கொரோனாவால் துர்கா சிலை செய்வதற்கு இதுவரை எவ்வித ஆர்டரும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன். ஆனால், நானாகவே சில சிலைகளை செய்து வைத்துள்ளேன். அவை விற்றுவிடும் என்று நம்புகிறேன் என வட கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குயவர்கள் மற்றும் சிலை தயாரிக்கும் ஸ்தபதிகள் உள்ள பகுதியான குமார்துளியில் உள்ள கிருஷ்ணா ஸ்டுடியோவைச் சேர்ந்த தப்பாஸ் பால் கூறுகிறார். உங்களுக்கு என்னை 8 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும், ஜீன் மாதத்தின் மத்திய நாட்களில் எனது ஸ்டுடியோவை சிலைகளின்றி பார்த்திருக்கிறீர்களா? என்று அவர் மேலும் கேட்கிறார். 

இந்த நேரத்தில் குமார்துளியில் உள்ள 450 ஸ்டுடியோக்களும் (உள்ளூர் கைவினைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர்) மூங்கில் மற்றும் வைக்கோல்களை வைத்து சிலை தயாரிப்பதற்கான சட்டகத்தால் நிரம்பி வழியும். அதில் களிமண்ணை பூசி, சிலையை வடிவமைப்பார்கள். அக்டோபர் மாதத்தில் வரும் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு முன்னர், அந்த சிலைகளுக்கு, அழகான வண்ணங்கள் பூசி, ஆபரணங்கள் அணிவித்து அலங்கரிப்பார்கள். (குமார்துளி வழியாக பயணம் என்பதை பார்க்கவும்). 

ஒவ்வொரு ஆண்டும், இந்த தயாரிப்பு பணிகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கும். ஆனால், இந்தாண்டு கோவிட் – 19 தொற்றுநோய், குமார்துளியில் அந்த அட்டவணையை தாமதப்படுத்திவிட்டது. எங்களுக்கு இந்தாண்டு மிகக்கொடுமையான ஆண்டு. எங்கள் இழப்பு ஏப்ரல் மாதம் முதலே துவங்கிவிட்டது. முதலில், ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்படும் பெங்காலி புத்தாண்டான போய்லா பாய்சாக்குக்கு விற்பனையாகும், வீட்டில் பயன்படுத்தக்கூடிய தெய்வங்களின் சிலைகளான அன்னபூர்ணா போன்ற சிலைகளே விற்பனைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த காலனி முழுவதிலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8 முதல் 10 சிலைகளே விற்பனையானது. முதலீடு அனைதையும் இழந்துவிட்டோம். தற்போது, துர்கா சிலைகளுக்காக இதுவரை எனக்கு ஒரு ஆர்டரும் வரவில்லை என்று கடந்த 20 ஆண்டுகளாக சிலைகள் செய்துவரும் மிரித்துயுன்ஜெய் மித்ரா கூறுகிறார். 

அவரைப்போலவே, 18ம் நூற்றாண்டில் இருந்து, சிலை வடிவமைப்பவர்கள், துர்கை அம்மனின் களிமண் சிலைகளை செய்துவருகிறார்கள். பெருநிலக்கிழார்களும், வணிகர்களும், ஆண்டுதோறும் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்காக அவற்றை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்செல்வார்கள். பெரும்பாலான கைவினைஞர்கள், நடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களின் கைவினைப்பொருட்களுக்கான தேவை அதிகரிக்கத்துவங்கியவுடன், அவர்கள் வடகொல்கத்தாவின் ஹீக்ளி நதிக்கரையில் உள்ள குமார்துளியிலே தங்கிவிட்டனர்.     

நான் ஜீன் 18ம் தேதி குயவர்கள் தங்கும் பகுதியை அடைந்தபோது, கல்கத்தா மாநகராட்சி அம்பன் புயல் வீசியதால், மே 20ம் தேதி விழுந்த மரத்தை அகற்றிக்கொண்டிருந்தது. மற்றபடி, நகரமே அமைதியாக இருந்தது. பெரும்பாலான கலைக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த சில கடைகளிலும், சிலைகள் செய்யப்படவில்லை. உடைந்த மற்றும் முடிக்கப்படாத தெய்வங்களில் சிலைகள் தெருக்களில் சிதறிக்கிடந்தன. இது கடந்த ஆண்டுகளின் ஜீன் மாதங்களை போல் இல்லாமல் இருந்தது. சிலைகளுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் விற்கும் கடைகள் திறந்திருந்தன. ஆனால், அவற்றிலும் வாடிக்கையாளர்கள் இல்லை. 

குமார்துளியில் நான் சந்தித்த கைவினை கலைஞர்கள், 2019ம் ஆண்டு தங்களின் ஒட்டுமொத்த வியாபாரம் 40 கோடி ரூபாய் என்று கூறினர். அதில் அதிக தொகை துர்கா சிலைகளை விற்பதில் இருந்து கிடைக்கும் என்று கூறினர். அவர்கள் மற்ற தெய்வங்களின் சிலைகளையும் செய்வார்கள். அனிமேஷன் திரைப்படங்களுக்கு பயன்படும் மாதிர மண் பொம்மைகள் கூட சில நேரங்களில் செய்வார்கள். அதில் சிலர் மண் பானை மற்றும் பாத்திரங்களும் செய்வார்கள். அவர்கள் அனைவரும், இந்தாண்டு விற்பனை அதிகரிக்கும் என்று எண்ணியிருந்தனர். ஆனால், அது கோவிட் – 19 தொற்றுக்கு முன்னதான நிலை. தொற்று அனைத்தையும் முடக்கிவிட்டது. 

PHOTO • Ritayan Mukherjee

அரைகுறையாக செய்து வைக்கப்பட்டுள்ள துர்க்கையம்மனின் களிமண் சிலைகள். மற்ற தெய்வங்களின் நிலைகள் குமார்துளி தெருக்களில் சிதறிக்கிடக்கிறது. வழக்கம்போல் இந்தாண்டு வியாபாரம் நடைபெறவில்லை என்று சிலை வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்

பீடியை ஊதியபடியே நம்மிடம் பேசிய மிரித்தியுன்ஜெய், ஜீன் 23ம் தேதி கொண்டாடப்படும் ஜெகன்நாத் ரத யாத்திரையின்போது , பெரும்பாலானோருக்கு சிலைக்கான ஆர்டர்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தனர். ஏனெனில், அன்றைய தினம்தான் துர்கா சிலைகள் உருவாக்க ஆர்டர் கொடுப்பதற்கு உகந்த நாள். ஆனால், எனக்கு சந்தேகமாக உள்ளது என்று கூறினார். வங்கிகளும் நாங்கள் இனி லாபகரமான தொழில் செய்ய முடியும் என்று எண்ணாது. யாரும் எங்களுக்கு குறுகிய கால கடன் வழங்கவில்லை. நாங்கள் குறைந்தது 7 லட்ச ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் இருந்து முதலீடு செய்ய வேண்டும். அது தற்போது, மார்ச் முதல் அக்டோபர் வரை 8 மாதங்களாக முடங்கிக்கிடக்கிறது. எங்களுக்கு இன்னும் 4 மாதங்கள் தான் பணம் சம்பாதிக்க உள்ளது. அதை வைத்து ஓராண்டை நாங்கள் கடத்த வேண்டும். அவை எவ்வாறு இந்தாண்டு சாத்தியமாகும்? 

இந்த சிற்ப கலைஞர்கள் செய்யும் துர்கை அம்மன் சிலைகளின் அளவு மற்றும் விலை வெவ்வேறாக இருக்கும். 6 அடி உயரமுள்ள வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடிய சிலை ரூ.30 ஆயிரமாகும். உயரம் அதிகமுள்ள மற்றும் நன்றாக அலங்கரிக்கப்பட்ட, நகரம் முழுவதிலும், பொது இடங்களில் வைத்து வழிபடக்கூடிய சிலைகள், குறைந்தது 10 அடி உயரம் இருக்கும். அவை ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விற்கப்படும். 

அனுபவமுள்ள, மூத்த சிலை வடிவமைப்பாளரான கார்த்திக் பால், ரதயாத்திரைக்கு சில ஆர்டர்கள் பெற்றார். அவை வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக வாங்கப்படுபவை. பெரிய சிலைகளுக்கான ஆர்டர்கள் வரவில்லை என்று அவர் கூறுகிறார். இன்றிலிருந்து சூழ்நிலைகள் மாறும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அது கடந்த ஆண்டுகளைப்போல் அது இருக்காது என்பது மட்டும் உறுதி என்று அவர் மேலும் கூறுகிறார். 

பால் கூறுவது சரியாக இருக்கலாம். குமார்துளியில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய சிலைகள் செய்துவரும், குழுவின் தலைவர் நிமாய் சந்திர பால் கூறுகையில், இந்தாண்டு சிலை வடிவமைப்பாளர்கள் பெரும் இழப்பீட்டை சந்திப்பார்கள் என்று நம்புகிறார். நாங்கள் 30 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரை செலவிடுவோம். பெரும்பாலும் பெருநிறுவனங்களிடம் இருந்து எங்களுக்கு வழக்கமாக ஸ்பான்சர்கள் கிடைக்கும். ஆனால் ஒருவர் கூட இந்தாண்டு ஆர்வம் காட்டவில்லை. கைவினைஞர்களுக்கு கொஞ்சம் முன்பணம் கொடுத்தோம், பின்னர் அந்த ஆர்டர்களையும் ரத்து செய்துவிட்டோம் என்றார். பாலின் குழுவினர் குறைந்த பட்ஜெட்டிலேயே இந்தாண்டு கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதேபோல், அதிக பட்ஜெட் செலவிடும் குழுவினரும் செய்வார்கள் என்று மேலும் அவர் உறுதியாக கூறுகிறார். 

ஆர்டர்கள் குறைந்தது மட்டுமல்ல இந்த கைவினைஞர்களுக்கு வேறு பிரச்னைகளும் உள்ளன. தினக்கூலிகளாக இருப்பவர்கள் (சிலை வடிவமைப்பாளர்களுக்கு உதவுபவர்கள்) ரயில்கள் இயங்காததால், பணிக்கு வருவதில்லை. அவர்கள் நெடுந்தொலைவில் உள்ள மாவட்டங்களில் வசிக்கிறார்கள். மேலும், ஊரடங்கு மற்றும் அம்பன் புயலால்  மூலப்பொருட்களின் விலையும், 30 முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்த இழப்புகளில் இருந்து மீள்வது எப்படி என்பது தனக்கு ஆச்சர்யமாக உள்ளதாக கார்த்திக் கூறுகிறார். அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் மின்டு பால் கூறுகையில், கோவிட் – 19 ஊரடங்கின்போதும், அம்பனுக்குப்பின்னரும், குமார்துளி கைவினைஞர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி உதவியதற்கு  பூஜா குழுவினருக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும் என்றார். 

தெய்வங்களின் சிலைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள் அனைத்தும், நடியா மற்றும் ஹீக்ளி மாவட்ட கிராமங்களில் செய்யப்படுவது என்று மஹீன் பால் கூறுகிறார். அந்த கலைஞர்களும் பணியிழந்துள்ளனர். 60 முதல் 70 குடும்பங்கள் சிலைகளுக்கு செயற்கை கூந்தல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிலை தயாரிக்கப் பயன்படும் களிமண் மால்டா மாவட்டத்தில் இருந்து படகில் கொண்டு வரப்படுகிறது. அதை எடுத்துவரும் தொழிலாளர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். 

PHOTO • Ritayan Mukherjee

துர்க்கையம்மனின் மூங்கில் மற்றும் வைக்கோல் சட்டத்திற்கு ஒரு சிலை வடிவமைப்பாளர் களிமண் பூசுகிறார். சிலை வடிவமைப்பு என்பது கடினமாக உழைத்து செய்வது, அதற்கு திறமையும், நேரமும் அதிகம் செலவாகும். குமார்துளி கலைஞர்கள் கடந்தாண்டு ரூ.40 கோடிக்கு கடந்தாண்டு வியாபாரம் செய்தனர்


PHOTO • Ritayan Mukherjee

பருவமழைக்காலத்திற்காக, செய்து முடிக்கப்பட்ட களிமண் சிலைகள் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டு சிலை தயாரிக்கும் இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இலையுதிர் காலத்தில் நடைபெறும் துர்கா பூஜைக்கு சிலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது சிலை வடிவமைப்பாளர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியில் உள்ள சிலை வடிவமைப்பாளர்களின் கிடங்குகளில் செய்து முடிக்கப்படாத சிலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கோவிட் – 19 ஊரடங்கு துவங்கிய மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து சிலைகளுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியில் மின்டு பாலின் ஸ்டுடியோவில் பிளாஸ்டர் ஆப் பாரீசால் செய்யப்பட்ட சிலைகள் கிடைக்கும். சினிமா செட்டுகளுக்காவும் செய்துகொடுக்கப்படும். ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியில் வேலைகள் நடப்பதற்கு பீகார், சட்டிஸ்கர் மற்றும் ஜார்கண்டை சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள். மண் மற்றும் சிலைகள் எடுத்துவருவது மற்றும் கடினமான வேலைகளை அவர்கள்தான் செய்து வந்தார்கள். ஊரடங்கால் பலர் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பமாட்டார்கள் என்று சிலை வடிவமைப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்


PHOTO • Ritayan Mukherjee

கிராமப்புற வங்காளத்தில் உள்ள கைவினைக்கலைஞர்கள் துர்க்கா பூஜைக்காக தாங்கள் செய்துள்ள பொருட்களை நகரங்களில் விற்பனைக்காக எடுத்து வருவார்கள். பூஜை குழுவினர் குறைந்தளவு கொண்டாட்டமே போதும் என எண்ணியிருந்தால், தொடர்ந்து சிலைகளுக்கான தேவை குறைவாக இருந்தால் அவர்களின் வருமானமும் இந்தாண்டு பாதிக்கப்படும்


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியின் பரபரப்பான தெருக்கள் இந்தாண்டு வெறிச்சோடிக்கிடக்கின்றன. பாதி செய்த சிலைகள் மற்றும் சிற்பங்கள் விற்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இந்த வயதான பலூன் விற்பவர் போன்ற சில சிறு வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் கிடைக்குமா என அலைந்துகொண்டிருக்கிறார்கள்


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியில் கோவிட் – 19ன் தாக்கம் எங்கும் காணப்படுகிறது. விற்கப்படாத சிற்பங்கள் மற்றும் உடைந்த சிலைகள் தெருக்களில் எப்போதும் இல்லாத அளவு தற்போது காணப்படுகின்றன


PHOTO • Ritayan Mukherjee

சல்சித்ரா எனப்படும் துர்க்கையம்மன் சிலைக்கு பின்னால் அலங்காரத்திற்கான வைக்கப்படும் வளைவை ஒரு கலைஞர் சுமந்து செல்கிறார். இது நுட்பமானதாகவும், எளிமையானதாகவும் உள்ளது. சிலையை விட பிரகாசமாக இருக்காது. புதிய வடிவமைப்புகள் சல்சித்ராவுக்கு தேவையாக இருக்கும்


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியில் உள்ள முன்னோடி ஸ்டுடியோவான ஜி.பால் மற்றும் சன்சில் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. இங்கு தயாரிக்கப்படும் பிரமாண்ட மார்பிள், தெய்வ மற்றும் பிரபலங்களின் சிலைகள் மற்றும் சிற்பங்கள், இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். தொற்றுநோயால், அமல்படுத்தப்பட்ட போக்குவரத்து தடை இந்த விற்பனையை பாதித்துவிட்டது


PHOTO • Ritayan Mukherjee

குமார்துளியின் குறுகலான தெருக்கள், வழக்கமாக ஜீன் மாதத்தின் ரத யாத்திரைக்காக பரபரப்பாக காணப்படும். இந்தாண்டு வெறிச்சோடிக்காணப்படுகிறது


தமிழில்: பிரியதர்சினி. R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Other stories by Ritayan Mukherjee