“செங்கல் சூளைக்குள் எந்த ஊரடங்கும் இல்லை. நாங்கள் எப்போதும் போலத் தான் வேலை செய்கிறோம்“ என்கிறார் ஏப்ரல் 5ஆம் தேதி நாம் சந்தித்த போது பேசிய ஹ்ருதே பரபு. “வாராந்திர சந்தை மூடப்பட்டுள்ளது தான் ஒரே மாற்றம். இதனால் நாங்கள் முதலாளியிடம் பெறும் வாராந்திர தொகையில் வாங்கும் உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை.”

ஹ்ருதே கடன் சுமை தாங்காமல் மூன்றாண்டுகளாக தெலங்கானாவின் இந்த செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டம் துரிகலா தாலுக்காவில் உள்ள குத்துலுமுன்டா கிராமத்தில் மனைவியை விட்டுவிட்டு வந்துள்ளார். “நான் கிராமத்தில் இரும்பு கொல்லராக இருந்து நன்றாக சம்பாதித்து வந்தேன். வீடு கட்டியதும் கடன் சுமை ஏற்பட்டது. பணமதிப்பு நீக்கமும் சேர்ந்து கொண்டது” என்று அரைகுறையான இந்தியில் சொல்கிறார் அவர். “என் கிராமத்தில் சின்ன சின்ன வேலைகள் தான் கிடைக்கும். கடன் சுமை அதிகரித்துவிட்டதால் கடனை அடைப்பதற்காக இங்கு வந்து செங்கல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இங்குள்ள அனைவருமே கடன் சுமையில் உள்ளவர்கள் தான்.”

மார்ச் 25ஆம் தேதி அறிவித்த எதிர்பாராத ஊரடங்கு சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜின்னாராம் மண்டலின் கத்திபோதாராம் கிராமத்தில் இருக்கும் இச்செங்கல் சூளையில் குழப்பத்தையும், தொழிலாளர்களிடையே  அசாதாரண சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. “எங்களுக்கு கிடைக்கும் வாராந்திர தொகையைக் கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம சந்தைக்கு நடந்து சென்று தானியங்கள், காய்கறிகள் வாங்குவது வழக்கம்” என்கிறார் ஜோயந்தி பரபு. அதே செங்கல் சூளையில் வேலை செய்யும் இவர் ஹ்ருதையின் தூரத்து உறவினர். “சிலர் மதுபானம் கூட வாங்குவார்கள். ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு அனைத்தும் நிறுத்தப்பட்டது.”

ஊரடங்கு தொடங்கிய இரண்டு நாட்களில் வெள்ளிக்கிழமை சந்தையில் தேவையான உணவுப் பொருட்களை தொழிலாளர்கள் வாங்கிவிட்டனர். ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் சந்தை அடைக்கப்பட்டது. “உணவு கிடைப்பது கஷ்டமாகிவிட்டது“ என்கிறார் ஹ்ருதை. “வேறு கடைகளை தேடி கிராமங்களுக்குள் செல்ல முயன்றால், அவர்களின் மொழி [தெலுங்கு] பேசவில்லை என்பதால் காவல்துறையினர் எங்களை விரட்டுகின்றனர்.”

PHOTO • Varsha Bhargavi

கத்திப்போத்தாரமில் உள்ள செங்கல் சூளையில் மற்ற தொழிலாளர்களுடன் ஹ்ருதை பரபு (மேல் இடது, வெள்ளைச் சட்டையில்). ஊரடங்கு காலத்திலும் தெலங்கானாவின் பல பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

ஊரடங்கு அறிவித்த மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகும் தெலங்கானாவின் பல பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. 2019ஆம் ஆண்டு இறுதியில் செங்கல் சூளைக்கு வருவதற்கு முன் தொழிலாளர்கள் தங்களது கூலியைப் பெற்றனர். “இந்த சூளைக்கு பணிக்கு வருவதற்கு முன்பாக  ஒவ்வொரு தொழிலாளரும் தலா ரூ. 35,000 முன்தொகையாக பெற்றனர்” என்று சொல்கிறார் ஜோயந்தி. அவர் போன்று அங்குள்ள குடும்பங்களுக்கு வாரந்தோறும் உணவுக்காக தலா ரூ.400 அளிக்கப்படுகிறது. (எனினும் ஒரு நபருக்கு இத்தொகை தருவதாக கூறியதாகவும், இதுபற்றி பேசியபோது சூளை உரிமையாளரும், மண்டல வருவாய் அதிகாரியும் உடனிருந்ததாக தெரிவிக்கின்றனர். தொழிலாளர்கள் அதிகம் சுரண்டப்படும் இத்துறையில் எப்போதும் சிறப்பாக நடத்தப்படுவதாக அவர்கள் முன்னிலையில் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்).

ஒவ்வொரு குடும்ப குழுவினரும் தங்களது ஏழு மாத பணிக் காலத்தில், தினமும் 3,000 முதல் 4,000 வரையிலான செங்கற்களை அறுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவிலிருந்து தொழிலாளர்கள் வந்தபிறகு, ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் செங்கல் சூளையில் பணிகள் தொடங்குகின்றன. மே இறுதி அல்லது ஜூன் தொடக்கம் வரை இப்பணிகள் நடக்கின்றன.

கத்திப்போத்தாரம் சூளையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ள லுஹூரா சமூகத்தைச் சேர்ந்த ஹ்ருதை, ஜோயந்தி போன்ற பலரும் உள்ளனர். தெலங்கானாவின் பல்வேறு செங்கல் சூளைகளுக்கு பணிக் காலம் தொடங்கும் போது சுமார் 1,000 தொழிலாளர்களை தலைவர் அல்லது ஒப்பந்தக்காரர் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்கிறார் ஹ்ருதை. “ஒடிசாவின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று எங்களைப் போன்ற தொழிலாளர்களை பல ஒப்பந்தக்காரர்கள் திரட்டுகின்றனர். நான் ஒரு சின்ன ஒப்பந்தக்காரர் மூலம் இங்கு அழைக்கப்பட்டேன். பெரிய ஒப்பந்தக்காரர் என்றால் 2000 தொழிலாளர்கள் வரை கொண்டு வருவார்கள்.”

இந்தமுறை ஹ்ருதை தனது பதின்ம வயது மகளையும் இப்பணிக்கு உடன் அழைத்து வந்துள்ளார். “கிர்மானிக்கு 16 அல்லது 17 வயது இருக்கும். அவள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதால் என்னுடன் இங்கு வேலை செய்ய வந்திருக்கிறாள். செங்கற்கள் அறுக்கும் வேலையில் அவள் உடனிருப்பது உறுதுணையாக உள்ளது. அவள் திருமணத்திற்கு பணம் தேவை“ என்கிறார் 55 வயதான அவள் தந்தை. இப்போது நிலவும் கரோனா அச்சமும், ஊரடங்கு நீட்டிப்பும் அவர்கள் கிராமத்திற்கு வெறுங்கையுடன் திரும்பும் சூழலை உருவாக்கியுள்ளது.

The kiln workers' makeshift huts – around 75 families from Balangir district are staying at the kiln where Hruday works
PHOTO • Varsha Bhargavi
The kiln workers' makeshift huts – around 75 families from Balangir district are staying at the kiln where Hruday works
PHOTO • Varsha Bhargavi

ஹ்ருதை வேலை செய்யும் சூளையில் பாலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 75 தொழிலாளர் குடும்பங்கள் தற்காலிக குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றன.

சங்காரெட்டி மாவட்டத்தின் கும்மடிடாலா, ஜின்னாராம் மண்டலங்களில் உள்ள 46 செங்கல் சூளைகளில் ஒடிசாவிலிருந்து வந்த சுமார் 4,800 புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்வதாக மாநில அரசின் உள்ளூர் கல்வி அலுவலகம் தெரிவிக்கின்றது. செங்கல் சூளை வளாகங்களில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் 7 முதல் 14 வயது வரையிலான 316 குழந்தைகளுக்கு பணியிட பள்ளிகளை கல்வித் துறை நடத்தி வருகிறது. (ஆறு வயதிற்கும் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை தெரியவில்லை). ஹ்ருதை, கிர்மானி வேலை செய்யும் சூளையில் பாலாங்கிர் மாவட்டத்திலிருந்து வந்த 130 பெரியவர்கள், 7-14 வயதிலான 24 குழந்தைகள், பச்சிளங்குழந்தைகள் என 75 குடும்பங்கள் வேலை செய்கின்றன.

நாங்கள் தினமும் அதிகாலை 3 மணியிலிருந்து செங்கற்களை செய்ய தொடங்கி காலை 10-11 மணியளவில் முடிப்போம். காலைப் பணி முடிந்தவுடன் இடைவேளை எடுத்துக் கொள்வோம். பெண்கள் விறகு கட்டைகள் சேகரித்து உணவு சமைப்பது, பிள்ளைகளை குளிக்க வைப்பது ஆகியவற்றை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் உணவு சாப்பிடுவார்கள். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வெடுப்பார்கள் என்கிறார் 31 வயதாகும் ஜோயந்தி. மூன்று குழந்தைகளின் தாயான அவர் தன் கணவருடன் இச்சூளையில் வேலை செய்கிறார். “நான்கு பேர் ஓர் குழுவாக வேலை செய்வோம். மீண்டும் மாலை 4 மணியளவில் வேலைகளை தொடங்குவோம். இரவு 10 மணி வரை கல் அறுப்பது தொடரும்.  இரவு உணவு சாப்பிட நள்ளிரவு அல்லது அதிகாலை ஒரு மணி ஆகிவிடும்.”

ஜோயந்திக்கு 14 அல்லது 15 வயது இருக்கும்போது திருமணம் நடந்தது. அவருக்கு சரியான வயது நினைவில் இல்லை. ஏப்ரல் 5ஆம் தேதி அவரை நாங்கள் சந்தித்தபோது, தனது இரண்டு வயது மகன் போசாந்தை கையில் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது ஆறு வயது மகள் அஞ்ஜோலி புகைப்படத்திற்கு நிற்பதற்காக பவுடர் பூச ஆசைப்பட்டு முழுவதையும் கொட்டிக் கொண்டிருந்தபோது, அதை ஜோயந்தி தடுத்து கொண்டிருந்தார். ஜோயந்தியின் மூத்த மகனுக்கு 11 வயதாகிறது. அவன் நடக்கும் தூரத்தில் உள்ள மற்றொரு சூளையில் இயங்கும் பள்ளியில் படித்து வருகிறான். ஊரடங்கால் அப்பள்ளி இப்போது மூடப்பட்டுள்ளது. ஜோயந்தி ஒருபோதும் பள்ளிக்குச் சென்றது கிடையாது. நம்மிடம் வயதை சொல்வதற்கு கூட அவர் ஆதார் அட்டையை தான் காண்பித்தார்.

குத்துலுமுண்டாவில் ஜோயந்தியின் கணவர் குடும்பத்திற்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. “ஒரு ஏக்கரில் தான் விவசாயம் செய்ய முடியும்“ என்கிறார். “நாங்கள் பருத்தி தான் பயிர் செய்கிறோம். எங்கள் வீட்டிற்கே வந்து விதைகள் முதல் பூச்சிக்கொல்லிகள் வரை அனைத்தையும் விதை நிறுவன முகவர்கள் கொடுப்பார்கள். அறுவடை செய்யப்பட்ட பருத்தியை வாங்கிக் கொள்ள திரும்ப வருவார்கள். மழை பொழியும் ஜூன் மாதத்தில் விதைக்கத் தொடங்குவோம். நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் பருத்தி அறுவடை செய்வோம். ஆண்டுதோறும் அறுவடை செய்த பருத்திக்கு ரூ.10,000 கொடுத்து அவர்கள் வாங்கிச் செல்வார்கள்.”

Left: Joyanti Parabhue (standing) with other workers. Right: Kirmani (in blue), Joyanti, Anjoli and Bosanth (in background), in the cooking area of Joyanti's hut
PHOTO • Varsha Bhargavi
Left: Joyanti Parabhue (standing) with other workers. Right: Kirmani (in blue), Joyanti, Anjoli and Bosanth (in background), in the cooking area of Joyanti's hut
PHOTO • Varsha Bhargavi

இடது: ஜோயந்தி பரபு (நிற்பது) பிற தொழிலாளர்களுடன். வலது: ஜோயந்தி குடிசையில் சமைக்கும் இடத்தில் கிர்மானி (நீல நிறத்தில்), ஜோயந்தி, அஞ்ஜோலி, போசந்த் (பின்னணியில்).

நிறுவனங்களிடம் விற்கும் பருத்தியை கிராமத்தினர் யாரும் எடைபோட்டு பார்ப்பதில்லை. “விதைகள், பூச்சிக்கொல்லிகளை கொடுத்து பருத்தியையும் அவர்களே வாங்கிச் செல்வதால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்“ என்கிறார் ஜோயந்தி. ரூ.10,000 என்பது எங்களைப் போன்ற பெரிய குடும்பத்திற்கு போதாது. ஆண்டுதோறும் பருத்தி அறுவடைக்கு பிறகு இந்த சூளையில் வேலை செய்ய வந்துவிடுவோம்.”

உடைந்த, சேதமடைந்த செங்கற்களை கொண்டு தற்காலிக குடிசைகளை தொழிலாளர்கள் கட்டியுள்ளனர். சில குடிசைகளில் மட்டுமே மண் பூசப்பட்டுள்ளது. குடிநீர் வழங்குவதற்காக நீர் சுத்திகரிப்பானை செங்கல் சூளை முதலாளி பொருத்தியுள்ளார். பணியிடத்தில் இருக்கும் ஒரே வசதி அதுதான்.

நம்மிடம் சூளைக்கு பின் தெரியும் திறந்தவெளியை காட்டுகிறார் கைகளில் கைக்குழந்தையை வைத்துள்ள 27 வயது கீதா சென். “நாங்கள் இந்த திறந்தவெளியில் தான் இயற்கை உபாதைகளை முடிக்கிறோம். துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வோம். ஆண்கள் எங்கும் குளிக்கலாம். ஆனால் பெண்கள் இங்கு தான் குளிக்கிறோம்” என்று சொல்லும் அவர், நான்கு ஸ்லாப் கற்கள் பொருத்திய சிறிய பகுதியை காட்டுகிறார். அந்த இடத்தில் சில உடைந்த பானைகளில் பாதி நிரம்பிய நிலையில் வண்டலான நீர், நெகிழி அட்டையால் மேற்புறம் மூடப்பட்டு கம்புகள் கொண்டு நிறுத்தப்பட்டுள்ளன. “மற்றவர்கள் குளிக்கும்போது ஒருவர் நின்று காவல் காப்போம். சூளைக்கு அருகே உள்ள தண்ணீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து நாங்கள் தண்ணீரை எடுத்துச் செல்கிறோம்.”

நாங்கள் இருந்த இடத்திற்கு சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்தனர். காலையில் அனைவரும் குளித்ததால் அரை வறண்ட நிலையில் தண்ணீர் குட்டைப் போல தேங்கியிருந்தது. அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றனர். “ஊரடங்கிற்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒடிசாவிற்கு திரும்பி போக முடியுமா?” என தயக்கத்துடன் கேட்கிறார் கீதா.

PHOTO • Varsha Bhargavi

நாங்கள் இருந்த இடத்தில் திரண்ட குழந்தைகளுடன் சில பெண்கள் அனைவரும் வீடு திரும்ப விரும்புகின்றனர். வலது: சூளையில் எந்த வசதியுமற்ற குளியல் பகுதி.

மார்ச் 30ஆம் தேதி ஊரடங்கு அறிவித்த போது நிவாரண நடவடிக்கையாக தெலங்கான அரசு புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 12 கிலோ அரிசி, ரூ.500 நிவாரணம் கொடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிந்தது. எனினும் கத்திப்போத்தாரமில் உள்ள புலம்பெயர் குடும்பங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி வரை கிடைக்கவில்லை. கிராம சந்தைக்கு சென்று அவர்கள் வேறு பொருட்களையும் வாங்க முடியவில்லை. நாள்முழுவதும் பசியில் இருந்தபோது தன்னார்வலர்கள் இரண்டு வாரத்திற்கு போதிய அளவு உணவுப் பொருட்களுடன் 75 மளிகைப் பொருட்களை (தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு) அளித்தனர்.

அவர்களின் சூழல் குறித்து சங்காரெட்டியில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏப்ரல் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தொழிலாளர்களுக்கு பணமும், அரிசியும்  அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஒவ்வொரு தனி நபருக்கும் இல்லாமல் குடும்பத்திற்கு என வழங்கப்பட்டுள்ளது. மாநில ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கான நிவாரண விநியோகத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் நம்மிடம் தெரிவித்தனர். உதவித்தொகையை கொண்டு இப்போது காலை 11 மணி வரை திறந்திருக்கும் கிராம கடைகளில் சில பொருட்களை தொழிலாளர்கள் வாங்கிக் கொள்கின்றனர்.

அனைவரும் வீட்டிற்கு செல்வது குறித்து கவலையில் உள்ளனர். “கரோனா எங்களை தாக்கும் வரை நீங்கள் இங்கு தங்க சொல்கிறீர்களா?” என கோபமாக கேட்கிறார் ஹ்ருதை. “மரணத்தை தடுக்க முடியாவிட்டால், நாங்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த மண்ணில் தான் இறப்போம்.”

தமிழில்: சவிதா

Varsha Bhargavi

Varsha Bhargavi is a labour and child rights activist, and a gender sensitisation trainer based in Telangana.

Other stories by Varsha Bhargavi
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha