தேர்ந்த விவசாயி அவர். ஆனால் அவருக்கென்று சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட இல்லை. அவரது குடும்பத்துக்கென்று சொந்தமாக இருந்த கொஞ்சம் நிலத்தையும் பல வருடங்களுக்கு முன்பே இழந்து விட்டதாக  சொல்கிறார். சிபு லையாவின் வயது 50களில் இருக்கலாம், விவசாயத்தில் அவரது திறமையை இன்னமும் இழக்கவில்லை.  

ஜார்கண்டின் கோதா மாவட்டத்திலுள்ள நன்மதி கிராமத்தின் பெரும்பாலான கஹார் சமூக மக்களைப் போலவே லையாவும் ஒரு ஏழைத்  தொழிலாளி. தனது சகாக்களைப்போலவே கடுமையான சூழலிலும் சமயோசிதமாக செயல்படகூடியவர்.  20 வருடங்களுக்கு முன்பு நான் அவரது வீட்டிற்கு நான் போன போது அவர்  கூறியது இன்றும் என்நினைவில் உள்ளது - "சொந்த நிலமில்லை என்பதால் சாப்பிடாமல் இருக்க முடியாது. எங்களுக்கான தேவைகளுக்கு பணம் இல்லாத போது, நாங்கள் எங்காவதுஎதையாவது விளைவித்தாக வேண்டும்."

அந்த `எங்காவது` அவரது சிறிய வீட்டின் கூரை. அதில் அவர் கீரைகளையும் பிறவற்றையும் விளைவிக்கிறார்.   பச்சைப்பசேலென்ற அழகான கூரையை தூரத்திலிருந்தே எங்களால் பார்க்க முடிந்தது.. அது நகர்ப்புற பொழுதுபோக்கு விவசாயிகளின்  வசீகரமான மொட்டைமாடி தோட்டம் போல இல்லை. லையாவும், அவர் சமூகத்தினரும்விசாலமான மொட்டை மாடிகளைக் கொண்ட மாடி வீடுகளில் வசிக்கவில்லை. 

ஆனாலும், அந்தக் கூரைத் தோட்டத்தை அவர் எவ்வளவு திறம்பட அமைத்துள்ளார். அந்த

 மொத்த இடமும் 6 *10 அடி என்ற அளவைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை. அந்த சின்ன இடத்தில்  கொடிகளையும் சிறிய செடிகளையும் கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து வளர்த்திருக்கிறார். அனேகமாக நான் பார்த்த வரையில் மிக மிகக் குறைந்த மண்ணையே தளமாக அந்தத் தோட்டம் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

நன்மதி கிராமத்தின் பல கஹார் வீடுகளில் இதை பார்த்தோம்.  அங்குமட்டுமல்ல, நிலமற்ற (அல்லது மிக குறைந்த நிலமுடைய) ஏழை குடும்பங்கள் வாழும் பல பகுதிகளிலும் இது நடைமுறையில் உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இது போல கூரைத் தோட்டங்கள் கொண்ட காலனிகளை பார்க்க முடியும். நாங்கள் நன்மதிக்குச் சென்றது2000த்தில். அதாவது ஜார்கண்ட் மாநிலம் உருவாவதற்கு முன்பு. ஆனால் இன்றும் கூட அங்கு 'கூரைத் தோட்டங்கள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.

சாந்தல் மண்டலத்தில் வாழும் கஹார் சமூகத்தின் இந்தப் பிரிவினர் (பிற உப-குழுக்கள் பீகாரிலும் மற்ற இடங்களிலும் வாழ்கின்றன) மிக அதிகமான சாதி பாகுபாட்டைஎதிர்கொள்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் பல வருடங்களாகவே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பட்டியலின வகுப்பில்  தம்மை சேர்க்க வேண்டுமென்று அவர்கள் கோரி வருகிறார்கள்.  மாவட்ட ஆட்சித் தலைமையின் மதிப்பீடுகளின்படி 1990களின் தொடக்கத்தில் ஏறத்தாழ 15000 பேர் இந்த உட்பிரிவில் இருந்தார்கள். அவர்களில்பெரும்பாலோர் குடாவிலும், பீகாரிலுள்ள பாங்கா மற்றும் பாகல்பூர் மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்தார்கள்.  மிகச் சொற்பமான மக்கள் தொகையாக இருப்பதால் வாக்குவாங்கி அரசியலில் அவர்களுடைய குரல் எடுபடுவதில்லை. "வேறு இடங்களில் வாழும் எங்கள் சாதியின் மற்ற பிரிவினர், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதனால்எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை" என்கிறார் லையா. 

நான் அங்கு சென்று கால் நூற்றாண்டு கடந்துவிட்ட பின்பும், அந்த குழுவினரால் பட்டியலினப் பிரிவில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையில் வெற்றி பெறமுடியவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்குக் பெயரளவிலாவது கிடைக்கும் எந்த சலுகைகளும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனாலும் பலவழிகளில் அவர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் -  லையாவின் முயற்சியும் அதில் ஒன்று.


மொழிபெயர்ப்பு : சந்திரசேகர் கோகுலநாதன்

சந்திரசேகர் கோகுலநாதன் ஒரு மென்பொருள் பொறியாளர். வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்தை நேசிப்பவர். தொழில்நுட்பத்தினால் ஊழலை ஒழிக்கமுடியுமென உறுதியாக நம்புபவர்.

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath