கேரளாவின் திருச்சூரில் உள்ள பி.வெம்பல்லூர் கிராமத்தில் உள்ள சந்திரன் மாஸ்டர் வீட்டின் வளாகத்திற்குள் பார்வையாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். மாணவர்களும், ஆசிரியர்களும், கால்நடை வளர்ப்புப் பணிகளில்  பயிற்சி பெறுபவர்களும், பார்வையாளர்களாக வந்து போகிறார்கள். சில அதிகாரிகள் கூட  வருகிறார்கள். ஒரு பொது இடத்தைப் போல அவர்கள் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கிறார்கள்.  ரொம்ப தூரத்திலிருந்தும் இங்கே பார்க்க வருகிறார்கள். அவரிடம் 22 மாடுகளும் இரண்டு காளைகளும் இருக்கின்றன. நமது நாட்டின் அரிதான வகைகள் அவை. அவை மட்டுமல்ல. பல வகையான மாமரங்கள், மூங்கில் வகைகள், மீன் வகைகள் என்று அவரால் பராமரிக்கப்படுகிற இந்திய நாட்டுக்கே உரிய  இனங்கள் அவை. ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் சந்திரன் மாஸ்டர். இந்தியாவின் குதிரை வகையான  உன்னதமான கத்தியாவரி குதிரையும்,  பல  வகையான  கோழி இனங்களும் அவரிடம் இருக்கிறது.  இவை எல்லாவற்றையும் விட அதிகமாக எல்லோரையும் கவர்ந்து இழுப்பவை, உலகின் மிகச்சிறிய மாடு என்று கின்னஸ் புத்தகத்தில் அறிவிக்கப்பட்ட வெச்சூர் எனும் கேரளத்தின் ஊரின் பெயரால் அறியப்படுகிற மாடும்,  கேரளாவின்  கால்நடைகளில் உள்ள மற்ற  உயரம் குறைந்த வகைகளும்தான்.

கேரளத்தில் உள்ள கால்நடைகளின் எதிர்காலம் பற்றி, அங்குள்ளவர்களிடையே  அதிகரித்துவருகிற கவலையை பிரதிபலிக்கிறது பார்வையாளர்களின் இந்த ஆர்வம். மற்ற இடங்களைப் போலவே, அதிக பால் உற்பத்தியைக் நோக்கமாகக் கொண்ட கலப்பின வளர்ப்பு கால்நடைகளுக்கு வலுவான முக்கியத்துவம்  இங்கே தரப்பட்டது. அதன் காரணமாகவும் கேரள மண்ணுக்கே உரிய கால்நடைகளின் எண்ணிக்கை செங்குத்தாக குறைந்துள்ளது.  அந்த அணுகுமுறை சரியா என்பது பற்றிய தீவிரமான விவாதம் தற்போது உள்ளது. 1996 க்கும்  2007 க்கும்  இடையிலான ஆண்டுகளில் கேரளாவின் கால்நடைகளின் எண்ணிகை   48  சதவீதம்  வரை குறைந்துள்ளது.

“கேரளத்தைச் சாராத, வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கால்நடை உயிரணுக்களைப்  பயன்படுத்துவதை , 50 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது கால்நடைகளுக்கான புதிய இனப்பெருக்கக் கொள்கை  என்று கூறுகிறார் கேரளாவின் கால்நடை பராமரிப்புத் துறையின் (ஏ.எச்.டி) இயக்குனர் டாக்டர் ஆர். விஜயகுமார். “நாங்கள் இப்போது கேரள மண்ணுக்கே உரிய கால்நடை இனங்களைப் பற்றிய  கருத்துகளைப் பரப்புகிறோம். கேரள நாட்டுக் காளைகளின் விந்துடன் கூடிய,  செயற்கை கருவூட்டலையும் நடத்துகிறோம். ” 1996க்கும் 2007க்கு இடையில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபோது,“ அந்த காலகட்டத்தில் மாநிலத்தில் பசுக்களின் பால் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு லிட்டர் முதல் 8.5 லிட்டர் வரை, உயர்ந்தது. கேரளாவின் கால்நடைகளில்  கலப்பின வகைகள் 87 சதவீதம் அளவுக்கு வந்தபோதும் இந்த அளவுக்கு உயர்வு இருந்தது” என்கிறார் அவர்.

இருந்தாலும், கலப்பின மாடுகளுக்கு ஆகிற செலவைவிட அவற்றிலிருந்து பால் உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகம். கேரளாவின் உயரம் குறைவான பசுக்களான, வெச்சூர் மற்றும் காசர்கோடு மாடுகளுக்கான தீவனங்களின் தேவை மிகவும் குறைவு. அவை எவ்வளவு தீவனம் சாப்பிடுகின்றனவோ அதற்கு ஏற்ப அவை கொடுக்கிற பாலின் அளவு நன்றாக இருக்கும். ஆனால், கலப்பின விலங்குகளை மிக அதிகமான அளவுக்கு பராமரிக்க வேண்டும். எளிதில் நோய்கள்  வந்துவிடும் அபாயம் அவற்றுக்கு இருக்கிறது. “இந்த வடகரா குள்ள வகையைப் பாருங்கள்” என்கிறார் சந்திரன் மாஸ்டர். “அந்தப் பசுவின் தீனிக்கு நான் தினமும் ஐந்து அல்லது பத்து ரூபாய் செலவு செய்கிறேன் என்பதே சந்தேகம்தான். ஆனால், அது எனக்குத் தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர்கள் பால் தருகிறது.அதன் பாலின் தரம் மிகவும் மதிப்பிற்குரியது .ஒரு லிட்டருக்கு 50ரூபாய் கூட எனக்குக் கிடைக்கும். அந்த வகையில் நமக்குக் கிடைக்கிற பயன்கள் அதிகம். அதிக தரமான தீவனத்தை போடவேண்டும் என்பதும் கிடையாது. சமையல் கழிவுகளும் மிஞ்சிப் போனவையும் கூட தீனியாகப் போடுகிறோம். அவற்றுக்குத் தனியான சிறப்பான கொட்டகைகயோ வேறு எதுவுமோ அமைக்க வேண்டும் என்பதும் கிடையாது.” ஆனாலும் அவர் பால் விற்பதில்லை. அதற்கு மாறாக, “என்னால் சமாளிக்க முடியாத அளவுக்கு ஆகிறபோது சில கன்றுக்குட்டிகளை விற்றுவிடுவேன்” என்கிறார் அவர்.

PHOTO • P. Sainath

உலகின் மிகவும் இளமையான வெச்சூர் கன்றுக்குட்டி இது. இந்தப் போட்டோவை எடுப்பதற்கு வெறும் ஆறு மணி நேரம் முன்பாகத்தான் அது பிறந்திருக்கிறது

வெச்சூர் மாட்டின் பாலுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் செழித்தோங்கிய காலகட்டங்களிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். கலப்பின பசுக்களின் பாலில் காணப்படுவதைவிட அதிகமான சதவீதத்தில்  கொழுப்புகளும் சத்துகளும் வெச்சூர் பசுக்களின் பாலில் இருப்பதாக கேரள வேளாண்மை பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தேவையான அளவுக்கு சின்ன அளவிலான கொழுப்புக் கோளங்கள் இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

கேரளத்துக்கே உரிய உயிரினங்கள் குறைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் இயக்குநர் ஆர். விஜயகுமார் அவர்கள். ரொம்ப காலத்துக்கு முன்பாக, சில வகை கால்நடைகளுக்கு காயடித்தல்கள் மூலம் இனப்பெருக்கத்தைக் குறைத்தது மட்டுமல்ல காரணம். பணப்பயிர்கள் மீது கவனம் செலுத்துகிற போக்கு வந்தது. அதனால், கால்நடைகளை சார்ந்து விவசாயம் செய்வது குறைந்து போனது. விவசாயிகளின் இளைய தலைமுறைக்கு பெரிய விலங்குகளை வளர்ப்பதில் பொறுமை இல்லை. அசைபோடும் சிறியவகை விலங்குகளை அவர்கள் விரும்பித் தேர்வு செய்தார்கள் என்பன உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார் அவர். கலப்பின மாடுகள் அதிகமான பாலை உற்பத்தி செய்ததால் அவற்றின்மீது அதிகமான கவனம் சென்றது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால்,  செலவுகளும் அவற்றுக்கான  பராமரிப்பும் ஒரு பிரச்சனையாக இருக்கின்றன. "1994 ஆம் ஆண்டில் நான் உள்ளூர் வகைகளான மாட்டு இனங்களுக்கு மாறுவதற்கு முன்பு, ஒரு சுவிஸ்சர் லாந்தைச் சேர்ந்த,  பிரவுன் உட்பட மூன்று கலப்பினங்கள்  என்னிடம் இருந்தன. நான் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நாளைக்கு 400 ரூபாய் அளவுக்கு தீவனம்  போடவேண்டியிருந்தது. அதன்  தீவனம் மிகவும் விலை உயர்ந்தது. பெல்லட் தீவனம், அரிசி தூள், கோதுமை தூள், எண்ணெய் கேக், பச்சை புல் என முடிவு இல்லாத பட்டியல் அது. அவை எப்போதும்  நோய்வாய்ப்பட்டே இருந்தன. வாரத்துக்கு ஒரு முறை  கால்நடை மருத்துவரை வரவழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை அவர் வரும்போதும் அவருக்கு நான் 150 ரூபாய் தந்தேன். அவர் வந்து போவதற்கு ஒரு வாகனம் வைக்கிற செலவு தனி” என்றார் அவர்.

“கடந்த 17 வருடங்களாக எந்த கால்நடை மருத்துவரும் எனது பசுக்களுக்கு வைத்தியம் பார்க்க்க வந்ததில்லை. இவை ஆரோக்கியமான பிறவிகள். கடினமான பிறவிகள்”  என்கிறார் அவர். ‘‘இந்தியாவின் உள்நாட்டு கால்நடைகள் இங்கே நிலவுகிற பருவகாலத்தோடு இணைந்து வளர்ச்சி அடைந்திருப்பவை. அவை நோய்களுக்கு எதிராகவும் பூச்சிகளுக்கு எதிராகவும் எதிர்ப்பு சக்தி உடையவை. அவை மனிதரின் உதவி இல்லாமலே கன்று ஈனும்” என்கிறார்கள் பல நிபுணர்கள். வெச்சூர் பசுக்களுக்கு கேரளாவின் பல்கலைகழகத்தில் புத்துயிர்ப்பு  அளித்த விஞ்ஞானிகளில் முன்னோடியாக இருந்த பேராசிரியர் சோசம்மா லைப் போன்றோர், கேரளத்தில் கலப்பு ரகங்களைச் சேர்ந்த கால்நடைகளை கொள்ளை நோய் போல தாக்குகிற, கோமாரி நோய்க்கும் மடிவீக்க நோய்க்கும் எதிராக, இந்த குள்ளரக கால்நடைகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கிறது. வெச்சூர் கால்நடைகளுக்கு செரிமானக் கோளாறுகள் வருவதும் குறைவாகவே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

கேரளாவில்,   பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு அல்லது குறு விவசாயிகளாகவோ  அல்லது நிலமற்றவர்களாகவோ இருக்கிறார்கள். கேரள மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான  எண்ணிக்கையில் கலப்பு இனங்களின் கால்நடைகள் உள்ளன. அவற்றால் பால் உற்பத்தி உயர்ந்துள்ளதுதான். ஆனாலும்  அந்த உற்பத்திக்கும் மக்களின் தேவைக்கும் இடையில் பெரிய இடைவெளி இன்னமும் உள்ளது. நாட்டில் அதிகமாக, பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இல்லை. ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படுகிற, தீவனத்தின் அளவும் இந்தியாவில் மிக அதிகம். கேரளாவில் அந்த மாநிலத்தை தாயகமாகக் கொண்ட கால்நடைகளின் எண்ணிக்கையும், பொதுவாகவே கால்நடைகளின் எண்ணிக்கையும் செங்குத்தான முறையில்  குறைந்துபோயிருக்கிறது என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பாதிப்பைப்  புறக்கணிக்கக்கூடாது என்கிறார்கள் விமர்சகர்கள். ஒரு விவசாயி எந்தவொரு காளையையும் உரிமம் இல்லாமல் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அந்த உரிமமும் கால்நடை நலத்துறையின் மாநில அளவிலான இயக்குநர் மட்டும்தான் வழங்க முடியும் என்பது போன்ற  பழையகால கொள்கைகளை வைத்திருப்பதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அவர்கள்.

PHOTO • P. Sainath

வெச்சூர் பசு மற்றும் அதன் கன்றோடு சந்திரன் மாஸ்டர்

நுணுக்கமான முறையில் பேசினால், சந்திரன் மாஸ்டரும் அவரைப் போன்ற பலரும் சட்டத்தை மீறுகிறார்கள் என்று ஆகிறது. ஒரு விவசாயி ஒரு “சட்டவிரோதமான” காளையை வைத்திருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்கு அரசுக்கு வேறு ஒரு வழியும்  இல்லையா என்ன? "ஒரு விவசாயியின் மீது பகை உணர்ச்சியோடு இருக்கிற ஒரு பஞ்சாயத்து அவரது வாழ்க்கையை நரகமாக்கிவிடும் " என்கிறார் ஒரு நிபுணர். "அந்த விவசாயி அந்த பஞ்சாயத்தின் நிர்வாகத்தில் இருக்கும் அரசியல் அமைப்போடு முரண்பட்டால், அவர்கள் அவரை  நீதிமன்றத்துக்கு பல மாதங்கள் அலைய வைக்க முடியும்."

ஹரிதா பூமி (பசுமை பூமி) என்பது ,வேளாண்மைச் செய்திகளை வெளியிடுகிற ஒரு பத்திரிகை. அது   சமீபத்தில் எந்தவொரு அனுமதியும் பெறுவதற்கு அரசாங்கத்தில் உள்ள அதிகாரவர்க்கப் போக்கு பற்றி எழுதியது. ஒரு விவசாயி ஆறு பெரிய விலங்குகளை வைத்துக்கொள்ள விரும்புகிறார். 20 கோழிகளையும் அதிகமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார். அதன் மூலம் தனக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வைத்துக்கொள்ள அவர் விரும்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு சின்ன எண்ணிக்கை உயர்வுதான். ஆனாலும்  அதைச் செய்வதற்கு அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை அந்த பத்திரிக்கை தெளிவுபடுத்தியது. அவர் செய்ய நினைக்கிற இதனை செய்ய ஆரம்பிப்பதற்கே பஞ்சாயத்திலிருந்து அனுமதி தேவை. ஒதுக்கப்பட்டிருக்கிற எண்ணிக்கையின் அளவை மீறினால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் கட்ட விரும்புகிற பண்ணையின் அளவைப் பொறுத்து, உங்களுக்கு மாவட்ட டவுன் பிளானரிடமிருந்து சான்றிதழ்கள் தேவைப்படும். ஒருவேளை மாநில தலைமை டவுன் பிளானரிடமிருந்து கூட. இவற்றைச் செய்ய நிர்வகிக்கவும்,பஞ்சாயத்துக்கு ஒரு தொழில்நுட்ப அறிக்கையைத் தயாரித்து அவர்களிடமிருந்து மூன்று அல்லது நான்கு சான்றிதழ்களைப் பெற வேண்டும். பின்னர் விவசாயி தனது திட்டமிட்ட பண்ணையிலிருந்து 100 மீட்டருக்குள் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களிடமிருந்தும் ‘தடை இல்லா சான்றுகள்’ சமர்ப்பிக்க வேண்டிய மாவட்ட மருத்துவ அதிகாரியிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும்.

சந்திரன் மாஸ்டர் வீட்டுக்கு நாம் முதன்முறையாக போனபோது அங்கு வேறொரு பகுதியைச் சேர்ந்த கால்நடை ஆய்வாளரை சந்திக்க நேர்ந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத அவர் சொன்னார்: “கால்நடைகளை நான் பார்வையிட போனபோது பெரும்பாலான சமயங்களில் கலப்பின கால்நடைகளுக்கு நேரிட்ட பிரச்சனைகளைப் பார்த்தேன். சுற்றுச்சூழல்  கொஞ்சம் மாறினாலும் அவற்றுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துவிடும். அவற்றால் வெப்பத்தைத் தாங்க முடியாது.” பேசிக்கொண்டிருக்கும்போதே சந்திரன் மாஸ்டர் குறுக்கிட்டார். “ஒரு ராத்திரி கூட நீங்க நிம்மதியா தூங்க முடியாது. கலப்பின கால்நடைகளால் பத்து நிமிடம் கூட மழையில் நிற்க முடியாது. ஆனால், உள்நாட்டிலேயே வளர்ந்த கால்நடைகளுக்கு நீங்கள் மாட்டுக்கொட்டகை கூட போட வேண்டியதில்லை” என்றார். அந்த கால்நடை ஆய்வாளர் தலையை அசைத்தார்: “நான் ஒரு பசு வைச்சுக்கனும்னா அது வெச்சூர் பசுவாகத்தான் இருக்கும்” என்றார் அவர்.

(பி.கு: தி இந்து ஆங்கில நாளிதழில் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை வெளியிட்டபோது, விவசாயத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றும் சகபாக்யா விகாஸ் அபியான் எனும் சமூக அமைப்பு சந்திரன் மாஸ்டருக்கு அரியவகை பசுவான காரியர் பசுவின் இரண்டு கன்றுகளை பரிசளிப்பதாக அறிவித்தது. மேற்கு ஒடிசாவிலிருந்து அதனை கேரளாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் பெரிய சவால்)

இந்தக் கட்டுரை முதலில் 2012 ஜனவரி 6 அன்று தி இந்து ஆங்கில நாளிதழில்  .வெளியானது.

தமிழில்: த நீதிராஜன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan