"நான் குற்றம் செய்ததற்காக சிறையில் இல்லை. என் நிலத்திற்காக போராடியதற்காக சிறையில் இருந்தேன். அப்போதும் நான் சிறைக்கு பயப்படவில்லை, இப்போதும் நான் சிறைக்கு பயப்படவில்லை", என்று கூறுகிறார் ராஜ்குமாரி பூயா.

ராஜ்குமாரிக்கு சுமார் 55 வயது இருக்கும். உத்திரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த துமா கிராமத்தில் உள்ள பூயா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு கன்ஹார் நீர்பாசன திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். துதி வட்டத்திலுள்ள கன்ஹார் ஆற்றில் அணை கட்டுவதற்கு எதிராக ஆர்வலர்களும் மற்றும் உள்ளூர் சமூகங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடப்பெயர்வு மற்றும்  அந்த அணை அவர்களின் நீராதாரத்தை மாசுபடுத்தும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

செய்தி அறிக்கைகளின்படி அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த போராட்டங்களின் போது காவல்துறையினர் கூட்டத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தவிர மக்களை கைது செய்யவும் துவங்கினர். ராஜ்குமாரி (மேலே உள்ள அட்டைப் படத்தில் இடம் இருந்து இரண்டாவது இருப்பவர்) சில நாட்களுக்குப் பிறகு அழைத்துச் செல்லப்பட்டு, துமாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிர்சாபூரில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சுகலோ கோண்டு, ராஜ்குமாரியைப் போலவே - அகில இந்திய வன உழைப்பாளர் சங்கத்தில் (AIUFWP) உறுப்பினராக இருக்கிறார். அவர்கள் இருவருமே கன்ஹார் போராட்டத்திலும் கலந்து கொண்டனர். "நான் கன்ஹாரில் பிறந்தவள், அம்மக்களுக்கு நான் என்னுடைய ஆதரவை அளிக்க விரும்பினேன். அங்கு காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது நான் அங்கு இல்லை (ஏப்ரல் 14 2015 அன்று காலை 10 மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது). அதன் பிறகு தான் அங்கு சென்றேன். ஆனால் அதற்குள் அது வன்முறைக் களமாக மாறியிருந்தது, எனவே நாங்கள் அனைவரும் வெளியேறி வெவ்வேறு திசைகளில் சென்றோம். ராஜ்குமாரி தனியாகச் சென்றார். நான் என்னுடைய வழியில் சென்றேன்", என்று கூறுகிறார் சுகலோ. (இந்த கதைக்கான நேர்காணல் முடிந்த பின்பு சுகலோ மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் மேலும் காண்க: https://cjp.org.in/sonebhadras-daughter-sukalo/ )

"நான் பல வாரங்களாக வெளியில் தங்கி இருந்தேன்", என்று சுகலோ (மேலே உள்ள அட்டைப் படத்தில் வலது புறத்திலிருந்து இரண்டாவது இருப்பவர்) கூறித் தொடர்ந்தார். எங்கள் வலிகளை புரிந்து கொள்ளும் ஆதிவாசி குடும்பமான எனது தொலைதூர உறவினர் ஒருவர் வீட்டிற்கு நான் 5 மணி நேரம் நடந்து சென்றேன். அங்கு இரண்டு இரவுகள் தங்கியிருந்தேன். பின்னர் அடுத்த வீட்டிற்குச் சென்றேன், அங்கு மேலும் 10 நாட்கள் தங்கியிருந்தேன், அதன் பின்னர் அடுத்த வீட்டிற்குச் சென்றேன்” என்று கூறினார்.

Rajkumari and Sukalo cleaning greens at Sukalo’s house
PHOTO • Sweta Daga

துமா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி பூயா (இடது) மற்றும் மஜௌலி கிராமத்தைச் சேர்ந்த சுகலோ கோண்டு (வலது) ஆகியோர் தங்கள் போராட்டத்தைப் பற்றியும் மற்றும் சிறையிலிருந்த நேரத்தை பற்றியும் பேசுகின்றனர்

சுமார் 51 வயதான சுகலோ, கோண்டு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். துதி வட்டத்தில் உள்ள மஜௌலி கிராமத்தில் வசித்து வருகிறார்.  தான் பயப்படவில்லை என்று அவர் கூறுகிறார். "என் குழந்தைகள் கவலைப்பட்டார்கள் என்பதை நான் அறிவேன். அதனால் அவர்களுடன் தொலைபேசியின் மூலம் தொடர்பில் இருக்க முயற்சித்தேன். இறுதியில் ஜூன் மாதம் எனது வீட்டிற்குச் சென்றேன்", என்று கூறினார்.

அதே மாதத்தின் பிற்பகுதியில், AIUFWP உறுப்பினர்களுடனான சந்திப்புக்காக சுகலோ ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அன்று ஜூன் 30, 2015. விரைவில் (யூனியன்) அலுவலகம் டஜன் கணக்கான போலீசாரால் சூழப்பட்டது, அதை நான் ஆயிரம் பேர் சூழ்ந்ததைப் போல உணர்ந்தேன். அன்று நான் சிறைக்குச் செல்வேன் என்று எனக்குத் தெரியும்...", என்று கூறினார்.

சுகலோ சுமார் 45 நாட்களை சிறையில் கழித்தார். சொல்வதற்கு என்ன இருக்கிறது. சிறை என்பது சிறைதானே. நிச்சயமாக அது கடினமாகத்தான் இருந்தது. எங்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. யாரையும் பார்க்காமல் இருப்பதும் கடினமாக இருந்தது. ஆனால் நான் இந்த இயக்கத்திற்காக தான் சிறையில் இருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன், ஒரு குற்றவாளி என்பதால் அல்ல. என்னுடைய  தோழிகள் கேட்டுக் கொண்ட போதிலும் கூட நான் அதிகம் சாப்பிடவில்லை. எனது மனம் சிறையிலேயே இல்லை. ஆனால் நான் சிறையில் இருந்து பிழைத்து வந்து இருக்கிறேன். அது என்னை பலப்படுத்தியே இருக்கிறது” என்று கூறினார்.

சுகலோ ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரின் கணக்கின்படி அவர் மீது கலவரம், வழிப்பறி மற்றும் ஆயுதம் ஏந்தியது ஆகியவற்றிற்காக சுமார் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜ்குமாரியின் மீதும் இதே போன்ற பல வழக்குகள் துதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற தேதிகளை பெறுவதற்கும், ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கும், அவர் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் 2015 ஆம் ஆண்டு முதல் துதி நகரத்தில் உள்ள ஜூனியர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருக்கிறனர்.

எல்லா வழக்குகளின் விவரங்களும் அவருக்கு நினைவில் இல்லை. அதை அவரது வழக்கறிஞரான ரவீந்திர யாதவிடம் ஒப்படைத்து விட்டார். அவர் மீதான பல வழக்குகள் பொய்யானவை என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார். இருப்பினும், அவர்கள் [AIUFWP உடன் தொடர்புடையவர்களுக்கு சங்கமே சட்ட கட்டணங்களையும் ஏற்றுக்கொள்கிறது - மேலும் காண்க: https://cjp.org.in/cjp-in-action-defending-adivasi-human-rights-activists-in-courts/ ] ஏதாவது செய்திருக்க வேண்டும் இல்லையெனில் காவல்துறை எதற்காக வழக்குகளை பதிவு செய்யப் போகிறது?” என்று கூறுகிறார் வழக்கறிஞர். ராஜ்குமாரிக்கு பெரிய ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. "நீதி சரியானதாக இல்லை", என்கிறார் அவர்.

Rajkumari with her lawyer in his chambers
PHOTO • Sweta Daga
Rajkumari leads a community meeting in her village
PHOTO • Sweta Daga

துதியில் ராஜ்குமாரியுடன் (நடுவில் அமர்ந்திருப்பவர்) இடது பக்கம் அவரது வழக்கறிஞரான ரவீந்திர யாதவ். தனது கிராமத்தில் ஒரு சமூக கூட்டத்தை நடத்திய போது

நான் தொழிற்சங்கத்துடன் பணிபுரிந்ததால் தான் அவர்கள் (காவல்துறையினர்) என்னை குறி வைத்தனர். அவர்கள் என்னை அழைத்துச் சென்றபோது  நான் தண்ணீர் குடிக்க கூட அனுமதிக்கப்படவில்லை. சிறையில் எங்களுக்கு ஒரு தட்டு, ஒரு லோட்டா (குவளை), ஒரு போர்வை, ஒரு கிண்ணம் மற்றும் ஒரு பாய் ஆகியவற்றைத் வழங்கி இருந்தனர். நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்தோம். நாங்களே எங்கள் சொந்த உணவை தயாரித்தோம்.  நாங்களே சிறைச் சாலையை சுத்தம் செய்தோம். எங்களது குடிநீர் அசுத்தமாக இருந்தது. சிறைச்சாலையின் திறன் என்பது 30 பெண்களுக்கு மட்டுமே ஆனால் சில சமயங்களில் கிட்டத்தட்ட 90 பெண்களைக் கூட அடைத்து வைத்திருந்தனர்... சிறையில் ஒரு குழந்தையும் பிறந்தது. சிறையில் அடைக்கப்பட்ட பெண்களிடையே (இடம், உணவு, சோப்பு, போர்வைகள் ஆகியவற்றுக்காக) நிறைய சண்டைகள் நடந்தன. சில நேரங்களில் சிறைக் காவலர்கள் போதிய இடம் இல்லாததால் குளியலறையில் கூட எங்களை தூங்க வைப்பார்கள்", என்று அவர் நினைவு கூர்கிறார்.

ராஜ்குமாரியின் கணவர் முல்சந்த் பூயா. அதே தொழிற்சங்கத்தில் அவரும் உறுப்பினராக இருக்கிறார். அவரது மனைவி சிறையில் இருப்பதை கேள்விப்பட்ட போது அவர் மிகவும் வருத்தப்பட்டதாகக் கூறுகிறார். "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது முதல் எண்ணம் எனது குழந்தைகளை பற்றியதாகத்தான் இருந்தது - நாங்கள் எப்படி சமாளிப்போம்? அவரை ஜாமினில் வெளியே எடுக்க போதுமான பணம் திரட்டுவதற்காக  எங்களது  கோதுமை பயிரை விற்றேன்.  இல்லை எனில் அதை  எங்களது குடும்பத்திற்காக வைத்திருப்பேன். எங்களது மூத்த மகன் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்காக தனது வேலையை விட்டு விட்டார், எங்களது மற்றொரு மகன் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக டில்லிக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். அவர் போனதால் தான் நாங்கள் இத்தகைய இழப்பைச் சந்தித்தோம்", என்று கூறுகிறார்.

ராஜ்குமாரி மற்றும் சுகலோவின் சமூகங்களைப் போலவே நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள ஆதிவாசிகள் பல பத்தாண்டுகளாக திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததால் கடுமையான விளைவுகளை சந்தித்து வந்துள்ளனர். எதிர்ப்பாளர்கள் அல்லது கைதிகள் பெண்களாக இருக்கும் பட்சத்தில், அது இன்னும் கடினமானதாகிறது.

"சிறையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இரட்டை ஆபத்துக்களை கொண்டிருக்கிறது. சமூக நிராகரிப்பு மற்றும் சமமற்ற சட்ட போரின் சுமைகளையும் அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது", என்கிறார் இந்தியாவின் சிறை சீர்திருத்தத்தில் பணிபுரியும் சுதந்திர ஆராய்ச்சியாளரும் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தால்  திறந்த முறை சிறைகளைப் பற்றிப் படிக்க  கௌரவ ஆணையராக நியமிக்கப்பட்டவருமான ஸ்மிதா சக்கரபர்த்தி. "இதுவே ஒரு ஆண் கைதியாக இருக்கும் போது குறிப்பாக அவரே வீட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் ஒரே நபராக இருக்கும் பட்சத்தில், அவரது குடும்பத்தினர் அவரை சிறையில் இருந்து மீட்க தங்களது முழு திறனையும் பயன்படுத்துவர். ஆனால் பெண்கள் கைதிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினரால் விரைவில் கைவிடப்படுகின்றனர். சிறை ஒரு சமூகக் கட்டுப்பாடு. ஒரு கைதி குற்றவாளி என்ற சொல்லை சுமையாக அனுபவிக்கிறார்.  ஒரு கைதி விசாரணையின் கீழ் இருப்பவரா அல்லது குற்றவாளியா அல்லது விடுவிக்கப்பட்டவரா என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல. சமூக நிராகரிப்பால் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது", என்று கூறுகிறார்.

மேலே உள்ள அட்டைப்படத்தில் இடது ஓரத்தில் இருக்கும் லல்தி மற்றும் வலது ஓரத்தில் இருக்கும் ஷோபா ஆகியோரின் கதையை தெரிந்து கொள்ள காண்க: 'எங்களை எடுத்துக்கொள்ளுங்கள், எங்களது இடத்தை எடுத்துக் கொள்வதை விட அதுவே சிறந்தது'

'பெண்கள் பல முனைகளிலும் போராடி வருகின்றனர்'

ராபர்ட்ஸ்கஞ்சில் நடந்த ஒரு பேரணியில் கலந்து கொண்ட பின்னர் சுகலோ 2006 ஆம் ஆண்டு அகில இந்திய வன தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் அதன் பொருளாளராகவும் ஆனார். "நான் வீட்டிற்கு திரும்பி வந்தபோது (பேரணியில் இருந்து) சங்கத்தில் சேர விரும்புகிறேன் என்று என் கணவரிடம் சொன்னேன். ஆனால் (ரிஹாண்டில் உள்ள) அனல் மின் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் நீ எப்படி சேர முடியும், குழந்தைகளை யார் கவனிப்பது? என்று கேட்டார். இது நமக்கு நல்லது தான் என்று நினைக்கிறேன் என்றேன். எனவே அவர் சரி என்று கூறினார்", என்கிறார் புன்னகையுடன்.

சுகலோவும் அவரது கணவர் நானக்கும் விவசாயிகள்; அவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். ஒரு மகன் இறந்துவிட்டார். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மீதமுள்ள இரண்டு மகள்கள்: 18 வயதான நிஷாகுமாரி மற்றும் 13 வயதான பூல்வந்தி ஆகியோர் அவர்களது வீட்டில் இருக்கின்றனர். "நான் முதல் கூட்டத்திற்கு சென்றதில் இருந்தே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தேன். உடனடியாக களத்தில் இறங்கி விட்டேன் எந்த கூட்டத்தையும் தவறவிட்டதில்லை. நாங்கள் ஒரு வலுவான சமூகத்தை கட்டி எழுப்புவதால் இது நன்றாக இருக்கிறது, மேலும் என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பலமானவளாக உணர்ந்தேன். இதற்கு முன்பு நான் எனது உரிமைகளைப் பற்றி நினைத்தது கூட இல்லை. நான் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்று, (வீட்டிலும், விவசாயி ஆகவும்) வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் தொழிற்சங்கத்தில் சேர்ந்த பிறகே எனது உரிமைகளை உணர்ந்தேன். இப்போது அவற்றைக் கேட்பதற்காக நான் அஞ்சுவதே இல்லை", என்று கூறினார்.

Sukalo at the Union office, cleaning dal
PHOTO • Sweta Daga
The members of the Union from Sukalo’s community
PHOTO • Sweta Daga

ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் சுகலோ; மஜௌலி கிராமத்தை சுற்றியுள்ள தொழிற்சங்க உறுப்பினர்கள்

AIUFWP (வன மக்கள் மற்றும் வன தொழிலாளர்களின் தேசிய மன்றம் என்ற பெயரில் 1996 இல் முதலில் துவங்கப்பட்டது) 2013 ஆம் ஆண்டு உறுவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.  இது உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் உட்பட சுமார் 15 மாநிலங்களில் சுமார் 1,50,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 10,000 உறுப்பினர்களுடன் 18 மாவட்டங்களில் இத்தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்களில் சுமார் 60% பேர் பெண்கள் மேலும் அவர்களின் முக்கிய கோரிக்கை கிராம சபைகளின் அதிகாரத்தை அங்கீகரிப்பதன் மூலமும், வன சமூகங்களுக்கு சுயராஜ்யத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் வன உரிமைகள் சட்டத்தை (FRA) செயல்படுத்த வேண்டும் என்பதே. ஆதிவாசி மற்றும் பிற சமூகங்கள் பல தசாப்தங்களாக எதிர்கொண்டு வரும் வரலாற்று பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை நிவர்த்தி செய்வதற்காக FRA 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

"இந்தப் பெண்கள் பலமுனைகளில் போராடி வருகின்றனர்", என்று AIUFWP இன் பொதுச் செயலாளரான ரோமா மாலிக் கூறுகிறார். FRA இச்சமூகங்களுக்கான நில உரிமைகளை வழங்க வேண்டும், ஆனால் அது ஒரு பெரும் போராட்டம். பழங்குடியின பெண்களுக்கு கடுமையான தடைகள் உள்ளன - அவை பெரும்பாலான மக்களுக்கு கண்ணில் தெரிவதில்லை. இப்போது சட்டம் எங்கள் பக்கம் இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இம்மக்களுக்கு நிலத்தைக் கொடுக்க விருப்பமில்லை. சோன்பத்ரா மாவட்டம் இன்னும் நிலப்பிரபுத்துவ மாவட்டம் போல இயங்குகிறது, ஆனால் பெண்கள் தங்கள் நிலத்திற்காக ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர்", என்று கூறுகிறார்.

Rajkumari with her bows and arrow
PHOTO • Sweta Daga

தனது சமூகத்தின் பாரம்பரிய வில் மற்றும் அம்புகளுடன் ராஜ்குமாரி. அவர் தனது நிலத்தில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன் நிலத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் என்று கூறுகிறார்

ராஜ்குமாரி 2004 ஆம் ஆண்டு இத்தொழிற் சங்கத்தில் சேர்ந்தார். ஒரு சிறிய நிலத்தில் அவரும் அவரது கணவர் முல்சந்தும் காய்கறிகளையும், கோதுமையையும், விளைவிக்கின்றனர். மேலும் அவர்கள் விவசாய கூலிகளாகவும் பணியாற்றுகின்றனர். ஆனால் அது அவர்களது குடும்பத்திற்கு உணவளிக்க போதுமானதாக இல்லை. வனத்துறையினரால் எடுத்துக் கொள்ளப்பட்ட - துமாவில் உள்ள அவர்களது சொந்த நிலத்தை 2005 ஆம் ஆண்டு பல குடும்பங்கள் உடன் சேர்ந்து ராஜ்குமாரி மற்றும் முல்சந்த் ஆகியோர் மீட்டனர். ஒரு வருடம் கழித்து மீட்கப்பட்ட இடத்தில் வீட்டைக் கட்டிவிட்டு, பழைய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ராஜ்குமாரி தொழிற்சங்கத்தின் மூலம் நில உரிமைகள் தொடர்பான தனது பணிகளை தொடர விரும்புகிறார்.  வனத்துறையினருக்கு பயப்படுவதால் தனது சமூகத்தில் உள்ள மற்ற பெண்களின் உதவியும் தேவைப்படுகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர் பின் வாங்கி தன் நிலத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. "சக்தி வாய்ந்தவர்கள் ஆதிவாசிகளுடன் விளையாடுகின்றனர். நாங்கள் அவர்களுக்கு பொம்மை", என்று முகச்சுளிப்புடன் கூறுகிறார்.

உத்திர பிரதேச வன அதிகாரிகளுடனான சந்திப்பில் ஆதிவாசிகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகார் அளித்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி அன்று சோன்பத்ராவில் உள்ள சோபன் ரயில் நிலையத்தில் சுகலோ மேலும் இரண்டு நபர்களுடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் மிர்சாபூரில் உள்ள சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். "அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை", என்று ரோமா மாலிக் கூறுகிறார். "ஆனாலும் அவருக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக அவர் சிறை பிடிக்கப் பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது. அவரது நண்பர்கள் கொண்டு வந்த சன்னா மற்றும் பழங்களை கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை", என்று கூறினார்.

சுகலோ மற்றும் மற்றவர்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அக்டோபர் 4 ஆம் தேதி அன்று சுகலோவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களை காரணம் காட்டி அவர்களது விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரும் அவரது சகாக்களும் தொடர்ந்து சிறையிலேயே  இருந்து வருகின்றனர்.

இந்தக் கட்டுரை இந்திய ஊடக விருதுக்கான தேசிய அறக்கட்டளை திட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டது; இதன் ஆசிரியர் 2017 இந்த விருதினைப் பெற்றவர்.

தமிழில்: சோனியா போஸ்

Sweta Daga

Sweta Daga is a Bengaluru-based writer and photographer, and a 2015 PARI fellow. She works across multimedia platforms and writes on climate change, gender and social inequality.

Other stories by Sweta Daga
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose