இரண்டு லட்சம் பேருக்குக் குறையாத மக்கள் கூட்டம். நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஐந்து மணி நேரம் இருக்கும் போதும் பெரிய மழையாகலாம் என்று பயமுறுத்தும் நசநச சாரல் இருக்கும் போதும் எதற்காக இந்த கூட்டம் சச்சின் டெண்டல்களின் இறுதிகிரிக்கெட் ஆட்டம் நடக்கப் போகிறதா? இல்லை என்றால் நம்புவீர்களா?

இது ஆட்டத்தைக் காண வந்த கூட்டம் தான். ஆனால் கிரிக்கெட் ஆட்டம் இல்லை. மராட்டிய மாநிலத்தின் கண்கவர் பிரம்மாண்ட மல்யுத்த ஆட்டம். குந்தல் கிராமத்திற்கு இந்த கூட்டம் ஒன்றும் புதிதல்ல. பார்க்கப் போனால் இந்த வருடம் கூட்டம் கொஞ்சம் குறைவுதான்.

சில விளையாட்டுகள் கிராமப் பொருளாதாரத்தோடு, அதிலும் குறிப்பாக விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்தும், நம்பியும் இருக்கின்றன. அதில் ஒன்று மல்யுத்தம். சென்ற வருடத்திய தண்ணி பஞ்சத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. மூன்று லட்சம் நபர்கள் திரளும் குந்தல் கிராமத்தில் குடிதண்ணி விநியோகிப்பது பெரும்பாடு என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

குஸ்தி, மல்யுத்தம் போன்ற வீரமிக்க விளையாட்டுகள், கிராமப்புறங்களின் விளையாட்டு, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை சந்திக்கும் புள்ளியாக அமைந்திருக்கிறது. மல்யுத்தப் போட்டிகள் நகர்ப்புறங்களில் நடைபெற்றாலும் வீரர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். ஹிந்து நாளிதழின் ஆய்வுப்படி பெரும்பாலான விளையாட்டுவீரர்கள் ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம்.

பின்னடைவு

கடந்த சில வருடங்களாக பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் இந்த விளையாட்டை வெகுவாக பாதித்திருக்கிறது. சென்ற வருடத்திய வறட்சி, இந்த வருடத் துவக்கத்தில் நிலவிய தண்ணி பற்றாக்குறை போன்றவை நிலைமையை மேலும் மோசமடையச் செய்திருக்கிறது. தலீம் எனப்படும் மல்யுத்தப் பள்ளியை கோலாபூரில் நடத்தி வரும் விற்பன்னர் அப்பாசாகேப் கடம் பேசும் பொழுது "வறட்சி எங்களை நாசப்படுத்திவிட்டது. உள்ளூர் போட்டிகள் முக்கால்வாசிரத்தாகி விட்டன. நடந்த சில போட்டிகளிலும் பரிசுத் தொகை வெகுவாகப் குறைக்கப்பட்டு விட்டது. குடும்பத்தினர் தங்களை நம்பி முதலீடு செய்த பணத்தை கூட பொருட்படுத்தாமல், மாணவர்கள் விலகி விட்டனர்." என்று குறிப்பிடுகிறார்.

இந்த வருடம் மழையின் தீவிரம் அதிகம் இருந்தாலும் இதே நிலைமை நிலவ வாய்ப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்களின் உபயத்தால், சிறிய போட்டிகளில் டிராக்டர் போன்றவை பரிசாக வழங்கப்பட்டாலும், சாமான்ய மக்களின் ஆதரவை நம்பித்தான் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. சங்க்லி மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த தேவைப்படும் 25 லட்சத்தில் 15 லட்சம் சாமான்ய மக்களிடமிருந்துதான் பெறப்படுகிறது. குந்தல் போட்டிகளின் அமைப்பாளர்கள் பாலாசாகேப் லாட், மற்றும் அருணா லாட் அவர்களுடைன கூற்றின்படி எளிய விவசாயிகளை நம்பி நடத்தப்படும் இப்போட்டிகள், விவசாயம் தழைத்தால் விளையாட்டு தழைக்கும் என்ற நடைமுறை உண்மையை பதிவு செய்கிறது.

நல்வாழ்விற்கு

மல்யுத்தம் வெறும் விளையாட்டல்ல. வறுமையை விரட்டியடிக்கும் ஒரு வழி. அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்கான திறவுகோல். மேம்பட்ட வாழ்க்கைக்கு கூட்டிச் செல்லும் அணுகுமுறை. கோலாபூரைச் சேர்ந்த கடம், '90 சதவிகித ஆட்டக்காரர்கள் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மீதி 10 சதவிகிதம் பேர் நிலமில்லா கூலிப் பணியாளர்கள், தட்டச்சுப் பணியாளர்கள் போன்றோர் என்கிறார். இவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். இவர்களுக்கு குஸ்திச் சண்டை, மல்யுத்தம் போன்றவற்றின் மேல் வெறிபிடித்த ஈடுபாடு. ஆனாலும் 5 சதவிகித ஆர்வலர்கள் கூட வீரர்களாக உருவாகி பெரிய நிலைக்கு வருவதில்லை என்பதுதான் உண்மை.

தலீம் என்பது மல்யுத்தப் பள்ளி. மாணவர்கள் அங்கு சின்னஞ்சிறிய அறைகளைப் பகிர்ந்து கொண்டு , சுய சமையல் செய்து கொண்டு உண்கிறார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சிக்கு ஓடுகிறார்கள். 5 மணிமுதல் 8.30 வரை பயிற்சி. பின் சிறுவர்களுக்கான பள்ளி நேரம், பத்து மணி முதல் மாலை 5 மணி வரை. மீண்டும் விளையாட்டு பயிற்சி. இரவு 8.30 வரை. இந்த தலீம் வாழ்க்கை கடுமையான ஒழுக்கம் கடைபிடிக்கப்படும் இடமாகும். கட்டுக்கடங்காத ஆர்வமும் தீவிரமும் உடைய மாணவர்களே இங்கு தாக்குப் பிடிக்க முடியும். ஜனரஞ்சக விளையாட்டான கிரிக்கெட் விளையாட்டிற்குக் கூட ஒரு வருடத்தில் நான்கு மாதப் பயிற்சியே போதுமானதாக இருக்கிறது. ஆனால் குஸ்தி, மல்யுத்தப் பயிற்சிக்கு பத்து வருடங்கள் கூட நிறைவைத் தருவதில்லை.

தலீம்களில் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் தங்கள் மகன்களை ‘பெஹல்வானாக்க விளையாட்டு வீரன்) பயிற்சியாளர்களிடம் மன்றாடுவதைப் பார்க்கலாம். காலை ஆறு மணிக்கு முன்னதாகவே, 83 வயது கணபதிராவ் அந்தல்கர், ஆஜராகி விடுகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், ஒலிம்பிக் போட்டியாளருமான இவர் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு சேர பயிற்சி கொடுக்கும் திறமையே தனி அவ்வப்போது விளையாட்டு உத்திகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி இந்தக் கலையின் உன்னதங்களைப் புரிய வைக்கும் அழகே அழகு. "மல்யுத்தம் விவசாயப் பொருளாதாரத்தின் வேரோடுப் பின்னிப் பிணைந்த ஒன்று" என்று கூறும் அந்தல்கர், இன்றைக்கு அந்தப் பிணைப்பு வலுவானதாக இல்லை என்று வருத்தப்படுகிறார். தலீம்களில் மாதக் கட்டணம் ரூ.100/- முதல் ரூ.200/- வரை தான். அந்தல்கர் போன்றவர்கள் விழாக்களில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு வருமானம் பெறுகிறார்கள். ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்தாலும் அவர்களுடைய உணவுக்கும் ஊட்டச் சத்துக்கும் தங்களைத் தாமே நம்பி இருக்கும் சூழ்நிலை தான்.

அரசின் பாராமுகம்

பயிற்சியாளர்கள் பல ஜாம்பவான்களை உருவாக்கியிருந்தாலும், அரசியல் பெரும்புள்ளிகள் இவர்களுடைய கூட்டமைப்புகளின் தலைவர்களாக இருந்தாலும், அரசின் பார்வை இவர்கள் மீது விழுவதில்லை. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கிடைக்கும் ஆதரவைப் போல் இவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் இவர்களுடைய மனக்குறையும் குற்றச்சாட்டும்.


/static/media/uploads/Articles/P. Sainath/Wrestling /29n4.jpg


ஆசிய, காமன்வெல்த் போட்டிகளின் தங்கப் பதக்க வீரரும், தேசிய தங்கப் பதக்க வீரருமான காகா பாவர், புனே நகரில் அமைந்திருக்கும் பயிற்சிப் பள்ளியிலிருந்து கூறுகிறார். பயிற்சி காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 400 கி பாதாம் பருப்பு, 4 லி கலப்படமில்லாத பால், 1/2 கிநெய், முட்டைகள், பழம், காய்கறிகள் தேவைப்படுகிறது. இதற்கான செலவு ரூ.700/- ஆகலாம். சிறுவர்களுக்கு ரூ.500/- ஆகலாம்.

வறுமையில் வாழும் விவசாயக் குடும்பங்களுக்கு இது கட்டுப்படியாகாத ஒன்று. உள்ளூர் மக்கள் சில சமயம் பொருள் கொடுத்து உதவுவதுண்டு. சில வருடப் பயிற்சிக்குப் பின் ஒரு ஆட்டத்திற்கு சிறுவர்கள் ரூ.2000/-, இளைஞர்கள் ரூ.5000/- வருமானம் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கலாம். போட்டிகளின் போது பார்வையாளர்களும் நேசக்கரம் நீட்டுவதுண்டு. பல லட்சம் பேர் குவியும் ஜாத்ராக்களில் கணிசமான வருமானம் கிடைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு. திறமையுள்ளவர்கள் ரூ.20000/- முதல் ரூ.50000/- வரை சம்பாதிக்கும் வழிகளும் உள்ளன என்கிறார்கடம்.

இவ் வருட தொடக்கத்தில் ரத்தாகிய பல போட்டிகளால், சசின் ஜம்தார், யோகேஷ் பொம்பாலே போன்ற இளம் ஜாம்பவான்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சந்தோழ் சுதார் போன்றவர்கள் கோலாபூர் தலீமிலிருந்துதற்காலிக ஓய்வு பெற்று சங்க்லி மாவட்டத்தில் குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க வேண்டியதாகப் போய்விட்டது.

பாரம்பரிய மல்யுத்தப் போட்டிமிட்டி எனப்படும் களிமண் தரையில் நடைபெறும். இப்பொழுது மிட்டிக்கு பதில் பாய் பயன்படுத்துவது தொடங்கிவிட்டது. இது விளையாட்டின் தன்மையை மாற்றிவிடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் அந்தல்கர். மிட்டி களிமண்தரை பல விசேஷங்களைக் கொண்டது. தயிர், எலுமிச்சை சாறு, நெய், மஞ்சள் ஆகியவை கொண்டு தயார் செய்வது. சில சமயம் அரைத்த இறைச்சித் துண்டுகளைக் கூட கலப்பதுண்டு. பல நூறு பேர் உழைப்பில் உருவாகும் இந்தக் களிமண்தரை மருத்துவ குணங்களைக் கொண்டது. காயம் படும் வீரர்களுக்கு மருந்தாக விளங்குவது.

ஹாகீக்கு நேர்ந்த கதிதான்

40க்கு 40 நியம அளவு கொண்ட பாய்க்குக் கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் தேவைப்படும். இது கிராமப் பயிற்சிப் பள்ளிகளுக்கு எட்டாத கனியாகும். களிமண்ணுக்கு பதில் பாய் பயன்படுததப்பட்டால், உள்ளூர் போட்டிகளை நடத்த முடியாத பரிதாப நிலை ஏற்படும். பாரம்பரிய போட்டிகளை நடத்தும் பெரியவர்கள் இந்த ஆபத்தான போக்கை கண்டிக்கிறார்கள். செயற்கைத் தரையின் வருகையினால் ஹாக்கி உரைபடத்திலிருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் விலக்கப்பட்டது. இது போன்ற நிலைதான் பாய்த் தரையின் வருகையால் மல்யுத்தத்திற்கு ஏற்படும் என்பது நிபுணர்களின் கருத்து. பாய் மேல் ஆடும் மல்யுத்த விளையாட்டில் வேகம் அதிகம். ஒரு ஆட்டம் இரண்டு நிமிடங்களில் கூட முடிந்து விடலாம். களிமண் ஆட்டம் 25 நிமிடங்கள் நீடிக்கக் கூடியது. “இந்த ஆட்ட நேர வித்தியாசம், மேம்போக்கான விஷயம் அல்ல.சமூக, பொருளாதார, பண்பாடு சார்ந்த வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆழமான விளைவுகளை கொடுக்கக் கூடியது." என்கிறார் அந்தல்கர்.

அட்பாடி கிராமத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் நாம்தியே முறிரங்க் குரலில் நம்பிக்கையின்மை இழையோடுகிறது. தண்ணி பற்றாக்குறையும், வறட்சி நிலையும் நிரந்தரமாக நீடித்தால், மக்கள் விவசாயத்தை துறக்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால், மல்யுத்தம், குஸ்திபோன்ற விளையாட்டுகளுக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விடும்." என்கிறார்.


P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Pushpa Kandaswamy