கடந்த 3 ஆண்டுகளாக கலப்பை செய்ய வேண்டி யாரும் வரவில்லை. கோடாரி, மண்வெட்டி, அதற்கான கைப்பிடிகளை செய்வதற்கு கூட யாரும் வரவில்லை. இதன் பொருள் விவசாயிகளுக்கான கருவிகள் செய்து வந்த பங்காரு ராமாச்சாரி சிக்கலில் இருக்கிறார் என்பதே. இவர் தான் பல ஆண்டுகளாக முகுந்தாபுரத்தில் இருந்த ஒரே தச்சர். அவருக்கென்று நிலமும் இல்லை, கால்நடைகளும் இல்லை, அவர் விவசாயியும் இல்லை. ஆனால் அவரது வாழ்வு ஆந்திராவின் நலகொண்டா மாவட்டத்தில் இந்த கிராமத்தில் விவசாயம் எவ்வாறு செயல்பட்டது என்பதை பொருத்து தான் இருந்தது.

இங்குள்ள அரசியல் ஆர்வலர் எஸ் சீனிவாஸ் கூறுகையில் "இங்கு விவசாயம் மோசமானால் எல்லோரும் மோசமாகி விடுவார்கள், விவசாயிகள் மட்டுமல்ல", என்று கூறினார். ராமாச்சாரி அதில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றார். அவர் பசி காரணமாக மரணமடைந்தார் . நாகர்ஜுனா சாகர் அணை திட்டத்தின் இடது கால்வாயின் பகுதியில் வரும் இந்த கிராமத்தில் முன்னரெல்லாம் விவசாயம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்தது.

விவசாய நெருக்கடி விவசாயிகள் சமூகத்தைத் தாண்டியும் அதன் தாக்கத்தை செலுத்துகிறது. குயவர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் சாரா குழுக்கள் கூட விவசாய நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இது மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலையை தூண்டிவிடுகிறது. பழங்காலத்திலிருந்து விவசாயத்தைச் சார்ந்து இருந்த பல தொழில்கள் இதனால் கடுமையான நெருக்கடியில் இருக்கின்றன.

"நான் விஜயவாடாவில் ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்", என்று இராமாசாரியின் மனைவியான அருணா கூறுகிறார். ஒதரங்கி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சாதாரணமாக வேலை தேடி புலம் பெயர்வதில்லை. "ஆனால் எனக்கு வேறு வழி இல்லை", என்று அவர் கூறுகிறார். இதற்கு முன்னர் நான் ஒரு புலம்பெயரும் தொழிலாளியாக இருந்ததில்லை. ஆனால் இங்கு வேலை தேடிக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது.” ஒரு மாதத்திற்கு வேலை தேடி தனது மூன்று குழந்தைகளையும் கணவருடன் விட்டுவிட்டு அவர் புலம் பெயர்ந்தார்.

"ராமாச்சாரிக்கு சுமார் 40 வாடிக்கையாளர்கள் இருந்தனர்", என்கிறார் சீனிவாஸ். "அவருடைய பணிக்கு அவர்கள் நெல்லை சன்மானமாக கொடுத்தனர்". ஒவ்வொருவரும் அவருக்கு ஆண்டுக்கு 70 கிலோ கிராம் நெல்லை கொடுத்தனர். தனக்கு கிடைத்த 2800 கிலோ நெல்லில் அவர் தனது குடும்ப தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை சந்தையில் விற்று வந்தார். "அவர் 70 கிலோவிற்கு சுமாராக 250 ரூபாயை பெற முடியும். இது நெல், அரிசி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்". தனது குடும்பத்திற்கு தேவையான நெல்லை எடுத்துக் கொண்ட பிறகும் அவர் வருடத்திற்கு 4,000 ரூபாய் நெல்லின் மூலம் சம்பாதிக்க முடிந்தது அதனை வைத்து அவர் தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

இதற்கு முன்னர் அவருக்கு இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தனர் அதனால் வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் பிரச்சினை எழுந்தது. இந்த கிராமத்தில் 12 டிராக்டர்கள் வந்த பிறகு அவருடைய வேலை வெகுவாக குறைந்தது. "இது கையால் வேலை செய்பவர்களை பாதிக்கிறது", என்கிறார் கே லிங்கையா. இவரைப் போலவே நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். ராமாச்சாரிக்கு இது ஒரு பெருத்த அடி. ஆனால் அவரது வேலையை செய்து அவர் பணம் ஈட்ட முயன்றார். "அவருக்கு வேறு எந்த திறமையும் கிடையாது", என்று அருணா கூறுகிறார். அவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அருணா நான்காவது வரை படித்திருக்கிறார்.

PHOTO • P. Sainath

அருணா ஒரு மாதத்திற்கு வேலை தேடி தனது மூன்று குழந்தைகளையும் அவரது கணவர் ராமாச்சாரியிடம் விட்டுவிட்டு புலம் பெயர்ந்தார்

டிராக்டர்கள் ஒரு துவக்கம் தான். 1990களின் பெரும்பகுதி விவசாயத்தில் முதலீட்டை காணவில்லை. பருவம் பொய்த்தது இந்த தேக்கமான நிலைக்கு மேலும் வலு ஊட்டியது. விவசாயிகள் தங்களது கருவிகள் மற்றும் உபகரணங்களை மாற்றமே செய்யவில்லை. இது ராமாச்சாரிக்கு ஒரு பேரிடி. "எதை வைத்து கருவிகளை மாற்றிக்கொள்வது? அதை எப்படி எங்களால் வாங்க முடியும்?", என்று கிராமத்திலுள்ள மக்கள் கேட்கின்றனர். அதே நேரத்தில் பழைய உடைந்த கருவிகள் இருந்த விவசாயத்தையும் சேதப்படுத்தி விட்டது.

கால்வாயில் இப்போது கொஞ்சம் அல்லது தண்ணீரே இல்லை என்பதும் உதவவில்லை.

இதற்கிடையில் அனைவரும் கடனில் மாட்டிக் கொண்டனர். உள்ளீட்டுச் செலவுகளும் உயர்ந்தது மற்றும் விவசாயமும் தோல்வியடைந்தது வாழ்க்கையை நடத்துவதற்கு பலர் கடன் வாங்கினார். 45 வயதான   ராமாச்சாரி, ஒரு தேர்ந்த அதில் பெருமை கொண்ட கலைஞர்., ஆனால் அவர் அந்த வழியில் ஆர்வம் காட்டவில்லை. உண்மையில் அவரது கடன் சுமை வெறும் 6,000 ரூபாய் தான் அது இந்தப் பகுதியில் இருக்கும் மற்றவர்களின் கடனோடு ஒப்பிடும்போது மிகக் குறைவானதே.

"இந்த கிராமம் கூட்டுறவு சங்க வங்கிக்கு மட்டும் 22 லட்சம் ரூபாய் கடன் பட்டிருக்கிறது", என்று அந்த அமைப்பின் அதிகாரியான கே ரெட்டி கூறுகிறார். கிராமினா வங்கிக்கு 15 லட்சம் ரூபாயும், ஹைதராபாத்தின் பாரத வங்கிக்கு 5 லட்சம் ரூபாயும் கடன் பட்டிருக்கின்றனர். "இது ஒரு பெரிய தொகை அல்ல", என்கிறார் இடதுசாரி ஆர்வலரான எஸ் சீனிவாஸ். "முகுந்தாபுரம் மக்கள் கடன் கொடுப்பவர்களுக்கு இதைவிட அதிகமாக கடன்பட்டு இருக்கின்றனர்". கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்று கூறுகிறார்.

அதாவது 345 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்திற்கு 1.5 கோடி ரூபாய் கடனாக இருக்கிறது. அங்கிருந்து வாழ்க்கை பிழைப்பதற்கான ஒரு விளையாட்டாக மாறி விடுகிறது, அதில் விவசாயம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மேலும் நிலத்தின் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் என்ற நிலைக்கு வந்துவிட்டது. "சாதாரணமாக மக்கள் தங்களை தங்கள் நிலத்தை இழப்பதற்கு விரும்பமாட்டார்கள்", என்று மாவட்டத்தின் ரியுது சங்கத் தலைவர் கங்கி ரெட்டி கூறுகிறார். "ஆனால் இப்போது விற்க ஆசைப்படுபவர்களுக்கு கூட  நிலத்தை வாங்குவதற்கு ஆள் கிடைக்கவில்லை".

சில டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது டிராக்டர்களை கடன்காரர்களிடம் இழந்து விட்டனர். இதுவும் ராமாச்சாரிக்கு நிவாரணம் அளிக்கவில்லை ஏனெனில் டிராக்டர் இல்லாத விவசாயிகளும் தங்களது கருவிகளை மாற்றவில்லை. "அவர் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு நான்கு வாடிக்கையாளர் அளவுக்கு சுருங்கிவிட்டார்", என்று சீனிவாஸ் கூறுகிறார். சமீபத்திய காலங்களில் கிராமவாசிகள் இக்கட்டான சூழ்நிலையில் 30 காளைகளை விற்று விட்டனர். இதுவும் தச்சருக்கு குறைந்த வேலையைத்தான் குறிக்கிறது ஏனெனில் அவற்றுக்கு பயன்படும் பொருட்களையும் இனி அவர் தயாரிக்க முடியாது.

அடுத்தது இடம்பெயர்வு. "முன்னர் ஒவ்வொரு ஆண்டும் 500 தொழிலாளர்கள் வேலை தேடி இங்கு வருவார்கள், இப்போது அந்த நிலைமை மாறி இங்கிருந்து 250 பேர் வேலை தேடி புலம் பெயர்ந்து செல்கின்றனர்", என்று கங்கி ரெட்டி கூறுகிறார்.

கடந்த ஆண்டு மொத்த  கிராமமும் பசியில் இருந்தது. அதில் பலரை விட ராமாச்சாரி அதிகமாக பசியுடன் இருந்தார். முரண்பாடாக அவர்கள் கடந்து வந்த மிகவும் மோசமான இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏழை மக்கள் செலுத்தியதை விட குறைவான விலையில் இந்தியாவிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த முறை தான் தச்சர் பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றார், அதை வைத்து அவர் அரிசி குருணையை வாங்கினார். அந்தக் குருணையும் வீட்டில் இன்னும் இருக்கிறது. அருணாவுக்கு அதை தூக்கி எறிய மனம் வரவில்லை.

அவர் நகரத்தில் வேலைக்கு சென்ற போது ராமாச்சாரியை பசி வாட்டி கொண்டிருந்தது. "நாங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி உணவு கொடுத்து உதவி வந்தோம்", என்று பக்கத்து வீட்டுக்கார முத்தம்மா கூறுகிறார். "ஆனால் அவர் நன்றாக இருப்பது போலத்தான் செயல்பட்டு வந்தார். கடந்த வாரத்தில் ஐந்து நாட்களுக்கு அவர் ஒரு துரும்பைக் கூட சாப்பிடவில்லை, ஆனால் அதை அவர் ஓப்புக் கொள்வதற்கு அவரது கர்வம் இடமளிக்கவில்லை". பக்கத்து வீட்டுக்காரர்களும் மோசமான நிலையில் தான் இருந்தனர். இருப்பினும் அவர்களது உதவி குழந்தைகளை காப்பாற்றியது. இந்த வருடம் மே மாதம் 15 ஆம் தேதி ராமாச்சாரி மயக்கமடைந்தார். விஜயவாடாவில் இருந்து அருணா திரும்பி வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.

ராமாச்சாரி பல அடுக்குகளில் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார். அவற்றில் பெரும்பாலானவை இந்த மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருக்கிறது. அவை ஆந்திராவின் விவசாயத்தை அழித்து வருகிறது. முதலீடு செய்யப்படாமல் இருப்பது. உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பது. பருவம் பொய்த்துப் போவது. கடன் அதிகரித்து வருவது. அரசின் புறக்கணிப்பு. அவரது திறமைக்கான தேவை குறைவு மற்றும் பல அடுக்குகள்.

அருணா தனது குடும்பத்திற்கு உதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ராமாச்சாரியை பொருத்தவரை அவர் இதுவரை விண்ணப்பித்த ஒரே அரசாங்கத் திட்டம் 'ஆதர்னா'. கைவினை கலைஞர்களுக்கு புதிய கருவிகளை கொடுக்கும் திட்டம். ஆனால் கருவிகள் வருவதற்கு முன்பே தச்சர் இல்லாமல் போய்விட்டார்.

PHOTO • P. Sainath

"எதை வைத்து கருவிகளை மாற்றிக்கொள்வது? அதை எப்படி எங்களால் வாங்க முடியும்?", என்று கிராமத்திலுள்ள மக்கள் கேட்கின்றனர்.

 இந்தக் கட்டுரையின் குறுகிய பதிப்பு முதலில் தி ஹிந்துவில் வெளியிடப்பட்டது

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath