மதுரா நிற்குடே சிரித்துக் கொண்டே உரத்த குரலில், "அவர்கள் எங்களுக்கு எதுவுமே கற்பிக்கவில்லை", என்கிறார். நாசிக் மாவட்டத்தில் திரிம்பகேஸ்வரர் தாலுகாவில் உள்ள டேக் ஹர்ஷா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் நின்ற மாட்டுவண்டியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். கிராமத்தில் இருந்த சுமார் 1500 குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் தக்கர் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் வரை, 11 வயதாகும் மதுரா எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தகலேவாடி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் மாநில அரசாங்கம் அப்பள்ளியின் மூடிவிட்டது. டேக் ஹர்ஷாவிலிருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஔஹாதே கிராமத்தில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பால் நடத்தப்படும் பள்ளியில் இப்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

 எந்தப் பள்ளியை விரும்புகிறார் என்று கேட்டால் உடனடியாக சொல்கிறார்: "முதல் பள்ளி".

தகலேவாடி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மூடப்பட்ட போது ஔஹாதேயில் உள்ள பள்ளி இப்பள்ளியில் இருந்த 14 மாணவர்களை அழைத்துச் சென்றது என்று அதே தாலுகாவிலுள்ள வாவி ஹர்ஷா கிராமத்தைச் சேர்ந்த கல்வி ஆர்வலரான பகவான் மாதே கூறுகிறார். "இது மாநில அரசிடமிருந்து எந்த மானியத்தையும் பெறவில்லை அதனால் அவர்கள் அதை தீவிரமாக இயக்கவில்லை", என்று அவர் மேலும் கூறுகிறார். ஔஹாதேயில் உள்ள பள்ளியில் - ஸ்ரீ கஜனன் மகாராஜா வித்யாலயா -  வாரத்திற்கு இரண்டு முறை தான் வகுப்புகள் நடைபெறுகிறது.

ஆனால் மதுரா தகலேவாடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை இழந்தது ஒன்றும் விதிவிலக்கல்ல. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் பள்ளிகள் மூடப்படுவதை கண்டிருக்கிறார்கள்.

School Corridor
PHOTO • Mayur Bargaje

டேக் ஹர்ஷா கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது; மேல்படிப்புக்கு மாணவர்கள் தகலேவாடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு செல்வது வழக்கம், அதுவும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டுவிட்டது

2014 - 15 மற்றும் 2017 - 18 க்கு இடையில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மஹாராஷ்டிரா அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (நான் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாக்கல் செய்த) ஒரு கேள்விக்கு பெறப்பட்ட பதிலின் படி, 654 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மூடியது என்று கூறியிருக்கிறது. மகாராஷ்டிரா பிரதாமிக் ஷிக்ஷன் பரிஷத்தின் பதில், 2014 - 15 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில் இருந்த 62,313 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இருந்து 2017 - 18 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 61,659 ஆக குறைந்துவிட்டது என்று கூறுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கை 2007 - 08 ஆண்டில் கிட்டத்தட்ட 6 மில்லியனில் இருந்து, 2014 - 15 ஆம் ஆண்டில் 5.1 மில்லியனுக்கு குறைவாகவும், பின்னர் 2017 - 18 ஆம் ஆண்டில் சுமார் 4.6 மில்லியனாகவும் குறைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே, பத்து அல்லது அதற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மட்டுமே அரசாங்கம் மூடியது, அவற்றை இயக்குவது சாத்தியமில்லை என்று கூறினார். அந்த மாணவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் மேலும் 1,300 பள்ளிகளை மூட அரசு முன்மொழிந்தது. இந்த நடவடிக்கையை கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

மதுரா மற்றும் அவரது கிராமத்தில் உள்ள பிற மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் பதிவேட்டில் இருந்து விலகி விட்டனர். அவரது தாய் பீமா, கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமுண்டியிலுள்ள ஔஹாதேயில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி இன்றும் செயல்படுகிறது என்று கூறுகிறார். "பெண் குழந்தைகள் வளரும் போது, அவர்களது பாதுகாப்பை பற்றி நாங்கள் கவலை கொள்கிறோம்", என்று அவர் தனது கைக்குழந்தையை மடியில் அமர வைத்தபடி கூறுகிறார்.

பீமா மற்றும் அவரது கணவர் மாதவ் ஆகியோர் விவசாய தொழிலாளர்கள், வேலை கிடைக்கும் நாட்களில் தினசரி கூலி வேலை செய்து நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் சம்பாதிக்கின்றனர். "எங்களிடம் நிலம் இல்லை. அதனால் எங்களுக்கு நிரந்தர வருமானமும் இல்லை", என்று பீமா கூறுகிறார். "தினமும் காலையில், நான் வீட்டை விட்டு வெளியேறி வேலை ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும், அப்போது தான் மாலையில் ஏதாவது சமைக்க முடியும். இருப்பினும், பீமாவுக்கு கொஞ்சம் கூடுதல் பணம் கிடைத்தால் மதுராவிற்கு பள்ளிக்குச் செல்வதற்கு 20 ரூபாய் கொடுத்து டெம்போ அல்லது ஜீப்பில் செல்லும்படி கூறுகிறார். இல்லையெனில், அவள் திரிம்பகேஸ்வர் குறுக்குச் சாலை வழியாக 40 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டியிருக்கும். தனியார் அல்லது அரசு பள்ளியோ, அதற்குச் செல்ல டேக் வர்ஷாவிற்கு அருகில் இருக்கும் வைத்தர்னா நதி மீதிருக்கும் ஆணையினை கடந்தே சொல்ல வேண்டும். "மழைக்காலங்களில் இப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். சில நேரங்களில் நாங்கள் பல நாட்கள் கிராமத்திலேயே சிக்கித் தவித்து விடுவோம்", என்று கூறுகிறார் பீமா.

Mother and children sitting
PHOTO • Parth M.N.

டேக் ஹர்ஷாவில் வசிப்பவர்களுக்கான ஒரே ஊராட்சி ஒன்றிய பள்ளி 4 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் ‘பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி கவலை கொள்கிறோம்", என்று ஒரு பெற்றோர் கூறுகிறார்

குழந்தைகளுக்கான 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட பள்ளி ஒன்று ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் இருக்க வேண்டும் மேலும் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் எட்டாம் வகுப்பு வரை கொண்ட பள்ளி இருக்க வேண்டும். "ஆனால், இது பல இடங்களில் பின்பற்றப்படுவதில்லை", என்று கூறுகிறார் மாதே.

மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் ஒருவரை தலைவராகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவில் 1961 - 62 மாவட்ட வாரியங்கள் இடமிருந்து பள்ளிகளை ஊராட்சி ஒன்றியங்கள் கையகப்படுத்தின, பின்னர் அவை அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை 1முதல் 7 அல்லது 8ம் வகுப்பு வரை உள்ள துவக்கப்பள்ளி; சில பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளும் இருக்கின்றன; மிகவும் சில பள்ளிகளில் 11 & 12 ஆம் வகுப்புகளும் இருக்கின்றன.

ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இலவச கல்வியை வழங்குகின்றன மேலும் பெரும்பாலான மாணவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் மேலும் தனியார் பள்ளியில் கட்டணம் கட்ட இயலாத குடும்பங்களை சேர்ந்தவர்கள். (மேலும் காண்க: சிறு உணவு, பசித்திருக்கும் குழந்தைகளுக்கு அதுவே பெரியது) அவர்களில் தலித் மற்றும் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் - மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 9.4 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர் மேலும் பட்டியலினத்தவர் 11.8 சதவீதம் பேர் உள்ளனர் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி).

இருப்பினும், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கப்படுவதற்கு பதிலாக அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் மகாராஷ்டிராவில் பொதுக் கல்வியை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.

மகாராஷ்டிராவின் 2007 -08 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை துவக்க, இடைநிலை மற்றும் உயர்நிலை கல்விக்கான மாநில அரசின் செலவு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 11,421 கோடி அல்லது 1.90 சதவீதம் என்றது. அதுவே ஒரு தசாப்தத்திற்கு பின்னர் 2018 - 19 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வி (மற்றும் விளையாட்டு) துறைக்கான ஒதுக்கீடு 51,565 கோடிகள் ஆனால் இது மொத்த பட்ஜெட்டில் வெறும் 1.84% மட்டுமே இது மாநிலத்தின் ஆர்வமின்மை மற்றும் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைந்து வருவதை சுட்டிக் காட்டுகிறது.

A woman and two girls looking at a book.
PHOTO • Mayur Bargaje

'மழைக்காலங்களில் இப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும்', என்று கூறுகிறார் பீமா நிற்குடே. அந்தப் புதிய பள்ளியை அடைய அவரது மகள் மதுரா (நடுவில் இருப்பவர்) மற்றும் அவரது தோழி ஜோதி ஹோல் ஆகியோர் பாலத்தின் குறுக்கே நடந்து செல்ல வேண்டியிருக்கிறது

பிரகன் மும்பை மாநகராட்சியின் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் 16 ஆண்டுகளாக மாநகராட்சி கல்வி குழுவில் இருந்த முன்னாள் மாநகராட்சியாளருமான ரமேஷ் ஜோஷி கூறுகையில் இந்தத் தொகை அதிகரித்திருக்க வேண்டும். சாதாரணமாக கல்விக்குரிய  பட்ஜெட் மொத்த மாநில உற்பத்தியில் 4 - 6 சதவீதத்திற்கு இடையில் இருக்க வேண்டும். கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்போது அதிகமான மாணவர்கள் பள்ளியில் சேர விரும்புவோர். "நாம் பட்ஜெட்டை குறைத்தால் இலவச கட்டாயக் கல்வியை வழங்குவது எவ்வாறு?" என்று கேட்கிறார்.

மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினர் கபில் பாட்டீல் ஆசிரியர் தொகுதியில் (ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட), அவர்கள் வேண்டுமென்றே கல்விக்கான வரவு செலவு திட்டத்தை குறைத்து வருகின்றனர். இது சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு தரமான கல்வியை வழங்குவதிலிருந்து மாறுபடுகிறது. (மேலும் காண்க: நான் ஒரு ஆசிரியர் என்பதகவே உணர்வதில்லை)

 தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சில பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கு, தங்களது குடும்பத்தின் சுமை அதிகரித்தாலும், மாறுகின்றனர். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா தாலுகாவின் மோட்நிம்ப் கிராமத்தில் 2017ஆம் ஆண்டில் 40 மாணவர்கள் வெளியேறி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்தனர் என்று ஊராட்சி ஒன்றிய பள்ளியின் ஆசிரியரான பரமேஸ்வர் சுர்வாசே கூறுகிறார்.

Father and son checking a plant
PHOTO • Dattaray Surve

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை விட்டுவிட்டு தாதாத்ர சுர்வே இப்போது தனது மகன் விவேக்கை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்

அவர்களில் தாதாத்ர சுர்வேயின் ஆறாம் வகுப்பு பயிலும் மகனான விவேக் என்பவரும் ஒருவர். "ஆசிரியர்கள் பெரும்பாலும் வகுப்பிலேயே இருப்பதில்லை", என்று சுர்வே கூறுகிறார். "மற்ற மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகள் பட்ஜெட் காரணமாக மின்சாரத்தை துண்டித்து உள்ளன. இது ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது", என்று கூறுகிறார்.

சுர்வே ஒரு விவசாயி, தனது மகனுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். "விவசாயத்தில் எதிர்காலம் இல்லை", என்று அவர் கூறுகிறார் இப்போது ஆண்டுக்கு 3,000 ரூபாய் கட்டணமாக செலுத்துகிறார். "நான் அவனது எதிர்காலத்தை சமரசம் செய்ய விரும்பாததால் அவனை மாற்றினேன்", என்று கூறுகிறார்.

இதைத் தவிர அகமதுநகரை சேர்ந்த கல்வியாளர் ஹேராம்ப் குல்கர்னி, பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தை நன்கு அறிய வேண்டுமென்று விரும்புகிறார்கள் அதனால் தான் பெற்றோர்கள் ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு, அங்கு மராத்தி மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது, பதிலாக ஆங்கில வழி பள்ளிகளை விரும்புகின்றனர், என்று கூறுகிறார்.

ஆக மகாராஷ்டிராவின் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2007- 08 ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 1.2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2017 - 2018 ஆம் ஆண்டில் வெறும் 30,248 மாணவர்களே இப்பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றிருக்கின்றனர், இது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தரவுகள் கூறுகின்றன.

பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் ஏழு அல்லது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளன (மற்றும் பத்தாம் வகுப்பு வரை இல்லை) என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதே. 2009 - 10 ஆம் ஆண்டில் மாநிலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை கொண்டிருந்தது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2017 - 18 ஆண்டில் எட்டாம் வகுப்பில் 1,23,739 மாணவர்கள் மட்டுமே இருந்தனர், அதாவது 89 சதவீதம் மாணவர்கள் இடையில் வெளியேறி இருக்கின்றனர்.

இருப்பினும், இடப்பெயர்வு காரணமாக ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விவசாயிகளும், தொழிலாளர்களும் பருவகால வேலைக்காக இடம்பெயரும் போது தங்களுடன் தங்களது பிள்ளைகளையும் அழைத்துச் செல்கின்றனர். மராத்வாடா விவசாய மாவட்டங்களிலிருந்து குடிபெயர்தல் அதிகரித்து வருகின்றது - மேலும் குறைந்தது 6 லட்சம் விவசாயிகள் இப்பகுதிக்குள் அல்லது மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கரும்பு வெட்டிளாக வேலை செய்ய குடிபெயர்கிறார்கள் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ராஜன் கிஷான் சாகர் தெரிவித்துள்ளார்.

 கைலாஷ் மற்றும் சாரதா சால்வே ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் பார்பானியின் தேவ்காவுன் கிராமத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேல்காவுன் Kh., பீட் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் தங்களது கைக்குழந்தையான ஹர்ஷவர்தன் மற்றும் சாரதாவின் மருமகளான 12 வயதாகும் ஐஸ்வர்யா வான்கடேயுடன் பயணிக்கின்றனர். "வறுமையால் அவள் கல்வியை இழந்துள்ளாள்", என்று கூறுகிறார் கைலாஷ். அவரும் சாரதாவும் தங்கள் 5 ஏக்கர் நிலத்தில் பருத்தி மற்றும் சோயாபீனை பயிரிடுகின்றனர், ஆனால் இதன் மூலம் ஆண்டு முழுவதுக்குமான லாபகரமான பணத்தை அவர்களால் சம்பாதிக்க முடிவதில்லை. நாங்கள் வயல்களில் வேலை செய்யும்போது ,எங்களது கைக்குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு அவள் தேவைப்படுகிறாள். (மேலும் காண்க: 2000 மணி நேரம் கரும்புகள் வெட்டப்படுகின்றன).

Two women in front of a house
PHOTO • Mayur Bargaje

அவள் (இடது பக்கம் இருக்கும் மஞ்சுளா )பள்ளியில் இருந்து இடை நின்றது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவளது இளைய சகோதரி பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். "இருவரில் ஒருவரால் மட்டுமே கல்வியை தொடர முடியும்", என்கிறார் சுமன்பாய் லஸ்கே

ஒரு மாணவர் பள்ளியிலிருந்து இடை நிற்க வேண்டி வரும் போது பெரும்பாலும் அது குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளாகத் தான் இருக்கிறது. மகாராஷ்டிராவில் 34 சதவீத கல்விகற்ற ஆண்களுடன் ஒப்பிடும் போது, 15 - 49 வயதுடைய பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2015 - 16 கூறுகின்றது.

ஆதிவாசி கிராமமான வாவி ஹர்ஷாவைச் சேர்ந்த  பதிமூன்று வயதாகும், மஞ்சுளா லஸ்கே, வீட்டில் தனது தாய் சுமன்பாய்க்கு உதவி தேவைப்பட்டதால் பள்ளியை விட்டு இடை நின்றார். "என் கணவர் ஒரு குடிகாரர், அவர் எந்த வேலையும் செய்யமாட்டார். நான் கூலி வேலைக்காக வெளியே செல்லும்போது எங்களது கால்நடைகளை கவனிக்க எனக்கு யாராவது ஒருவர் தேவை", என்று சுமன்பாய் கூறுகிறார்.

மஞ்சுளாவின் திருமணத்தைப் பற்றி தான் சிந்திக்கவில்லை என்று சுமன்பாய் மறுக்கிறார். "அவள் இன்னமும் சிறு குழந்தைை தான்", என்று கூறுகிறார். அவள் பள்ளியில் இருந்து இடை நின்றது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவளது இளைய சகோதரி பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் "இருவரில் ஒருவரால் மட்டுமே கல்வியை தொடர முடியும்", என்கிறார் அவர்.

அவரது பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில் கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் 15 அல்லது 16 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். மாட்டுக் கொட்டகையில் மதிய மேய்ச்சலுக்காக  மஞ்சுளா மாடுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். "நான் பள்ளிக்குச் செல்வதை விரும்பினேன்", என்று அவர் கூறுகிறார். மேலும் காண்க: மின்சாரம் தண்ணீர் கழிப்பறைகள் இல்லாமல் திணறும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்)

இப்போது குக்கிராமங்களிலும் மற்றும் வாவி ஹர்ஷா மற்றும் டேக் ஹர்ஷா போன்ற சிறு கிராமங்களிலும் அரசு நடத்தும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் மூடப்படுவதால் கிராமப்புற மகாராஷ்டிரா குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக இருந்த அந்த மெல்லிய வாய்ப்பும் குறைந்து வருகிறது.

தமிழில்: சோனியா போஸ்

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Other stories by Parth M.N.