காஜல் லதா பிஸ்வாஸ் புயலின் நினைவுகளால் இன்னும் அலைகழிக்கப்படுகிறார். ஐலா சுந்தரவனத்தைத் தாக்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், மே 25, 2009 ஐ அவர் இன்னும் தெளிவாக நினைவு கூர்கிறார்.

அது நண்பகலுக்கு சற்று முன்னதாக நிகழ்ந்தது. "[கலிண்டி] நதி நீர் கிராமத்திற்குள் விரைந்து அனைத்து வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது", என்கிறார் காஜல் லதா. அன்று அவர் தனது சொந்த கிராமமான கோபிந்தகதியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமிர்மாரி கிராமத்திலுள்ள தனது உறவினர் வீட்டில் இருந்தார். "நாங்கள் 40 - 50 பேர் ஒரு படகில் தஞ்சம் புகுந்தோம், நாங்கள் அங்கு ஒரு இரவும் பகலும் தங்கியிருந்தோம். மரங்கள், படகுகள், கால்நடைகள் மற்றும் நெற்பயிர்கள் ஆகியவை அடித்துச் செல்லப்படுவதைக் கண்டோம். இரவில் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. தீப்பெட்டிகள் கூட ஊறிப் போய் இருந்தன. வானத்தில் மின்னல் வெட்டும் போது தான் எங்களால் எதையும் பார்க்க முடிந்தது", என்றார் அவர்.

தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்து மதிய உணவிற்கு மீனை சுத்தம் செய்து கொண்டிருந்த, 48 வயதான காஜல் லதா என்ற விவசாயி தொடர்ந்து கூறுகிறார், "அந்த இரவை ஒருபோதும் மறக்க இயலாது. ஒரு சொட்டுக் குடிநீர் கூட எங்களிடம் இல்லை. எப்படியோ, நான் ஒரு நெகிழிப் பையில் சில மழைத்துளிகளை சேகரித்தேன், அது மிகவும் தாகமாய் இருந்த, எனது இரண்டு மகள்கள் மற்றும் மருமகளின் உதடுகளை நனைக்கவே பயன்பட்டது". குரல் நடுங்க அவர் நினைவுகூர்கிறார்.

மறுநாள் காலையில், அவர்கள் ஒரு படகை பயன்படுத்தி தங்கள் கிராமத்தை சென்றடைந்தனர். பின்னர் வீட்டிற்கு செல்ல வெள்ள நீர்னுடே சிரமப்பட்டு நடக்க வேண்டியிருந்தது. "எனது மூத்த மகள் தனுஸ்ரீ க்கு, அப்போது 17 வயது, தண்ணீர் மிக அதிகமாக இருந்த இடத்தில் கிட்டத்தட்ட அவள் மூழ்கியே விட்டாள். அதிர்ஷ்டவசமாக, அவள் தளர்வாக வந்திருந்த தனது அத்தையின் சேலை முந்தானையை பிடித்துக்கொண்டாள்", என்று காஜல் லதா கூறுகிறார், அவரின் கண்கள் இன்றும் அவர் உணர்ந்த பயத்தை தெரிவிக்கின்றன.

மே 2019 இல், ஃபானி புயல் வந்த போது அவருக்கு மீண்டும் பயம் வந்துவிட்டது,  அவரது 25 வயதான இளைய மகள் அனுஸ்ரீயின் திருமணத்தின் போது அந்த புயல் வந்தது.

Kajal Lata Biswas cutting fresh fish
PHOTO • Urvashi Sarkar
PHOTO • Urvashi Sarkar

கோபிந்தகதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மீன்களை சுத்தம் செய்யும் காஜல் லதா பிஸ்வாஸ், புயல் நெருங்கும் பயங்கரத்தை பற்றி நினைவு கூர்ந்தார்; (வலது) இந்த குடிசைகளில் நெல் சேமிக்கப்படுகிறது, மேலும் பெரும் பயிர் இழப்பை சந்தித்துள்ளோம்.

மே 6-ஆம் தேதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பஞ்சாயத்து ஒலிப்பெருக்கி மற்றும் அரசு வானொலியில் ஃபானியை பற்றிய அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன்பே துவங்கி இருந்தன. "எங்களது பயத்தையும், நிலைமையையும்  கற்பனை செய்து பாருங்கள்", என்று காஜல் லதா கூறுகிறார். " எங்களது ஏற்பாடுகள் அனைத்தையும் காற்று மற்றும் மழை அழித்துவிடும் என்று நாங்கள் பயந்தோம். திருமணத்திற்கு முந்தைய நாட்களில் கொஞ்சம் மழை பெய்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, புயல் எங்கள் கிராமத்தை தாக்கவில்லை", என்று நிம்மதியுடன் கூறினார்.

மே 2 ஆம் தேதி, ஆந்திரா, ஒடிசா (மிக மோசமான பாதிப்பு ஏற்பட்ட பகுதி) மற்றும் மேற்கு வங்காளத்தை ஃபானி புயல் தாக்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஃபானியைப் பற்றி பேசுகையில்: ரஜத் ஜுப்லீ கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான விவசாயியும், முன்னாள் ஆசிரியருமான பிரஃபுல்லா மொண்டல் குரலை கூடுதலாக எழுப்புகிறார்: "ஃபானி  சுந்தரவனத்தை தாக்குவதை மிகவும் குறுகலாகவே தவறவிட்டது. காற்று எங்களிடம் சீழ்க்கை அடித்துக் கொண்டிருந்தது. அது மட்டும் எங்கள் கிராமத்தை தாக்கியிருந்தால், நாங்கள் எங்கள் வீடுகள் மற்றும் நிலங்களுடன் சேர்ந்து அழிக்கப்பட்டு இருப்போம்... " என்று கூறினார்.

சுந்தரவனத்தில் புயல்கள் பொதுவானவை என்று மொண்டல் மற்றும் காஜல் லதா ஆகிய இருவருக்கும் நன்றாகவே தெரியும். மேற்கு வங்க அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறை தெற்கு மற்றும் 24 வடக்கு பர்கானா மாவட்டங்களை புயலால் பாதிக்கப்படும் 'மிக அதிக சேத அபாய மண்டலங்கள்' என்று வகைப் படுத்தியிருக்கிறது.

மொண்டலின் கிராமம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் கோசாபா வட்டத்திலும், மற்றும் காஜல் லதாவின் கிராமம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் ஹிங்கல்கஞ் வட்டத்திலும் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய சுந்தரவனத்தை உள்ளடக்கிய 19 வட்டங்களில் இவை இரண்டும் அடங்கும் - வடக்கு 24 பர்கானாவில் 6 வட்டங்களையும் மற்றும் தெற்கு 24 பர்கானாவில் 13 வட்டங்களையும் கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் முழுவதும் பரவியிருக்கும், சுந்தரவனம், உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகளைக் கொண்ட ஒரு பரந்த டெல்டா ஆகும். இது சுமார் 10,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. "சுந்தரவனப் பகுதி உலகின் அதீத சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்..." என்று சுந்தரவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான விரிதிறன் மேம்பாடு என்ற உலக வங்கியின் 2014 ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது. "இந்த சதுப்புநில காடுகள் முழுவதும் அதன் தனித்துவமான உயிர்ப் பன்மைக்காக அறியப்படுகிறது, மேலும் இதில் பலவிதமான அச்சுறுத்தலுக்கு உட்பட்ட உயிரினங்களான ராயல் பெங்கால் புலி, உவர்நீர் முதலை, இந்திய மலைப்பாம்பு மற்றும் பலவகையான ஆற்று டால்பின்கள் ஆகியவையும் அடங்கும். இந்தியாவின் 10 சதவீதத்திற்கும் அதிகமான பாலூட்டிகளுக்கும் மற்றும் 25 சதவீத பறவையினங்களும் இது தாயகமாக அமைந்துள்ளது".

இந்திய சுந்தரவனம் - ஏறக்குறைய 4200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது - இங்கு கிட்டத்தட்ட 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் பலர் விளிம்பு நிலையில் வாழ்ந்து வருகின்றனர், குறைவான வாழ்வாதாரம், கடுமையான நிலப்பரப்பு மற்றும் தீவிர வானிலைகளுடன் அவர்கள் போராடி வருகின்றனர்.

ஐலாவுக்குப் பிறகு இப்பகுதி ஒரு பெரிய புயலைக் காணவில்லை என்றாலும், அது கடுமையாக பாதிக்கப்படக்கூடிய பகுதியாகவே இருந்து வருகிறது. 1891 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் 71 புயல்களை மேற்கு வங்கம் சந்தித்ததாக அரசின் பேரிடர் மேலாண்மை துறைக்கு, கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகம், 2006 ஆம் ஆண்டு அளித்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் கோசாபா வட்டம், 6 மிகக் கடுமையான புயல்கள் மற்றும் 19 புயல்களுடன் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக அறியப்படுகிறது.

PHOTO • Urvashi Sarkar

ரஜத் ஜுப்லீ கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான பிரஃபுல்லா மொண்டல் பல புயல்களை எதிர்கொண்டுள்ளார், ஆனால் அவரது குடும்பம் இப்போது ஒழுங்கற்ற வானிலை மாற்றங்களுடன் போராடி வருகிறது.

பிரஃபுல்லாவால் ஐலாவுக்கு முந்தைய பல புயல்களையும் நினைவுகூர முடிகிறது. " 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட வலுவான மற்றும் கொடும் காற்றுடன் கூடிய புயலை, என்னால் மறக்க முடியாது (சுதந்திரத்திற்குப் பின்னர் மேற்கு வங்கத்தின் 'மிகத் தீவிரமான புயல்' என்று விவரிக்கப்படுவதும், ஐலாவை விட வலிமையானதுமான, இது ஒரு 'அதி தீவிர புயலாக' இருந்தது). அதற்கு முந்தைய 1988 புயலையும் என்னால் நினைவு கூர முடியும்", என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இத்தகைய புயல்கள் நிறைந்த கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும், கீழ் கங்கை டெல்டாவில் (சுந்தரவனம் அமைந்துள்ள பகுதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ( வெப்பமண்டல கடலில் ஏற்படும் ஒரு வானிலை நிகழ்வு, மணிக்கு 31 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை வேகம் கொண்ட, மணிக்கு 62- 82 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளி புயலின் வரம்பிற்கு கீழே) உருவாவது கடந்த பத்தாண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது, என்று கொல்கத்தாவைச் சேர்ந்த கடல்சார்வியலாளர் முனைவர் அபிஜித் மித்ரா எழுதி 2019 ல் வெளியான இந்தியாவின் சதுப்பு நிலக் காடுகள்: சுற்றுச்சூழல் அமைப்புகளின் சேவைகளைப் பற்றிய தேடல் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "இதன் பொருள் என்னவென்றால் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன", என்று அவர் கூறுகிறார்.

சுந்தரவனத்துடன் வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. பன்முகத்தன்மை இதழில் 2015 ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் 1881 மற்றும் 2001 க்கு இடையில் 26% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. 1877 முதல் 2005 வரை கிடைக்கக்கூடிய தரவுகளைைப் பயன்படுத்தி, மே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல்களைப் பற்றிய 2007 ஆம் ஆண்டில் நடந்த ஒரு ஆய்வின் முடிவில், கடும் தீவிர புயல்களின் எண்ணிக்கை கடந்த 129 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில், மேல் குறிப்பிட்டுள்ள மாதங்களில் அதிகரித்து வரும் போக்கினை பதிவு செய்துள்ளது  என்று கூறுகிறது.

கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது (குறிப்புகள், மற்றவற்றுடன், புவி அறிவியல்  மற்றும் பருவநிலை மாற்றம் என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வறிக்கை). இந்த வெப்பநிலைகள் 1980 முதல் 2007 வரை இந்திய சுந்தர வானத்தில் ஒரு தசாப்தத்திற்கு 0.5℃ என்ற அளவில் உயர்ந்துள்ளது, இது உலக அளவில் காணப்படும் புவி வெப்பமயமாதலின் வீதமான ஒரு தசாப்தத்திற்கு 0.06℃ உயர்தல் என்பதை விட அதிகமாகும்.

பல பேரழிவு வீழ்ச்சிகளை இப்பகுதி சந்தித்துள்ளது. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வு பள்ளியின் பேராசிரியர் சுகதா ஹஸ்ரா, "சுந்தரவனம் கடைசியாக 2009- இல்  ஒரு பெரிய புயலை எதிர்கொண்ட நிலையில்", "வடக்கு வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி கரைகள் உடைந்து விட்டதால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.

PHOTO • Urvashi Sarkar

பல மாற்றங்களுக்கு இடையில், உயர்ந்து வரும் கடல் மட்டமும், அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் சுந்தரவனத்தை அச்சுறுத்துகின்றன.

"புயல்கள் மற்றும் கடல் மட்ட உயர்வுக்கு எதிரான பாதுகாப்பு அரணாக சுந்தரவனக்காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது", என்று கரைகள், என்ற உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. டெல்டா படிவுறுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் 19 ம் நூற்றாண்டின் 3,500 கிலோ மீட்டர் தூர கரைகளின் சிதைவு போன்றவற்றால் மக்கள் மற்றும் அவர்களின் இருப்புகளின் உற்பத்தித்திறன் ஆகியவை அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

2011 ம் ஆண்டு உலக வனவிலங்கு நிதியத்தால்  வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று, சுந்தரவனத்தின் சாகர் தீவு ஆய்வகத்தில், 2002 முதல் 2009 வரை  நடத்திய ஆய்வில் அளவிடப்பட்ட  சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு 12 மி மீ என்ற விகிதத்தில் அல்லது 25 ஆண்டுக்கு 8 மி மீ என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது என்று தெரிவிக்கிறது.

வெப்பமயமாதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் நீர் மட்ட உயர்வு சதுப்புநிலக் காடுகளை மிகவும் மோசமாக பாதிக்கிறது. இந்தக் காடுகள் கடலோரப் பகுதிகளை புயல்கள் மற்றும் மண் அரிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன, மீன் மற்றும் பிற உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் செயல்படுகின்றன மேலும் வங்கப் புலிகளின் வாழ்விடமாகவும் இருக்கின்றன. தற்காலிக மாற்றத்தை கண்டறிதல் (2001- 2008) என்ற தலைப்பில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக கடல்சார் ஆய்வுப் பள்ளி நடத்திய ஆய்வைப் பற்றி 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், சுந்தரவனத்தைப் பற்றி குறிப்பிடுகையில், கடல்  மட்டம் மற்றும் புயல்கள் அதிகரித்து வருவதால்,  அது வனப்பகுதியை குறைத்து அதன் மூலம் சதுப்பு நிலக் காடுகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.

ரஜத் ஜுப்லீ கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் மொண்டல் என்ற மீனவர், சுந்தரவன சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தார். சுந்தரவன கிராம வளர்ச்சி சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அவர் பணியாற்றியுள்ளார். பருவநிலை மாற்றம் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது? இதைப் பற்றி நாங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் 2019ஆம் ஆண்டு மே மாதம் என்னிடம் கூறினார்.

ஜூன் 29, 2019 அன்று பிர்காளி காட்டில் நண்டுகளை வேட்டையாடிக் கொண்டிருந்த போது, அர்ஜுனை ஒரு புலி கொண்டு சென்றது. சுந்தரவனத்தில் மனிதர்கள் நீண்ட காலமாக புலிகளால் தாக்கப்பட்டு வந்தாலும், சமீபகாலமாக அதிகரித்து வரும் தாக்குதல்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு கடல்நீர் மட்ட உயர்வால் ஏற்படும் வன நில அரிப்பும் ஒரு காரணமாகி, புலிகளை மக்கள் வாழும் கிராமங்களுக்கு மிக அருகில் கொண்டு வருகிறது.

புயல்கள் அடிக்கடி இப்பகுதியை தாக்கியதால் குறிப்பாக கோசாபா அமைந்துள்ள மத்திய சுந்தரவன பகுதிகளில் நீரின் உப்புத் தன்மை அதிகரித்துள்ளது. "நீரின் உப்புத்தன்மை கணிசமாக அதிகரித்தல், கடல் நீர் மட்டம் உயர்தல் மேலும் டெல்டாவுக்கு நன்னீர் பாய்ச்சல் குறைந்து வருதல் ஆகிய காரணங்களினால் இங்கு சுற்றுச்சூழல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது", என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

PHOTO • Urvashi Sarkar
PHOTO • Urvashi Sarkar

சுந்தரவனத்தில் உள்ள விரிவான கரைகள் விவசாயத்திற்கும் மண்ணின் உப்புத்தன்மையை கட்டுப்படுத்துவதற்கும் முக்கியமானவை, அதிகரித்து வரும் கடல் நீர் மட்டத்தால் இக்கரைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகிறது.

முனைவர் மித்ரா இணைந்து எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை சுந்தரவனத்தை 'உயர் உவர்நிலம்' என்று விவரிக்கிறது. "சுந்தரவனத்தின் மத்திய பகுதியில் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நீரின் உப்புத் தன்மை அதிகரித்துள்ளது. இது பருவநிலை மாற்றத்துடனான தெளிவான இணைப்பைக் குறிக்கிறது", என்று கூறுகிறார் முனைவர் மித்ரா.

மற்ற ஆய்வாளர்கள், இமயமலையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு  சுந்தரவனங்களுக்கு புதிய நீர் பாய்ச்சலைத் தடுக்கும் காரணியாக பித்யாதாரி நதியின் வண்டல் படிவை குறிப்பிட்டுகின்றனர். நில மீட்பு செய்வது, உழவு செய்வது, கழிவுநீர் கசடுகளை கொட்டுவது மற்றும் மீன் கழிவுகளைக் கொட்டுவது ஆகியவை வண்டல் படிவிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 1975 ஆம் ஆண்டில் ஃபராக்கா தடுப்பணையை (மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கங்கை நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது) கட்டியதும் மத்திய சுந்தர வனத்தின் உப்பு தன்மையை அதிகரிப்பதில்  பங்களித்து உள்ளது.

ரஜத் ஜுபிலியில் உள்ள மொண்டல் குடும்பத்தினர் அதிக உப்புத்தன்மைையின் விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர் - ஐலா தாக்கியதற்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு விற்பதற்கு  அவர்களிடம் அரிசி இல்லை. அரிசி விற்பதன் மூலம் வரும் ரூபாய் 10,000 - 12,000 ஆண்டு வருமானமும் பறிபோனது. நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், கிராமங்களில் இருந்த ஆண்கள் அனைவரும் வேலை தேடி தமிழகம், கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளிலும்  அல்லது கட்டுமான தளங்களிலும் பணிக்குச் சேர்ந்துள்ளனர்" என்று பிரஃபுல்லா நினைவு கூர்கிறார்.

மாநிலம் முழுவதும், ஐலா 2 லட்சம்  ஹெக்டேர் பயிர் பரப்பையும், 6 மில்லியனுக்கும் அதிகமான  மக்களையும் பாதித்தது மேலும் 137 பேரின் உயிரையும் காவு வாங்கியது மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை அழித்தது. "எங்கள் கிராமத்தில் இழப்புகளைச் சந்திக்காதவர் எவருமே இல்லை", என்கிறார் பிரஃபுல்லா. "எனது வீடும் பயிர்களும் அழிக்கப்பட்டன. நான் 14 ஆடுகளை இழந்தேன் மூன்று வருடங்களுக்கு நெல் பயிரிட முடியவில்லை. எல்லாவற்றையும் முதலில் இருந்து மீண்டும் உருவாக்க வேண்டியிருந்தது. அவை கடினமான ஆண்டுகள். நான் தச்சு வேலை மற்றும் கிடைக்கும் சொற்ப வேலைகளைச் செய்து வாழ்க்கையை மேற்கொண்டேன்", என்று கூறினார்.

ஐலா உப்புத்தன்மையை தீவிர படுத்திய பின்னர், காஜல் லதாவின் குடும்பத்தினரும் தங்கள் 23 பைகா (7.6 ஏக்கர்) நிலத்திலிருந்து 6 பைகா நிலத்தை விற்க வேண்டியதாயிற்று. "இரண்டு ஆண்டுகளாக புல் பூண்டு கூட முளைக்கவில்லை, ஏனெனில் மண் மிகுந்த உப்புத் தன்மையுடன் இருந்தது. நெற்பயிரும் வளரவில்லை. கடுகு, முட்டைகோஸ், காலிஃப்ளவர் மற்றும் கொடி வகை காய்கள் போன்ற காய்கறிகள் மெதுவாக மீண்டும் வளர்ந்து வருகின்றன, அது விற்பதற்கு போதுமானதாக இல்லை என்றாலும் எங்களது நுகர்விற்கு போதுமானதாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார். "ஷோல், மாகூர், ரூய் போன்ற வெவ்வேறு மீன்களை உற்பத்தி செய்யும் ஒரு குளமும் எங்களிடம் இருந்தது, அவற்றை விற்பதன் மூலம் ஆண்டுக்கு 25,000 - 30,000 ரூபாய் வரை வருமானம் பெற்று வந்தோம்.  ஆனால் ஐலாவின் தாக்குதலுக்கு பிறகு தண்ணீர் முற்றிலும் உப்பாக மாறிவிட்டது, எனவே எந்த மீனும் வளரவில்லை", என்று கூறினார்.

PHOTO • Urvashi Sarkar
PHOTO • Ritayan Mukherjee

சுந்தரவனத்தின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு சதுப்பு நிலங்கள் மிக முக்கியமானவை, ஆனால் அவை மெதுவாக அழிந்து வருகின்றன.

வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாவின் பெரும் பகுதிகளில் ஐலாவின் தாக்குதல், மோசமான நெல் வளர்ச்சியை ஏற்படுத்தியதும் - அதிக உப்புத்தன்மை மற்றும் அதிக காரத்தன்மை ஆகியவையும் மண்ணின் சீரழிவுக்குக் காரணமாக இருந்தன என்று சோதனை உயிரியல் மற்றும் வேளாண் அறிவியல் இதழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மீண்டும் நெற்பயிர் வளர பாஸ்பேட் மட்டும் பொட்டாஷ் சார்ந்த உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் பயன்படுத்த வேண்டியிருந்தது என்று இந்த இதழில் வெளியான ஆய்வு ஒன்று காட்டுகிறது.

ஐலாவின் தாக்குதலுக்குப் பிறகு உர பயன்பாடு அதிகரித்துள்ளது. "அப்போது தான் தேவையான மகசூலை பெற முடிகிறது", என்று பிரஃபுல்லாவின் 48 வயதான மகன் பிரபீர் மொண்டல் கூறுகிறார். "இதை சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல, ஆனாலும் நாங்கள் அதை சாப்பிட்டாக வேண்டும். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சாப்பிட்ட அரிசி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நீங்கள் அதை வெறுமனே அப்படியே சாப்பிடலாம்.  இப்போது காய்கறிகளுடன் சாப்பிடும்போது கூட ஏதோ ஒன்று குறைவதாக உணர்கிறோம்", என்று கூறினார்.

அவரது தந்தைக்கு 13 பைகா (4.29 ஏக்கர்) நிலம் இருக்கிறது, இதில் ஒரு பைகாவுக்கு 8 - 9 பஸ்தாஸ் அரிசி உற்பத்தி செய்ய முடியும் - ஒரு பஸ்தா என்பது 60 கிலோவுக்கு சமமாகும். "பயிரின் நடவு, அறுப்பு, ஏத்து கூலி மற்றும் உரச் செலவுகள் ஆகியவை போக நாங்கள் செலவழிப்பதை விட மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறோம்” என்று பிரபீர் கூறுகிறார்.

2018 ஆம் ஆண்டின் ஆய்வுக்கட்டுரை ஒன்று, சுந்தரவனத்தின் நெல் உற்பத்தி, ஐலாவின் தாக்குதலுக்கு பிறகு பாதியாக வீழ்ச்சியடைந்துள்ளது - 1.6 ஹெக்டேருக்கு 64 - 80 குவிண்டால் ஆக இருந்தது, 32 - 40 குவிண்டால் ஆக குறைந்துவிட்டது - என்று குறிப்பிடுகிறது. நெல் உற்பத்தி இப்போது ஐலாவின் தாக்குதலுக்கு முந்தைய நிலையை அடைந்திருந்தாலும், பிரபீரும் அவரது குடும்பத்தினரும் அவரது கிராமத்தில் உள்ள மற்றவர்களும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைப் பொழிவையே முழுமையாக நம்பி இருக்கின்றனர்.

தவிர இந்த மழை நம்பகத் தன்மை அற்றதாக மாறிவிட்டது. "அதிகரித்து வரும் கடல் நீர் மட்ட உயர்வு, தாமதமான மற்றும் பற்றாக்குறையான பருவமழை ஆகியவை நீண்ட காலமாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகும்", என்று கூறுகிறார் பேராசிரியர் ஹஸ்ரா.

கடந்த இரண்டு தசாப்தங்களாக வடக்கு வங்காள விரிகுடாவில் (சுந்தரவனம் அமைந்துள்ள இடத்தில்) ஒரே நாளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் கனமழை பெய்யும் நாட்கள் அதிகரித்து வருகின்றன, என்று கொல்கத்தாவின் கடல்சார் அறிவியல் ஆய்வுப் பள்ளி நடத்திக் கொண்டிருக்கும் ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில் விதைப்புப் பருவத்தில், இந்த ஆண்டைப் போலவே பருவமழை பெரும்பாலும் குறைந்து விட்டது - செப்டம்பர் 4 ஆம் தேதி வரை, தெற்கு 24 பர்கானாவில் சுமார் 307 மில்லி மீட்டர் குறைவாகவும், வடக்கு 24 பர்கானாவில் சுமார் 157 மில்லி மீட்டர் குறைவாகவும் மழை பெய்துள்ளது, என்று கூறுகிறார் பேராசிரியர் ஹஸ்ரா.

இது இந்த வருடம் மட்டுமல்ல சுந்தரவனத்தில் சில ஆண்டுகளாகவே பற்றாக்குறை மழையோ அல்லது அதிக மழையோ பெய்து வருகிறது.  தெற்கு 24 பர்கானாவில் சாதாரண பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை 1552.6 மில்லி மீட்டர் ஆகும். 2012 - 2017 ஆம் ஆண்டுக்கான பருவமழை பற்றிய புள்ளிவிவர தரவுகள், ஆறு ஆண்டுகளில் நான்கில் மழை பொழிவு குறைவாக இருந்ததை காட்டுகிறது, அதில் மிகவும் குறைவானதாக 2012 ஆம் ஆண்டில் (1130.4 மி. மீ) மழையும், 2017 ஆம் ஆண்டில் (1173.3மி. மீ) மழையும் பதிவாகியுள்ளது.

PHOTO • Urvashi Sarkar

'நெல் வளர்ச்சி முற்றிலும் மழையைப் பொறுத்தது, மழை இல்லை எனில், அரிசி வளராது'.

வடக்கு 24 பர்கானாவில் இதற்கு நேர்மாறாக அதிகப்படியான மழை பெய்கிறது. இங்கு சாதாரண பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை 1172.8 மில்லி மீட்டர் ஆகும். 2012 - 2017 ஆம் ஆண்டுக்கான பருவமழை பற்றிய புள்ளிவிவர தரவுகள், ஆறு ஆண்டுகளில் நான்கில் மழை பொழிவு அதிகமாக இருந்ததை காட்டுகிறது. அதில் மிகவும் அதிகமானதாக 2015ஆம் ஆண்டில் 1428 மி. மீ மழை பதிவாகி இருக்கிறது.

"பருவம் தவறி பெய்யும் மழையே உண்மையான பிரச்சினை", என்று காஜல் லதா கூறுகிறார். "இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மழைக்காலத்தைப் போலவே ஏராளமாக மழை பெய்தது. பிப்ரவரி மாதத்தில் இவ்வளவு மழை பெய்ததாக தங்கள் நினைவில் இல்லை என்று பெரியவர்கள் கூட கூறினார்கள்.” இவரது குடும்பம் வருமானத்திற்காக, ஜூன்- ஜூலை மாதங்களில் விதைக்கப்பட்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை சார்ந்துள்ளது. 'நெல் வளர்ச்சி முற்றிலும் மழையைப் பொறுத்தது, மழை இல்லை எனில், அரிசி வளராது', என்று கூறுகிறார்.

இந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக பருவமழை போக நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும் தங்களது கிராமத்தில் மழை பெய்து வருவதாக அவர் கூறுகிறார். இந்த மாதங்களில் இங்கு சிறு தூறல் போன்ற மழை சாதாரணமாகப் பெய்யும், ஆனால் அதனால் பயிர் அறுவடைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. "ஒன்று தேவைப்படும் போது மழை பெய்யாமல் இருக்கிறது அல்லது பருவம் தப்பி கனமழை பெய்கிறது. இது அறுவடையை முற்றிலும் பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டு அதிகப்படியான (பருவம் தவறிய) மழை பெய்யாது என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் கன மழை பெய்து பயிர் முழுவதும் முற்றிலும் நாசமாகி விடுகிறது. அதனால் தான் 'ஆஷே மோரே சாசா' ('நம்பிக்கைதான் விவசாயியைக் கொல்கிறது') என்ற பழமொழி எங்களிடையே இருக்கிறது” என்று கூறுகிறார்.

ரஜத் ஜூபிலி கிராமத்திலுள்ள பிரபீர் மொண்டலும் கவலையுடன் இருக்கிறார்.  "ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் (எங்களது கிராமத்தில்) மழை பெய்யவில்லை. சில நெற்பயிர்கள் காய்ந்தே விட்டன. அதிஷ்டவசமாக, (ஆகஸ்டில்) மழை பெய்தது.  ஆனால் அது போதுமானதாக இருக்குமா? ஒருவேளை அதிக மழை பெய்து பயிர் மூழ்கினால் என்ன செய்வது?", என்று கவலை கொள்கிறார் அவர்.

ஒரு சுகாதார பயிற்சியாளராக (மாற்று மருத்துவத்தில் பி. ஏ பட்டம் பெற்றவர்), நோயாளிகளும் வெப்பத்தைப் பற்றி அதிக அளவில் புகார் கூறுகின்றனர் என்று பிரபீர் கூறுகிறார். "இப்போது பலர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்கக்கூடும் மேலும் இது மிகவும் அபாயகரமானது", என்றும் அவர் விளக்குகிறார்.

அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலையைத் தவிர, சுந்தரவனத்தில் நில வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது. 1960 ஆம் ஆண்டில் 32 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்ட நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 180 ஆக இருந்தது. இது போன்ற நாட்களின் எண்ணிக்கை 2017 இல் 188 ஆக அதிகரித்துள்ளது என்று பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த நியூயார்க் டைம்ஸின் ஊடாடும் தரவு காட்டுகிறது. இது இந்த நூற்றாண்டின் இறுதியில் 213 முதல் 258 நாட்களாக அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பம், புயல்கள், ஒழுங்கற்ற மழை, உப்புத் தன்மை, மறைந்து வரும் சதுப்புநிலக்காடுகள் போன்ற பலவற்றால் மீண்டும் மீண்டும் அடிபட்ட சுந்தரவனத்தில் வசிக்கும் மக்கள், நிச்சயமற்ற நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். பல புயல்கள் மற்றும் சூறாவளிகளின் சாட்சியாக இருக்கும் பிரஃபுல்லா மொண்டல், "அடுத்து என்ன வரும் என்று யாருக்குத் தெரியும்?", என்று கேட்கிறார்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Other stories by Urvashi Sarkar