“பெண்கள் எங்களுக்குச் சோறு போடுகிற காய்கறிகளை விளைவிக்கிறார்கள். ஆண்கள் அந்தக் காய்கறிகளை விற்பனை செய்வதைப் பார்த்து கொள்கிறார்கள்", என்கிறார் லக்ஷ்மிகாந்த் ரெட்டி.

அவர் சரளமாக, நம்பிக்கை மிக்கவராகத் தோன்றுகிறார். முக்கியமாக, தொழில்முனைவோராகவும் இருக்கிறார். லக்ஷ்மிகாந்த் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த அனுபவம் கைகொடுக்கிறது. தற்போது அவர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

லக்ஷ்மிகாந்த்தை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. அவருக்குப் பதினேழு வயது ஆகிறது. லக்ஷ்மிகாந்த்தும்,சக அமைச்சர்களும் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தை காண வந்திருக்கும் மக்களிடம் உரையாற்றுகிறார்கள்.

பல்வேறு ஆடம்பரமான பள்ளிகள் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையை நடத்துவது தெரிந்திருக்கிருக்கும். அவற்றைப் போல ஏட்டளவில் இல்லாமல், இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் ஆண்டிற்கு ஒரு முறையாவது கூடுவது கட்டாயம். இங்கே கச்சிதமான உடையில் அயலுறவு சிக்கல்கள் அலசப்படுவதில்லை. உலகத்தின் கொதிக்க வைக்கும் சிக்கல்களுக்கு, அசரவைக்கும் தீர்வுகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் கல்வி, உடல்நலம் ஆகியவை சார்ந்து பல்வேறு அமைச்சரவைகள் முடிவெடுக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு விதி கடைபிடிக்கப்படுகிறது. மூத்தவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியும்.

புது தில்லியின் மையப்பகுதியில் பகட்டான மாளிகைகளில் இந்த அமைச்சர்கள் வாழவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி வட்டத்தில் மலைகளுக்கு நடுவே இருக்கும் நாச்சிக்குப்பத்தில் அமைச்சர்கள் வாழ்கிறார்கள். இவர்களைப் போல மாதிரி நாடாளுமன்றங்கள் நடத்தும் பணக்கார பள்ளியின் மாணவர்களைப் போல, செய்திகளில் இவர்களின் பெயர்கள் இடம்பிடிப்பதே இல்லை.

Girls sitting and discussing
PHOTO • Vishaka George
Boys sitting and discussing
PHOTO • Vishaka George

நச்சிக்குப்பம் கிராமத்தின் அந்த மாணவர் நாடாளுமன்றத்தில் உள்ள மாணவ மாணவியர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தமது தினசரி வாழ்க்கையை எது தீர்மானிக்கும் என்று அவர்களே முடிவெடுத்துக் கொள்கிறார்கள்

நாச்சிக்குப்பம் கிராமத்தின் இளைஞர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள பெண்களும், ஆண்களும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள். அது அவர்களைக் குலைத்துவிடவில்லை. தங்களின் வாழ்க்கையைச் சிறப்புற செலுத்துவது எப்படி என்பதை அவர்கள் முடிவு செய்து முனைப்போடு இயங்குகிறார்கள்.

தென்னகத்தில் சிறுவர் நாடாளுமன்றங்கள் பரவலாக இயங்குகின்றன. இந்தச் சினேகாகிராமின் குழந்தைகள் குறித்த கதைகள் வெறுமனே அழகிய கதைகளாக மட்டுமே முடிந்துவிடுமோ என்று அஞ்சினேன். ஆனால், இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அவர்களின் கதைகளைத் தனித்துவமானதாக மாற்றியிருக்கிறது. சினேகாகிராம் ஆனது இவர்களுக்குத் தொழிற்பயிற்சி வழங்குவதோடு, மறுவாழ்வு மையமாகவும் திகழ்கிறது. இந்தச் சினேகாகிராமில் உள்ள இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களே அதனைச் செம்மையாக நெறிப்படுத்தி நடத்துகிறார்கள்.

2017-ல் வெளிவந்த UNAIDS அறிக்கை இந்தியாவின் மக்கள் தொகையில் 80,000 பேர் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றோடு 2016-ல் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றால் 2005 ஒன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தேசிய எய்ட்ஸ் தடுப்பு இயக்கம் 2004-ல் துவங்கப்பட்டு, இலவச சிகிச்சை வழங்கப்பட்டதே இந்த அளவுக்கு ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையக் காரணம் எனப்படுகிறது.

பெங்களூருவின் புனித ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்.ஜி.டி.ரவீந்திரன் மருத்துவப் பேராசிரியராக உள்ளார். இவர் ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கு 1989-ல் இருந்து மருத்துவம் பார்த்து வருகிறார். இந்திய எய்ட்ஸ் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். “கடந்த பத்தாண்டுகளில் ஹெச்.ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ரெட்ரோ வைரஸ் எதிர்ப்புச் சிகிச்சை முறையும், நாடுமுழுக்க நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளால் இது சாத்தியமானது. ரெட்ரோ வைரஸ் எதிர்ப்புச் சிகிச்சை முறையால், தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. இது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணத்தைப் புலப்படுத்துகிறது." என்கிறார்

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இந்தச் சிகிச்சையால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன என்கிறார் பங்குத்தந்தை மாத்தீவ் பெரும்பில். இவர் சினேகாகிராமின் இயக்குனர், பயிற்சி பெற்ற கலந்தாய்வாளர். (Trained Counsellor). "ரெட்ரோவைரஸ் எதிர்ப்புச் சிகிச்சை வராமல் போய் இருந்தால் இந்தச் சிறுவர்கள் இளைஞர்களாக வளர்ந்திருக்கவே முடிந்திருக்காது. இந்தச் சிகிச்சையால் நோயாளிகள் நீண்ட காலம் வாழ்வதும், துடிப்பாக இயங்குவதும் சாத்தியமாகி இருக்கிறது." என்கிறார்.

சமூகம் கடுமையாக ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்கிற சூழலில் அதைத்தாண்டி எப்படி இவர்கள் இயங்குகிறார்கள்?

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களுடைய இறப்பு வரை நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு சினேகாகிராம் 2002-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ரெட்ரோவைரஸ் எதிர்ப்புச் சிகிச்சை நல்ல பலன்களைத் தர ஆரம்பித்ததும், தங்களுடைய அமைப்பின் இலக்குகளை இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. இந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் திறன்களை வளர்ந்து எடுக்க முடிவு செய்தார்கள். மருத்துவச் சிகிச்சையின் வெற்றி சினேகாகிராமத்தை தொழிற்பயிற்சி மையமாகவும் மாற்றியது.

Two girls hugging in front of a school
PHOTO • Vishaka George
A girl laughing with one hand raised
PHOTO • Vishaka George

தமிழகம், கர்நாடகா, ஆந்திராவின் ஊரகப்பகுதிகளின் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மீனா நாகராஜ் (இடது ஓரம்), சுருதி சஞ்சுகுமார் (இடது), அம்பிகா சுரேஷ் (வலது) ஆகியோர் ஆதரவற்ற சூழல்களில் இருந்து வந்தவர்கள்.இவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆங்கிலப் புலமையைக் கணிசமாகப் பெருக்கியுள்ளார்கள்

இங்குள்ள இளைஞர்கள் தங்களுடைய உயர்நிலை, மேல்நிலை கல்வியை தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி மையத்தில் பயின்று உள்ளார்கள். இவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தால், பட்டப்படிப்பில் நுழையும் முதல் மாணவர் குழுவாகச் சாதனை படைப்பார்கள். இவர்களுக்கு வேலைகள் கிடைக்கும் என்று சினேகாகிராம் நம்புகிறது.

அதே வேளையில், வகுப்பறையைத் தாண்டி இம்மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்ஸ், சமையல் முதலிய தொழிற்கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. கற்பித்தல் ஒருவகையான கற்றல் முறை மட்டுமே ஆகும். அது போகத் தங்களுக்கான உரிமைகள், முடிவுகளை எடுக்கும் ஒரு முறையை மாணவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இதுதான், சுயசார்புள்ள பண்பை வளர்த்து எடுக்கும் நோக்கம் கொண்ட சினேகாகிராமின் மாதிரி நாடாளுமன்றத்தின் துவக்கத்திற்குக் காரணமாகும்.

தமிழகம், கர்நாடகா, ஆந்திராவின் ஊரகப்பகுதிகளின் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள். இந்த நாடாளுமன்ற முறையால் அவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிகிறது.

"எங்களுடைய கல்வி அமைச்சர் நாங்கள் எங்களுடைய தாய் மொழியில் மட்டும் பேசாமல், ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என்றார். அவர் சொன்னதைப் போல நல்ல வேலை கிடைக்க ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா?" எனக் கேட்கிறார் பெண்கள் விளையாட்டு அமைச்சரான 17 வயதாகும் மீனா நாகராஜ்.

நாள் முழுக்க நீளும் வகுப்புகளுக்கு முன்னால்  உடற்பயிற்சி செய்யத் தோழிகளை எழுப்பி விடவேண்டிய பொறுப்புமிக்க வேலையை மீனா பார்த்து கொள்கிறார்கள். காலையில் எழுந்த உடன், அனைவரும் ஓடவேண்டும். அதைத் தொடர்ந்து தங்களுக்குப் பிடித்த விளையாட்டை ஆடுகிறார்கள். இப்படிப்பட்ட திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி முறை, நோய் எதிர்ப்பை வலுப்படுத்தி அவர்களை நலமுடன் வாழ வைக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை ரெட்ரோ வைரஸ் எதிர்ப்பு மருந்தை இரவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மாத்திரை உலகம் முழுக்க வெகுவாக அஞ்சப்படும் வைரஸ் கிருமியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த மையத்தில் உள்ள 65 மாணவர்களும் ஒவ்வொரு இரவும் மருந்தை ஒழுங்காக எடுத்துக் கொள்வதை உறுதி செய்யும் பொறுப்பு நலத்துறை அமைச்சர்களான அம்பிகா சுரேஷ் (16), லக்ஷ்மிகாந்த் ஆகியோருக்கு உரியது. “அந்தச் சிறு மாத்திரையை உட்கொள்ள மறப்பது ஆபத்தான ஒன்று. இவர்கள் சமத்தாக உண்டுவிடுகிறார்கள்." என்கிறார் மாத்தீவ்.

A boy
PHOTO • Vishaka George
A boy smiling and standing in a garden
PHOTO • Vishaka George
A portrait of a girl smiling
PHOTO • Vishaka George

புதுத் தில்லியில் உள்ள நாடாளுமன்றத்தை மாதிரியாகக் கொண்டு, சினேகாகிராமின் நாடாளுமன்றம் நடத்தப்படுகிறது. இதனை  ஒன்பது பள்ளிகள் பின்பற்றுகிறார்கள். இங்கே லக்ஷ்மிகாந்த் ரெட்டி (இடது), நலத்துறை அமைச்சர், மாணிக் பிரபு (நடுவில் இருப்பவர்), பிரதமர், பூஜா அண்ணாராவ் (வலது), சட்ட மற்றும் உள்துறை அமைச்சர்

இந்த நாடாளுமன்ற முறை சிறப்பாகச் செயல்படுகிறது. “நாங்கள் ஒழுங்காகப் பணியாற்றுகிறோமா என்பதை வலுவான எதிர்க்கட்சி தலைவர் கண்காணித்துக் கொண்டே இருப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் கூடி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோமா என்பதை எதிர்க்கட்சி கவனிக்க வேண்டும். சமயங்களில், எங்களை எதிர்க்கட்சியினர் பாராட்டவும் செய்கிறார்கள்." என்கிறார் சட்ட மற்றும் உள்துறை அமைச்சரான காலேஷ்வர் (17).

இவர்களுடைய நாடாளுமன்ற முறையை ஒன்பது பள்ளிகள் அப்படியே பின்பற்றுவதில் எக்கச்சக்க பெருமையும், பூரிப்பும் கொள்கிறார்கள்.

இந்த நாடாளுமன்ற அமைப்பு இந்திய நாடாளுமன்றத்தை ஒத்ததாக இருக்கிறது. அக்கறையோடு நாடாளுமன்ற அலுவல்கள் நடக்கின்றன. பதினேழு ஏக்கர் பரப்பளவுள்ள மையத்தின் வளாகம் முழுவதும் இயற்கை விவசாயம் மட்டுமே நடப்பதை விவசாய அமைச்சர் உறுதி செய்கிறார். அந்த விளைச்சலை மாணவர்கள் நகரத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். நானூறு பேருக்கு இந்தக் காய்கறிகளை விற்று அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள்.

இந்த மாணவர்கள் உண்ணும் உணவிலும் இந்தக் காய்கறிகளே பயன்படுத்தப்படுகின்றன. வாரத்துக்கு ஒரு முறை ஆண்களும், பெண்களும் மாறி மாறி சமைக்க வேண்டும். இரு தரப்பும், தாங்களே இன்னொரு தரப்பை விடச் சமையலில் வல்லவர்கள் என்று மெச்சிக்கொள்கிறார்கள்.

பதினேழு வயதாகும் துணை பிரதமர் வனிதா, "எங்க சாப்பாட்டை ஒரு கைபாருங்களேன்" என்று அழைக்கிறார். "வருகிற ஞாயிற்றுக்கிழமை எங்க சமையல் தான்." என்கிறார்.

"அப்ப வர ஞாயிற்றுக்கிழமை இங்கே வராம தப்பிச்சிடுங்க" என்கிறார் லக்ஷ்மிகாந்த் குறும்பாக.

இப்படிப்பட்ட உற்சாகமான சூழல் நிம்மதி அளிப்பதாக உள்ளது. சமூகம் முழுக்க ஹெச்.ஐ.வி. குறித்து மலிவான நகைச்சுவையும், அறியாமையுமே கோலோச்சி கொண்டிருக்கிறது என்றாலும் இந்த மையம் தனித்து விளங்குவது நிறைவை தருகிறது.

“இந்தப் பிள்ளைகளை மக்கள் பார்க்க வருகிற போது, இங்கே சாப்பிட மாட்டார்கள். படித்தவர்கள் கூட 'நாங்க இன்னைக்கு விரதம்' என்று கதை சொல்வார்கள்" என்கிறார் மாத்தீவ்.

இங்கே வேறுபாடின்றி அரவணைப்பான சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு, சமூகம் தங்களை வேறுபடுத்திப் பார்க்கிறது என்பது தெரியுமா?

"அவர்களுக்கு அது நிச்சயமாகத் தெரிந்தே இருக்கிறது. இவர்கள் இப்படிப்பட்ட நோயோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஓரிரு நெருங்கிய சொந்தக்காரர்களுக்குத் தெரியும். அவர்கள் மற்றவர்களிடம் இது குறித்துப் பேசுவதில்லை." என்கிறார் மாத்தீவ். மேலும், "வீட்டில் இவர்களுக்கு மற்றவர்களுக்குச் சாப்பிட தரப்படும் தட்டுகள் தரப்படுவதில்லை. எல்லாம் தவறான மனப்பான்மை தான்.ஒருவரின் சாதி பார்த்து அவரைப் பாரபட்சமாக நடத்துவதைப் போல, இந்தப் பிள்ளைகளை அப்பட்டமாகவோ, மறைமுகமாகவோ ஒதுக்கி வைக்கிறார்கள்." என்று வருந்துகிறார்.
A girl standing on some rocks looking at a garden with lotus flowers
PHOTO • Vishaka George

பாறைகளின் மீது நின்று கொண்டிருக்கும் மாணவி தாமரை மலர் தோட்டத்தைக் கண்டு களிக்கிறார். புகைப்படம் • விஷாகா ஜார்ஜ். வனிதாவும், மாணவர் நாடாளுமன்றத்தில் உள்ள பிற மாணவர்களும் வீட்டில் இன்னமும் பாகுபடுத்த படுகிறார்கள்.

பிரதமர் மாணிக் பிரபு, நாள்முழுக்கப் புன்னகை ததும்பக் காட்சி அளிக்கிறார். இப்படி முகம் கோணாத, அவரின் பண்பினாலேயே அவர் தலைமை பதவிக்கான வாக்குகளை அள்ளியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

தடகள வீரரான மாணிக் பிரபுவின் சாதனைகள் அவரை உலகம் முழுக்க அழைத்துச் சென்றிருக்கிறது. பாஸ்டன் மாரத்தான், நெதர்லாந்து மாரத்தான், இலங்கையின் கொழும்புவில் இன்னுமொரு போட்டி என்று அவருடைய பயணம் தொடர்கிறது.

“ஹெச்.ஐ.வி ஒன்றும் முற்றுப்புள்ளி இல்லை. இந்த நோயோடு போராடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊற்றாக இருக்க விரும்புகிறேன்." என்கிறார் மாணிக் பிரபு.

மாணிக்கும், அவருடைய தோழர்களும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி இவர்கள் வலிகளைத் தாண்டி வல்லமையோடு இயங்குகிறார்கள் என்பதை அன்றைக்கு நான் தெரிந்து கொண்டேன்.

Translator - P. K. Saravanan

Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan