ஒரே ஒரு பெடல் உள்ள சைக்கிளுக்கு கிஷான் யாதவ்  1200 ரூபாய் கொடுத்திருக்கிறார். அதை வாங்கியதும் அதன் கைப்பிடிகளை (ஹேண்ட்பார்கள்) சற்று மாற்றியமைத்தார். அதற்குப் பிறகு சைக்கிள் செயினை அகற்றினார் அல்லது அதை தளர்வாக மாற்றினார். அமர்ந்து ஓட்டுகிற சீட்டை அவர் வானத்தைப் பார்த்தவாறு மேல்நோக்கி இருக்குமாறு  மாற்றியமைத்தார்.

யாதவ் இப்போது அவரது சைக்கிளை பயன்படுத்துவதற்குத் தயாராகிவிட்டார்.  சைக்கிள் ஓட்டுவது போல அல்ல. செயின் இல்லாத சைக்கிளை எப்படி ஓட்டமுடியும்? ஆனால், அதனை 250 கிலோகிராம் எடையுள்ள நிலக்கரியை 40 முதல் 60 கி.மீ தூரம் அளவுக்கு சுமந்துசெல்வதற்கான தள்ளுவண்டியாகப் பயன்படுத்த முடியும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இந்த வேலையைச் செய்தால் அவருக்கு பத்து ரூபாய்தான் கிடைக்கும். பிஹார் மாநிலத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள  குறைந்தபட்ச கூலியில் இது மூன்றில் ஒரு பங்குதான்.

லால்மதியாவிலிருந்து கோத்தாவுக்கு நடந்துபோவதற்கும் ஓய்வு எடுத்துவிட்டு வியாபாரத்தை முடித்துவிட்டு திரும்புவதற்கும் மூன்று முழு நாட்கள் ஆகும். கடுமையான பணியான இந்த சுய வேலைவாய்ப்பு  எப்படியிருக்கிறது என்று புரிந்துகொள்வதே கடினம். ஆனாலும் கோத்தாவில் உள்ள 3000 குடும்பங்கள் வரை இந்த வேலையை நம்பி வாழ்கின்றன.

கோயில்லாவாலா (நிலக்கரிக்காரர்கள்) அல்லது சைக்கிள்வாலா (சைக்கிள்காரர்கள்) என்று அழைக்கப்படுகிற எல்லோருமே ஒரு  பெடலை அல்லது செயினை கழற்றுவதில்லை. ஆனால், கட்டாயம் அவர்கள் கைப்பிடிகளையும் உட்காரும் சீட்களையும் வானத்தைப் பார்த்து வைப்பார்கள். “அவர்கள் அதைக் கற்றுக்கொள்வார்கள்” என்கிறார் யாதவ். “அந்த வலது பக்க பெடல் உடைந்துபோகும். செயினை தளர்த்தவில்லை என்றால் அதுவே ஒரு தடையாக  மாறிவிடும்”.

யாதவ் தனது நிலக்கரியை விற்றபிறகுதான் சைக்கிளின் பெடலையும் செயினையும் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்., அவர் நிலக்கரியை வாங்கிய லால்மதியாவுக்கே திரும்பி சைக்கிளில் வருவார். அவரைப் பிழிந்து எடுக்கிற இந்த வேலையை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக அவரால் செய்யமுடியாது. சில நேரம் அவர்கள் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்க்கா மாவட்டத்தின் பவுன்சி வரைக்கும் அதே மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜூன் வரைக்கும், தசையைச் சுண்டிஇழுக்கும் பெரும் சுமையை இழுத்துக்கொண்டு நடந்து செல்கிறார்கள். வழக்கமாக இந்த சுமை என்பது 200 முதல் 250 கிலோக்கள் வரை இருக்கும். சிலர் இதைவிட அதிகமான சுமையை இழுப்பதாக சொல்கிறார்கள். பதின்ம பருவத்தில் இருக்கும் சிறுவர்கள் சின்னச் சுமைகளை இழுப்பதும் உண்டு.

அதிகாரிகள் வட்டாரம் இந்த வியாபாரத்தை ‘சட்டவிரோத செயல்பாடு’ என்கிறது. ஏனென்றால் லால் மதியாவில் நடைபெறும் ராஜ்மகால் நிலக்கரி சுரங்கத் திட்டத்திலிருந்து ‘வீணானவை’ என்று வீசி எறியப்பட்டதை சுத்தம் செய்பவர்களிடமிருந்து, அவர்கள் நிலக்கரியை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். அங்கே வெட்டியெடுக்கிற நிலக்கரியில் மூன்று சதவீதம் வரை தரம் குறைவான நிலக்கரியாக இருக்கிறது.

“உண்மையில் இந்த துப்புரவாளர்கள் இல்லை என்றால் அவ்வளவு நிலக்கரியும் பயன் இல்லாமல் வீணாக கிடக்கும். சைக்கிள்காரர்கள் மூலம் அது மிகவும் ஏழைகளிடம் போய்ச் சேர்கிறது. அது அவர்களுக்கு மிகவும் விலை மலிவான ஒரு எரிபொருள். இது தேசிய அளவில் ஒரு சேமிப்புதான்” என்கிறார் அந்த சுரங்கத்தின் ஒரு மேலதிகாரி.

நிலக்கரியை சுரங்கத்திலிருந்து எடுப்பது தொடர்பான சட்டவிரோதமான செயல்பாடுகள் ஏராளம் இருப்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், பணம் பறிப்பதிலும் நிலக்கரியை விற்பனை செய்வதிலும்    மூன்று பிரதான சட்டவிரோத செயல்பாடுகள் உள்ளன.

ராஜ்மகால் நிலக்கரி திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கிற நிலக்கரியில் திருட்டு நடைபெறுகிறது. நிலக்கரி வெளியே கொண்டு செல்லப்படும்போது வழிப்பறி செய்யப்படுகிறது. ஆனால் அதற்காக யாரும் சைக்கிள்காரர்களை குற்றம் சாட்டுவதில்லை.

அதிகாரம் படைத்த நிலக்கரி மாபியா கொள்ளைக்காரர்கள்,  ஊழல் அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத் தொழிலை நடத்துகின்றனர். தினமும் 12ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கிற யாதவ் அல்லது பிரகலாத் பிரசாத் போன்றவர்களால் நிச்சயம் இத்தகைய சட்டவிரோத நிலக்கரித் தொழிலை நடத்தவே முடியாது.

மிகவும் ஏழையான மக்கள்தான் சுரங்கத்தின் கழிவுகளைப் போட்டு வைக்கும்  இடங்களிலிருந்து பயன்படுத்தமுடியாத கழிவு நிலக்கரியை அகற்றி எடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து அல்லது அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதாக்களின் வழியாகத்தான் பிரதானமாக  சைக்கிள்காரர்கள் நிலக்கரியைப் பெறுகின்றனர். பெரும்பாலும் பெண்களாக இருக்கிற அந்த மக்கள்தான். அந்த அதிகாரி கூறியதுபோல ‘தேசிய அளவிலான சேமிப்பு இது’ என்பதற்கு பெரிதும் காரணமானவர்கள்.

ஒரு மூத்த ராஜ்மஹால் அதிகாரி “ஒரு குறிப்பிட்ட நாளில் சுமார் 1,000 சைக்கிள் காரர்கள் செயல்படுகின்றனர். வாரத்திற்கு இரண்டு பயணங்களுக்கு மேல் யாரும் போக முடியாது. ஒரு வருடத்தில் கொய்வல்லாக்கள் எனும் இந்த சைக்கிள்காரர்கள்  ‘சட்டவிரோதமாக’ ஒரு வருட காலத்துக்கு விற்ற நிலக்கரியைக் கணக்கிட்டால், அது லால்மதியாவில் சுரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிற  உற்பத்திக்குச் சமமாக இருக்காது ” என்று ஒப்புக்கொள்கிறார்.

லால்மதியாவுக்கு வெளியே தொடங்கி, 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடாவுக்கு செல்லும் வழியில் சைக்கிள்வாலாக்களைக்  நான் பின் தொடர்ந்து சென்றேன்.. தூரம் அதிகம் இல்லை என்றாலும்,  ஒரு இரவு தங்கித்தான் அவர்கள் போக  வேண்டும். நல்ல பருவ காலங்களிலேயே இந்தப் பயணத்தால்  உடல் சகிக்க முடியாத அளவுக்கு வேதனை தரும். மோசமான வானிலை நிலவும் செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தப் பயணமே நரகமாக இருக்கும் . அவர்கள்  மோசமான சாலைகளில் மெதுவாக நகர்ந்தனர், அங்கு அவர்கள் பெரும்பாலும் தங்கள் முதுகெலும்பு சுமைகளை தடையற்ற சாய்வுகளை உயர்த்த வேண்டியிருந்தது.

கொய்லவல்லாக்கள் 20 பேர்கள் வரை வரிசையாக போவார்கள் . இந்தப் பயணத்தில்  “சக பயணிகள்” அவசியம்.  ஏனென்றால் அவர்களில் ஒருவர் தடுமாறினால், அவர் உதவி இல்லாமல் மறுபடியும் பயணத்தைத் தொடங்க முடியாது. நீர் தேங்கிக் கிடக்கும் குட்டைகளை கடக்கும்போதோ,  அல்லது செங்குத்தான மேடுகளில் ஏறும்போதோ ஒவ்வொருவருக்கும் மற்றவரின் உதவி தேவை.  யாதவ் தனது நண்பர்களின் உதவியுடன் அத்தகைய ஒரு இடத்தை கடந்ததைக் கண்டேன். பின்னர் அவர் தனது சைக்கிளை  ஒரு தடித்த குச்சியை நட்டு பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அடுத்து வருபவர்    அந்த இடத்தை கடப்பதற்கு உதவுவதற்காக  திரும்பிச் சென்றார்.

Group of men from different castes eating lunch beside their coal laden cycles
PHOTO • P. Sainath

கொய்வல்லாக்கள் அவர்களுடன் இரண்டு சாப்பாடுகளை எடுத்துச் செல்கிறார்கள். பழைய  காய்கறிகளைத் அதன் மீது தெளித்த சிறிய அளவு அரிசி சாதம். ஆனால் பருப்பு வகைகள் எதுவும் கிடையாது.  சுமையை எடுத்துச் செனறு விற்கவும் திரும்பி பயணம் செய்து திரும்பவும் தேவையான மூன்று நாள்களில்,  ஒவ்வொருவரும்   மேலும் ஒரு பதினைந்து  ரூபாயை சாப்பாட்டுக்காக செலவு செய்யவேண்டும்

கோடாவின் விளிம்பில் உணவுக்காக ஒரு குழு தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியபோது, நான் இந்தச் செயல்பாடு பல சாதிகளின்  செயல்பாடு என்று அறிந்தேன். பிராமணர்கள் மற்றும் ராஜபுத்திரர்களைத் தவிர்த்து, கோடாவில் காணப்படும் கிட்டத்தட்ட அனைத்து சாதிகளும் இந்த "நிலக்கரியை மறு சுழற்சி செய்தல்" எனும் இந்த செயல்பாட்டுக்குள் உள்ளன. மாண்டோ மன்ஜி ஒரு தலித், பிரஹலாத் மற்றும் அருண் ஷா ஆகியோர் பனியாக்கள். இவர்கள் எல்லாம் இந்தப் பணியில் உள்ளனர்.  யாதவ்கள், கோரிகள், சாண்டல்கள் என்று பலர் உள்ளனர். பொருளாதார தேவை என்பது ஒரு சில சமூகத் தடைகளை ஓரளவுக்கு உடைத்ததாகத்தான்  தெரிகிறது.

அரசாங்கத்தின் முன்னேற்றத் திட்டங்களில் பணிபுரியும் போது கூட இதைவிட அதிகமான  ஊதியம் வழங்கும்போது இந்த மோசமான வர்த்தகத்தில் ஏன் ஒட்டிக்கொள்கிறார்கள்? பீகாரில் தினசரி குறைந்தபட்ச ஊதியம் இப்போது 30 ரூபாய் 50 பைசா என்பது அவர்களுக்குத் தெரியுமா? இப்படி எல்லாம் கேட்டால் ஏளனமாக சிரிக்கிறார்கள்.  “அது ஒப்பந்தக்காரர்களுக்குத்தான் ” என்கிறார் மஞ்சி. "அரசாங்க திட்டங்களில் பணியாற்றுவதற்காக அவ்வளவு பணத்தை அவர்கள் எங்கே கொடுப்பார்கள்? 20 ரூபாய் வேண்டுமானால் தருவார்கள். அதற்கு  நாங்கள் வேறு வேலைகளைச் செய்வோம்” என்கிறார் அவர்.

அவர்களின் சொந்த வர்த்தகத்தின் பொருளாதாரம் திடுக்கிட வைக்கிறது.  மேலோட்டமான அதன் தோற்றம் நம்மை மிகவும் தவறாக கணிக்க வைத்துவிடும்.  நான் எதிர்பாராத வகையில் முதன்முறையாக கிஷென் யாதவை சந்திக்க வேண்டி வந்தபோது, அவர் கோடா நகரில் உள்ள  ஒரு பெண்ணிடமிருந்து 105 ரூபாயை பெற்றுக்கொண்டிருந்தார். வியாபாரத்தில் ஒரே தடவையில் இது ஒரு நல்ல தொகை . விற்பனைக்குப் போதுமான அழகான தொகையாகவும் இது தோன்றியது. அவர்களுடன் பணிபுரிந்த சில நாட்களுக்குப் பிறகுதான் அதில் உள்ள செலவுகள் தெளிவாகிவிட்டன. கொய்வல்லாக்கள் 250-300 கிலோ நிலக்கரி வரை ரூ. 30 க்கு லால் மதியாவில் வாங்குகிறார்ககள். பின்னர், அவர்கள்  உள்ளூர் குண்டர்களுக்கு தலா 5 ரூபாய்  ரங்க்தாரியாக அதாவது வழிப்பறியாகப் போய்கிறது. ரூ. 10 காவல்துறைக்கு ஹப்தாவாக (வழக்கமா ன ‘வெட்டு’ அல்லது லஞ்சம் செலுத்துதல்) என்று சொல்வார்கள் அதாவது ரூ. லால்மதியாவிற்கும் கோடாவிற்கும் இடையிலான ஐந்து பொலிஸ் காவல் மையங்களில் ஒரு சைக்கிளுக்கு  2 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும்  மூன்று நாள் பயணத்தின் போது தேவையான உணவு மற்றும் தேவைகளை வழங்க வேண்டும்.

"ஒரு பயணத்திற்கு கிட்டத்தட்ட 10-15 ரூபாய்கள் வரை  எங்களது சைக்கிளை பராமரிக்க தேவைப்படுகிறது" என்று அருண் ஷா கூறுகிறார். "வண்டியில் உள்ள பேரிங் உருளைகள் விரைவாக களைத்து போகின்றன, மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சைக்கிளின் டியூப்களை மாற்ற வேண்டும், சில நேரங்களில் டயர்கள் கூட மாற்ற வேண்டி வரலாம். ." சுமார் ரூ .75 ஆயிரத்தை செலவழித்த அவர்கள், கோடாவில் முழு சுமைக்கும் சுமார் ரூ .100 முதல் ரூ .105 வரை பெறுகிறார்கள் (பாட்னாவில், ரூ.300 வரை பெறலாம்). இது அவர்களுக்கு ரூ .30 தான். அதாவது மூன்று நாட்களுக்கு அவர்களின் வருவாய் வாரத்தில் இரண்டு முறை மட்டுமே அவர்கள் இதைச் செய்ய முடியும் என்பதால், அவர்களின் வார வருமானம் ஒரு நாளைக்கு ரூ .60-70 அல்லது 8 முதல் 10 ரூபாய்க்கு மேல் இருக்காது. ராஜூனுக்கு தொலைவில் உள்ள சுமைகளுக்கு அவர்கள் ரூ. 150 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைப் பெறலாம். ஆனால் வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் செய்ய இது ஒரு கடினமான பயணம்.

சைக்கிளில் வருபவர்களைதான் காசநோய், கடுமையான நெஞ்சு வலி  மற்றும் சுவாச பிரச்னைகள் போன்ற  நோய்கள் முதலில் பாதிக்கும் என்கிறார் டாக்டர் பி..கே. தாராதியார். தனது நோயாளிகளில் அவர் சரியாக இந்த சைக்கிள்காரர்களை அடையாளம் கண்டுகொள்வார். பிரகலாத் ஷாவுக்கு உடல் நலம் இல்லை என்பதால் அவர் ஒரு மாத காலம் வரை இழந்துவிட்டார்.. காவல் துறையினர் அவரது சைக்கிளை பறிமுதல் செய்வது என்று முடிவு எடுத்து விட்டதால் ஒரு சைக்கிளையும் அவர் இழந்தார்.

ட்ரக் மூலமாக நிலக்கரியை கோத்தாவுக்கு கொண்டுவரும்வகையில் ஒரு முறைமையை சீக்கிரத்தில் உருவாக்க வேண்டும் என்கிறார்கள் மாவட்ட அதிகாரிகள். சைக்கிள் வாலாக்கள் நகரத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல நகரத்துக்கு  உள்ளேயே அவர்களால் வியாபாரம் செய்ய முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்..ஆனால்,  சைக்கிள்வாலாக்கள் இத்தகைய முயற்சி எதுவும் தங்களின் தனித்தன்மையான தொழிலை காலி செய்துவிடும் என்கிறார். அவர்களே உருவாக்கிக்கொண்ட பிழைக்கும் வழி இது. இதிலேயே நாங்கள் இருப்போம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.  கோத்தா பாணியில் சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிப்பதைப்போன்று இருந்தாலும் இந்தப் பணியைத்தான் செய்வோம் என்கிறார்கள் அவர்கள்.

சைக்கிள்காரர்கள்  பற்றி சாய்நாத்தின் பேசும் புகைப்பட தொகுப்பை பார்க்க  இங்கே சொடுக்கவும் .

(நான் இந்த மாவட்டத்தை பார்க்க முதலில் 1993 செப்டம்பரில் வந்தேன். அப்போது அது பீகாரின் ஒரு மாவட்டமாக இருந்தது. 2000மாவது ஆண்டில்  ஜார்கண்ட் மாநிலம் புதிதாக உருவாகும்போது அதன் பகுதியாக தற்போது மாறியிருக்கிறது)

பி. சாய்நாத் எழுதி, பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட, 'Everybody Loves a Good Drought' (ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் விரும்புகிறார்கள்) எனும் ஆங்கில நூலில் இந்தக் கட்டுரை இருக்கிறது. இதன் ஒரு வடிவம்  முதலில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் வெளியானது.

தமிழில்: த. நீதிராஜன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan