பாஸ்கோ  திட்டத்திற்குட்பட்ட இடத்தில்  காவல் துறை  பாலியா  உயர்  தொடக்கப்  பள்ளியில் உள்ள ஆறு  வகுப்பறைகளில் நான்கினை  தன் வயம் எடுத்துக்கொண்டுள்ளது.  இது தவிர மற்ற பள்ளிகளையும்  ஆக்ரமித்துக்கொண்டுள்ளது 

"அச்சமில்லா சுதந்திரம்" மற்றும் "தண்டனையில்லா சுதந்திரப்  பகுதி" போன்ற வாசகங்கள் பள்ளிச் சுவர்களில் காணப்படுகின்றன. இவைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முற்றுப்  புள்ளியாகவே தோற்றமளிக்கிறது . இருப்பினும்  தின்கியா  மற்றும் கோவிந்த்பூரில் உள்ள  இப்பள்ளிகளை காவல் துறையினர் பாஸ்கோவின் மிகப் பெரிய மின் மற்றும் எஃகு  திட்டத்தின் கீழ் ஆக்ரமித்துள்ளதையும் அரசு பயிர் நிலங்களை  எடுத்துக் கொள்வதையும் பார்க்கும்போது இந்த வாசகங்கள் புதிய பொருள் உள்ளதாய் தோற்றமளிக்கிறது.

இது போன்ற கட்டாய முறையில் நிகழ்த்தப்படும் நில அபகரிப்பை எதிர்த்து பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் இதனால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறையத் தொடங்கியதும் ஒரிஸ்ஸா மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  அமைச்சர் அஞ்சலி பெஹெரா அவர்களின் கோபத்துக்கு ஆளாகியது. பள்ளிகளில் குழந்தைகள் இருக்கவேண்டியது விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டது என்பது அமைச்சரின் அசைக்க முடியாத  கருத்து . போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணத்தினாலே மட்டும் இவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என்பது ஏற்புடையதல்ல என்பது இவரது நம்பிக்கை. 

இந்த மாநிலத்தில் வகுப்பறையில் உள்ள கோடிக் கணக்கானவர்களுக்கு போதிய கல்வி கிடைத்திருக்க சாத்தியமில்லை. ஒரிஸ்ஸாவில் ஜூன் மாத இடையிலிருந்தே பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கப் படவில்லை என  உச்ச நீதி மன்ற உணவு கமிஷனர் திரு பிராஜ் பட்நாயக் கூறுகிறார். கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த மத்திய அரசின் ரூபாய் 146 கோடிக்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

திரும்ப கிராமத்திற்கு  நம் கவனத்தை கொண்டு  சென்றால் காவல் துறையினர் இங்கு நடக்கும் போராட்டத்தை அடக்குவதற்காக பள்ளியில் உள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கினை ஆக்கிரமித்துள்ளார்கள் என பாலியா உயர் தொடக்கப்பள்ளி  ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.  7 வது வரை வகுப்புகள் நடக்கும் இந்த பள்ளியில்  ஒவ்வொரு நாள் காலையிலும் குழந்தைகள் வருகின்றனர், நாங்களும் வருகை கணக்கீடு எடுக்கிறோம், பின்பு 1 முதல் 5 வது வகுப்பு மாணவர்களை அனுப்பிவிடுகிறோம். இவர்களுக்கு எவ்வாறு வகுப்பு நடத்துவது ? இப்படி பல பள்ளிகளை காவல் துறையினர் ஆக்கிரமித்துள்ளனர் . பலிதூத் பள்ளியைத்  தவிர பலியா உள்பட நான்கு பள்ளிகளில் காவல் துறையினர் இருக்கின்றனர்.

PHOTO • P. Sainath

பத்து வயது ராகேஷ் பரதன்  மற்றும் பல மாணவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். காவலர்கள் துப்பாக்கியை எங்கள் பெற்றோர்களிடம்  காட்டி நாங்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என மிரட்டுகிறார்கள்

கோவிந்தப்பூரைச் சேர்ந்த பத்து வயது ராகேஷ் பரதன் "பள்ளியில் இவர்கள் எங்களுக்கு பாஜி ரௌட்டின் கதையைக் கற்றுத் தருகிறார்கள் என கோபமாகக் கூறுகிறான். விடுதலை போராளிகளுக்கு ஆதரவாக உதவும் வகையில் பிரிட்டிஷாருக்கு ஆற்றைக்கடக்க  படகை  ஓட்ட மறுத்த ஒரியாவின் பழம்பெரும் ஓட நாயகன் தான் இந்த 13 வயது பாஜி ரௌட்." நீங்கள் இந்த பாஜி ரௌட்டின் வீரத்தையும் நாட்டுக்காக செய்த தியாகத்தையும் பின் பற்ற வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்களுக்காக எதிர்த்து நின்றால் மோசமாக எங்களை சாடுகிறார்கள். 

இவர்களது ஆசிரியர்கள் இதனை எப்படி உணர்வு பூர்வமாக நோக்குகிறார்கள் ? 14 வயது பீஷ்வாம்பர் மோஹான்ட்டி வெறுப்புடன் கூறுகிறான் "  அவர்கள் ( ஆசிரியர்கள் ) என்ன சொல்வார்கள் ? எங்கள் நிலத்தையும்  கிராமத்தையும் இழந்த பின்பு பள்ளிகளும் இருக்கப்போவதில்லை ".  ஒரு ஆசிரியர் கூறுகிறார். " போலீஸ் ரப்பர் குண்டுகளால் தங்கள் பெற்றோர்களை சுடுவதை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். வீடு மற்றும் வெற்றிலைத் தோட்டங்களை இவர்கள் அழிப்பதையும் பார்த்திருக்கிறார்கள் . இவையெல்லாம் ஒரிஸ்ஸாவின் வளர்ச்சிக்கு நன்மை விளைவிக்க என்றும் சொல்கிறார்கள். இந்தப்  பின்னணியில் வேறெப்படி இவர்கள் இருக்க முடியும்.? ஒரு பக்கம் எங்கள் பெற்றோர்களை நோக்கி துப்பாக்கியை காண்பித்து  மறுபக்கம் எங்களை பள்ளியில் இருக்கச்  சொன்னால்  நாங்கள் என்ன செய்வது என வேறு ஒரு மாணவர் கேட்கிறார்.

போராட்டங்களில் குழந்தைகள் ஈடுபடுவதில் கவலையுடன் அக்கறை காட்டும் வகையில் தேசீய குழந்தைகள் பாதுகாப்பு உரிமத்தின் குழு  இங்கு வருகை தந்தது. அவர்கள் தம் வருகையை முடித்து திரும்பும்போது  போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என அறிவுரைத்ததோடு மட்டுமின்றி இக்குழு பள்ளிகளில் முகாம் இட்டிருந்த காவல் துறையினரையும் திரும்பப்  பெறுமாறு அரசை கேட்டுக் கொண்டது. இவ்வாறு அரசு ஆணை பிறப்பித்தால்  நங்கள் வேறு முகாம்களை கண்டுபிடித்து விடுவோம் என வெளிப்படையாக  ஜகத்சிங்க்பூர் காவல் ஆணையர் எஸ் தேவ்தத் சிங் கூறுகிறார்.

இதனிடையில் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இங்குள்ள வட்டார மேம்பாட்டு அலுவலர்  எத்தனை பெற்றோர்களை இது குறித்து சந்தித்துள்ளோம் என்னும் தினசரி அறிக்கை கேட்கிறார் . ஏற்கனவே பள்ளியில் 74 பதிவேடுகளுக்கு மேல் பராமரிக்க  வேண்டிய சூழ் நிலையில், இந்தக் கூடுதல் அறிக்கை வேறு என குறைபட்டு கொள்கிறார்.

கோவிந்த்பூர் உயர் தொடக்கப் பள்ளியில் 240 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் மட்டுமே வழக்கமானவர். மற்றவர்கள் ஷிக்சா சஹாயக் (உதவி ஆசிரியர்கள் ) மற்றும் கன சிக்யக் (கூட்டத்தில் பயில்விப்பவர்). சென்ற மாதம் மற்ற வழக்கமான பொது ஆசிரியர்களோடு காலி இடங்களை நிரப்பும் வகையில் அரசு 20000 ஷிக்சா  சஹாயக் பணி நியமனம் செய்தது. ஆனால் இந்த ஸஹாயக் கல்வி பயிற்றுவிப்பதில் எந்த பயிற்சியும் அனுபவமும் இல்லாதவர்கள்.

பாஸ்கோ இடத்தில உள்ள பஞ்சாயத்துகளில்  பொறுப்பு தலைமை ஆசிரியர்களே உள்ளனர். மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் பல ஆண்டுகளாக  தலைமை ஆசிரியர் பதவி காலியாகவே உள்ளன. மேலும் ஒரிஸ்ஸாவில் 29000 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவி நிரப்பப் படாமலே உள்ளது. இந்த காலி இடங்களை  ஒழுங்காக நிரப்பியிருந்தால் அதிகமாக பணம் செலவாயிருக்குமே என சிரித்துக் கொண்டே ஒரு ஆசிரியர் கூறுகிறார்.  திரிலோச்சன்பூர் எனும் ஒரு கிராமத்தில் 400 மாணவர்கள் ஒரு பொது ஆசிரியர் கூட இல்லாத பள்ளிக்கு செல்கின்றனர்.

PHOTO • P. Sainath

தின்கியா மற்றும் கோவிந்த்பூரில் , பாஸ்கோவின் மின் மற்றும் எக்கு திட்டத்தின் கீழ் அரசின் விளைநிலங்கள் ஆக்கிரமிப்பை  எதிர்த்து மாணவர்கள் பங்கு கொண்ட போராட்டம்

"சர்வ சிக்ஷா அபியான்"  எனும் அமைப்பின் கீழ் செய்யப்பட ஆசிரியர்கள் பணி நியமனம் பரிதாபமான குறைந்த ஊதியத்திலேயே நடந்தது. இதன் கீழ் சிக்ஷா சஹாயக்கு மொத்த சம்பளமாக ரூ 4000 கிடை த்தது. ஆறு  வருடங்களுக்கு  இவர்கள் பணி புரிந்தால் ஜில்லா பரிஷத் ஆசிரியர்களாக அமர்த்தப் படலாம். கல்வி உறுதிப் பாடு திட்டத்தின் கீழ் பணி நியமனம்  செய்யப் படும் ' கன சிக்யக் ' அல்லது தன்னார்வ ஆசிரியர்கள் நிலைமை இன்னும் மோசமானது . மிக குறைந்த  கல்வி  அறிவு  கொண்ட இவர்கள் பாடம் நடத்தவே கூடாது என ஒரு அலுவலர் கூறுகிறார். இவர்கள் மாதம் ரூ 2250 முதல் 2500 வரை சம்பாதிக்கிறார்கள் . இது மகாத்மா காந்தி தேசீய கிராம வேற்றோருவர் லை வாய்ப்பு உறுதித்  திட்டத்தின்  கீழ் ஒரு நிலமற்ற தொழிலாளி 30 நாட்கள் வேலை செய்து  ஈட்டும் ஊதியத்தைக் காட்டிலும் குறைவு. ஆசிரியர்களுக்கு இவ்வாறு  அற்பத்  தொகை கொடுத்து செலவினங்களை குறைப்பது அமைப்புக்கு உதவியிருக்கலாம். ஆனால் இந்த ஆசிரியர் பணிக்கு கல்வி தகுதி உள்ளவர் எங்கனம் சேர்வார்கள்  என்கிறார் மற்றொருவர். 

மாநிலத்தில் கல்வித் தரம் மிக குறைந்ததால்  இது தனிப் பட்ட கல்வி பயிற்சிக்கு (டியூஷன்) பெருமளவில் அடி  கோலியது. சில ஆசிரியர்கள் இம்முறைக்  கல்வி பயிற்சி மூலம் நிறைய சம்பாதித்தனர் . கல்வித் தகுதி இல்லாததால் மற்றவர்களால் இதைக் கூட செய்ய முடியவில்லை. சிலர் கல்வி கற்பிப்பதே இல்லை. இது தவிர மற்ற பிரச்சினைகளும் உள்ளன. இவ்வளவு தடங்கல்களிடையிலும் இந்த குழப்பமான நிலையை சீராக்கி  இந்த அமைப்பை ஒழுங்கு படுத்த ஒரு உறுதியான எண்ணம் கொண்ட கல்விச் செயலாளர் முயற்சியும் பின்னடைவை சந்தித்தது .அபராஜிதா சாரங்கி எனும் இவர் தற்போது அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு தாக்கல் செய்துள்ள  85 க்கும் மேற்பட்ட  வழக்குகளை நீதி மன்றத்தில் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

தின்கியா மற்றும் கோவிந்த்பூரில் தற்போது மாணவர்கள் குறைந்த அளவிலேயே போராட்டத்தில் பங்கு கொள்கின்றனர். இப்போது வேறு பட்ட சிறிய அணி ஒவ்வொரு நாளும் செல்கிறது. இந்த பள்ளி மாணவர்கள் மார்க் ட்வைநின் பொன்மொழியை ஏற்று நடக்கப் போகிறார்கள். அதாவது உங்கள் கல்வியில் பள்ளி தலையிடுவதை என்றும் அனுமதியாதீர் .

இந்த கட்டுரையின் ஒரு பதிப்பு முதலில் ஜூலை 18, 2011 தேதியிட்ட 'தி இந்து'  நாளிதழில் வெளியிடப்பட்டது.

தமிழில்: சுப்ரமணியன் சுந்தரராமன்

சுப்ரமணியன் சுந்தரராமன் கோவையில் பயின்ற ஒரு வேளாண் பட்டதாரி. உர நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேண்டுகோளின் பேரில் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்க்கிறார்.

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath