பள்ளி நுழைவாயில் மேலுள்ள பலகையில் ‘தலீம்’ (உருது மொழியில் கல்வி என்று அர்த்தம்) என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதனுள்ளே இருக்கும் பயில்வான்களின் கடவுளான அனுமனின் உருவம்தான் உங்களுக்கு முதலில் தெரிகிறது. இங்கு கலாச்சாரம் வண்ணமயமான கலவையாக உள்ளது. மேற்கு மகராஷ்டிராவில் உள்ள மல்யுத்த பள்ளிகள் அனைத்தும் தலீம் என்றே அழைக்கப்படுகின்றன, அகாரா என்று அல்ல. இந்த தலீம்களுக்கும் பிரிவினைக்கு முன்பான பஞ்சாபிற்கும் 100 வருடத்திற்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. குறிப்பாக, பிரபல சமூக சீர்திருத்தவாதியும் கோலாபூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளருமான சாகு மகராஜ் காலத்தில் நல்ல தொடர்பு இருந்துள்ளது. அவர் ஒரு மல்யுத்த ரசிகராகவும் இருந்ததால், பிரிக்கப்படாத இந்தியாவெங்கும் இருந்து வீரர்களை வரவழைத்தார். இதில் பெரும்பாலானோர் பஞ்சாபிலிருந்து கோலாபூர் வந்துள்ளார்கள்.

இன்று வரையில் மகராஷ்டிராவின் மேற்கு கிராமப்புறங்களில் நடைபெறும் மிகப்பெரிய போட்டிகளில் பாகிஸ்தான், ஈரான், துருக்கி மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். “வெளியூர் மல்யுத்த வீரர்கள் மீது மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்கிறார் கோலாப்பூர் தொகுதியின் எம்எல்ஏ வினய் கோரே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பால்பண்ணைக்கு தலைவராக இருக்கும் கோரே, மாநிலத்தின் தனித்துவமான போட்டியை நடத்துகிறார். மகராஷ்டிராவின் மிகப்பெரிய மல்யுத்த மைதானம் கோலாபூர் மாவட்டத்தில் உள்ள வரானாநகரில் உள்ளது. இங்கு வருடம்தோறும் டிசம்பர் 13-ம் தேதி மல்யுத்த போட்டிகள் நடைபெறும்.

“3 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள். சில சமயங்களில் விசா கிடைப்பதில் தான் பெரிய பிரச்சனை ஏற்படும். ஒருமுறை, பாகிஸ்தான் வீரர்களுக்கு மிக தாமதமாகவே விசா கிடைத்தது. அதன்பிறகு அவர்கள் இஸ்லாமாபாத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து புனே வந்தவர்களை வரானாவிற்கு நாங்கள் அழைத்து வந்தோம். இதற்கிடையில், பாகிஸ்தான் வீரர்கள் வருகைக்காக 12-13 மணி நேரம் வரை மக்கள் பொறுமையாக காத்திருந்தனர்”.

தலீம்களில், மகாராஷ்டிராவின் மல்யுத்த குருக்கள் ஆன்மீக மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்களை கலந்து ஒழுக்க நெறிமுறைகளை வலியுறுத்துகின்றனர். பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் புகழ்பெற்ற காமா பயில்வான் (தனது காலத்தில் யாருமே தோற்கடிக்க முடியாத உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்) பற்றி கூறுகிறார்கள். காமா என்றழைக்கப்படும் குலாம் முகமது, பஞ்சாப்பில் பிறந்தவர். இஸ்லாமியரான இவர் 1947-க்குப் பிறகு பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டார். பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் தன்னுடைய இந்து நண்பர்களை வன்முறைக் கும்பல் தாக்க முற்பட்டபோது அவர்களை காக்க மலைபோல் எதிர்த்து நின்றவர் என காமா பற்றி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் கூறுகிறார்கள். “மல்யுத்த வீரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்பது இங்கு பொதுவான பாடம்.

PHOTO • P. Sainath

மகராஷ்டிராவின் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான அப்பாசாகேப் கடம் கூறுகையில், “ஒழுங்குநெறி சார்ந்த பயிற்சி மிக முக்கியம் என எல்லா ஆசிரியர்களும் ஒத்துக்கொள்வார்கள். தார்மீக அடிப்படை இல்லாத மல்யுத்த வீரர் பேரழிவாக இருப்பார்”. மற்ற மாநிலங்களில் கிடைக்கும் சந்தேகத்துக்குரிய புகழைப் போல் மகராஷ்டிரா பயில்வான்கள் பெற முடியாது என பலரும் சுட்டி காட்டுகின்றனர்.

இந்த விளையாட்டைச் சுற்றி உள்ளூர் விருந்தோம்பலும் பெருந்தன்மையும் கலாச்சாரமாக பரிணமித்துள்ளது. குண்டால் அல்லது வரனானாநகரில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். போட்டியை காண வெளியூரிலிருந்து வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை விருந்தினர்கள் போல் இங்குள்ள கிராமத்தினர் உபசரிக்கின்றனர். இங்கு வருகை தருபவர்களுக்காக நூற்றுக்கணக்கான இரவு உணவுகள் உள்ளூர் வீடுகளில் தயாரிக்கப்படுகிறது.

வளைக்கப்பட்ட மற்றும் பாழாய்ப்போன காதுகள் கூடும் இடமே தலீம். இது “மல்யுத்த வீரர்களுக்கான நல்லெண்ண சான்றிதழ்” என பலத்த சிரிப்போடு கூறுகிறார் புகழ்பெற்ற முன்னாள் மல்யுத்த வீரரும், ஒலிம்பிக் வீரரும் குருவுமான கன்பத்ராவ் அந்தால்கர். உருக்குலைந்த மடல்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் கிராமப்புற குடும்பங்களிலிருந்து வந்தவர்களே. விவசாயிகள் அல்லது கூலி தொழிலாளியாக இருப்பார்கள். மேற்கு மகராஷ்டிராவை பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை.

“குஸ்தி, கரும்பு வயல் மற்றும் தமாஷா (பாரம்பரிய மராத்தி நாட்டுப்புற நாடக வடிவம்) அகியவற்றிற்கு நெருங்கிய தொடர்புள்ளது” என கூறுகிறார் காகா பவார். இவர் ஆசிய, காமன்வெல்த் மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வாங்கியவர். “ஏன் தமாஷா? ஏனென்றால், இரண்டும் பங்கேற்பாளர்களின் ஒழுக்கம் மற்றும் மக்களின் ஆதரவை கோருபவை”.

பெரும்பாண்மையான பார்வையாளர்கள் இந்துவாக இருந்தாலும், மல்யுத்தத்தில் முன்பை விட பன்முகத்தன்மை அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் மராட்டியர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள், இப்போது தாங்கர் (மேய்ப்பர்கள்) சமூகத்தினர் சாம்பியனாக உள்ளனர். பிரபல மல்யுத்த மாவட்டமான சோலாபூரில் இஸ்லாமிய சமூகத்திலிருந்து இளம் சாம்பியன்கள் உருவெடுத்துள்ளார்கள்.

மகராஷ்டிரா மல்யுத்த கலாச்சாரத்தில் குருக்கள் தெளிவாக இருப்பதோடு பல விஷயங்களை பகுப்பாய்வு செய்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்தம் நீக்கப்படுமா என்ற சிறிய விவாதத்தை கூட அவர்கள் நிராகரிக்கிறார்கள். “30 நாடுகள் மட்டுமே விளையாடும் போட்டிகளை கூட  சேர்க்கிறார்கள். மல்யுத்தம் என்பது 122 நாடுகளின் கலாச்சாரம். இதை அவர்கள் நீக்குவார்களா?” என கொதிப்படைகிறார் கடம்.

PHOTO • P. Sainath

மகராஷ்டிராவில் மல்யுத்தம் நடத்தப்படும் விதம் குறித்தே இவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள். பல தலீம்கள் மற்றும் மல்யுத்த வீரர்களை நாங்கள் சந்தித்த போதும் இதேப்போன்ற புகார்களே வந்தன. நகர்மயமான மகாராஷ்டிராவை விட விவசாயத்தை நம்பியுள்ள ஹர்யானா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மல்யுத்தத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கிறது.

“அங்கு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையில் பணிகள் கொடுத்து அங்கீகரிக்கிறார்கள். இங்கோ, குஸ்தி விளையாட்டிலிருந்து விலகியவர்கள் கூலி தொழிலாளியாக உள்ளனர்” என்கிறார் ஆசிரியர் ஒருவர். சில திறமையான மல்யுத்த வீரர்கள் சர்க்கரை ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாகதான் பார்க்கப்படுகிறார்கள்.  ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், “குஸ்தி பார்க்க நிறைய மக்கள் வருவதாலேயே அவர்கள் இங்கு வருகிறார்கள். மாநிலத்தின் மல்யுத்த கூட்டமைப்பிற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் தலைவராக இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அது அவருக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை”. மற்றொருவர் கூறுகையில், “இரண்டு முன்னாள் மல்யுத்த வீரர்கள் எம்எல்ஏ-க்களாக இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து எட்டி கூட பார்ப்பதில்லை”.

சமூகத்திலும் கலாச்சாரத்திலும் ஏற்பட்ட மாற்றம், குறுவிவசாயிகள் அருகிப்போனது, தொடரும் தண்ணீர் பிரச்சனை மற்றும் மாநில அரசின் புறக்கணிப்பு என எல்லாம் சேர்ந்து, கிராம பொருளாதாரத்தில் ஆழமாக வேறூன்றியிருந்த விளையாட்டை பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. அந்தால்கர் கூறுகையில், “மல்யுத்த வீரரின் வாழ்க்கை என்பது கண்ணுக்கு தெரியாத தவம் போன்றது. கிரிக்கெட் வீரருக்கு சிறிய காயம் ஏற்பட்டாலும் அதை ஆயிரம் முறை ஊடகத்தில் ஒளிபரப்புகிறார்கள். ஆனால் இங்கு ஒரு மல்யுத்த வீரன் இறந்து கொண்டிருக்கும் போது அதைப்பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை”.

புகைப்படங்கள்: பி. சாய்நாத்

இந்த கட்டுரை அக்டோபர் 31, 2013-ல் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது.

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath