இதுதான் புலேவின் பரம்பரை வீடு. சிறியதாக, சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. சத்தாரா மாவட்ட கட்குன் கிராமத்துவாசிகளுக்கு இந்த வீடு பெருமிதமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெருமையோடு இவ்வீட்டை நினைவுகூர்ந்தாலும் கட்குன் பஞ்சாயத்து இந்த சிறிய வீட்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எதிர்பார்த்தபடியே மகாராஷ்டிரா அரசும் பாராமுகம் காட்டுகிறது. 

இதுதான் புகழ்மிக்கச் சமூகச் சீர்திருத்த தலைவரான ஜோதிபாய் புலேவின் பரம்பரை வீடு. இது புலேவின் தாத்தாவின் வீடு. வீடு பரிதாபகரமாக, பாழடைந்து காட்சியளிக்கிறது. வீட்டின் சுவர் பாளம், பாளமாக விரிசலடைந்து காணப்படுகிறது. மோசமாக அமல்படுத்தப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவில் கூட இதைவிட மேம்பட்ட வீடுகள் கட்டப்படுவதை நாங்கள் கண்டுள்ளோம். அந்தத் திட்டத்தின் கீழ் மிகமோசமாக மறுபுனரமைப்புச் செய்யப்பட்ட வீடு போலப் புலேவின் பரம்பரை வீடு தோன்றுகிறது. 

இந்த வீட்டை சுத்தம் செய்து, புனரமைக்கப் பெரிதாகச் செலவாகாத அளவுக்குச் சிறிய வீடு அது. இதற்கான நிதி மூலங்கள் இருக்கின்றன என்பதை இதற்குப் பின்புறம் உள்ள கிராம பஞ்சாயத்தின் ஸ்மார்ட் ஜிம் புலப்படுத்துகிறது. புலேவின் வீட்டுக்கு எதிரில் அவரின் பெயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி மேடை சாலைக்கு அருகில் அமைந்து இருக்கிறது.


02-Stage-PS-SAI_1170 EV1-The house that Phule's family built.jpg

மோசமான அரங்கேற்றம்: புலேவின் பெயரை விட அன்பளிப்பாக தந்த நிறுவனத்தின் பெயர் பெரிதாக அமைந்து கண்ணை உறுத்துகிறது


இந்த மேடையின் உச்சியில் அந்த மேடையைக் கட்டித்தந்த ‘ஜான்சன் டைல்ஸ்’நிறுவனத்தின் பெயர் மகாத்மா ஜோதிபாய் புலே என்பதைவிடப் பெரிதாக அமைந்து உள்ளது. இந்த முதலாளிகளின் காலத்தில், புலே உயிரோடு இருந்திருந்தால் அவரின் ‘சமூகச் சீர்திருத்த திட்டம்’ எப்படி வரி தரும் மாதிரியாக இருந்திருக்கும் என்று செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டிருப்பார். ஜான்சன் டைல்ஸ் நிறுவனம், ‘உலகமெங்கும் மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்கிறோம்’ என்று அறிவித்துக்கொள்கிறது. இதற்கு மாறாக, புலேவின் போராட்ட மாதிரி நீதி, மனித உரிமைகள், கல்வி, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான அயராத போர் ஆகியவற்றால் ஆனது. தண்ணீர் தாகத்தால் தவியாய் தவிக்கும் அவரின் கிராமத்தின் போராட்ட அடையாளம் போலப் புலேவின் சிலையின் பின்புறம் அவரின் சிதிலமடைந்த வீட்டை எதிர்நோக்கி உள்ளது. 

கட்குனின் 3,300 மக்கள் நெர் அணை இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் கொடுமையாகத் தண்ணீர் பஞ்சத்தால் பரிதவிக்கிறார்கள். மூன்று மாவட்டங்களின் பதிமூன்று தாலுகாக்கள் வருடத்துக்கு ஒருமுறை கூடிப்பேசும் ‘பஞ்ச கூட்டமைப்பான’ துஷ்கால் பரிஷத்தில் கட்குன் கிராமமும் பங்குபெறுகிறது. பழைய மகாபலேஸ்வரில் இருந்து கிருஷ்ண நதியின் கீழ்ப்படுகை நோக்கி பயணிக்கையில் தான் இந்த ஊரை அடைந்தோம். 


03-Jyotiba Phule-PS-Chunks of plaster-Phule statue.jpg

வீட்டின் கூரை பாளம், பாளமாக விரிசலடைந்து காட்சியளிக்கிறது. தன்னுடைய வீடு, கட்குன் கிராமத்தின் நிலை இரண்டுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதை போல முதுகை திருப்பியபடி  நிற்கிறார் ஜோதிபாய் புலே


ஜோதிபாய் புலேவின் பரம்பரை வீடு மட்டுமல்லாமல் அவரின் ஊரும் சீரழிந்து உள்ளது. கிராமவாசிகள் பலர் நகருக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து விட்டார்கள். போனவர்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்புவதே இல்லை

ஒரு பிரபல திரைப்பட இயக்குனருக்கு ஓட்டுனராக வேலைபார்த்த கவுதம் ஜாவலேநான் மாதத்துக்கு 15,000 ரூபாய் சம்பாதித்தேன்,” என்கிறார். “மும்பையைச் சேராத என்னைப்போன்ற ஒரு கிராமவாசி அந்த வருமானத்தில் எப்படிப் பிழைப்பு நடத்த முடியும். நான் BMW, மெர்சிடஸ் பென்ஸ் கார்களை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால், அன்றாடங்காய்ச்சி போல அல்லல் பட்டேன். அதனால் ஊர் திரும்பிவிட்டேன்.” என்று தான்பட்ட பாட்டை நினைவுகூர்கிறார்

ஜாவலே சிதிலமடைந்தபுலேவின் குடும்ப வீடுஎன எழுதப்பட்ட வீட்டின் முன்னால் நின்றபடி பேசுகிறார். இது புலேவின் மூதாதையர் வாழ்ந்த வீடு என்று தெரிகிறது. ஆனால், இங்குதான் புலே பிறந்தாரா? அது தெளிவாகத் தெரியவில்லை. அவர் எங்குப் பிறந்தார் என்பதுபற்றி வேறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன. கொடுமைக்கார அதிகாரிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்கக் கட்குனை விட்டு புலேவின் குடும்பம் வெளியேறுவதற்கு முன்பே அவர் இங்கே பிறந்துவிட்டார் எனச் சிலர் சொல்கிறார்கள். புனே மாவட்டம் கான்வண்டியில் அவர் பிறந்ததாகச் சில நூல்கள் தெரிவிக்கின்றன. வேறு சில நூல்கள் புலேவின் தந்தை புனேவுக்கு இடம்பெயர்ந்த பின்பே அவர் பிறந்தார் என்கின்றன

புலே இங்கே பிறந்தாரா என்று நமக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், புலேவின் அறிவு, கல்வி, நீதிக்கான தாகத்தால் கட்குன் கிராமம் தற்போது செலுத்தப்படவில்லை. அது தாகத்தால் தவித்துத் தள்ளாடுகிறது. அவ்வளவுதான்

புகைப்படங்கள்: பி.சாய்நாத் 

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath