தேசிய நெடுஞ்சாலை நான்கிற்குச் சற்றுத்தள்ளி, டெல்லியின் ஒதுக்குப்புறத்தில் சஞ்சய் காந்தி பயண நகர டிப்போ உள்ளது. இங்கே ட்ரக்குகள், அவற்றோடு தொடர்புடைய பழுது பார்த்தல்கள் விறுவிறுப்பாக நடக்கும். தூசு நிறைந்த இந்த டிப்போவில் ஆண்கள் வசை மொழிகளைச் சரளமாகப் பேசியபடியும், பொது இடத்தில் சிறுநீர் கழித்தபடியும் நடமாடுவது இயல்பான ஒன்று. டயர்களை மாற்றிக்கொண்டு, பஞ்சர்களை ஒட்டிக்கொண்டு இருக்கும் கரி படிந்த பலமான கரங்கள் உபகரணங்களை மாற்றிக் கொண்டே இருக்கும் காட்சிப் பரவலாக இங்கே காணக்கிடைக்கும். இங்கே பளபளக்கும் வளையல்கள், நகப்பூச்சு அணிந்த கரங்களை உடைய பெண்மணி ஒருவரும் இப்படிப்பட்ட மெக்கானிக் வேலைகளைத் துரிதமாகச் செய்வதைக் காணலாம். இருபது வருடங்களாக இந்த டிப்போவில் வேலை பார்க்கும் பெண் மெக்கானிக்கான சாந்தி தேவிக்கு வயது எழுபது. அவரே அனேகமாக இந்தியாவின் முதல் பெண் மெக்கானிக்காக இருக்கலாம். அவர் தன்னுடைய கணவர் ராம் பகதூருடன் இணைந்து வேலை பார்க்கிறார். ராமுக்கு தன்னுடைய மனைவியின் தொழில்திறமை பலரால் வருடக்கணக்காக மெச்சப்படுவதில் எக்கச்சக்க பெருமை.

குவாலியர் நகரைச் சேர்ந்த தேவிக்கு இப்படி ஆண்களின் கோட்டைக்குள் புகுந்து அசத்துவது ஒன்றும் புதிதல்ல. அருகே இருக்கும் ஸ்வரூப் நகரில் வசிக்கும் தேவி, டெல்லிக்கு நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் நகர்ந்தார். “என் குடும்பம் ஏழைக்குடும்பம். என்னை வளர்க்கவே என் அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டார். நான் துணி தைப்பது. பீடி சுற்றுவது முதலிய பல்வேறு வேலைகளைச் செய்தேன். என் கல்யாணத்துக்கு 4,500 ரூபாய் சேமித்துக் கொண்டு நான் திருமணம் செய்து கொண்டேன்.” என்கிறார் தேவி.

டிப்போவில் உள்ள கடை எண் AW-7-க்கு எதிரே ஒரு தேநீர்க் கடையைக் கணவன், மனைவி இருவரும் துவங்கினார்கள். பின்னர் அந்தக்கடையைப் பழுது பார்க்கும் கடையாக உருமாற்றம் செய்தார்கள். ஒரு மிஸ்திரியிடம் பயிற்சிக்கு சேர்ந்து எப்படி டயர் மாற்றுவது, பஞ்சர் ஓட்டுவது, சிறிய சிறிய பழுதுகளைச் சரி செய்வது எனக் கற்றுக்கொண்டார் தேவி. தன்னுடைய ஆசிரியருக்குக் கொஞ்சம் பணம், சாப்பாடு கொடுத்துக் கற்றுக்கொண்டார். “எதையும் ஓசியில் கத்துக்கக் கூடாது. கைக்காசை போட்டு படிக்கணும்.” என்று சிரிக்கிறார் தேவி.

டீக்கடையைப் பழுது பார்க்கும் கடையாக மாற்றியதற்கு முக்கியக் காரணம் முந்தைய திருமணங்களின் மூலம் இருவருக்கும் பிறந்திருந்த 3-5 குழந்தைகளை வளர்க்க பணம் வேண்டும் என்பதுதான். “ராம் பகதூரின் மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டார். என் கணவன் இளம்வயதிலேயே செத்துட்டார் . இருந்திருந்தாலும் ஒன்றும் பயனில்லை. எப்பொழுதும் குடியிலும், சீட்டாட்டத்திலும் மூழ்கிக் கிடப்பது அவரின் வழக்கம். பணம் கொடுக்காட்டி போட்டு அடிப்பான். என் மூத்த மகனை ஒரு விபத்தில் பறிகொடுத்தேன். எப்படி என்றாலும் வாழ்க்கை நகரத்தானே வேண்டும்.” என்கிறார் தேவி.

நீல நிற புடவையும், தானே தைத்த ரவிக்கையும் அணிந்திருக்கும் தேவி கேன்வாஸ் ஷூ, ஷாக்ஸ் அணிந்து வெள்ளிச்சிலம்பையும் சூடி இயல்பாகக் காட்சி தருகிறார். தன்னுடைய முந்தானையைத் தலை மீது சுற்றிக்கொண்டு வெயில், தூசியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்கிறார். அறுவடைக்குத் தயாராக இருக்கும் தலை சாய்ந்த நெல்லை நோக்கி கைநீட்டும் உழவனைப் போலத் தன்னுடைய முதுகை நேராக வைத்தபடி ஒரு டயரை அவர் வளைக்கிறார். டயருக்குள் இருக்கும் ட்யூபை கழற்றி, பவுடரை தூவுகிறார். “வெப்பம் அதிகமாகிற பொழுது டயருக்குள் ட்யூப் மாட்டிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.” என்கிறார். என்னென்ன செய்ய வேண்டும் என்று அவரின் கணவருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கிறார். “நான் அவளும் நண்பர்கள் போல. இருவரும் இணைந்து ஐம்பது கஜ்ஜில் ஒரு சொந்த வீட்டை கட்டி, குழந்தைகளோடு குடியேறி விட்டோம்.” என்று சிரிக்கிறார் ராம் பகதூர்.

அந்தப் பகுதி ஆண்கள் அவரை எப்படிப் பார்க்கிறார்கள்? “நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் தான் எல்லாமே இருக்கிறது. அவர்களைப் போலவே நானும் வேலை செய்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே. அதுவும் என்னைப்பற்றி, நான் செய்யும் வேலை பற்றிப் பத்திரிக்கைகள் பல வருடங்களாக எழுதி வருவதால் எனக்குத் தனி மரியாதை,” என்கிறார் கம்பீரமாக

தேவிக்கு வண்ணங்கள் என்றால் பிரியம். நகப்பூச்சோ, வண்ணமோ நகத்தில் அணியாமல், இரவில் ஒளிரும் வண்டி கதவுகளின் மென்படலத்தை நகங்களில் அணிந்திருக்கிறார். கண்ணாடி வளையல்களுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் வளையல்களை அணிந்திருக்கிறார். அதுவே இந்தத் தொழிலில் பாதுகாப்பானது என்பதே காரணம். “ஒருமுறை பழுதுபார்க்கும் கருவியை இன்னொரு தொழிலாளரிடம் மாற்றும் பொழுது, என்னுடைய கண்ணாடி வளையல்களில் சிக்கிக்கொண்டு, மணிக்கட்டில் மோதி வளையல் உடைந்தது. கண்ணாடித் துண்டுகள் மேனியை குத்திக் கிழித்து, காயப்படுத்தின. அதனால் சீக்கிரம் உடையாத வளையல்களை அணிய ஆரம்பித்தேன்.” என்கிறார் தேவி.


02-shanti-devi5-SS-A Pragmatic Mechanic.jpg

சாந்தி தேவி: “...வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.” (புகைப்படம்: அரவிந்த் ஜெயின்)


தேவி போன்ற பெண்கள் பெண்களால் முடியாத வேலைகள் என்று இருக்கும் பொதுப்புத்திக்கு சவால் விடுவதைப் போல நன்கு உணர்ந்து இப்படிப்பட்ட தேர்வுகளையோ, இலக்குகளையோ தேர்வு செய்து கலக்குகிறார்கள். தேவையும், சாதுரியமும் அவர்களைச் சாதிக்க வைக்கிறது.

இக்கட்டுரை முதன்முதலில் மார்ச் 7, 216 The Week இதழில் வெளிவந்தது

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Shalini Singh

ஷாலினி சிங் டெல்லியில் இருந்து தி வீக் இதழுக்காக செய்தி சேகரிக்கிறார். சமூக நடப்புகள், கலாசாரம், சமீபத்திய நிகழ்வுகள், பாலின பிரச்சினைகள் குறித்து கட்டுரைகள் எழுத்துகள். PARI-ஐ துவங்கிய குழுவில் அங்கத்தினர்.

Other stories by Shalini Singh