“ நல்ல கட்டைடா இந்த கோமல்” “அவ எப்படி இருக்கா பாரு” என்று ஆண்கள் கத்துகிறார்கள். பாலியல் கெட்ட வார்த்தைகளை, பெண்களின் உடல் உறுப்புகளை இழிவாகக் குறிப்பிடுகிற கெட்டவார்த்தைகளைச் சொல்லி ஆண்கள் கத்துகிறார்கள். மேடையில் ஆடுகிற 15 வயதான கோமல் என்கிற பெண்ணைத்தான் ஆண்கள் அவளுடைய தோற்றத்தை வைத்தும் உடல் நிறத்தை வைத்தும் சீண்டுவார்கள். “மேடையின் முன்னே இருக்கும் ஆண்களில் சிலர் எனது கவனத்தை ஈர்ப்பதற்காக போட்டி போடுவார்கள். அவர்களில் ஒருவரை நான் பார்த்தால் அவரது நண்பர் ஏமாற்றத்தில் கத்துவார். அவனைப் பார்க்காதே. அவனுக்கு பெண் நண்பர் இருக்கிறார். என்னைப் பார் என்று கத்துவார்” என்கிறார் கோமால்.
மங்களா பான்சோடே மற்றும் நிடின்குமார் தமாஷா மண்டல் ஆகியவை தமாஷா என்று மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் அழைக்கப்படும் நடனத்தை கிராமங்களில் நடத்துகிற நடனக் குழுக்கள். அந்த குழுக்களைச் சேர்ந்த பெண் நாட்டியக் கலைஞர்கள் அவர்களில் யாரைப்பார்த்து அதிகமானவர்கள் பாராட்டுகிறார்கள், கவரப்படுகிறார்கள் என்பதில் போட்டி போடுவார்கள். சத்தமாக விசிலடிக்குமாறும் சத்தமாக கேலி செய்யுமாறும் அவர்கள் ஆண்களை வேகப்படுத்துவார்கள் என்கிறார் 18 வயதான காஜல் ஷிண்டே. “ என்னா சாப்பிடலையா, உடம்புக்கு நலம் இல்லையா” என்றும் அவர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். “எங்களுக்கு கேட்கவில்லை” என்று அவர்கள் தங்களின் காதுகளைக் காட்டிச் சொல்வார்கள்.
கோமல் மாதிரியே காஜல் ஒரு முன்னணி நாட்டியக் கலைஞர். அவர்கள் இரண்டு பேரும் தமாஷா நாட்டியத்தின் மூத்த கலைஞர் மங்களா பான்சோடேவின் தலைமையில் இயங்குகிற நடனக் குழுவில் வேலை செய்கிறார்கள். அந்தக் குழுவில் அவர்களோடு கலைஞர்களும் தொழிலாளர்களுமாக சுமார் 150 பேர் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற ஒரு கிராமத்து கலைதான் தமாஷா. நடன நிகழ்ச்சிகளை இந்த நடனக் குழுக்கள் கிராமம் கிராமமாக பயணம் செய்து நடத்துகின்றன. செப்டம்பர் முதல் மே மாதம் வரைக்குமான காலம்தான் இந்த நடனங்களை மக்கள் விரும்பி பார்ப்பதற்கான பருவகாலம். அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ தினமும் இந்தக் குழுக்கள் கிராமம் கிராமமாக போய்க்கொண்டே இருப்பார்கள். இந்த நடனக் காட்சிகள் இரவு 11 மணி அளவில் தொடங்கி அதிகாலை வரையில் நடைபெறும். தமாஷா நடனம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு மணிநேரங்களுக்கு முன்பாக திறந்த வெளியில் போடப்படுகிற மேடையில் நடனம் நடைபெறும். மங்களாடாய் நாட்டியக் குழு என்பது மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு நாட்டியக் குழு. டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கும் போதுமான ஆதாயம் கிடைப்பதற்கும் மற்ற நடனக்குழுக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (பார்க்க: ‘ Tamasha is like a jail that I want to stay in’ மற்றும் Tamasha: transformed but still travelling )
இந்த நிகழ்ச்சிகளில் மேடை மிகவும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். வண்ண வண்ண விளக்குகள். பெரிய பெரிய ஒலிபெருக்கிகள். மேடையின் அனைத்துப் பக்கங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையின் முன்புறத்தில் பலவிதமான எந்திரங்கள் நெருப்பைக் கக்குவதுபோல அமைக்கப்பட்டிருக்கும். நாடகத்தின் மிக முக்கியமான உணர்ச்சிபூர்வமான தருணங்களில் அவை நெருப்பை வெளிப்படுத்தும். இரும்புக் கம்பிகள் மேடைகளில் ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரும்புக் கம்பிகளில் பெண் நாட்டிய கலைஞர்கள் ஏற வேண்டியிருக்கும். “அந்த நேரங்களில் இரும்புக் கம்பிகள் மின்சார அதிர்ச்சியை எங்களுக்குக் கொடுக்கும். நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்கிறார் கோமல். கோமலின் வீடு அஹ்மத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷேவ்கான் தாலுகாவில் இருக்கின்ற ஷேவ்கான் கிராமத்தில் இருக்கிறது.
ஒரு நடனக் குழுவின் வெற்றி என்பது அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வாங்குகிற கட்டணச் சீட்டுகளின் விற்பனையைப் பொறுத்து இருக்கிறது. அதுவும் எவ்வளவு அதிகமான சத்தத்தில் பங்கேற்பவர்கள் பாராட்டுகளை தருகிறார்கள் என்பதைப் பொருத்தும் இருக்கிறது. நாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைச் சத்தமாக விசிலடிக்குமாறு கேட்டுக் கொள்வோம். ஏனென்றால் பொதுமக்கள் சந்தோஷப்பட்டால்தான் எங்களுடைய தமாஷா நிகழ்ச்சிக்கு மேலும் மேலும் ஆற்றல் கிடைக்கும். என்கிறார் காஜல்.
மக்களுக்கு ரொம்பவும் பிடித்த பாடல்களுக்கு ஆடும்போது “இன்னொரு தடவை, இன்னொரு தடவை” என்று நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கத்தும்போது நடனக் கலைஞர்கள் அதற்கு கட்டாயம் சம்மதிக்கவேண்டும். “நாங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம். நாங்கள் அவர்களைச் சிரிக்க சிரிக்க வைக்கிறோம். அவர்களை மகிழ்ச்சியோடு இருக்க வைக்கிறோம். அவர்களின் பிரச்சனைகளை அவர்கள் மறந்து போகுமாறு நாங்கள் செய்கிறோம்” என்கிறார் மங்களாட்டாய். தற்போது அவருக்கு வயது 66.
அதனால், முக்கியமாக பெண் நாட்டியக் கலைஞர்கள் மிக மிகத் தீவிரமான முறையில் தங்களுடைய திறனை வெளிப்படுத்த வேண்டும். தரக்குறைவான பேச்சுக்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். பங்கேற்பாளர்கள் சத்தம் போட்டு அவர்களை கேலி பேசுவதை உண்மையில் அவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் கூட தங்களுக்கு பிடிப்பதை போல காட்டிக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களோடு கலந்து உரையாடுவது பல நேரங்களில் தொந்தரவுகளை கொண்டு வரும். நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகோ அதற்கு முன்பாகவோ ஆண்கள் தேவையற்ற முறையில் நடன கலைஞர்களை அணுகுவார்கள். அந்த நேரங்களில் கோமல் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக அவர்களிடம் சொல்வார். “எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன என்றும் சில நேரங்களில் நான் பொய் சொல்வது உண்டு” என்று சொல்லியும் அவர் சிரிக்கிறார். அவரது அப்பா ஒரு நடனக் குழுவில் தாளாளராக இருக்கிறார். அவரது அம்மா ஒரு நடனக் குழுவில் கலைஞராக பணியாற்றி கடந்த வருடம் தான் ஓய்வு பெற்றுவிட்டார். கோமல் ஏழு வயதாக இருக்கும் போதே மேடையில் கிருஷ்ணரின் வேடத்தை நிகழ்த்தியிருக்கிறார். 12 வயதிலேயே அவர் முழுநேரமாக வேலை செய்வதற்காகப் பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டார். அவரின் சகோதரி ராமாவுக்கு 28 வயது. அவரும் இதே நடனக் குழுவில் ஒரு நடனக் கலைஞராகவே இருக்கின்றார்.
கோமலும் ராமாவும் மற்ற கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகிறவர்களில் ஒரு மனிதன் நிகழ்ச்சி எங்கெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தொடர்ந்து வருகிறான் என்றால் அது ஒரு பிரச்சனை வரப்போகிறது என்பதற்கான அறிகுறி என்று பார்க்கிறார்கள். ஆண்கள் பெண்களை அணுகி செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்பார்கள். வழக்கமாக இது உடல்ரீதியான கிண்டல்களுக்கு கொண்டு போகக் கூடிய விஷயம். இது போன்ற கோரிக்கைகளை நாங்கள் தவிர்த்து விடுவோம். அத்தகைய சூழ்நிலைகளையும் நாங்கள் தவிர்த்து விடுவோம். செல்பி என்கிற சுய படங்களை எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் மறுத்து விடுகிறோம் என்கிறார்கள் அவர்கள். “ஒரு மனிதன் எங்களைப் பின் தொடர்கிறான் என்றால் நாங்கள் மேனேஜரின் உதவியை கேட்க வேண்டும்” என்கிறார் கோமல். .
இது நாகரிகமற்ற தொழில் அல்ல
அதே நேரத்தில் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தையும் கலைஞர்கள் என்ற அங்கீகாரத்தையும் தமாஷா அவர்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதை பற்றியும் பெண்கள் பேசுகிறார்கள். நடனமாடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். எனது பள்ளியில் நான் நடனத்திற்கான முதல் பரிசை ஒருமுறை வாங்கியிருக்கிறேன். தமாஷா நடனத்தில் மிகுந்த சந்தோஷத்தோடு எனது நேரத்தைப் போக்குகிறேன் என்கிறார் காஜல். இந்தத் தொழில் கலைஞர்களுக்கு அவர்கள் தங்களுடைய திறனை நடத்திக் காட்டுவதற்கான ஒரு இடத்தையும் தருகிறது.
நடனக் குழுவில் உள்ள 150 பேரில் ஏறத்தாழ 25 பேர் பெண்களும் இளம்பெண்களும். தமாஷா நிகழ்ச்சி ஆண்களால் நடத்தப்படுகின்ற ஒரு இறை வணக்கப்பாடலோடு தொடங்குகிறது. அதன்பிறகு காவ்லான் எனப்படும் நடன நிகழ்ச்சி இருக்கும். கிருஷ்ணனும் கோபிகைகளும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதைப் போன்ற நடன நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சிக்காக பெண்கள் முன்னதாகவே தைக்கப்பட்டிருக்கிற ஒன்பது கெஜம் புடவைகளை அணிந்து தயாராக வேண்டும். அவற்றை அணிந்து நடித்துவிட்டு அடுத்த அவர்களின் காட்சிக்கான உடைகளை மாற்றுவதற்காக ஒப்பனை அறைகளுக்கு ஓடிப்போய் தயாராகி வரவேண்டும். ஒவ்வொரு நடனக் கலைஞரும் ஏழு, எட்டு பாடல்களுக்கு தனது திறமையைக் காட்ட வேண்டும். அவர் முன்னணி நடனக் கலைஞராக இருந்தாலும் சரி, பின்னணியில் ஆடுகின்ற நடனக் கலைஞராக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஏழு, எட்டுப் பாடல்களுக்கு தனது திறமையைக் காட்ட வேண்டும். இந்தப் பாடல்கள் வழக்கமாக பாலிவுட் பாடல்களாகவும் சில மராத்தி மொழி படங்களின் பாடல்களாகவும் சில பாப்புலர் போஜ்பூரி பாடல்களாகவும் இருக்கும்.
கிராமத்தில் இருப்பவர்கள் பொதுவாக தமாஷா நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்ட வாழ்க்கை முறையை நாகரிகமற்றதாகக் கருதுகிறார்கள். தமாஷா நடனக் குழுக்களில் வேலை செய்கிற பெண்களை அவர்கள் உயர்வாக பார்ப்பதில்லை. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் பாலியல் தொழிலாளிகளைத் தரக்குறைவாகக் குறிப்பிடும் சொற்களைப் பயன்படுத்தி எங்களை அழைப்பார்கள். அது போன்ற நேரங்களில் நாங்கள் கோபப்பட்டு விடாமல் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும் என்கிறார் நடனக்கலைஞர் சாரதா காடே. 43 வயதான அவர் சங்கிளி மாவட்டத்தின் தாஸ்க்யான் தாலுகாவில் உள்ள துல்கான் கிராமத்திலிருந்து இந்த நடனக் குழுவுக்கு வந்திருக்கின்றார். “நாங்கள் அவர்களைக் கேட்கிறோம். அவர்களுக்கு அம்மாக்கள், சகோதரிகள் இல்லையா? எங்களிடம் அவர்கள் அந்த மாதிரியான தரக்குறைவான வகையில் எப்படி பேசுவார்கள்? என்று கேட்போம். “எங்கள் பெண்கள் உங்களைப் போன்றவர்கள் அல்ல. நீங்கள் ஏன் நிலையான வேறு ஒரு வேலையைத் தேர்வு செய்யக்கூடாது தமாஷா நடனக் குழுவில் நடிப்பதற்குப் பதிலாக? ” என்று அவர்கள் எங்களைக் கேட்பார்கள். அதன் பிறகு “ நாங்கள் இதுவும் கூட ஒரு வேலைதான்” என்று அவர்களுக்குச் சொல்லுவோம் என்கிறார் அவர்.
தொடர்ச்சியான, ஓய்வே இல்லாத, கடுமையான வேலைமுறை, எட்டு மாதங்கள் பணி புரிய வேண்டும் என்ற கட்டாயம் ஆகியவை இதில் பணியாற்றும் பெண்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றன. குறிப்பாக, சின்ன குழந்தைகளை வைத்து இருக்கின்ற பெண்களுக்கு மிகவும் கடினம். “இத்தகைய தடைகள், சிரமங்கள் இருந்தாலும் அதையும் மீறி வந்து சேர்கிற பெண்களுக்கு நாங்கள் கட்டாயம் அதிகமான ஊதியம் அளிக்க வேண்டும்” என்கிறார் அனில் பான்சூடே. அவர்தான் மூத்த கலைஞர் மங்களாட்டாய் அவர்களின் மகனும் அந்த நடனக் குழுவின் மேனேஜர் ஆகவும் இருக்கின்றார். நடனக் குழுவில் பெண் கலைஞர்களுக்கு 2017 - 2018 ஆண்டு காலகட்டத்திலிருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து சம்பளங்கள் தொடங்குகின்றன. எத்தனை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். அவருடைய அனுபவம், திறன்கள் ஆகியவற்றைப் பொருத்து இந்த சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. முன்னணி கலைஞர்களாக இல்லாத மற்ற கலைஞர்களுக்கு அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 16 ஆயிரம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
பல நேரங்களில் இந்த ஒரே நிலையான வருமானம் மட்டும்தான் ஒரு குடும்பம் சார்ந்து இருக்கக்கூடிய வருமானமாக இருக்கிறது. காஜல் ஷிண்டே முன்னணி நடன கலைஞர்களில் ஒருவர். அவரது சகோதரி ஜோத்ஸ்னா 28 வயதானவர். எட்டு பேர் கொண்ட அவர்களின் குடும்பத்தை இந்த நடனக் குழுவின் மூலம் வருகின்ற வருமானத்தின் மூலமாகவே பராமரிக்கிறார்கள். . ஆறு வருடங்களுக்கு முன்பு 12 வயதில் இந்த நடனக் குழுவில் காஜல் சேர்ந்தார். அவருடைய சகோதரி ஜோத்ஸ்னாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு விலகி போய்விட்ட பிறகு இதில் வந்து சேர்ந்தார். அவருடைய வருமானம் என்பது கிராமத்தில் அவரது அம்மாவோடு வசிக்கிற பத்து வயது மகனையும் ஏழு வயது மகளையும் வளர்ப்பதற்குப் பயன்படுகிறது.
“எனது மகள் குழந்தையாக இருக்கும் போது அவளுக்கு நான் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது அவளை என் அம்மாவிடம் விட்டுவிட்டு குழுவில் சேர வேண்டியிருந்தது’ என்கிறார் ஜோத்ஸ்னா. அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் உறுதியான, நிலைத்த பாதுகாப்புடன் கூடிய வாழ்க்கையை அடைந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதுவரைக்கும் திருமணம் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக காஜல் கூறுகிறார். குழுவில் இணைந்து மேடைகளில் நடனம் ஆடப் போகிறேன் என்று அவளது அம்மாவிடம் அவர் கூறிய போது அவரது அம்மா இந்த யோசனைக்கு எதிராக இருந்தார். ஆனால், தமாஷா நிகழ்ச்சியில் நடனமாடுதல் என்பது நாகரிகக் குறைவானது அல்ல என்று அவரது மனதிற்கு ஏற்ற வகையில் பேசி சமாதானம் செய்திருக்கிறார்.
தனிப்பட்ட தேவைகளையும் வலியையும் புறக்கணித்தல்
தமாஷா நடனக் கலைஞர்கள் ஒரு வருடத்தில் ஏறத்தாழ 210 நாட்கள் பயணம் செய்கிறார்கள். செப்டம்பர் மாதத்திற்கும் மே மாதத்திற்கு இடையிலான காலத்தில் இந்தப் பயணங்கள் நிகழ்கின்றன. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பெட்டிகளின் மீது வாழ்கிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்கிற நேரங்களில் உறங்குகிறார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு போகும் போது இத்தகைய முறையில்தான் வாழ்க்கை நகர்கிறது. திறந்த வெளியில் குளிக்க வேண்டிய கட்டாயமான சூழலுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். அவர்களால் பொது குளியலறையைக் கண்டுபிடிக்க முடியாத நேரங்களில் திறந்தவெளியில்தான் குளிக்கிறார்கள். “நடனக் குழு என்பது ஒரு குடும்பத்தை போல” என்கிறார் சாரதா. ஒரு தற்காலிகக் கொட்டகையில் பெண்கள் உடை மாற்றும் பொழுது ஆண்கள் வெளியில் போய் நிற்பார்கள் அல்லது வேறு திசையில் திரும்பி நின்று கொள்வார்கள். திறந்தவெளியில் நாங்கள் உடைகளை மாற்ற நேரும்போது ஆண்கள் வேறு திசையில் கவனிப்பது போல திரும்பி நின்று கொள்வார்கள். ஆனால், அந்த நேரத்திலும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்கிறார் சாரதா.
தற்காலிகக் கொட்டகைகளில் நாங்கள் உடைகள் மாற்றும்போது பல நேரங்களில் கிராமத்தினர் எட்டிப் பார்ப்பதற்கு முயல்வார்கள் என்கிறார் கோமல். அந்த நேரங்களில் நான் அவர்களைச் சபிப்பேன். வெளியேறுங்கள் என்று திட்டுவேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை என்றால் எனது செருப்பை எடுத்து அவர்கள் மீது வீசி எறிவேன். பிரச்சனை கையை மீறி போகிறது என்றால் தங்களுடன் இருக்கிற ஆண்களின் உதவியை கேட்பார்கள் அல்லது நடனக் குழுவின் மேனேஜரிடம் தெரிவிப்பார்கள் அல்லது வழக்கமாக இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும் போது பாதுகாப்புக்காக வந்திருக்கின்ற காவலர்களிடம் இது பற்றி தெரிவிப்பார்கள்.
பேருந்துகளில் பயணங்கள் செய்துகொண்டு கிராமத்தை விட்டு கிராமம் நகர்ந்து போய்க் கொண்டிருக்கிற நேரங்களில் மாதவிலக்கு நாட்கள் வந்துவிட்டால் பொது கழிப்பறை எங்காவது தென்படுகிறதா என்று நாங்கள் பார்ப்போம் என்கிறார் சாரதா. ஒவ்வொரு மாதவிலக்கு நாட்களின் போதும் நாம் வீட்டில் இருக்க மாட்டோமா என்று ஏங்குவேன் என்கிறார் கோமல். இந்த நேரங்களில் தனிமையை விரும்பினாலும் எப்படியோ சமாளித்துக்கொள்கிறார்கள். தமாஷாவில் முக்கியமான பங்கு இருந்தால் மாதவிலக்கு வலிகளினூடே வேலை செய்தாக வேண்டும் என்கிறார் அவரது மூத்த சகோதரி ரமா. ”பல பாடல்ள் அல்லது முக்கிய கதாப்பாத்திரம் இருந்தால் வலியிருந்தாலும் ஓய்வெடுக்க முடியாது. எவ்வளவு தான் எங்களுக்கு உடல்நலமில்லாமல் இருந்தாலும் கூட நாங்கள் கட்டாயம் மேடை ஏறித்தான் ஆகவேண்டும்” என்கிறார் அவர்.
ரமாவும் ஒரு முன்னணி நடன கலைஞர் தான். அவருக்கு பக்தி எனும் பெயரில் இரண்டு வயது மகள் இருக்கிறார். “நான் அவளை எனது வயிற்றில் சுமந்த போது வழக்கமான நடனக் குழுவின் சீஸன் முடியும் வரை வேலை செய்தேன். நடனக் குழுவின் சீஸன்களுக்கு இடையில் நாங்கள் எடுத்துக் கொள்கின்ற சிறு இடைவேளை காலகட்டத்தில் அவள் பிறந்தாள். பிரசவம் ஆகி ஒன்றரை மாதங்களிலேயே நான் உடனே எனது நடனக் குழுவுக்கு திரும்பி வந்துவிட்டேன். பிரசவ கால ஓய்வு என்பது எனக்கு வெறும் 45 நாட்கள் மட்டுமே” என்கிறார் அவர். கடந்த வருடம் வரை ரமாவின் அம்மா விமல் அதே நடனக் குழுவில் ஒரு பாடகியாக இருந்தார். குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கு அவர் உதவியாக இருப்பார். “இந்த வருடம் குழந்தையைக் கவனித்துக் கொள்வது என்பது மேலும் கூடுதலான கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால் எனது அம்மா தற்போது வீட்டில் இருக்கிறார். நான் மேடையேறும் போது பக்தி அழத் தொடங்கினால் பிரச்னை. அவளை விட்டுவிட்டு மேடைக்கு செல்வது என்பது மிகவும் சிரமமான விஷயம். நான் திரும்பி வரும் வரையில் அவளது அழுகையை நிறுத்தமாட்டாள்” என்கிறார் ரம்யா.
ஒரு குழந்தையின் அப்பாவும் அதே நடனக் குழுவில் வேலை செய்கிறார் என்றால் குழந்தையை பார்த்துக் கொள்வதில் சிறிய உதவி கிடைக்கிறது. அம்மா அல்லது அப்பா யாரோ ஒருவர் மேடையில் இருந்தால் மற்றொருவர் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியும்.
பாடல்களையும் குழந்தைகளையும் மேடையில் பிரசவித்தல்
விதாபாய் நாராயனோகர் என்கிற மூத்த கலைஞர் மேடையிலேயே பிரசவம் பார்த்த கதை, தமாஷாவில் மிகப் பிரசித்தம். நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அவர் தனக்கு பிரசவ வலி ஏற்படுவதை உணர்ந்தார். அதன்பிறகு அவர் அவளது மகளிடம் அவர் வந்து போக வேண்டிய காட்சிகளுக்கு இடையே இருக்கின்ற பாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பிறகு கதை இப்படி போகிறது: தற்காலிக கொட்டகையின் பின்புறத்தில் எந்த ஒரு உதவியும் இல்லாமல் அவர் தனது சொந்தக் குழந்தையை தானே பிரசவித்து கொள்கிறார். அவர்தான் மங்களாட்டாயின் சகோதரர் கைலாஷ் சவாந்த். தான் பெற்றெடுத்த குழந்தையை ஒரு போர்வையில் சுருட்டி வைத்துவிட்டு அவர் திரும்பவும் மேடையின் மீது ஏறி மீதம் இருக்கின்ற தமாஷா நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டுத்தான் கீழே இறங்கினார்.
விதாபாயின் மூத்த மகள்தான் மூத்த கலைஞர் மங்களாட்டாய். அவருக்கும் அதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. அவரது கடைசி மகன் நித்தி 1976இல் பிறந்தபோது அது ஏற்பட்டது. “நாங்கள் ஒரு வரலாற்று நடன நிகழ்ச்சியை ஒரு கிராமத்தில் நடத்திக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்தில் வருகின்ற ஒரு சண்டைக் காட்சிக்கு நடுவில் எனது கணவர் எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எனக்கு தெரியப்படுத்தினார். அப்போது தான் நான் எனக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன்.”
“எனக்கு என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்பதையே மறந்து விடும் படியாக நான் முழுமையாக நடனத்தின் காட்சியில் முழுக்க ஒன்றிப்போயிருந்தேன். எனது பிரசவ வலியை உணர்ந்த போது எனக்கு மயக்கமாக இருந்தது. நான் மேடையின் பின் பகுதிக்கு சென்றேன். கிராமத்தில் இருந்த சில பெண்கள் நான் பிரசவம் ஆவதற்கு எனக்கு உதவினார்கள். பிரசவம் ஆன பிறகு நான் எனது நாட்டிய உடைகளை அணிந்து கொண்டேன். மீண்டும் திரும்பி மேடைக்குச் சென்றேன். ஆனால், மக்கள் என் மீதிருந்த மரியாதை காரணமாக வெளியேறியிருந்தார்கள்.”
மங்களாட்டாயின் தங்கையும் அதே நடனக் குழுவின் பாடகியுமான 53 வயதான பாரதி சோனாவானே. “எனது மூன்று குழந்தைகள் ஒவ்வொருவரையும் நான் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குள் திரும்பவும் மேடைக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திரும்பி விட்டேன். எனது தாயைப் போலவே நானும் குழந்தைகள் பிறக்கும்போது அதற்கான ஓய்வு என்று வீட்டில் இருக்கவில்லை” என்கிறார்.
தினமும் பயணம் செய்வது, மிகக் கடுமையான முறையில் வேலை செய்யும் முறை, சாப்பிடுவதற்கு நேரம் இல்லாத நிலை ஆகியவை நடனக் குழு உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. “யாரேனும் உடல்நலமில்லாமல் இருந்தால், பகல் நேரத்துக்கு மட்டும்தான் அவர் மருத்துவமனைக்குப் போகலாம். இரவு நேரத்தில் கட்டாயம் மேடையின் மீது அவர்கள் இருக்க வேண்டும்” என்கிறார் ரமா. கடந்த வருடம் சின்னஞ் சிறுமி பக்தி உடல் நலம் இல்லாமல் இருந்தார். “அதே கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தோம். அவள் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அவளுக்கு குளுக்கோஸ் பாட்டிலில் ஏற்ற வேண்டி இருந்தது. நான் பகல் நேரத்தில் அவள் அருகில் இருந்தேன். அதே நேரத்தில் இரவில் மேடையில் எனது நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பேன்”. என்கிறார் ரமா.
பக்தி கொஞ்சம் வளர்டந்த பிறகு அவளை வீட்டிலேயே விட்டு வைப்பது என்று முடிவு செய்திருக்கிறார் ரமா. “அவள் தமாஷா நடனக் குழுவில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை. ஏனென்றால் பொதுமக்கள் இப்போதெல்லாம் மிகவும் முரட்டுத்தனமானவர்களாக மாறி வருகிறார்கள். அடுத்த சில வருடங்களில் இந்தப் போக்கு எவ்வளவு மோசமாகப் போகும் என்பது யாருக்கு தெரியும்?
தமிழாக்கம்: த.நீதிராஜன்