்கள். இப்படித்தான் நகர்கிறது அவர்களின் பணி.

இப்படி வருடத்திற்குக் கிட்டத்தட்ட 250 நாட்கள் வேலை இருக்கும். மழை பெய்தால் வேலை நிற்கும், ஆனால் அவர்கள் மற்ற வேலைகளுக்கு முயற்சிப்பதில்லை. “எங்களுக்கு கிணறு வெட்ட மட்டும்தான் தெரியும்”, என்கிறார் தங்கவேல். மாலை அவரது வீட்டிற்குச் செல்கிறோம். குளித்து விட்டு நீலக் கலரில் கட்டம் போட்ட சட்டை ஒன்றை அணிந்தபடி நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார். வேலை காலையில் என்பதால் சிரங்காயி உடைகளைத் துவைத்துக் காயப்போடுகிறார். இனிதான் அவர் சமைத்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீருக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். ஒரு நடுக்கூடம், படுக்கையறை, இவ்வளவுதான் வீடு; கழிப்பறை இல்லை. சமையல் திறந்த வெளியில் ஒரு மண் அடுப்பில் செய்யப்படுகிறது. அருகிலிருக்கும் காட்டிலிருந்து சுள்ளி பொறுக்கப்படுகிறது.

தங்கவேலின் குழுவில் இருக்கும் பேச்சியம்மாவும் வள்ளியும் அருகில்தான் வசிக்கிறார்கள். அதிகாலையிலேயே இருவரும் எழுந்து குடும்பத்திற்கு சமைத்துப்போட்டுவிட்டு, ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். ஏழு மணிக்குள் வேலை ஆரம்பித்துவிடும். இருவருக்கும் இரண்டு மகன்கள். வள்ளியின் மகன்கள் பள்ளிக்கூடம் சென்றவர்கள். தன் மகன்கள் அவ்வாறு இல்லையே என்று பேச்சியம்மாவிற்கு வருத்தம். அவர்கள் விவசாயக் கூலி வேலை, கட்டட வேலை என்று கிடைத்ததை செய்து வருகிறார்கள்.

தங்கவேலும் படித்ததில்லை. ஒன்றாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றிருக்கிறார், பிறகு குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். அவருடைய மகளும் இரண்டு மகன்களும் அவரின் சொந்த ஊரான கரூரில் ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். இரண்டு மகன்களுக்கும் சரியாகக் காது கேட்காது; வாய் பேச முடியாது. சமீபத்தில்தான் அவர்களின் காதுகளில் கேட்கும் கருவி பொறுத்தப்பட்டன; எனவே விரைவில் நன்றாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

வேலையின் காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் சூழல் தங்கவேலுக்கு. அய்யம்பட்டியில் கிரேன் கருவி ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்; தெரிந்தவர்கள் மூலம் ஒப்பந்தம் எடுக்கிறார். கருவி கொஞ்சம் பழமையானதுதான் என்றாலும் நல்ல செயல் திறனுடையது. ஒரு கிணறு வெட்ட அவர் தந்தைக்கு ஆறு மாத காலம் ஆனது என்றால் இவருக்கு இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. இவர் கேட்ட அளவிற்குக் கருவி செய்து தரப்பட்டுள்ளது; அதற்கு ஒரு லட்சம் செலவானது. அவரிடம் நிலமில்லை, வீடில்லை. அக்கருவி ஒன்றுதான் அவரது சொத்து. அதை வாங்க அவர் பெற்ற கடனுக்கு இன்னும் வட்டி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார். அக்கருவியில் எண்ணெய்ப்பசை தடவப்பட்ட சுழல்தட்டு ஒன்று இருக்கிறது. அதன்மூலம்தான் கிரேனை இடப்புறமும் வலப்புறமும் திருப்ப முடிகிறது. சரியான இடத்தை அடைந்ததும் தட்டை அடைவதற்காகக் கயிறு கிணற்றுக்குள் இறக்கப்படுகிறது. அதில் தட்டை மாட்டியதும் கருவி அதை அலேக்காக மேலே தூக்குகிறது. கிரேனை இயக்கும் எஞ்சின் அருகே சத்தம் போட்டுக்கொண்டு கரும்புகையைக் கக்கியபடி இருக்கிறது. இந்தக் கருவி அவர்களின் வேலையை சற்றே எளிதாக்கியிருக்கிறது. அதனால் எங்கு போனாலும் அதை எடுத்துச் செல்கிறார்கள். பாகம் பாகமாகக் கழட்டி டிராக்டரில் போட்டு, செல்ல வேண்டிய இடம் வந்ததும் அதை மறுபடியும் மாட்டி இயக்குகிறார்கள்.


02_AK_Not a drop to drink_IMG_8638.jpg

தங்கவேலிடம் நிலமில்லை, வீடில்லை. அக்கருவி ஒன்றுதான் அவரது சொத்து. அதை வாங்க அவர் பெற்ற கடனுக்கு இன்னும் வட்டி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அக்கருவி அவர்களின் வேலையை சற்றே எளிதாக்கியிருக்கிறது


“ஒரு சதுர அடிக்கு 25 ரூபாய் கிடைக்கும். கிடைக்கும் காசில் அனைவருக்கும் கூலி தரவேண்டும். சில சமயம் காசு பார்ப்போம்; சில சமயம் இல்லை”, என்கிறார் தங்கவேல். முதல் பத்து அடி இயந்திரத்தால் தோண்டப்படுகிறது; பிறகு கடப்பாரை கொண்டு உடல் உழைப்பால் வெட்டப்படுகிறது. அதன்பிறகு கொத்தனாரைக் கொண்டு கான்கிரீட் வளையங்களோ கட்டங்களோ அமைக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று மணிநேரங்களுக்கு இக்கிணறுகள் தண்ணீர் தரும். இந்தப் பணியிலுள்ள ஆபத்துகள் பற்றிக் கேட்டால் அவர் ஒவ்வோன்றாக அடுக்குகிறார். தோண்டும்போது காயங்கள் படலாம், கனமான கற்கள் தலையில் விழலாம், சுவர் இடிந்து உள்ளே சிக்கிக்கொள்ளலாம், என்று அவர் சொல்லும்போதே நமக்கு வலிக்கிறது. ஆனால் அங்கு குழந்தைகளும் வேலை செய்கிறார்கள். ஆல மர விழுதுகளில் தொங்கியபடி கிணற்றுக்குள் அசட்டு தைரியத்துடன் எட்டிப் பார்க்கிறார்கள். மாலை ஆனதும் ஒரு மொபெட் வண்டியில் நாய் துரத்த வீடு போய்ச் சேர்கிறார்கள். அதைக் கண்டு, “அது அவர்களின் நாய்தான்”, என்று சிரித்தபடி தங்கவேல் ஒரு இரும்பு வாளியையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குகிறார். உள்ளே சென்றதும் ஒரு கடப்பாரையை எடுத்து, பெரிய கற்களை உடைத்து அப்புறப்படுத்துகிறார். தண்ணீர் பாட்டில் வைத்த இடத்திற்கு அருகே மெதுவாகப் பழுப்பு நிறத்தில் குட்டை ஒன்று உருவாகிறது.

துரதிஷ்டவசமாக அங்கு எந்தக் குழாயிலும் சரியாகத் தண்ணீர் வரவில்லை. எனவே ஒருவர் பிளாஸ்டிக் பானை ஒன்றை எடுத்துக்கொண்டு தண்ணீரை வேறொரு இடத்திலிருந்து பிடித்து வருகிறார். அவர் வந்ததும் கிணற்றுக்குள் இருப்பவர்கள் வேலையை விட்டுவிட்டு மேலே வருகிறார்கள். எவர்சில்வர் கோப்பைகளில் தண்ணீரை அருந்திவிட்டு, கோப்பையிலும் தண்ணீரை நிரப்பி மீண்டும் கிணற்றுக்குள் இறங்குகிறார்கள்.

“ஓ! எல்லா தண்ணீரையும் நீங்களே எடுத்துக்கொண்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது?”, கிணற்றைப் பார்த்தபடி சிரங்காயி கத்துகிறார். உள்ளேயிருந்து, “நாங்கள் மட்டும் என்ன செய்வதாம்?”, என்று பதில் குரல் வருகிறது. “உள்ளே நாற்பது அடியில் தண்ணீர் இருக்கிறதா என்ன?”

இக்கட்டுரை ' The Hindu ' நாளிதழில் October 25, 2014 அன்று முதலில் வெளியானது.

Aparna Karthikeyan

Aparna Karthikeyan is an independent journalist, author and Senior Fellow, PARI. Her non-fiction book 'Nine Rupees an Hour' documents the disappearing livelihoods of Tamil Nadu. She has written five books for children. Aparna lives in Chennai with her family and dogs.

Other stories by Aparna Karthikeyan