கொரோனா வைரஸ் குறித்த தனது முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி நம் அனைவரையும் பானைகளையும், பாத்திரங்களையும் பயன்படுத்த வைத்து 'தீய சக்தி'களை துரத்தி அடித்தார்.

அவரின் இரண்டாவது உரையில், நம் அனைவரையும் பெரும் பீதியில் ஆழ்த்தினார்.

பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு  வரும் வாரங்களில் எப்படி உணவுக்கும் மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கும்வழிசெய்வது என்பது பற்றி ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடாதது, பெரும் அச்சத்தை தூண்டிவிட்டுள்ளது. கடைகளுக்கும் சந்தைகளுக்கும் நடுத்தர மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்; ஆனால், இது ஏழைகளுக்கு அவ்வளவு சாத்தியமல்ல. பணிக்காக நகரங்களில்  இடம்பெயர்த்த மக்களுக்கு தங்களின் கிராமங்களை திரும்புவது எளிதல்ல. இது சிறு தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு இது சாத்தியமில்லை. குறுவை சாகுபடியை பூர்த்திசெய்ய முடியாத விவசாயங்களுக்கு இது சாத்தியமில்லை; அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு அது இருக்கும் பட்சத்தில், இடையில் சிக்கிக்கொண்டு தவிப்பவற்களுக்கும் இதுவே நிலை.  வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கோடானகோடி இந்தியர்களுக்கும் இது இயலாத காரியம்!

மார்ச் 26ம் தேதியன்று, நிதி அமைச்சர் சில திட்டங்களை அறிவித்தார் - அதில் ஒரு சிறிய ஆறுதலான அறிவிப்பு: வரும் மூன்று மாதக் காலத்திற்கு ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்றார். அதாவது, பொது விநியோக முறையின்கீழ் அளிக்கப்படும் 5 கிலோவுடன் சேர்த்து அளிக்கப்படும். அதிலும், தற்போது மலிவான விலைக்கு விற்கப்படும்  இந்த 5 கிலோவும் இலவசமாக கிடைக்குமா அல்லது வழக்கம் போல விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்பது பற்றி சரியாக குறிப்பிடவில்லை. அதற்கு பணம் செலுத்தவேண்டுமெனில், இந்த திட்டத்தாலும் எந்த பயனும் இல்லை. இந்த திட்டங்களில் பல கூறுகள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகைகளில் அடங்கியதே. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ், வழங்கவேண்டி இருக்கும் ரூ.20 ஊதிய உயர்வு இன்னும் நிலுவையில் இருக்கின்றது;  அவர்களின் பணி நாள்களை மேலும் அதிகரிக்கப்படும் என எங்காவது குறிப்பிட்டிருக்கின்றனரா? ஒருவேளை அவர்கள் அப்படி பணியில் இறங்கினால், எந்த மாதிரியான பணிகளை செய்வார்கள்? எந்த மாதிரியான சமூக இடைவெளி முறைகளை அவர்கள் பின்பற்றுவார்கள்? பல வாரங்களுக்கு செய்யவேண்டிய வேலைகளை அளிக்கும் வரை மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் உடல்நலம் அதற்கு ஒத்துழைக்குமா? நாம் இந்த சட்டத்தில்கீழ், தினமும் அனைத்து கூலித்தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வேலை இருக்கிறது, இல்லை என்பதைத் தாண்டி , இந்த நெருக்கடி முடியும் வரை, கட்டாயம் தினக்கூலி வழங்கவேண்டும். 

பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், ரூ.2000 சலுகை ஏற்கனவே உள்ளது; ஆனால், அதுவும் நிலவையில் உள்ளது - இது என்ன நன்மை விளைவித்தது? மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இறுதியில் செலுத்தப்படுவதற்கு பதிலாக, முதல் மாதத்திலேயே முன்பணமாக அளிக்கப்படுகிறது. இந்த தொற்று நோய்க்கு எதிராக செயல்படுத்தப்படும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 1.7 லட்ச கோடி ரூபாய் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து நிதி அமைச்சர் தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை. இந்த தொகையில் எது பழையது அல்லது ஏற்கனவே இருக்கும் திட்டத்தின்கீழ் எது மீண்டும் இணைக்கப்பட்ட தொகை? - இவையனைத்தும் அவசர நடவடிக்கையாக ஏற்றுகொள்ளும் அளவுக்கு தகுதியை பெறவில்லை. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் இரண்டு தவணையாக,  ஒருமுறை மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பால் என்ன பயன்? பிரதமர் மக்கள் நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.500 வழங்கப்படுவதால் என்ன பயன்? இவை பெயருக்கு என்று செய்யப்படும் செயல்களைவிட மிகவும் மோசமானது; வெறுப்பூட்டக்கூடியவை. 

சுய உதவி குழுக்களுக்கு தற்போது கடன் கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தொகையின் வரம்பை உயர்வது எத்தகைய மாற்றத்தை  ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்? இந்த அவரச நடவடிக்கை அறிவிப்புகள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டும் என தவித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்? இந்த அறிவிப்புகள் அவர்களுக்கு உதவும் என்று கூறுவது ஆதாரமற்றது. அவரச நடவடிக்கைகள் உருவாக்குவதில் தோல்வி ஏற்பட்டு ஆபத்தாக இருக்கும் நிலை எனில்,  இந்த அறிவிப்புகளுக்கு பின்னால் இருக்கும் அணுகுமுறை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு பெருகி வரும் பிரச்சனைகள் குறித்து எந்த ஒரு தெளிவும் இருப்பதாக தெரியவில்லை.

PHOTO • Labani Jangi

இந்த  கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் இரண்டு ஓவியங்களும்,  உத்தரப் பிரதேசம் மற்றும் வேறு சில இடங்களில் இருக்கும் கிராமங்களுக்கு டெல்லி மற்றும் நோய்டாவிலிருந்து  திரும்ப செல்லும் கூலித்தொழிலாளர்களைப் பற்றின ஓவியரின் பார்வை. கொல்கத்தாவிலுள்ள ’செண்டர் ஃபார் ஸ்டடிஸ் இன் சோஷியல்  சையின்ஸ்’ என்ற கல்வி நிறுவனத்தில் இடம்பெயரும் தொழிலாளர்களை குறித்த பி.எச்.டி பயில்கிறார், ஓவியர் லபனி ஜங்கி.

எந்த ஒரு சீரான சமூக ஒத்துழைப்பும் திட்டமும் இல்லாமல், நாம் இருக்கும் இதுபோன்ற ஊரடங்கு பெரும் பாதிப்பை உண்டாகும் - இது இடம்பெயர்ந்தலை தலைகீழாக மாற்றும்; ஏற்கனவே அப்படிதான் மாற்றியுள்ளது. இதன் தாக்கம் குறித்து நாம் அறிந்துக்கொள்வது கிட்டதட்ட இயலாத காரியமே.  ஆனால், பல மாநிலங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, இந்த ஊரடங்கு காரணமாக தாங்கள் பணிச்செய்து கொண்டிருந்த நகரங்கள், ஊர்களிலிருந்து மக்கள் தங்களின் கிராமங்களுக்கு திரும்பி செல்கின்றனர். 

தற்போது பலரும் பயன்படுத்தும் ஓரே போக்குவரத்து முறை - தங்களின் இரு கால்கள்.  சிலர் மிதிவண்டியில் செல்கின்றனர்; ரயில்கள், பேருந்துகள் மற்றும் வேன்கள் இயக்கப்படுவது நிறுத்தம் செய்துவிட்டதால், பலரும் நடுவழியில் சிக்கி தவிக்கின்றனர். இது மிகவும் அச்சமூட்டுகிறது - இது தீவிரமடைந்து நிலை தடுமாறினால், மிகப்பெரிய துயரம் ஏற்படும்.

உதாரணமாக, குஜராத்தில் உள்ள நகரங்களிலிருந்து ராஜஸ்தானில் இருக்கும் கிராமங்களுக்கு பெரிய மக்கள் கூட்டம் செல்வதாக வைத்துகொள்வோம்; ஹைதராபாத்திலிருந்து தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் மூலைமுடுக்கிலுள்ள கிராமங்களுக்கு செல்வதாகவும் வைத்துகொள்வோம்; டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்திலுள்ள பகுதிகளுக்கு, அல்லது பீகாருக்கும், அல்லது மும்பையிலிருந்து நமக்கு தெரியாத எத்தனையோ இடங்களுக்கு செல்கின்றனர் என வைத்துகொள்வோம். அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை எனில், தண்ணீருக்கும் உணவுக்கும் தொடர்ந்து அவர்கள் அல்லல் படும்போது பேரழிவு நிகழும்.  அவர்களை காலங்காலமாக இருந்து வரும் வயிற்றுபோக்கு, காலரா போன்ற நோய்கள் தாக்கும். 

அது மட்டுமில்லாமல், வளரும் பொருளாதார நெருக்கடியுடன் ஏற்படும் இத்தகைய சூழ்நிலை, உழைக்கும், இளம் மக்களிடையே இதுபோன்ற மரணங்கள் நிகழ பெரும் வாய்ப்பு உண்டு.  People’s Health Movement (மக்கள் ஆரோக்கிய இயக்கம்) என்கிற இயக்கத்தின் சர்வதேச ஒருக்கிணைப்பாளரான பேராசிரியர் டி சுந்தரராமன் பாரியிடம் இதுகுறித்து பேசுகையில்,” பொருளாதார நெருக்கடி உடன்கூடிய சுகாதார சேவைகள் இதுபோன்ற சவாலால், கொரோனா வைரஸ் நோயால் ஏற்படும் மரணங்களை காட்டிலும் மற்ற நோய் மூலம் ஏற்படும் மரணங்கள் மாற்றாக அபாயத்தில் நாம் தள்ளப்படுவோம்”. 

மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் 60க்கும் மேற்பட்ட வயதினருக்கு, கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது.  அத்தியாவசிய சுகாதார சேவைகளிலிருந்து ஒதுக்கப்படுவதும், குறைந்துவரும் அதற்கான பாதைகளும், உழைக்கும் மக்களிடையிலும், இளம் வயதினரைக்கும் மற்ற நோய்கள் வருவதற்கான பெரும் பாதையை அமைத்து, பேராபத்தை உண்டாக்கும். 

தேசிய சுகாதார திட்டத்தின் வளங்களின் மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சுந்தரராஜன், “இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சனைகளையும், தொலைந்துப்போன அவர்களின் வாழ்வாதாரங்களையும் கண்டறிந்து அதற்கெற்ப செயல்படுவதற்கான தேவை தற்போது அதிகம் இருக்கின்றது.  அப்படி செய்ய தவறினால், ஏழை இந்தியர்களை பல காலமாக அச்சுறுத்தும் கொடூய நோய்கள் மூலம் ஏற்படும் மரணங்கள் கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் மரணங்களை மிஞ்சிவிடும். குறிப்பாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பும் எண்ணிக்கை அதிகமானாலோ, நகரங்களில் இருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியினால் வாடினாலோ, அல்லது தங்களின் சொற்ப கூலியைப் பெறுவதில் தோல்வியடைந்தாலோ இந்த நிலை ஏற்படும்.” 

PHOTO • Rahul M.

கேரளாவின் கொச்சிக்கும், ஆந்திர பிரதேசத்தின் ஆனந்தபூருக்கும் இடையே வாரந்தோறும்  புலம்பெயரும் தொழிலாளர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.

இப்படியான தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் பணியிடங்களிலே வாழ்கின்றனர். அந்த இடம் மூடப்பட்டு, அவர்கள் வெளியேறும்படி கூறினால், அவர்கள் எங்கு செல்வார்கள்? அனைவராலும், பல மைல் தூரங்களை நடந்தே கடக்கமுடியாது. அவர்களுக்கு நியாய விலை கடை அடையாள அட்டைகள் கிடையாது - அவர்கள் தங்களின் உணவுக்கு என்ன செய்வார்கள்? 

பொருளாதார நெருக்கடி ஏற்கனவே வேகமாக வளர்ந்து வருகிறது. 

மேலும், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், குடிசைவாசிகள் மற்றும் மற்ற ஏழை எளிய மக்கள்தான் இந்த சமூகத்தில் பெரும் பிரச்சனை என்பது போல வீட்டுவாரிய சமூகங்கள் அவர்களை தவறாக சித்தரிக்கின்றனர்.  ஆனால், உண்மை இதுதான் - கொவிட் 19 காரணிகள், முன்னதாக சாரஸ் என்று அழைக்கபட்ட வைரஸை பரப்பியது, உயர் வர்க்கதினர் - நாம்தான்! அதனை அங்கீகரிப்பதற்கு பதிலாக, இதுபோன்ற விரும்பதகாத விஷயங்களை மூலம் சுத்திகரிப்பு செய்ய அரசு முயற்சிக்கிறது போலும்.  இப்படி பாருங்கள்: ஒருவேளை நாம் இந்த தொற்றை ஊருக்கு திரும்பும் கூலித்தொழிலாளர்களின் ஒருவருக்கு பரப்பினால்கூட, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று அடையும் சமயம், அதனின் தாக்கம் என்னவாக இருக்கும்?  

எப்போதும் ஏதோ ஒரு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த கிராமங்களுக்கு வேலை முடித்து சென்றுகொண்டிருப்பார்கள். அவர்கள்  ஒரே மாநிலங்களிலோ அல்லது அதன் அருகே இருக்கும் மாநிலங்களிலோ இருக்க நேர்ந்தால்? பொதுவாக, அவர்கள் டீக்கடைகளிலோ அல்லது தாபாக்களிலோ, அவர்களுக்கு உணவு கிடைக்கும் காரணத்தினால் வேலை செய்வதுண்டு.  இப்போது, கிட்டதட்ட அவையனைத்தும் மூடப்பட்ட நிலையில், என்ன ஆகும்? 

எப்படியோ,  சற்றே நல்ல பொருளாதார நிலையில் இருப்பவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், தாங்கள் தங்கள் வீடுகளில் இருந்துகொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றினால், அனைவருக்கும் நன்மை விளைவிக்கும் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இது குறைந்த பட்சம் வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றும். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் எப்படி மீள்வோம் என்பது குறித்து எந்த அடையாளமும் இல்லை.  பலருக்கும், ‘சமூக இடைவெளி’ என்பது வித்தியாசமாகப்படுகிறது. ஆனால், நாம் பல ஆயிர வருடங்களுக்கு முன்னரே இதனின் மிக வலிமையான வடிவத்தை உருவாக்கிவிட்டோம் - அதுதான் சாதி. ஊரடங்குக்கு பதிலான நாம் சாதி மற்றும் வர்க்க காரணிகளை இதில் உட்புகுத்தியிருக்கின்றோம். 

ஒவ்வொரு வருடமும்,  காச நோயால் கிட்டதட்ட கோடான கோடி இந்தியர்களின் கால் சதவீத மக்கள் இறப்பது பற்றியெல்லாம் இந்த தேசியத்திற்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அல்லது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு வருடமும்  வயிற்றுப்போக்கு காரணமாக மரணிப்பது குறித்தும் கவலையில்லை. அவர்கள் நாம் இல்லை.  அழகான மக்களுக்கு எப்போது சில கொடூய நோயை எதிர்க்கும் சக்தி இல்லாமல் போகிறதோ அப்போதுதான் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதனால்தான், சார்ஸ் பேசப்பட்டது;  கடந்த 1994ம் ஆண்டு, சூரத் பகுதியில் ஏற்பட்ட ப்ளேக் நோய் பேசப்பட்டது; இரண்டும் மிக கொடூய நோய்கள்தான் ஆனால், இந்தியாவில் கணிக்கப்பட்டதை விட வெகு சிலரே அதற்கு இரையானார்கள். ஆனால், அது மிகவும் கவனிக்கப்பட்ட ஒன்றாக ஆனது.  நான் அந்த சமயத்தில் சூரத்தில் இருந்தபடி எழுதியது: “ப்ளேக் தொற்று கிருமிகள் மிகவும் இழிவானவை; ஏனென்றால், அது வர்க்க பேதம் ஏதுவும் பாராமல் அனைவரையும் தாக்குகிறது; இதில் மிகவும் மோசமாக, விமானம் ஏறி, நியூ யார்க் நகரில் இருக்கும் உயர் வர்க்கத்தினரேயே தாக்குகிறது.”

PHOTO • Jyoti Shinoli

மும்பை செம்புர் பகுதியிலுள்ள மஹுல் கிராமத்தில்,  நச்சு குப்பைகளை, மிக குறைந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அகற்றும் தூய்மை பணியாளர்கள்

இப்போதே நாம் செயல்பட வேண்டும்.   தொற்று நோயும் தொகுப்பாகத்தான் இருக்கின்றன.  இதில், பொருளாதார நெருக்கடியும் நம்மை பேரிடரிலிருந்து பேரழிவுக்கு தள்ளும். 

நாம் ஒன்று அல்லது  பெரும்பாலான வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணம், அவை அபாயகரமானவை. கொவிட்-19யை எதிர்த்து தீவிரமாக போராட வேண்டும் என்பது கட்டாயம்.  கடந்த 1918ம் ஆண்டு, ஏற்பட்ட ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்று தவறாக பெயரிடப்பட்ட அந்த நோய்க்கு அடுத்து இதுதான் மிகவும் மோசமான தொற்று நோய் என்றும் கூறலாம். (1918-1921 இடையே, இந்தியாவில் 16 முதல் 21 மில்லியன் உயிர்கள் பலியானது. சொல்ல போனால், 1921  கணக்கெடுப்பின்படி, கிராம மக்கள்தொகை ஓட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் குறைந்தது அந்த காலகட்டம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது)

ஆனால், மற்ற நோய்களையெல்லாம் தவிர்த்துவிட்டு கொவிட் 19க்கு மட்டும் முக்கியத்துவம் தருவது  என்பது, வீட்டில் இருக்கும் குழாய்கள் அனைத்தையும் திறந்துவைத்துவிட்டு, தரை காய்வதற்காக துடைக்கும் முயற்சியே! நமக்கு பொது சுகாதார நடைமுறைகளை, உரிமைகளை, வசதிகளை உறுதிப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கம் வேண்டும். 

கடந்த 1978ம் ஆண்டு, அல்மா ஆட்டா பிரகடனத்தை சுகாதாரத்துறையில் இருந்த சில தலைச்சிறந்த வல்லுநர்கள் கொண்டு வந்தனர்.  இது மேற்கத்திய அரசுகளின் துணைக்கொண்ட பெருநிறுவனங்களின் ஆர்வத்தால் ஏற்பட்ட உலக சுகாதார மையம் ஏதுவும் அமைக்கப்படாத காலகட்டம்!  அந்த பிரகடனத்தில்தான், “2000க்குள் சுகாதாரம் என்பது அனைவருக்குமானது” என்ற புகழ்பெற்ற வரிகள் கூறப்பட்டது. இதில், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும், உலக வளங்கள் மூலம் முழுமையான, சிறந்த வகையில் சுகாதாரம் ஏற்படும் என்ற நம்பிக்கையை அளித்தது.   

மற்றும் 80க்கள் முதலே, சுகாதாரத்துறையில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார தீர்மானிப்பவர்களை புரிந்துகொள்ளும் மனப்பாங்கும் வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால், மற்றொரு சிந்தனையும் மிகவும் வேகமாக வளர்ந்துவந்தது. அதுதான் - புதிய  தாராளமயம்!

80,90-க்களின் பிற்பகுதிகளில், உலகம் முழுவதும் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை மனித உரிமைகளாக பார்க்கும் போக்கு அழிக்கப்பட்டது.

90க்களின் இடைப்பட்ட காலத்தில்,  தொற்று நோய்களில் உலகமாயமாதல் வந்தது. ஆனால், இந்த கொடூர சவாலை சந்திக்க  உலகத்தரம் வாய்ந்த சுகாதார திட்டங்கள் நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, பல நாடுகள்  சுகாதார துறைகளைத் தனியார்மயமாக்கியது. இந்தியாவில், எப்போதும் தனியார்மயத்தின் ஆதிக்கம்தான்.   உலகிலேயே மிகக் குறைந்த சுகாதார செலவினம் செய்வது நாம்தான் - சொற்பமாக 1.2 சதவீதம் (ஜி.டி.பியின் பங்காக). 1990க்கள் முதல், எப்போதுமே வலுவாக இல்லாத பொதுச் சுகாதார  திட்டம், மேலும் கொள்கை முடிவு நடவடிக்கைக்களாக வேண்டுமென்றே பலவீனமாக்கப்பட்டது. மாவட்ட வாரியான மருத்துவமனைகளை தனியார் மேம்பாட்டு அளிக்கவும் தற்போதைய அரசு அதனை வரவேற்கிறது.  

இந்தியா முழுவதும், கிராமப்புற குடும்பக் கடனில் அதிவேகமாக வளரக்கூடிய ஒன்றாக சுகாதார செலவினங்கள் பெருவாரியாக ஆகிவிட்டது.  கடந்த 2018 ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் பொதுச் சுகாதார அறக்கட்டளை சுகாதாரம் குறித்து பல்வேறு தரவுகளை ஆய்வு செய்தப்போது, கடந்த 2011-2012 ஆண்டில்  மட்டும் 55 மில்லியன் மக்கள் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டனர்.   ஏனெனில், அவர்களின் மருத்துவ செலவுகளை அவர்களே பார்த்துகொள்ளவேண்டிய நிலை! மேலும், இந்த எண்ணிக்கையில் 38 மில்லியன் பேர், தங்களின் மருத்துவச் செலவுகளை பார்த்துக்கொண்டதாலே வறுமை கோட்டுக்குகீழ்  தள்ளப்பட்டனர். 

இந்தியாவில் விவசாய தற்கொலைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட பல ஆயிர பேர்களிடம் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் இதுதான் - அதிகப்படியான மருத்துவச் செலவுகள். இவை பொதுவாக  கந்துவட்டிக்காரர்களிடமிருந்து கடன் வாங்கப்பட்டிருக்கும். 

PHOTO • M. Palani Kumar

மற்ற மாநிலங்களை போலவே, சென்னையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மிக குறைந்த அல்லது முறையான பாதுகாப்பு இல்லாமல் பணியில் இருக்கின்றனர். 

மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், கொவிட் 19 போன்ற ஒரு நெருக்கடியை சமாளிக்க மிகக்குறைந்த அளவிலேயே நாம் தயாராக உள்ளோம். மற்றும் ஒரு கசப்பான உண்மையைக் கூறுகிறேன்: வரும் ஆண்டுகளில் கொவிட்கள் வெவ் வேறு பெயர்களில் வரக்கூடும். 90க்களின் பிற்பகுதிகளிலிருந்தே,  நாம் சார்ஸ், மேர்ஸ் (இரண்டும் கொரோனாவைரஸ் வகைதான்) மற்ற உலக அளவில் பரவக்கூடிய நோய்களை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் கடந்த 1994ம் ஆண்டு, சூரத்தில் ப்ளேக் நோய் தாக்கியது. இவை அனைத்தும் பிற்காலத்தில் வரக்கூடியவைகளில் சமிக்ஞைகள்தான்; நாம் கட்டிவைத்துள்ள உலகம் இதுதான். நாம் இப்படியான உலகத்தில்தான் இருக்கிறோம்.

உலக நச்சு உயிரி திட்டத்தின்  பேராசிரியர்  டென்னிஸ் காரோல் இதனை இப்படியாகக் கூறுகிறார்: “நாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சுற்றுச்சூழல் மண்டலத்திற்குள் மிகவும் ஆழமாக சென்றுவிட்டோம். மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில்  எண்ணெய், தாதுப் பொருட்கள் நிலத்திலிருந்து உறிஞ்சுவது போன்ற பணிகளுக்கு  நாம் கொடுத்துள்ள விலை என்கிறார் அவர்.  

இந்த மென்மையான சுற்றுச்சூழல் அமைப்பில் நம்முடைய ஊடுருவல் என்பது வெறும் காலநிலையில் மட்டும் மாற்றம் கொண்டுவரவில்லை; மனிதன் - விலங்குகளின்  இடையே இணக்கம் பெருகி, நாம் சற்றே அறிந்த அல்லது முற்றிலும் அறியாத வைரஸ்களின் தொற்று பரவி, மிகப்பெரிய சுகாதார சீரழிவை ஏற்படத் தூண்டி விட்டிருக்கிறோம். 

ஆமாம்! நாம் இன்னும் இதுப்போன்றவற்றைப் பார்க்கத்தான் போகிறோம்.

கொவிட் 19 பொருத்தவரையில், அதனைப் போக்க இரண்டு வழிகள் உண்டு

இந்த வைரஸ் உருமாறி (நமக்கு சாதகமாக),  சில வாரங்களுக்குள் இறந்துவிடும்.

அல்லது:  அந்த வைரஸ் அதற்கு சாதமாக உருமாறி, அச்சுறுத்தும் நிலையை ஏற்படுத்தும். இது நடந்தால், பெரும் பூகம்பம் வெடிக்கும்.

நாம் என்ன வேண்டும்? நான் கீழ்காணும் பரிந்துரைகளை முன்வைக்கிறேன்;  இவை இந்தியாவின் ஆர்வலர்களும் வல்லுநர்கள் உட்பட சிறந்த சிந்தனையாளர்கள் ஏற்கனவே கூறிய சில கருத்துகளுடனும்,  அதற்கு மேலாகவும், அதனுடன் ஒத்துப்போகும் வகையிலும் கூறுகிறேன். (கடன், தனியார்மயமாக்கல், நிதிச் சந்தையின் தோல்வி  ஆகியவற்றை சர்வதேச அளவில் வைத்து பொருத்திப் பார்க்கும் போது அவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் சில யோசனைகள் உள்ளன.)  கேரள அரசு அறிவித்த சில நடவடிக்கைகள் ஊக்கமளிப்பதாக இருக்கின்றன.

Ø முதல் வேலையாக நாம் செய்யவேண்டியது: கிட்டதட்ட 60 மில்லியன் டன் கணக்கில் இருக்கும் ‘உபரி’ உணவுப்பொருட்களின் சரக்குகளை அவசரக்கால விநியோகம் செய்ய தயாராவதே. மற்றும், இந்த நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்ற ஏழை எளிய மக்களுடன் தொடர்புக்கொள்வது.  மூடப்பட்ட அனைத்து சமூக கூடங்களும் (பள்ளிகள், கல்லூரிகள், சமூக கூடாரங்கள் மற்றும் கட்டடங்கள்) நிர்கதியாக நிற்கும் வெளிமாநில தொழிலாளர்கள், வீட்டற்றவர்களுக்கு தங்குமிடமாக ஆக்கப்படவேண்டும். 

Ø இரண்டாவதாக - முதலாவதுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இது -  சம்பா சாகுபடியில்  அனைத்து விவசாயிகளையும் உணவு பயிர்களை  விளைக்குமாறு செய்வது.  இதேப் போன்ற நிலை தொடருமானால்,  உணவுத்துறையின் நிலை மிகவும் மோசமாகும். வாணிபப் பயிர்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்கள் பயிரிட்டாலும், விற்கமுடியாத  நிலை ஏற்படலாம். வாணிபப் பயிர்கள் மீது அதிகம் கவனம் செய்தினால் ஆபத்தாக முடியலாம். கொரோனா வைரஸூக்கான தடுப்புபூசியோ/மருந்தோ கண்டுப்பிடிக்கப்படவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.  இதற்கிடையே, உணவுப் பொருட்களும் படிப்படியாக குறைந்துக்கொண்டே போகும். 

Ø விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை பெரியளவில் எடுத்து விற்பதற்கு அரசு உதவ முன்வரவேண்டும்.  இந்த ஊரடங்கு உத்தரவும், சமூக இடைவெளியும் நடைமுறையில் இருக்கும் நிலையில், பலரும் குறுவை சாகுபடியை  முழுமையாக முடிக்க இயலாமல் இருக்கின்றனர். அப்படி செய்தவர்களாலும், அதனை எங்கும் இடம்பெயர்க்காவோ விற்கவோ முடியாமல் இருக்கின்றனர்.  சம்பா சாகுபடியின் உணவு பயிர்களின் உற்பத்தியின்போதும், விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு பற்றின தகவல்கள், சேவை மையங்கள் மற்றும் சந்தைப்படுவதற்கான உதவி ஆகியவை தேவைப்படும். 

Ø நாடு முழுவதும் தனியார் மருத்துவ வசதிகளை தேசியமயமாக்க  அரசு தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ‘கொரோனா மூனை/இடம்” அமைக்கவேண்டும் என கூறுவதும், அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வதெல்லாம்  சரி வராது. லாப நோக்குடன் இருக்கும் கட்டமைப்பில் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது என அறிந்த, ஸ்பெயின் நாடு கடந்த வாரம் அனைத்து மருத்துவமனைகளையும்,  மருத்துவசேவை மையங்களையும் தேசியமயமாக்கியது. 

Ø உடனடியாக, தூய்மை பணியாளர்களை அரசுகளும், மாநகராட்சிகளும் முழுநேர ஊழியராக அவர்களை நியமிக்கவேண்டும்.  இதனுடன், தற்போது அவர்கள் பெரும் ஊதியத்துடன் மாதம் ரூ.5000 கூடுதலாக அளிக்கவேண்டும். அவர்களுக்கு எப்போதும் நிராகரிக்கப்படும் அனைத்து மருத்துவ சலுகைகளும்  வழங்கவேண்டும். அவர்களுக்கு எப்போதுமே வழங்கப்படாத பாதுகாப்பு கவசங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். கிட்டதட்ட மூப்பது ஆண்டுகாலமாக, ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல கோடி தூய்மை பணியாளர்களிடமிருந்து நாம் சூரையாடி விட்டோம். அவர்களை பொதுப்பணித்துறை சேவையில் அனுமதி அளிக்காமலும், ஒப்பந்தம் மூலமாக எந்த ஒரு சலுகைகள் வழங்கப்படாமலும், குறைந்த கூலித்தொகையுடனும் பணிகளை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்ல நிலைக்கு தள்ளப்பட்டனர். 

Ø ஏழை மக்களுக்கு மூன்று மாதக் காலங்களுக்கு  நெரிசல் இல்லாத இலவசமாக நியாய விலை கடைப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட வேண்டும்

Ø ஏற்கனவே  அரசு ஊழியர்களாக  அங்கீகாரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்,  அங்கன்வாடி, மதிய சத்துணவு ஊழியர்கள் போராடிவரும் நிலையில், இவையனைத்தும்  உடனடியாக ஒழுங்குப்படுத்தவேண்டும். இந்திய குழந்தைகளின் வாழ்வும், ஆரோக்கியமும் அவர்களின் கைகளின் இருக்கின்றன.  அவர்களும் முழுநேர ஊழியர்களாக்கப்பட்டும், முறையான ஊதியம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட வேண்டும்.

Ø இந்த நெருக்கடிநிலை முடியும் வரை, விவசாயங்களுக்கும் தொழிலாளர்களுக்கும்  எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின்கீழ் தினக்கூலி அளிக்கப்பட வேண்டும். நகரப்புற தினக்கூலி வாங்குபவர்களுக்கு அதே காலக்கட்டத்தில் மாதம் ரூ.6000 வழங்கப்படவேண்டும். 

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இப்போதே நாம் செய்ய தொடங்கவேண்டும்.   அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கையைப் பார்க்கும்போது, அது மிகவும் தெளிவற்ற, இரக்கமற்ற கலவையாக  இருக்கின்றன. நாம் ஒன்றும் ஒற்றை வைரஸை எதிர்த்து போராடவில்லை - தொற்று நோயும் தொகுப்பாகத்தான் இருக்கின்றன.  இதில், பொருளாதார நெருக்கடியும் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட துயரமாகவோ/மோசமானப் பகுதியாகவோ ஆகலாம். இது பேரிடரிலிருந்து பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும். 

இந்த வைரசின் நிலை இதேப் போன்று இன்னும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தால், சம்பா சாகுபடியின் உணவு பயிர்களை  விளைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்துவதுதான் ஒரே முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக ஆகும். 

அதே சமயத்தில், வரலாற்றில், இந்த  கொவிட் 19யை அற்புதமான ஒன்றை வெளிப்படுத்தும் தருணமாக பார்க்கும் அளவுக்கு  நாம் கொஞ்சம் தள்ளி நிற்கலாமா? அதாவது, நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஓர் இடமாக.  சுகாதார நீதி, சமத்துவமற்ற தன்மை பற்றின விவாதங்களை மீண்டும் எழுப்பும் தொடர்ந்து விரிவுப்படுத்தும் தருணமாக நாம் பார்ப்போம்.

இந்தக் கட்டுரையின்  ஒரு வடிவம் முதலில் ‘தி வயர்’ செய்தித்தளத்தில் 2020 மார்ச் 26ம் தேதியன்று வெளியானது. 

ஷோபனா ரூபகுமார்

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath