“எனது இரண்டு மூத்த மகன்களும், நிலத்தின் சொந்தக்காரருக்காக இரண்டு நாட்கள் வேலை செய்து இருவரும் தலா ரூ.150ஐ சம்பாதித்தனர். அவர்கள் அந்த பணத்தை அவரிடம் இருந்து நெற்பதர்களை வாங்குவதற்காக பயன்படுத்தினர்” என்று வனிதா போயர் கூறுகிறார். அவர் ஒரு மஞ்சள் நிற பிளாஸ்டிக் ஜாடியை திறந்து அதிலிருந்து சில அரிசி மணிகளை எடுத்து என்னிடம் காட்டினார். இவை கதிரக்கப்பட்டபோது சேகரிக்கப்பட்ட பதர் நெல். இவை அரிசியைவிட விலை குறைவு. அதனுடன், ஒரு வாரத்திற்கு தேவையான உப்பு, மிளகாய், மஞ்சள்தூள், சமையல் எண்ணெய் மற்றும் கொஞ்சம் உருளை கிழங்குகள் ஆகியவை வைக்கோலால் வேயப்பட்ட 52 வயதான வனிதாவின் மண் குடிசையில் இருந்தன. இதுவும் உள்ளூர் சமூக சேவகர்களால் அந்த குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

“குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு உணவு தானியங்கள் அரசால் வழங்கப்பட்டது. அவர்கள் மார்ச் மாதத்தில் ஊரடங்கு துவங்கியதில் இருந்து மாதந்தோறும் இலவச அரிசி பெற்றனர். ஆனால் எனக்கு குடும்ப அட்டை கிடையாது. எனது குடும்பம் என்ன செய்யும்?” என்று வனிதாவின் கணவரான 55 வயது நவ்சு போயர் கேட்கிறார். “அரசும் எங்களுக்கு உதவாது. எங்களின் வேலையும் நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எதை உட்கொள்வோம்?“

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக இடம்பெயர்வோம் என்பதால், நவ்சு, குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் படிக்காதவர். அவர்களின் மகன்கள் 3 பேரில், ஆனந்த்(18), சிவா(12) மூன்றாம் வகுப்பிற்கு பின்னரும், ராம்தாஸ்(16) நான்காம் வகுப்பிற்கு பின்னரும் படிப்பை பாதியில் விட்டுவிட்டனர். இளைய மகன் கிருஷ்ணா (8) இரண்டாம் வகுப்பும், கடைசி மகள் சங்கீதா (4) அங்கன்வாடியும் செல்கின்றனர்.

போயர் குடும்பத்தினர் பால்கர் மாவட்டத்தில் உள்ள வடா நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போரண்டா என்ற கிராமத்தில் வசிக்கின்றனர். அங்குள்ள குடியிருப்பில் தோராயமாக, 8 குடிசைகளில் கட்கரி ஆதிவாசிகள் வசிக்கின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், தொழிலாளர்களின் குடும்பத்தினர் பிவண்டி தாலுகாவில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்காக இடம் பெயர்ந்தனர். சூளையில் வேலை செய்யும்போது, பகலிலும், இரவிலும் அதிக சோர்வாக இருக்கும். வாரமொருமுறை சூளை முதலாளியிடம் இருந்து ரூ.400 முதல் ரூ.500 பெற்று தேவையான மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். சூளையில் பல மாதங்கள் வேலை செய்த பின்னர், வேலைகள் முடிவடையும்போது, அவர்களின் கூலியை கணக்கிட்டு, அவர்கள் பெற்ற முன் பணம் கழிக்கப்படும். அந்த குடும்பத்திற்கு எந்த கடனும் இல்லையெனில், நவம்பர் முதல் மே வரை ஏழு மாதங்கள் உழைத்த பின்னர் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கும்.

Vanita Bhoir had a week's stock of food for her family (here with her daughter Sangeeta and son Krishna) in her straw-and-mud hut
PHOTO • Mamta Pared
Vanita Bhoir had a week's stock of food for her family (here with her daughter Sangeeta and son Krishna) in her straw-and-mud hut
PHOTO • Mamta Pared

வனிதா போயர் ஒரு வாரத்திற்கு தனது குடும்பத்திற்கு தேவையான உணவை தனது வைக்கோல் வேயப்பட்ட மண் குடிசையில் வைத்திருக்கிறார். (அவருடன் அவரது மகள் சங்கீதா மற்றும் மகன் கிருஷ்ணா)

அவர்கள் இந்த தொகையை பருவமழை காலத்திற்கு தேவையான உணவு, மளிகைப்பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்திக்கொள்வார்கள். வீடுகளை சரிசெய்வதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வதற்காக கொஞ்சம் பணம் வைத்துக்கொள்வார்கள். இது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், அவர்களுக்கு பெருங்கடன் இருந்தால், ஒரு ரூபாய் கூட கையில் கிடைக்காது. அடுத்த சில மாதங்களுக்கு செலவு செய்வதற்கு கடன் வாங்க வேண்டும். அதையும் அவர்கள் செங்கல் சூளை முதலாளிகளிடம் இருந்துதான் வாங்க முடியும். அவற்றை திருப்பி செலுத்துவதற்காக, மீண்டும் இடம்பெயர்ந்து அதே கடன் கொடுத்தவரிடம் சென்று வேலை செய்வதை தவிர வேறு வழியில்லை.

கோவிட் – 19ஆல் வழக்கமாக மே மாதம் வரை நடைபெறும் பணிகள் மார்ச் மாதத்திலே நிறுத்தப்பட்டுவிட்டது. வனிதா, நவ்சு மற்றும் குழந்தைகள் வீட்டிற்கு திரும்பிவிட்டனர். “துவக்க மாதங்களில் சம்பாதிக்கும் பணம், எங்களின் வார செலவுகளுக்காக பயன்படுத்தப்படும். பின்னர் வரும் மாதங்களில் நாங்கள் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நாங்கள் வீடு திரும்பும்போது எங்களுக்கு மிஞ்சும். இந்தாண்டு அந்த வேலைகள் முன்னதாகவே முடிந்துவிட்டது. நாங்கள் வீடு திரும்பியபோது, எங்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் கொடுக்கப்பட்டது. அது எத்தனை நாட்களுக்கு வரும்? அந்த தொகையில் எதுவும் இப்போது இல்லை. நாங்கள் வீடு திரும்பியவுடன், அந்த குடிசையை சரிசெய்தோம். மழைநீர் உள்ளே வராமல் தடுக்க பிளாஸ்டிக் கூரையால் மூடப்பட்டுள்ளது. எங்கள் பயணத்திற்கே கொஞ்சம் பணம் செலவாகிவிட்டது” என்று வனிதா  நிதானமாக விளக்குகிறார்.

போராண்டாவுக்கு திரும்புவதற்காக மார்ச் மாத இறுதியில் அவர்கள் சூளையைவிட்டு கிளம்பும்போது, ஒப்பந்தக்காரர் அவர்களின் சம்பளம் மற்றும் செலவு ஆகியவற்றை கணக்கிடவில்லை. அதனால் உண்மையில் அவர்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்றும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை என்ன என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. வனிதா மற்றும் நவ்சு, இருவரும் 5 குழந்தைகள் கொண்ட அவர்கள் குடும்பத்தின் 7 பேருக்கு உணவு வழங்க வேண்டும் என்பதை என்னி வருந்துகின்றனர். அவர்கள் நிலமில்லாத தொழிலாளர்கள், வேலைக்காக காத்திருப்பதை தவிர வாழ்வதற்கு வேறு வழியில்லை. இப்போது அவர்கள் என்ன வேலை செய்ய முடியும். இந்தக்கவலை போயர் குடும்பத்தினர் முன் உள்ளது.

அவர்கள் கிராமத்தில் விவசாய கூலி வேலைகள், குறைவான அளவே கிடைக்கும். அங்குள்ள விவசாயிகளுக்கு சிறிய அளவிலான நிலங்களே உள்ளன. அதிலும், விதைக்கும்போதும், அறுவடையின்போதும் இரண்டு வாரங்கள் மட்டுமே வேலை இருக்கும். அதற்கு தினக்கூலியாக ரூ.150 வழங்கப்படும். சில நேரங்களில் காடுகளில் விறகு சேகரிக்கும் வேலை கிடைக்கும். அப்போது, போயர் மற்றும் மற்றவர்களுக்கு 150 ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால், அருகில் சில நேரங்களில் கட்டுமானப்பணிகள் கிடைக்கும். அதற்கு நாளொன்றுக்கு ரூ.250 கிடைக்கும். ஆனால், அது சில நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.

In Boranda, a group sat talking about the present situation. The annual market, where some of the Katkaris sell mahua (right), was cancelled due to the lockdown
PHOTO • Mamta Pared
In Boranda, a group sat talking about the present situation. The annual market, where some of the Katkaris sell mahua (right), was cancelled due to the lockdown
PHOTO • Mamta Pared

போரண்டாவில் ஒரு குழுவினர் அமர்ந்து நடப்பு சூழல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். (வலது) ஆண்டு சந்தையில் சில கட்கரிகள் மகுவா மலர்கள் விற்பனை செய்வார்கள். அதுவும் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுவிட்டது

வழக்கமாக இதுபோன்ற நெருக்கடி காலங்களில், அவர்களின் குடும்பத்தினர் சூளை முதலாளிகளிடம் இருந்து கடன்பெறுவார்கள். இந்தாண்டு அனைத்து சூளை முதலாளிகளும், செய்த வேலைக்கு மட்டுமே கூலி வழங்க முடியும் என்று கூறிவிட்டனர். இதனால், கடன் கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையும் போய்விட்டது.

போரண்டாவில், சில குடிசைகளின் முன் ஆண்களும், பெண்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை நான் அங்கு சென்றபோது பார்த்தேன். மதியம் 2 மணியிருக்கும் ஊரடங்கிற்கு பின்னர் அரசு பெரும்பாலான குடும்பங்களுக்கு அரிசி கொடுத்தது. ரூ.2 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். இதை மக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். ஆனால், அதற்கு நாங்கள், வங்கிக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரிவ்லி கிராமத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்வது? போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் அங்கு எப்படி செல்வது? என்று வனிதாவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 65 வயதான பாய்ஜி போயர், அவருடன் அமர்ந்திருக்கும் மற்றவர்களிடம் கூறுகிறார்.

அன்று சில குடிசைகளின் வெளியே மகுவா மலர்கள் மலர்ந்திருந்தன. அந்த உலர்ந்த மகுவா மலர்களை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்று நான் கேட்டேன். மழை காலத்திற்கு முன்னர் உரூஸ் பண்டிகை நடைபெறும். அவற்றிற்காக இந்த பூக்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில், நாங்கள் உருளைகிழங்கும், வெங்காயமும் வாங்கிக்கொள்வோம் என்று ஒரு பெண் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் உரூசுக்காக 10 முதல் 12 நாட்கள் மே மாதத்தில் பெரிய சந்தை நடைபெறும். ஊரடங்கு மற்றும் கோவிட் – 19 பரவும் அச்சம் காரணமாக இந்தாண்டு, உரூஸ் நடைபெறவில்லை.

மற்ற ஆண்டுகளில், இங்கு உணவு தானியங்கள், மசாலாப்பொருட்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, மீன், வீட்டு உபயோகப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். போரண்டாவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடா தாலுகாவின் குடூஸ் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து இந்த சந்தைக்காக பெருங்கூட்டம் கூடும். நிறைய வேலைகள் கிடைக்காத காலங்களில், ஆதிவாசி குடும்பத்தினர் இங்கு மகுவா மலர்கள் மற்றும் இயற்கை பசை போன்றவற்றை விற்பனை செய்துவிட்டு,  பருவமழைக்காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். இந்தப்பொருட்களை வைத்து அவர்கள் மழைக்காலத்தை கடத்துவார்கள்.

கையிருப்புள்ள மளிகைப்பொருட்களை வைத்து, அடுத்த சில மாதங்களை கடத்திவிடலாம் இந்தாண்டு என்று வனிதாவும், நவ்சுவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் குடிசையில் உள்ள உணவு தானியங்களின் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது.

தமிழில்: பிரியதர்சினி. R.

Mamta Pared

Mamta Pared (1998-2022) was a journalist and a 2018 PARI intern. She had a Master’s degree in Journalism and Mass Communication from Abasaheb Garware College, Pune. She reported on Adivasi lives, particularly of her Warli community, their livelihoods and struggles.

Other stories by Mamta Pared
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.