“ஒரு ஆண்டில் குறைந்த எண்ணிக்கையிலான கத்திகளை மட்டுமே என்னால் விற்பனை செய்ய முடிகிறது”, என்கிறார் கோத்தகிரி நகர வீதியில் தகரக் கூரை வேய்ந்த தனது பட்டறையில் அமர்ந்திருக்கும் மோகன ரங்கன். “தேயிலை தோட்டங்களில் சிறிய அளவிலான கத்தி மட்டுமே பயன்படும். பெரிய அளவிலான கலப்பை போன்றவை விவசாய பணிகளுக்குதான் பயன்படும். விவசாயம் பெருமளவு குறைந்து தேயிலை தோட்டங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் பல நாட்கள் பட்டறைக்கு வந்தும் பணிகள் எதுவும் இருப்பதில்லை”

44 வயதான மோகன ரங்கன், கோட்டா என்னும் பழங்குடி இனத்தை சார்ந்த கடைசி தலைமுறை கொல்லர் ஆவார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகருக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புது கோத்தகிரி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். “27 வருடங்களாக நான் இந்த தொழிலை செய்து வருகிறேன். அதற்கு முன் எனது தந்தை, தாத்தா, அவரது முன்னோர்களும் இதே தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எத்தனை தலைமுறைகளாக இந்த தொழில் எங்கள் குடும்பத்தால் செய்யப்பட்டு வருகிறது என சரியாக சொல்ல முடியவில்லை”, என கூறுகிறார்.

ஆனால் சமீப காலமாக இந்த பாரம்பரிய தொழில் தேயிலை தோட்டங்களின் வளர்ச்சியால் பின்னடைவை சந்தித்துள்ளது. 1971 முதல் 2008 வரை (2008க்கு பின் தகவல்கள் இல்லை) தேயிலை விவசாயம் செய்யப்படும் நிலத்தில் அளவு 22,651 ஹெக்டரிலிருந்து 66,156 ஹெக்டர் என மும்மடங்கு அதிகரித்துள்ளது. இது இரும்பு பட்டறைகளின் விழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும். 

N. Mohana Rangan beating the red hot iron with his hammer
PHOTO • Priti David
N. Mohana Rangan's tools
PHOTO • Priti David

(படம்) மோகன ரங்கன்: சில நாட்கள் பட்டறைக்கு வந்தும் பணிகள் எதுவும் இருப்பதில்லை

வாடிக்கையாளர்கள் இல்லாமல் இன்னும் எத்தனை காலம் தொழில் செய்ய முடியும் என்னும் தவிப்பு மோகன ரங்கனை ஆட்கொண்டுள்ளது. “எனக்கு இரும்புப் பட்டறை பணிகள் செய்ய தெரியும். கோட்டா பழங்குடி பிரிவினர் பெரும்பாலானோர் இத்தொழிலை செய்து வந்துள்ளனர். ஆனால் காலச் சூழல் மாறி வருவதால் எனது மகன் வேறு வேலை கிடைத்தால் இங்கிருந்து வெளியூருக்கு செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்” என ஆதங்கம் கொள்கிறார். அவரது மகன் வைகுந்த 10 வயதும், மகள் அன்னபூரணி 13 வயது நிரம்பியவர்கள். அவரது மனைவி சுமதி லட்சுமி ஆலய பூசாரியாக பணி புரிகிறார். மோகன ரங்கனும் பூசாரி என்பதால் பட்டறையில் பணி செய்யும் போதும் பூசாரிகளுக்கான ஆடை அணிந்து தான் வேலை செய்ய வேண்டும்.

30 விதமான கலப்பைகள், கத்திகள், அரிவாள் போன்றவற்றை உருவாக்கும் திறன் படைத்தவர் மோகன ரங்கன். விவசாய தொழிலாளர்கள், தேயிலை தோட்ட பணியாளர்கள், மரம் வெட்டுபவர்கள் மற்றும் கசாப்பு தொழில், தோட்ட பணிகள் செய்பவர்களும் அவரது வாடிக்கையாளர்களாவர். “மழைக்கு பின் விதையிடும் பணிகள் துவங்கிவிட்டால் சந்தை நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் அதிக வேலைகள் கிடைக்கும்.  நான் தயாரிக்கும் கருவிகள் நிலத்தை சமன்படுத்துதல், களையெடுத்தல், குழிகள் வெட்டுதல், தேயிலை செடிகளை சமன் படுத்தல் மற்றும் மரக் கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். ஜூன் முதல் டிசம்பர் வரை மாதம் ரூ.12,000/ வரை வருமானம் கிடைக்கும். இதர மாதங்களில் இதன் மூன்றில் ஒரு பங்கை விட குறைவாகவே இருக்கும். குடும்ப சூழலை சமாளிப்பது கடினமாகவும் மாறிவிடும்’, என்கிறார்.

செலவுகளை குறைக்க கையால் செயல்படுத்தக் கூடிய கப்பி போன்ற இயந்திரத்தை ரங்கன் வடிவமைத்துள்ளார். “ஒரு பட்டறையில் காற்றை வேகமாக செலுத்தி தீயை அதிகரித்து இரும்பை உருக்க வேண்டும். சைக்கிள் சக்கரம் மூலம் ஊதுகுழலை உருவாக்கியுள்ளதால் ஒரு கையால் காற்றின் வேகத்தையும் இன்னொரு கையால் உருக்க வேண்டிய இரும்பினையும் கையாள முடிகிறது” என கூறுகிறார்.

பார்க்க: கோத்தகிரியில் உள்ள தனது பட்டறையில் ரங்கன்

நீலகிரியில் அதிகரித்து வரும் தேயிலை தோட்டங்கள் காரணமாக தலைமுறைகளாக இருந்து வந்த இந்த வேலை அழிந்து வருகிறது. நீலகிரியில் தேயிலை பயிரிடப்பட்ட இடம் 2008 வரை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.

இந்த இயந்திரத்தின் உதவி இருப்பதால் தனக்கு ஒரு உதவியாளரை பணியமர்த்தும் தேவையை தவிர்த்துள்ளார் அவர். பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்ட பணியாளர்களாக இருப்பதும் அங்கு அவர்கள் பெறும் ரூ.500/ தின ஊதியத்தை அவரால் வழங்க இயலாததும் இக்கருவியை உருவாக்க  தூண்டியுள்ளது.

பழங்குடியின பிரிவினரான ‘கோட்டா’ இனத்தவர்கள் நீலகிரி மாவட்டத்தின் கைவினை கலைஞர்கள். இப்பிரிவினரில் மண்பாண்ட கலைஞர்கள், நெசவாளர்கள், இரும்பு கொல்லர்கள், பொற் கொல்லர்கள், தச்சு பணியாளர்கள், வீடு கட்டும் பணியாளர்கள், கூடை செய்பவர்கள் மற்றும் தோல் தொழில் செய்பவர்களும் அடங்குவர். “பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தேவைகளையும் எங்களால் பூர்த்தி செய்ய முடியும்” என்கிறார் 58 வயது நிரம்பிய ஒய்வு பெற்ற வங்கி மேலாளரான லஷ்மணன். இவர் தற்போது கோட்டா பூசாரியாக பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் கூறுகையில் “எங்கள் தயாரிப்புகளை மற்ற பிரிவினருக்கு கொடுத்து உணவு தானியங்களை பெற்றுக் கொள்வோம். நாங்கள் தயாரிக்கும் கருவிகள் விவசாயத்திற்கும், மரம் வெட்ட, ஒழுங்குபடுத்தவும் பயன்படும். இது மலை பகுதி என்பதால் வீடு கட்ட மரம் அதிகமாக பயன்படும். மரம் வெட்ட, சீரான அளவிற்க்கு துண்டுகளாக்கவும், கதவு, ஜன்னல் போன்றவை உருவாக்கவும் நாங்கள் தயாரிப்பவை பயன்படும்”.

ஆனால் நீலகிரி மாவட்டத்தில் 70% அதிகமான வீடுகள் நிரந்தர வீடுகளாக மாறிவிட்டன. செங்கல், ஜல்லி, சிமெண்ட் மற்றும் காங்கிரீட்டால் ஆனவை. 28% வீடுகள் மூங்கில் மற்றும் சேறு பயன்படுத்தி உருவாக்கப் பட்டவை. வனத்திலிருந்து கிடைக்கும் பொருட்களால் கட்டப்படும் வீடுகள் வெறும் 1.7% மட்டுமே. இவற்றிற்க்கு மட்டுமே இரும்பு பட்டறையில் செய்யப்படும் பொருட்கள் தேவை படுகிறது. ரங்கன் மற்றும் லஷ்மணன் ஆகியோரும் தற்போது காங்கிரீட் வீடுகளில் தான் வசிக்கின்றனர்.

Kollel Rangan is also a Kota priest and must wear the traditional Kota dress even while working at his smithy. He is holding a large size sickle and rake once used to clear the hills for agriculture.
PHOTO • Priti David
R. Lakshmanan, 58, a former bank manager and now a Kota pujari (priest).
PHOTO • Priti David

(படம்) பெரிய அரிவாள் மற்றும் இலைகள், வைக்கோல் முதலியவற்றை வாரி எடுப்பதற்கான நீண்ட கைப்பிடியும் பற்களும் கொண்ட கருவியுடன் மோகன் ரங்கன் (படம்) லஷ்மணன்.. “எங்கள் கருவிகள் விவசாய நிலங்களை தேயிலை தோட்டங்களாக மாற்ற உதவின, ஆனால் அதன் காரணமாக எங்கள் தொழில் நலிவுற்று விட்டது”.

தனது தந்தையால் பயிற்சி அளிக்கப்பட்ட ரங்கனுக்கு தனது குழந்தை பருவத்தில் பட்டறையில் 5 பேரை பணியர்த்தியிருந்ததும் நினைவில் உள்ளது. “எனது தந்தை கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவர். எத்தகைய கடுமையான நிலப்பரப்பிலும் தேயிலை செடிகளை நடும் வல்லமையுள்ள இரும்பு ஆயுதங்களை அவர் செய்துள்ளார்” என பெருமிதம் கொள்கிறார் ரங்கன். விவசாய நிலங்களை அதிக லாபமீட்டும் தேயிலை தோட்டங்களாக மாற்றிய ஆதிவாசியினருக்கு ரங்கனின் தந்தையின் கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருந்தால் இவர்களது பட்டறை நோக்கி படையெடுத்துள்ளனர். “விவசாய மற்றும் வனப்பகுதியை தேயிலை தோட்டங்களாக மாற்ற எங்கள் கருவிகள் அன்று பயன்பட்டன. அதுவே எங்கள் தொழில் நசிந்து போக இன்று காரணமாகி விட்டது” என வருந்துகிறார் ரங்கன்.

பருவ காலத்தில் ஓரளவு ரங்கனுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் பிற மாதங்களில் பணிகள் ஏதும் இல்லாமையால் எந்த வருமானமும் கிடைப்பதில்லை. “ஒரு நாளில் இரண்டு பெரிய கத்திகள் அல்லது மரம் வெட்டும் கோடாரிகளை என்னால் செய்ய முடியும். அவற்றை விற்கும் போது அதிகபட்சமாக ரூ.1000/  வரை கிடைக்கும். இவற்றை உருவாக்கவே ரூ.600/ செலவாகிவிடுகிறது. ஆனால் பருவ காலங்களில் கூட கத்திகளை விற்க முடியாமல் போய் விடுகிறது” என்கிறார்.

வியாபாரம் குறைந்து விட்டதால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட  போதிலும் மனம் தரளாமல் இருக்கிறார் ரங்கன். “அதிக அளவு பணம் கிடைக்காவிட்டாலும் கரி, இரும்பு, ஊதுகுழல் ஆகியவற்றால் என்னால் முடிந்த புதிய கண்டுபிடிப்புகளை மகிழ்ச்சியோடு உருவாக்குகிறேன். என்ன இருந்தாலும் இது தானே நான் கற்றுக் கொண்ட பணி”, என பெருமிதம் கொள்கிறார் மோகன் ரங்கன்.   

மொழிபெயர்ப்பு: நீலாம்பரன் ஆ

பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.

Priti David

பிரித்தி டேவிட், பாரியின் செய்தியாளர் மற்றும் எங்கள் கல்வி பகுதியின் ஆசிரியர். பாடத்திட்டத்திலும் வகுப்பறைகளிலும் ஊரக பிரச்னைகளை கவனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் பள்ளிகளுடனும் கல்லூரிகளுடனும் சேர்ந்து இயங்குகிறார்.

Other stories by Priti David