23 வயது பார்தி காஸ்தேவை பொறுத்தவரை குடும்பம்தான் முக்கியம் 10ம் வகுப்புக்கு பிறகு பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர், தங்கைகள் படிப்பதற்காக வேலை பார்க்கத் தொடங்கினார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த அவர், ஓய்வொழிச்சல் இன்றி வேலை பார்த்தார். அவரது அப்பாவும் அண்ணனும் அப்போதுதான் சற்று ஆசுவாசமடைய முடியும். அவர் சிந்தித்தது அவரது குடும்பத்தை குறித்து மட்டும்தான். அந்த நிலை மே 2021 வரைதான் நீடித்தது.

அதற்குப் பிறகு கவலைப்படவென குடும்பம் இல்லாமல் போனது.

மே 13, 2021 அன்று பார்தி குடும்பத்தினர் ஐந்து பேர், மத்தியப் பிரதேச தெவாஸ் மாவட்டத்தின் நெமாவர் கிராமத்திலிருந்து காணாமல் போயினர். அவரின் சகோதரிகளான 17 வயது ருபாளி, 12 வயது திவ்யா, தாயான 45 வயது மமதா, ஒன்று விட்ட சகோதரி 16 வயது பூஜா, ஒன்று விட்ட சகோதரர் 14 வயது பவன் ஆகியோரும் அவர்களில் அடக்கம். “அவர்கள் எவரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்கிறார் அவர். “ஒரு நாள் கழிந்தும் அவர்கள் வீடு திரும்பவில்லை என்றதும் நாங்கள் பீதியானோம்.”

காணாமல் போனதாக காவல்துறையில் பார்தி புகார் பதிவு செய்தார். காவலர்கள் துப்பு துலக்கத் தொடங்கினர்.

ஒரு நாள், இரு நாளானது, இரு நாள் மூன்று நாட்களாகின. குடும்பத்தினர் திரும்பவில்லை. ஒவ்வொரு நாள் கழியும்போதும் அச்சம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களது வீட்டில் மெளனம் வளர்ந்து கொண்டிருந்தது.

அவரின் மோசமான அச்சங்கள் ஆழமாயின.

Five of Bharti's family went missing on the night of May 13, 2021 from their village, Nemawar in Madhya Pradesh’s Dewas district.
PHOTO • Parth M.N.

பார்தி குடும்பத்தின் ஐந்து பேர், மத்தியப்பிரதேச தெவாஸ் மாவட்டத்திலுள்ள அவர்களின் கிராமமான நெமாவரிலிருந்து மே 13, 2021 அன்று காணாமல் போயினர்

49 நாட்கள் கடந்து விட்டன. 29 ஜூன் 2021 அன்று, கெட்ட செய்தி வந்து சேர்ந்தது. கிராமத்திலேயே செல்வாக்கு மிகுந்த ரஜபுத்திர சமூகத்தை சேர்ந்த சுரேந்திர சவுஹானின் விவசாய நிலத்திலிருந்து ஐந்து உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. வலதுசாரி அமைப்புகளுடன் சவுஹான் தொடர்பு கொண்டவர். பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான ஆசிஷ் ஷர்மாவுக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர்.

“ஆழ்மனதில் அத்தகைய விளைவை நாங்கள் எதிர்பார்த்திருந்தாலும் அந்த செய்தி அதிர்ச்சியைத்தான் அளித்தது,” என்கிறார் கோண்ட் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தின் பார்தி. “ஓரிரவிலேயே ஐந்து குடும்ப உறுப்பினர்களை இழக்கும் துயரத்தை விவரிக்க முடியாது. நாங்கள் அனைவரும் ஏதோ ஒரு அற்புதத்துக்காக காத்திருந்தோம்.”

ஒரே இரவில் நெமாவரின் ஒரு பழங்குடி குடும்பம் ஐந்து பேரை பறிகொடுத்திருந்தது.

சுரேந்திராவையும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆறு பேரையும் காவல்துறை கைது செய்தது.

*****

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடிகளின் மக்கள்தொகை 21 சதவிகிதம். அதில் கோண்டு, பில் மற்றும் சஹாரியா போன்ற சமூகங்கள் அடக்கம். கணிசமான அளவில் இருந்தும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2019-21-ல் பட்டியல் பழங்குடிகளுக்கு எதிராக அதிகமான வன்கொடுமைகள் மாநிலத்தில் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுகிறது தேசியப் குற்றத் தரவுகள் நிறுவனம் (NCRB) பிரசுரித்த Crime in India 2021 ஆய்வு.

2019ம் ஆண்டில் 1,922 வன்கொடுமைகள் பழங்குடிகளுக்கு எதிராக பதிவாகின. இரு வருடங்களில் அது 2,627 ஆக அதிகரித்தது. 36 சதவிகிதம் அதிகம். தேசிய சராசரியான 16 சதவிகிதத்தின் இரண்டு மடங்கு.

2021ம் ஆண்டில் இந்தியாவில் 8,802 குற்றங்கள் பழங்குடிகளுக்கு எதிராக பதிவானது. அதில் 30 சதவிகிதம் மத்தியப்பிரதேசப் பதிவு. 2,627 வன்கொடுமைகள். ஒருநாளில் ஏழு வன்கொடுமைகள். மிகக் குரூரமான வன்கொடுமைகள்தான் தலைப்பு செய்திகள் ஆகின்றன. மற்றபடி மிரட்டல், பணிய வைத்தல் என அவர்களின் அன்றாட வாழ்க்கைகளில் நடக்கும் வன்கொடுமைகள் செய்தியாவதில்லை.

'I can’t describe what it's like to lose five members of the family in one night,' says Bharti from a park in Indore.
PHOTO • Parth M.N.

’ஒரு இரவில் குடும்பத்தின் ஐந்து பேர் பறிகொடுக்கும் துயரத்தை விவரிக்க முடியாது,’ என்கிறார் பார்தி இந்தூரில் ஒரு பூங்காவிலிருந்து

ஜக்ரித் ஆதிவாசி தலித் சங்காதன் (JADS) அமைப்பின் தலைவரான மாதுரி கிருஷ்ணஸ்வாமி சொல்கையில், மத்தியப்பிரதேச பழங்குடி சமூகங்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், செயற்பாட்டாளர்களால் கணக்கெடுக்க முடியாதளவுக்கு அதிகமாக இருப்பதாக சொல்கிறார். “முக்கியமான விஷயம் என்னவென்றால், மிகக் குரூரமான வன்கொடுமை வழக்குகளில் பாஜகவின் அரசியல் ரீதியான ஆதரவு குற்றவாளிகளுக்கு இருக்கிறது,” என்கிறார் அவர்.

சிதி மாவட்டத்திலிருந்து ஒரு குரூரமான காணொளி இந்த வருட ஜூலை மாதத்தில் பரவியது. மது குடித்திருந்த பர்வேஷ் ஷுக்லா, ஒரு பழங்குடி மீது சிறுநீர் கழிக்கும் காணொளி அது. பாஜககாரரான ஷுக்லா, உடனே கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களின் கோபத்தை பெறும் வகையிலான காணொளி இல்லாத சம்பவங்களில் அத்தகைய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. “பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டும் வெளியேற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்,” என்கிறார் அவர். “அதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படும் தன்மையில் இருக்கின்றனர். மேலும், அதிகாரமிக்க சமூகங்கள் அவர்களை அவமதித்து தாக்குவதற்கும் சட்டம் அனுமதிக்கிறது.”

நெமாவரில் பார்தியின் குடும்பத்தினர் கொல்லப்படுவதற்கு, சுரேந்திராவுக்கும் சகோதரி ருபாளிக்கும் இருந்த உறவுதான் காரணமென சொல்லப்படுகிறது.

இருவரும் கொஞ்ச நாட்களாகவே பழகி வந்தனர். ஆனால் அவர்களின் உறவு, சுரேந்திரா வேறோரு பெண்ணை மணம் முடிக்கப் போவதாக அறிவித்ததும் முடிவுக்கு வந்தது. ருபாளிக்கு வியப்பாக இருந்தது. “18 வயதானதும் அவளை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தார்,” என்கிறார் பார்தி. ”ஆனால், உண்மையில் உடல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ள மட்டுமே அவர் விரும்பியிருக்கிறார். அவளை பயன்படுத்திவிட்டு, வேறொருவரை மணம் முடிக்க முடிவெடுத்தார்.”

கோபமடைந்த ருபாளி, சமூகதளத்தில் சுரேந்திராவை அம்பலப்படுத்தப்போவதாக மிரட்டியிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் பிரச்சினையை தீர்க்கலாமென அவரை தன் விவசாய நிலத்துக்கு ஒருநாள் மாலை வரும்படி அழைத்திருக்கிறார் சுரேந்திரா. பவனும் ருபாளியுடன் செல்ல, சற்று தூரத்தில் சுரேந்திராவின் நண்பர் பவனை நிறுத்தியிருக்கிறார். நிலத்தில் தனியான இடத்தில் ஒரு இரும்புத் தடியுடன் காத்திருந்த சுரேந்திராவை ருபாளி சந்தித்தார். அவரை சுரேந்திரா தலையில் தாக்கி, சம்பவ இடத்தில் கொன்றிருக்கிறார்.

பிறகு, ருபாளி தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் பவனுக்கு சுரேந்திரா குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். ருபாளியின் தாய், சகோதரி என வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து வரும்படியும் பவனுக்கு சொல்லியிருக்கிறார். உண்மையில், ருபாளியை சுரேந்திரா அழைத்த விஷயம் தெரிந்து குடும்பத்தில் இருந்த அனைவரையும் கொல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஒவ்வொருவராக, அவர்கள் அனைவரையும் சுரேந்திரா கொன்று, தன் நிலத்திலேயே புதைத்தார். “மொத்தக் குடும்பத்தையும் இந்தக் காரணத்துக்காக கொல்ல முடியுமா?” எனக் கேட்கிறார் பார்தி.

From 2019 to 2021, there was a 36 per cent increase in atrocities against STs in Madhya Pradesh.
PHOTO • Parth M.N.

2019-லிருந்து 2021 வரையிலான இரண்டு வருடங்களில் மத்தியப்பிரதேசத்தில் பழங்குடிகளின் வன்கொடுமைகள் 36 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது

உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டபோது, ருபாளி மற்றும் பூஜா ஆகியோரின் உடல்களில் உடையில்லை. “இருவரையும் வன்புணர்ந்துவிட்டு கொலை செய்திருப்பானென்கிற சந்தேகம் இருக்கிறது,” என்கிறார் பார்தி. “எங்களின் வாழ்க்கை அழிந்துவிட்டது.”

சமீபத்திய NCRB தரவின்படி , மத்தியப்பிரதேசத்தில் 376 வன்புணர்வு சம்பவங்கள் 2021ம் ஆண்டில் நடந்திருக்கின்றன. ஒருநாளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள். அதில் 154 சம்பவங்கள் சிறுவர் சிறுமியருக்கு நேர்ந்தவை.

”இதற்கு முன்னால் பணக்கார வாழ்க்கை ஒன்றும் நாங்கள் வாழவில்லை எனினும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நாங்கள் இருந்தோம்,” என்கிறார் பார்தி. “ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க நாங்கள் கடுமையாக உழைத்தோம்.”

*****

ஆதிக்க சமூகங்களால் பழங்குடிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் பல காரணங்களுக்காக நிகழ்த்தப்படுகின்றன. முக்கியமான காரணமாக நிலத்தகராறு சொல்லப்படுகிறது. பழங்குடிகளுக்கு அரசு நிலம் கொடுக்கப்பட்டபோது, பிழைப்புக்காக நிலவுரிமையாளர்களை அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய தன்மை குறைந்தது. அதனால் கிராமத்திலிருந்த மேலாதிக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

2002ம் ஆண்டில் மத்தியப்பிரதேசத்தின் முதல்வராக திக்விஜய் சிங் இருந்தபோது 3.5 லட்சம் நிலமற்ற தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் நிலமளிக்க வாக்குறுதி அளிக்கப்பட்டது. இத்தனை வருடங்களில் சிலருக்கு ஆவணங்கள் கூட கிடைத்தன. ஆனால் உரிமை மட்டும் பெரும்பாலான இடங்களில் ஆதிக்க சாதியினரிடம்தான் இருக்கிறது.

தங்களுக்கான உரிமைகளுக்காக விளிம்பு நிலை மக்கள் போராடியபோது அவர்களின் உயிர்கள்தான் பறிக்கப்பட்டன.

ஜுன் 2022-ன் பிற்பகுதியில் குனா மாவட்டத்தின் தனோரியா கிராமத்தில் ராம்பியாரி செஹாரியாவின் நிலத்தை அளப்பதற்காக நிர்வாகம் முயன்றது. இறுதியாக நிலத்தின் எல்லையை நிர்வாகம் போட்டது. வாழ்க்கை முழுக்க அவர் கனவு கண்டு கொண்டிருந்தது அந்த நாளுக்காகதான். நிலவுரிமை வேண்டி சஹாரியா பழங்குடி குடும்பம் நடத்திய 20 வருட போராட்டத்தின் பயன் அது.

ஆனால் ஆதிக்க தகாட் மற்றும் பிராமண சமூகங்களை சேர்ந்த இரு குடும்பங்கள் அந்த இடத்தை கையகப்படுத்தி வைத்திருந்தன.

Jamnalal's family belongs to the Sahariya Adivasi tribe. He is seen here chopping soyabean in Dhanoriya.
PHOTO • Parth M.N.

ஜம்னாலாலின் குடும்பம் சஹாரியா பழங்குடி சமூகத்தை சேர்ந்தது. தனோரியாவில் சோயாபீன் வெட்டிக் கொண்டிருந்த படம்

ஜூலை 2, 2022 அன்று நிலத்தை பார்ப்பதற்காக ராம்பியாரி, தன் மூன்று ஏக்கர் நிலத்தை நோக்கி நிலவுரிமையாளர் என்கிற பெருமையுடன் நடந்து சென்றார். ஆனால் நிலத்தில் இரு ஆதிக்க சாதிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தனர். ராம்பியாரி தலையிட்டு, அவர்களை வெளியேற சொல்ல, வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அவர் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டார்.

“நடந்து கொண்டிருப்பதை நாங்கள் கேள்விப்பட்டதும், அவரின் கணவரான அர்ஜுன் நிலத்துக்கு ஓடினார். அவரின் மனைவி அங்கு எரிந்துபோய் கிடந்தார்,” என்கிறார் அர்ஜுனின் மாமாவான 70 வயது ஜம்னாலால். “அவரை நாங்கள் உடனடியாக குனாவிலிருந்த மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவரின் நிலை கவலைக்குரியதாக இருந்ததால், போபாலுக்கு கொண்டு செல்லும்படி சொன்னார்கள்.”

ஆறு நாட்கள் கழித்து, அவர் இறந்து போனார். 46 வயதுதான். கணவரும் நான்கு குழந்தைகளும்தான் அவரை பார்த்துக் கொண்டனர்.  அனைவரும் மணம் முடித்துவிட்டனர்.

சஹாரியா பழங்குடி சமூகத்தை சேர்ந்த குடும்பம், கூலி வேலை கொண்டு பிழைத்துக் கொண்டிருந்தது. “வேறு வருமானம் எங்களுக்கு இல்லை,” என்கிறார் ஜம்னாலால் தனோரியாவின் நிலத்தில் சோயாபீனை வெட்டிக் கொண்டே. “இறுதியில் எங்களுக்கு நிலம் கிடைத்ததும், எங்களுக்கான உணவையேனும் விளைவிக்கலாமென நினைத்தோம்.”

அச்சம்பவத்துக்கு பிறகு ராம்பியாரியின் குடும்பம் அச்சத்தில் தனோரியாவை விட்டு வெளியேறியது. கிராமத்தில் இன்னும் இருக்கும் ஜம்னாலால், குடும்பம் எங்கு இருக்கிறது என சொல்வதில்லை. “நாங்கள் அனைவரும் இந்த கிராமத்தில்தான் பிறந்தோம், வளர்ந்தோம்,” என்கிறார் அவர். “ஆனால் நான் மட்டும்தான் இங்கு இறப்பேன். அர்ஜுனும் அவரது அப்பாவும் திரும்ப இங்கு வருவார்களேன தோன்றவில்லை.”

ராம்பியாரி கொலையில் ஐந்து பேர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். காவல்துறை களமிறங்கி உடனே நடவடிக்கை எடுத்தது.

Jamnalal continues to live and work there but Rampyari's family has left Dhanoriya. 'I don’t think Arjun [her husband] and his father will return,' he says
PHOTO • Parth M.N.
Jamnalal continues to live and work there but Rampyari's family has left Dhanoriya. 'I don’t think Arjun [her husband] and his father will return,' he says
PHOTO • Parth M.N.

ராம்பியாரியின் குடும்பம் தனோரியாவை விட்டுச் சென்றுவிட்டது. ஆனால் ஜம்னாலால் இன்னும் அங்கு வேலை பார்த்து வசித்து வருகிறார். ‘அர்ஜுனும் (அவரின் கணவர்) அப்பாவும் திரும்பி வருவார்களேன தோன்றவில்லை,’ என்கிறார் அவர்

*****

வன்கொடுமைகள் நேரும்போது பாதிக்கப்பட்டோர் நீதி கேட்டு அரசு இயந்திரத்திடம் செல்கின்றனர். ஆனால் செயின் சிங் பிரச்சினையை பொறுத்தவரை, அவரைக் கொன்றதே அரசு இயந்திரம்தான்.

ஆகஸ்ட் 2022-ல் செயின் சிங்கும் அவரின் சகோதரர் மகேந்திர சிங்கும் மத்தியப்பிரதேச விதிஷா மாவட்டத்தில் அவர்கள் வசிக்கும் ராய்பூரா கிராமத்தினருகே இருக்கும் காட்டிலிருந்து பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். “வீட்டுக்கு கொஞ்சம் விறகுகள் தேவைப்பட்டது,” என்கிறார் 20 வயது மகேந்திரா. “என் சகோதரர் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார். நான் பின்னால் அமர்ந்திருந்தேன். கையில் விறகுகளை பிடித்திருந்தேன்.”

விதிஷாவின் அடர்காடுகளுக்கு அருகே ராய்புரா அமைந்திருக்கிறது. சூரியன் மறைந்ததும் அப்பகுதியில் இருள் அடர்ந்திடும். தெருவிளக்குகள் கிடையாது. பைக்கின் விளக்கு வெளிச்சத்தில்தான் அவர்கள் வழி பார்த்து வர முடியும்.

காட்டின் மேடுபள்ளமான சாலையை எச்சரிக்கையாக கடந்த பிறகு பில் சமூகத்தை சேர்ந்த செயின் சிங்கும் மகேந்திராவும் பிரதான சாலையை அடைந்தபோது இரு ஜீப்களில் வன அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். பைக்கின் வெளிச்சம் நேரடியாக ஜீப்களின் மீது அடித்தது.

“என் சகோதரன் உடனே பைக்கை நிறுத்தினான்,” என்கிறார் மகேந்திரா. “ஆனால் ஒரு வன அதிகாரி எங்களை நோக்கி சுட்டார். எங்கள் பக்கத்திலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. நாங்கள் விறகுகளைதான் கொண்டு சென்று கொண்டிருந்தோம்.”

30 வயது செயின் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து அவர் கீழே விழுந்தார். பின்னாடி அமர்ந்திருந்த மகேந்திரா மீதும் குண்டு பாய்ந்தது.  விறகுகள் கையிலிருந்து விழுந்து அவர் தரையில் பைக்கோடு விழுந்து மயங்கினார். “இறந்து போய்விடுவேனென நினைத்தேன்,” என்கிறார் மகேந்திரா. “மேலோகத்தில் மிதந்து கொண்டிருப்பதாக நினைத்தேன்.” மருத்துவமனையில்தான் அவர் கண் விழித்தார்.

Mahendra's (in the photo) brother Chain Singh was shot dead by a forest guard near their village Raipura of Vidisha district
PHOTO • Parth M.N.

மகேந்திராவின் (ஃபோட்டோவில்) சகோதரர் செயின் சிங், கிராமத்தருகே வன அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

விதிஷாவின் மாவட்ட வன அலுவலரான ஓம்கர் மஸ்கோலே, நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். “குற்றஞ்சாட்டப்பட்டவர் இடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்,” என்கிறார். “விசாரணை முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

சகோதரரை சுட்ட வன அதிகாரிக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் மகேந்திராவுக்கு நம்பிக்கை இல்லை. “அவர் செய்ததற்கு விளைவுகள் இருக்குமென நம்புகிறேன்,” என்கிறார் அவர். “இல்லையெனில் என்ன சேதி சென்று சேரும்? பழங்குடியை கொல்வதால் பிரச்சினை இல்லை என்றுதானே! எங்களின் வாழ்க்கைகளுக்கு மதிப்பில்லையா?”

இச்சம்பவம் செயின் சிங்கின் குடும்பத்தை தலைகீழாக்கி விட்டது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் இரண்டு பேரில் அவரும் ஒருவர். இன்னொருவர் மகேந்திரா. ஒரு வருடமாகியும் நொண்டிதான் அவர் நடக்கிறார். “என் சகோதரர் இறந்து விட்டார். காயத்தால் நான் கூலி வேலை அதிகம் செய்ய முடியாது,” என்கிறார் அவர். “அவரின் நான்கு குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலமிருக்கிறது. சொந்த பயன்பாட்டுக்காக சுண்டல் விளைவிக்கிறோம். ஆனால் ஒரு வருடத்துக்கு சுத்தமாக பண வரத்து இல்லை.”

*****

பார்தியும், சம்பவத்துக்கு பிறகு வருமானம் ஈட்ட முடியவில்லை.

அவரின் குடும்பம் நெமாவரில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, கிராமத்தை விட்டு அப்பா மோகன்லால் மற்றும் அண்ணன் சந்தோஷ் ஆகியோருடன் வெளியேறினார். “அங்கு நிலமேதும் எங்களுக்கு இல்லை,” என்கிறார் பார்தி. எங்களின் குடும்பம் மட்டும்தான் இருந்தது. அதுவும் இல்லை என்றானபின், அங்கு வசிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பழைய நினைவுகள் வரும். மேலும் பாதுகாப்பும் கிடையாது.”

Bharti's father and brother wanted to let go of the case and start afresh. 'Maybe they are scared. But I want to ensure the people who killed my family get punishment. How can I start afresh when there is no closure?' she says.
PHOTO • Parth M.N.

பார்தியின் தந்தையும் சகோதரரும் வழக்கை விடுத்து வாழ்க்கையை புதிதாக தொடங்க விரும்புகின்றனர். ‘அவர்கள் பயந்திருக்கலாம். ஆனால் என் குடும்பத்தை கொன்ற மக்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். முடிவு கிடைக்காமல் எப்படி வாழ்க்கையை நான் புதிதாக தொடங்க முடியும்?’ என கேட்கிறார்

அப்போதிலிருந்து பார்திக்கும் மோகன்லால் மற்றும் சந்தோஷுக்கும் முரண்பாடு தொடர்கிறது. அவர்கள் ஒன்றாக வாழவில்லை. “என் உறவினர்களுடன் இங்கு இந்தூரில் நான் வாழ்கிறேன். அவர்கள் பிதாம்பூரில் வாழ்கிறார்கள்,” என்கிறார் அவர். “என் அப்பாவும் சகோதரரும் வழக்கை விடுத்து வாழ்க்கையை புதிதாக தொடங்க விரும்பினார்கள். அவர்கள் அஞ்சியிருக்கலாம். ஆனால் என் குடும்பத்தை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன். முடிவு கிடைக்காமல் நான் எப்படி வாழ்க்கையை புதிதாக தொடங்க முடியும்?”

ருபாளி மருத்துவராக வேண்டுமென ஆசைப்பட்டார். பவன் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். அவர்கள் உண்ண வேண்டுமென்பதற்காக தெருக்களில் பிச்சை எடுக்கக் கூட தயங்காத பார்தி, நீதியைத் தாண்டி வேறெதை யோசிக்க முடியும்?

ஜனவரி 2022-ல் நெமாவர் தொடங்கி போபால் வரை ‘நியாய யாத்திரை’ நடந்தார். ஒரு வாரம் தொடர்ந்த 150 கிலோமீட்டர் பயணத்தை எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. மோகன்லாலும் சந்தோஷும் அதில் பங்கெடுக்கவில்லை. “என்னிடம் அதிகம் அவர்கள் பேசுவதில்லை,” என புலம்புகிறார். “எப்படி இருக்கிறேன் என்று கூட அவர்கள் கேட்பதில்லை.”

இழந்த உயிர்களுக்கு நஷ்ட ஈடாக மத்தியப்பிரதேச அரசாங்கம் 41 லட்சம் ரூபாய் அறிவித்தது. தொகை மூன்றாக பார்தி, மோகன்லால் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கும் மாமாவின் குடும்பத்துக்குமென பிரிக்கப்பட்டது. தற்போது அதை வைத்துதான் அவர் பிழைக்கிறார். கவனம் செலுத்த முடியாததால் வேலையும் போய்விட்டது. குடும்பத்தை பார்த்துக் கொள்ளவென நிறுத்திய கல்வியை தொடர பள்ளிக்கு திரும்பி போக விரும்பினார். ஆனால் அதுவும் வழக்கு முடிந்தபிறகுதான்.

அரசியல் தொடர்புகளால் சுரேந்திராவின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு நீர்த்துப் போக வைக்கப்படுமென பார்தி அஞ்சுகிறார். அது நடக்கக் கூடாதென நம்பிக்கை வாய்ந்த நல்ல வழக்கறிஞர்களை அவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில், பார்தியின் வாழ்க்கையில் ஒன்றைத் தவிர எல்லாம் மாறிவிட்டது: இப்போதும் அவர் குடும்பத்தை பற்றிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : PARI Desk

PARI Desk is the nerve centre of our editorial work. The team works with reporters, researchers, photographers, filmmakers and translators located across the country. The Desk supports and manages the production and publication of text, video, audio and research reports published by PARI.

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan