நாங்கள் தாமதமாகச் சென்றிருந்தோம். “அவரது கிராமத்திலிருந்து உங்களை தேடி இரண்டு முறை வந்து சென்றுவிட்டார் கணபதி பால யாதவ்” என்றார் ஷிர்காவ்னைச் சேர்ந்த ஊடக நண்பரான சம்பத் மோர். “இரண்டு முறையும் திரும்பவும் அவரது கிராமமான ரமாபூருக்கு சென்றுவிட்டார். நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள் என்று தகவல் சொன்னால் மூன்றாம் முறை வருவார்” என்றார். இரண்டு கிராமங்களுக்குமிடையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிருக்கும். அந்த தொலைவை சைக்கிளில் கடக்கிறார் கணபதி யாதவ். மூன்று முறை வந்து போவதென்பது முப்பது கிலோமீட்டர், அதுவும் மே மாத மத்தியில் ஒரு கொளுத்தும் நாளில், மிக மோசமான ஒரு சாலையில் அதுவும் 25 வருடம் பழமையான ஒரு சைக்கிளில். சைக்கிளை ஓட்டியவருக்கு வயது 97.

மகராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் கதேகாவ்ன்  தொகுதியில் ஷிர்காவ்னில் இருந்த மோரின் தாத்தா வீட்டில் மதிய உணவுக்கு நாங்கள் தயாராகி கொண்டிருந்த போது கணபதி பால யாதவ் மிக அமைதியாக அவரது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார். இந்த வெய்யிலில் அவரை அவ்வளவு தூரம் அலைகழித்தது பற்றி நான் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ”அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை” என்று தன்மையான குரலில் ஒரு மென்சிரிப்புடன் சொன்னார். “நேற்று மதியம் ஒரு திருமணத்துக்காக விதாவிற்கு சென்று வந்தேன். அதுவும் இந்த சைக்கிளில்தான். அப்படிதான் பொதுவாக போய் வருகிறேன்” என்றார் அவர். ரமாபூரிலிருந்து விதாவுக்குச் சென்று திரும்புவது என்பது கிட்டத்தட்ட 40 கி.மீ பயணம். அதுவும் முந்தைய நாள் வெயில் கடுமையாக அடித்த்து. 40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இருந்தது.

“ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்புவரை பந்தாபூருக்கு சைக்கிளிலேயே சென்று வருவார். கிட்டத்தட்ட 150 கி.மீ” என்கிறார் சம்பத் மோர். ”இப்போதெல்லாம் அவ்வளவு தூரம் பயணிப்பதில்லை.”

அவருடைய சராசரியான பணி என்பது செய்திகளை எடுத்துச் செல்லும் பணி. ஆனால் 1943ம் வருடம் ஜூன் மாதம் ஷெனொலியின் சதாராவில் பெரிய ரயில் கொள்ளையை நடத்திய குழுவிலும் கணபதி பால யாதவிற்கு பங்கு இருந்தது.

பார்க்க வீடியோ: ஒரு புரட்சியாளராக கணபதி யாதவ் தனது முக்கியமான பங்கை விளக்குகிறார்

1920ல் பிறந்த கணபதி யாதவ், துஃபான் சேனாவில் (புயல் சேனை) இடம்பெற்றிருந்த சுதந்திர போராட்ட வீரர். மகராஷ்டிராவின் சதாராவில் இயங்கி வந்த தலைமறைவு அரசாங்கமான பிரதி சர்க்காரின் ஆயுதப் பிரிவுதான் துஃபான் சேனா. 1943லேயே ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது பிரதி சர்க்கார். கிட்டத்தட்ட 600 அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்கள் பிரதி சர்க்காரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான துஃபான் சேனாவின் புரட்சிகளில் கணபதி யாதவ் பங்கேற்றார். “நான் அதிகமாக  தகவலை பரிமாற்றம் அல்லது காடுகளில் ஒளிந்து கொண்டிருந்த புரட்சியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வேலைதான் பார்த்தேன்” என்கிறார். நீண்ட, ஆபத்தான அந்த பயணங்களை அவர் பெரும்பாலும் கால்நடையாகவே மேற்கொண்டார். பிறகு சைக்கிள் வந்தது.

கணபதி யாதவ் விவசாயி. இப்போதும் தீவிரமாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்திய ராபி பருவத்தில் தனது அரை ஏக்கர் நிலத்தில் 45 டன் கரும்பை விளைவித்தார். ஒரு காலத்தில் அவரிடம் 20 ஏக்கர் அளவுக்கு நிலம் இருந்தது. ஆனால் நீண்ட காலம் முன்பே தனது பிள்ளைகளுக்கு அதை பிரித்துக் கொடுத்துவிட்டார் அவர். அவர் வாழும் அதே இடத்தில் மகன்கள் அழகான வீடுகளில் வாழ்கிறார்கள். ஆனால் கணபதி யாதவும் அவரது 85 வயது மனைவி வத்சலாவும் – இப்போதும் தினமும் சமைத்து வீட்டை பார்த்துக்கொள்கிறார் அவர் – மிக எளிமையாகவே வாழ விரும்புகிறார்கள். ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட வீடு அவர்களுடையது. நாங்கள் சென்ற போது வத்சலா வீட்டில் இல்லை.

கணபதி யாதவின் எளிமை காரணமாக சுதந்திர போராட்ட வீரராக அவருடைய பங்கு பற்றி அவரது பிள்ளைகளுக்கு தாமதமாகவே தெரிய வந்தது. விவசாய நிலத்தில் வளர்ந்த அவரது மூத்த மகன் நிவ்ருத்தி தனது 13ஆம் வயதில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டிற்கு பொற்கொல்லராக பயிற்சி பெற சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்குச் சென்றார். “சுதந்திர போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது’ என்கிறார் அவர். “அப்பாவின் சாகசங்கள் தெரியுமா என்று ஜி.டி பாபு லாத் (பிரதி சர்க்காரின் பிரபலமான தலைவர்) கேட்ட போதுதான் எனக்கு தெரியும்”. பாபு லாத் தனது வழிகாட்டி மற்றும் குரு என்கிறார் கணபதி யாதவ். “அவர்தான் எனக்கு பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார்” என்று நினைவுகூர்கிறார். “பின்னர் அவரை தொடர்ந்து ஷேத்காரி காம்கர் பக்‌ஷாவில் (இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி) இணைந்தேன். அவரது இறுதி நாட்கள் வரை தொடர்பில் இருந்தோம்” என்றார் கணபதி யாதவ்.

“நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனது நண்பனின் அப்பாதான் இவருடைய வீரம் பற்றி சொன்னார்” என்கிறார் கணபதி யாதவின் இன்னொரு மகனான மஹாதியோ. “அந்த நேரத்தில் ’இதென்ன பிரமாதம், அவர் ஒன்றும் ஆங்கிலேய ராணுவ வீரர்களையோ காவல்துறையினரையோ கொல்லவில்லையே’ என்பதாகதான் எனக்குத் தோன்றியது. அவரது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பின்னர்தான் உணர்ந்தேன்.”

Ganpati Bala Yadav and family
PHOTO • P. Sainath

கொள்ளுப் பேரர்களுடனும் பிற குடும்ப உறுப்பினர்களுடனும் கணபதி யாதவ். அவர்களுள் நிவ்ருத்தி (பின்னால் இடது பக்கம்) சந்திரகந்த் (முன்னால் இடது பக்கம்) மற்றும் மஹாதேவ் (கண்ணாடி அணிந்தவர், முன்னால் வலது பக்கம்)

பொதுவாக தகவல் பரிமாற்றம், சாப்பாடு எடுத்துச்செல்வது போன்ற வேலைகளைத்தான் செய்தார் என்றாலும் ஜூன் 1943ல் சதாராவின் ஷெனோலியில் மிகப்பெரிய ரயில் கொள்ளையை நடத்திய குழுவில் கணபதி யாதவுக்கும் பங்கு உண்டு. துஃபான் சேனாவின் நிறுவனர் கேப்டன் பாஹுவும் பாபு லாத்தும் இந்தக் கொள்ளையை முன்னின்று நடத்தினார்கள்.

“அந்த ரயிலை தாக்குவதற்கு நான்கு நாட்களே இருந்தபோது, தண்டவாளங்களில் கற்களை கொட்டி வைக்கவேண்டும் என்று தெரியவந்தது” என்றார் கணபதி யாதவ்.

அந்த ரயிலில் ஆங்கிலேய ஊழியர்களுக்கான (பம்பாய் மாகாணம்) சம்பளம் இருந்தது என்று தாக்குதல் நடத்திய குழுவுக்கு தெரியுமா? “தலைவர்களுக்கு தெரியும். (ரயில்வேத் துறையிலும் அரசிலும்) வேலை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். எங்களுக்கெல்லாம் ரயிலை கொள்ளையடிக்கும் போதுதான் தெரியும்” என்கிறார் அவர்.

எவ்வளவு பேர் தாக்குதல் குழுவில் இருந்தார்கள்?

“அந்த நேரத்தில் யார், எவ்வளவு பேர் என எண்ணிக் கொண்டிருந்தார்கள்? தண்டவாளங்களில் கற்களை பெரிய அளவில் கொட்டி வைத்தோம். பின்னர் ரயில் நின்றவுடன் அதை சுற்றி வளைத்தோம். நாங்கள் கொள்ளையடிக்கத் தொடங்கிய பின்னர் உள்ளேயிருந்தவர்கள் எதிர்க்கவோ, நகரவோ இல்லை. ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், பணத்திற்காக இதை செய்யவில்லை. ஆங்கிலேய ஆட்சிக்கு பாதிப்பு உண்டாக்கவே செய்தோம்.”

இது போன்ற ராணுவ நடவடிக்கைகளைத் தாண்டி, அவர் செய்த தகவல் பறிமாறும் பணியிலும் பல பிரச்னைகள். “காடுகளில் ஒளிந்திருந்த தலைவர்களுக்கு உணவு எடுத்துச்செல்வேன். இரவுகளில்தான் அவர்களை சந்திக்கச் செல்வேன். தலைவருடன் எப்போதும் 10, 20 பேர் இருப்பார்கள். இந்த தலைமறைவு  போராளிகளைப் பார்த்தால் சுடும் உத்தரவை ஆங்கிலேய அரசு பிறப்பித்திருந்தது. மறைவான, நீண்ட, சுற்றுப்பாதைகளில் நடந்துதான் அவர்களை சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால் எங்களை காவல்துறையினர் சுட்டுவிடுவார்கள்.”

Ganpati Bala Yadav on his cycle
PHOTO • P. Sainath

’ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பந்தர்பூர் சென்று திரும்புவார். கிட்டத்தட்ட150 கி.மீ. இப்போதும் சர்வசாதாரணமாக பல கி.மீ சைக்கிளில் சென்று வருகிறார்.’

“எங்கள் கிராமங்களில் இருந்துகொண்டு காவல்துறையினருக்கு தகவல்தருபவர்களையும் நாங்கள் தண்டித்தோம்” என்கிறார் கணபதி யாதவ். ப்ரதி சர்க்கார் என்ற அந்த இடைக்கால அரசுக்கு பத்ரி சர்க்கார் என்ற பெயரும் உண்டு. எப்படி அந்தப் பெயர் வந்தது என விளக்கினார் கணபதி யாதவ். மராத்தியில்ல் ‘பத்ரி’ என்கிற வார்த்தை மரத்தால் செய்யப்பட்ட கம்பை குறிக்கும். “காவல்துறையினருக்கு தகவல் சொல்பவர்களை கண்டுபிடித்துவிட்டால், இரவில் அவருடைய வீட்டை சூழ்ந்துகொள்வோம். பின்னர் அவரையும் அவருக்கு துணையாய் இருப்பவரையும் கிராமத்துக்கு வெளியே அழைத்துச் சென்றுவிடுவோம்.”

“தகவல் சொல்பவரின் கணுக்கால்களுக்கு நடுவில் கம்பை வைத்துக்கட்டிவிடுவோம். பிறகு தலைகீழாக தொங்கவிட்டு பாதங்களில் குச்சிகளை கொண்டு அடிப்போம். வேறு எந்தப் பகுதியையும் தொடமாட்டோம். வெறும் பாதங்கள் மட்டும்தான். அதன் பிறகு பல நாட்களுக்கு அவர்களால் ஒழுங்காக நடக்க முடியாது.”  அவர்களை பின்வாங்க வைக்க மிக வலிமையான ஒரு வழி. அதன் பிறகே ‘பத்ரி சர்கார்’ என்கிற பெயரும் வந்தது. “அதன் பின்னர் அவருக்கு துணையாக வந்தவரின் முதுகில் அவரை ஏற்றி அனுப்பிவிடுவோம். அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்”.

“பெல்வதே, நெவாரி, தட்சர் போன்ற கிராமங்களில் தண்டனைகள் கொடுத்தோம். ஒரு முறை தட்சரில் ஒரு பெரிய பங்களாவில் நானா சாகேப் என்று காவல்துறையினருக்கு உளவு சொல்பவர் தங்கியிருந்தார். அந்த பங்களாவுக்குள் ஓரிரவு புகுந்தோம். பார்த்தால் அங்கு வெறும் பெண்கள் மட்டும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு மூலையில் ஒரேயொரு பெண் மட்டும் முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். இந்த பெண் மட்டும் ஏன் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார்? நானா சாகேப்தான் அவர். போர்வையோடு தூக்கிச் சென்றுவிட்டோம்.”

நானா பாட்டேலும் (இடைக்கால அரசின் தலைவர்) பாபு லாதும்தான் அவரது நாயகர்கள்! “எப்பேர்ப்பட்ட நபர் அவர்! நானா பாட்டேல்! உயரமாக, ஆகிருதியாக, பயமில்லாமல் இருந்தார்! எவ்வளவு அற்புதமான உரைகளை நிகழ்த்துவார்! இந்த பகுதியில் உள்ள பெரிய நபர்கள் எல்லாம் அவர்களது வீடுகளுக்கு அவரை அழைப்பார்கள், ஆனால் அவரோ எளியவர்களின் வீடுகளுக்குதான் செல்வார்! பெரிய நபர்களில் பலர் ஆங்கிலேய ஏஜண்டுகளாக இருந்தார்கள்.” ‘அரசுக்கு பயப்படக்கூடாதென்று’ தலைவர்கள் சொல்வார்கள். “ஒற்றுமையாக இருந்து  பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற முடியும்” என்றும் சொல்வார்கள். கணபதி யாதவும் அவரது கிராமத்திலிருந்து 100-150 பேரும் துஃபான் சேனாவில் இணைந்தார்கள்.

Ganpati Bala Yadav
PHOTO • P. Sainath
Vatsala Yadav
PHOTO • P. Sainath

கணபதி யாதவும் அவரது 85 வயது வத்சலாவும் – இப்போதும் தினமும் சமைத்து, வீட்டைப் பார்த்துக்கொள்வார் அவர் – எளிமையான ஒரு வீட்டிலேயே வாழ்கிறார்கள்

மகாத்மா காந்தி பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் “அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு முறை (தொழிலதிபர்) எஸ்.எல். கிர்லோஸ்கர் அழைப்பின் பேரில் இங்கு வந்தபோது ஜவஹர்லால் நேருவை பார்த்திருக்கிறேன். அப்புறம் எல்லோருமே பகத் சிங் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.”

விவசாயக் குடும்பத்தில் பிறந்த கணபதி பால யாதவிற்கு ஒரேயொரு சகோதரி மட்டும் இருந்தார். சின்ன வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டதால் உறவினரின் வீட்டில்தான் இருவரும் வளர்ந்தார்கள். “2-4 வருடங்களுக்கு பள்ளி சென்றிருப்பேன். பின்னர் நிலத்தில் வேலைபார்க்க தொடங்கிவிட்டேன்.” திருமணத்திற்கு பிறகு அவரது பெற்றோரின் சிதிலமடைந்த வீட்டிற்கும் சின்ன நிலத்திற்கும் திரும்பிவிட்டார். தனது ஆரம்ப கால புகைப்படம் எதுவும் கணபதி யாதவிடம் இல்லை. அவரால் எடுத்திருக்கவும் முடியாது.

ஆனால் கடுமையான உழைப்பாளி அவர். 97 வயதில் இப்போதும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். “வெல்லம் எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டு அதை இந்த மாவட்டம் முழுக்க விற்றேன். எங்கள் பணத்தை எல்லாம் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக்கொடுக்கவே செலவு செய்தோம். கல்வி பெற்ற பிறகு அவர்கள் மும்பை சென்று சம்பாதித்து எங்களுக்கு பணம் அனுப்பினார்கள். பிறகு வெல்லம் விற்பதை நிறுத்திவிட்டு விவசாயத்தில் முதலீடு செய்தோம். போகப்போக நிலம் செழிக்கத் தொடங்கியது.”

ஆனால் இன்று விவசாயிகள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கணபதி யாதவை மிகவும் கவலையுறச் செய்கிறது. “சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆனால் இதுவல்ல நாங்கள் எதிர்பார்த்தது”. இப்போதுள்ள மத்திய அரசும் மாநில அரசும் முன்பிருந்த அரசுகளைவிட மோசம் என்று அவர்  நினைக்கிறார். முன்பிருந்தவையும் சிறப்பானவை அல்ல. “அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்றே சொல்ல முடியாது” என்கிறார்.

Ganpati Bala Yadav with his cycle outside a shop
PHOTO • P. Sainath

“எங்கள் காலங்களில் எல்லாம் சைக்கிள் என்பது புதுமையான விசயம்” என்கிறார் கணபதி யாதவ். இந்த சுவாரஸ்யமான புதிய தொழில்நுட்பம் பற்றி கிராமங்களில் பெரும் உரையாடல்கள் நிகழ்ந்தன.

துஃபான் சேனாவுக்கு தகவல் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கால்நடையாகவே செய்தாலும் ‘தனது 20-22வது வயதில் சைக்கிள் ஓட்டபழகினார்’ கணபதி யாதவ். அவரது தலைமறைவு காலகட்டத்தின் பிற்பகுதியில் அது போக்குவரத்து சாதனமாக மாறியது. “எங்கள் காலங்களில் எல்லாம் சைக்கிள் என்பது புதுமையான விஷயம்.” அந்த சுவாரஸ்யமான புதிய தொழில்நுட்பம் பற்றி கிராமங்களில் பெரிய உரையாடல்கள் நிகழ்ந்ததாகச் சொல்கிறார் அவர்.  “பல முறை விழுந்து எழுந்து நானே சைக்கிள் ஓட்டப் பழகினேன்”.

அந்த 97 வயது மனிதர் காலை 5 மணியிலிருந்து சுற்றி வருகிறார். ஆனால் மணிக்கணக்கில் எங்களோடு பேசுவதை ரசித்தது போலத்தான் இருந்தது. அவரிடம் கொஞ்சமும் சோர்வு இல்லை. அவரது சைக்கிளை எவ்வளவு காலமாக வைத்திருக்கிறார் என்று நான் கேட்டபோது மட்டும் கொஞ்சம் முகம் சுளித்தார். “இதுவா? 25 வருடங்கள். இதற்கு முன்பிருந்த சைக்கிளை 50 வருடங்கள் வைத்திருந்தேன். அதை யாரோ திருடிவிட்டார்கள்” என்கிறார் சோகமாக.

புறப்படத் தயாராகும்போது எனது கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு ஒரு நொடி காத்திருக்கச் சொன்னார். அவரது சின்னஞ்சிறிய வீட்டுக்குள் இருந்து எதையோ எடுத்து வரச் சென்றார். பிறகு ஒரு சின்னப் பாத்திரத்தை எடுத்துவந்து, ஒரு பானையை திறந்து அதற்குள் விடுகிறார். வெளியே வந்து கறந்த பாலை என்னிடம் தந்தார். அதை பருகி முடித்தவுடன், மீண்டும் என் கைகளைப் பற்றிக் கொள்கிறார். அவரது கண்களில் கண்ணீர். எனது கண்களிலும். அதற்கு மேல் பேச வார்த்தைகள் தேவையில்லை. மிக குறைந்த காலத்திற்கு என்றாலும் கணபதி பால யாதவின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பகுதியாக இருக்கும் பெருமை எங்களுக்கு கிடைத்ததை நினைத்து விடைபெற்றோம்.

சம்பத் மோர், பரத் பட்டீல், நமீதா வைக்கர், சம்யுக்தா சாஸ்திரி ஆகியோரின்  முக்கியமான பங்களிப்புகளுக்கு நன்றி

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan