"நான் என் கைகளால் முதலையைப்  பிடித்தேன். அதன் பற் தழும்புகளைத் தற்போது கூட நீங்கள்  காண முடியும்" என இடுப்பு முதல் கால் பகுதி வரை முதலைக்கடிக்கு உள்ளான தேன் சேகரிப்பாளரான நிதைஜோடர்  அந்தச் சம்பவம் குறித்து  மிகச்சரியாக நினைவு கூர்ந்தார். கடந்த மார்ச் 23 1980 ஆம் ஆண்டு அவர் ராய்மங்கை ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது அந்த சம்பவம்  நடந்தேறிய அது .

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள  வடக்கு 24 பர்கனஸ் மாவட்டத்தின் ஹேம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதை. அவருக்கு தற்போது  41 வயதாகிறது. அவருக்கு 10 வயதாக இருந்த போதிலிருந்தே நிதையின் தந்தை  அவரை தேன் சேகரிக்கும் பணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், முதலைக் கடித்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்புக்கென அவர் தாயத்துக் கட்டத் தொடங்கியுள்ளார். சுந்தர்பனில்  உள்ள ஆற்றின் கரைகளின் பல பகுதிகளில்   முதலைகளால்  மக்கள் தாக்கப்படுவது என்பது  வெகு சாதாரமானது. குறிப்பாக, மீனவ மக்கள் காயமடைந்துள்ளனர் அல்லது  கொல்லவும் பட்டுள்ளனர்.

PHOTO • Urvashi Sarkar

நிதை ஜோடாரை முதலை கடித்ததற்குப் பிறகு தாயத்தை  அணியத் தொடங்கியுள்ளார்.  அது  சுந்தர்பன் காடுகளில் இருந்து  அவரை பாதுகாக்கும் என்றும் அதன் மீது முழு நம்பிக்கையும் வைத்துள்ளார்

தேன் சேகரித்து விற்பது என்பது சுந்தர்பனில் பொதுவாக உள்ள தொழிலாகும்.  அதே சமயத்தில் மிகவும் அபாயகரமானதும் கூட.  நிதை மற்றும் பிறர் முதலையால் தாக்கப்படும் அபாயம் நிலவுவது போன்றே, அடர் வனப்பகுதியில் மீன் பிடித்தல் அல்லது தேன் சேக்கரிக்கச் செல்லும் போது  புலியால் தாக்கப்படுவதற்கான அச்சுறுத்தலும் நிலவி வருகிறது. மேலும், சுந்தர்பன் விவகாரங்கள் துறையின் இணையத்தில் உள்ளத் தகவலின் படி,"சுந்தர்பனைச் சேர்ந்த ஆண்கள் வன விலங்குகள், சுறாக்கள், முதலைகள் மற்றும் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, அடர்ந்த சதுப்புநிலக் காடுகளுக்குள் தேன் சேகரிக்கவும் அல்லது மீன் பிடிக்கவும் செல்லும் போது தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் நிலவுவதால், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தினர் பெண்களை தேன் சேகரிக்கும் பணிக்குச் செல்ல அனுமதிப்பதில்லை.

சுந்தர்பன் பகுதியில் முக்கியமாக ஏப்ரல் முதல் ஜூன் வரை தேன் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மாநில அரசு மீன்பிடிப்பதற்கு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் தான், பல மீனவர்கள் தேன் சேகரிப்பாளர்களாக மாறி காட்டுக்குள் இருமுறை பயணம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு பயணமும் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கிறது. மேற்கு வங்கம் தேன் உற்பத்திச் செய்வதில் மிகமுக்கிய மாநிலமாகும். அதன் உற்பத்தியில் பெரும் பங்கை ஏற்றுமதி செய்து வருகிறது.

தேன் சேகரிப்பதற்கு முன்கூட்டியே சில ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து தேன் சேகரிப்பாளர்கள் வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று, பி.எல்.சி(படகு உரிமச் சான்றிதழ்) சான்றிதழ் வைத்துள்ள படகு உரிமையாளரிடம் இருந்து படகை வாடகைக்கு எடுக்க வேண்டும். மகாஜன் அல்லது கடன் கொடுப்பவர்களிடம் இருந்து கடன் பெற வேண்டும். இதுகுறித்து 23 வயதான நிதையின் மகன் சஞ்சித் ஜோடர் விளக்குகையில்: ”ஒருவேளை ஐந்து அல்லது ஆறு பேர் தேன் சேகரிக்கச் செல்கிறோம் என்றால், நாங்கள் ஒட்டுமொத்தமாக 10,000-15,000 ருபாய் கடன் பெற்றுக் கொள்வோம். அதற்கு வட்டி 2-3 சதவீதம் விதிக்கப்படுகிறது. அதையும் சேர்ந்து அசலோடு 30-45 நாட்களுக்குள் திரும்பச் செலுத்துகிறோம். இந்தக் கடன் வருடத்திற்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

PHOTO • Urvashi Sarkar

‘சுந்தர்பன் பகுதியைச் சார்ந்த மௌலிக்கள்’(வலது புறத்தில் இருந்து இடப்புறமாக): நிதை ஜோடர்,பினாய் மோண்டல் மற்றும் ஹரிப்படா ஜோடர்

இந்தக் கடன் தொகையானது தேன் சேகரிக்கச் செல்லும் அந்த 15 நாள் பயணத்திற்கான உணவுப் பொருள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,தேன் சேகரிக்கும் பருவத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை 60 நாட்களுக்கும் மேல்) படகு வாடகைக்கு எடுக்க 2,800-3,000 ரூபாய் வரை செலவாகிறது. அதுமட்டுமல்லாது,கடன் தொகைக்கு பதிலாக படகின் உரிமையாளருக்கு சில கிலோ தேனும் வழங்கப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது. இதேபோன்று, வனப்பகுதியில் விபத்து ஏற்பட்டால் அதற்கு காப்பீடாக ஆண்டுக்கு 120 ரூபாயும் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு எல்லா கடன் தொகைகளையும் செலுத்தியப் பிறகு ஒவ்வொரு மௌலியும் 15,000-25,000 வரை ஈட்டுகின்றனர்(பருவம் முழுமைக்கும்).

இதேவேளையில், மௌலிக்கள் வேறுபிற செலவுகளையும் ஈடுசெய்ய வேண்டியுள்ளது: காடுகளில் உள்ள கொள்ளைக்காரர்கள் அவர்களிடம் இருந்து திருடிச் செல்கின்றனர் அல்லது ஏன் அவர்களையே கடத்திச் சென்று விடுகின்றனர். கடந்த வருடம் சிலரை கொள்ளைக் கூட்டம் கடத்திச் சென்று அவர்களை விடுவிப்பதற்காக அவர்களது குடும்பம் ஒட்டுமொத்தமாக 2-3 லட்சம் செலவிட்ட சம்பவம் குறித்து நிதை நினைவு கூர்ந்தார்.

நிதை கூறுகையில்,”எப்போது வானம் தெளிவாக இருந்து, ஆற்றில் தாழ் அலைகள் இருக்கிறதோ அப்போதே நாங்கள் புறப்படுகிறோம்” என்று தெரிவித்தார். மேற்கொண்டு கூறுகையில்,“அலைகளைப் பொறுத்து நாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு பல மணிநேரங்கள் எடுக்கும். இலக்கை அடைந்ததும் படகை விட்டுவிட்டு வனத்திற்குள் செல்வோம். ஒருவர் படகிலேயே அமர்ந்து கொண்டு கரையின் ஓரமாகவே படகை இயக்குவார். தேன் சேகரிக்கப்பட்ட உடன் அது அந்த படகில் வைக்கப்படும். அதோடு, நாங்கள் படகிலேயே சாப்பிட்டு தூங்குகிறோம்” என்று தெரிவித்தார்.

தேனீக்கள் பறக்கும் திசை மௌலிக்களுக்கு தேன் கூடு உள்ள மரங்களைக் காட்டிக் கொடுக்கிறது. “நாங்கள் காய்ந்த இலைகள் மற்றும் பசும் ஹெட்டல் தழைகளால் பல அடுக்குகளில் மூட்டையைத் தயார் செய்கிறோம். அது குச்சிகளுடன் இணைக்கப்படுகிறது. தேனீக்களை தேன் கூட்டிலிருந்து விரட்டுவதற்காக புகைமூட்டம் உண்டாக்குவதற்காக அந்த மூட்டைகளை எரிப்போம். பின்னர், கூர்மையான வளைவான ஆயுதத்தைப் பயன்படுத்தி தேன் கூட்டை வெட்டுவோம். அந்தத் தேன் கூடு மீண்டும் வளர வேண்டும் என்பதற்காக நாங்கள் முழு தேன் கூட்டையும் வெட்டுவதில்லை” என்றார் நிதை.

PHOTO • Urvashi Sarkar

ஹேம்நகர் கிராமப்பகுதியில் உள்ள மரத்திலுள்ள தேன் கூடு/ தேன் கூட்டை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கூர்மையான வளைவான ஆயுதம்

சில சமயம் தேனீக்களுக்கு வரும் அபாயத்தை அவை முன்கூட்டியே உணர்ந்து புகை மூட்டம் எழும்புவதற்கு முன்னரே கொட்டத்தொடங்கி விடுகின்றன. எனினும், நிதையும் அவருடன் செல்லும் பணியாளர்களும் எவ்வித மருந்துகளையோ அல்லது தற்காப்பு உடைகளையோ அணிந்து கொள்வதில்லை. “நாங்கள் தேனீக்களின் கொடுக்களை மட்டுமே கைகளால் பிடுங்கி எடுக்கிறோம். ஒரு முறை ஒருவரை 300-400 தேனீக்கள் வரை கொட்டியது. அவரால் பல வாரங்களுக்கு எழுந்திருக்கவோ அல்லது உணவு உண்ணவோ முடியவில்லை!”

நிதை இரண்டின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதை வெளிப்படுத்தினார்: ஒன்று அவர் அணிந்துள்ள தாயத்து, மற்றொன்று சுந்தர்பனில் காடு மற்றும் மக்களைக் காக்கக்கூடியதாக மிகவும் மதிக்கப்படும் பெண் தெய்வமான பான்பிபி. “இக்கட்டான சூழலைப் பொறுத்து பெண் கடவுளிடம் வேண்டிக் கொள்ள பல்வேறு மந்திரங்கள் உள்ளது” என்றார் அவர். அவரிடம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் படி கேட்டுக் கொண்ட போது; வீட்டிலிருந்து காட்டிற்கு செல்லும் போது தேன் சேகரிப்பவர்கள் கூறக்கூடிய பெங்காலி மந்திரம் ஒன்றை மூச்சுவிடாது கூறினார்.

சுந்தர்பனில் நடக்கும் உரையாடல் புலிகள் குறித்தானதாக மாறும்போது அனைவரிடமும் அதுகுறித்து கூற கதை அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கதைகள் இருந்தன. அதுகுறித்து நினைவு கூர்ந்த நிதை,”ஒருமுறை என் நண்பன் புலியை எதிர்கொண்டான், அவன் அப்படியே பயத்தில் உறைந்து விட்டான். நான் பான்பிபியின்  சில மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினேன். ஆனாலும், அவன் காப்பாற்ற படவில்லை. புலி அவனைக் கொன்று விட்டது. நான் அவனது உடலைக் கண்டுபிடித்து, அவனது வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். பல ஆண்டுகளுக்கு முன்னர், ஏறத்தாழ 150-200 ஆண்கள் காட்டிற்குள் ஒரு புலியை சூழ்ந்து நின்றனர். அப்போதும் கூட அது 1-2 பேரை கொண்டு சென்றுவிட்டது” என்றார்.

முன்பெல்லாம் புலிகளைக் கொன்ற கிராமத்தினருக்கு அரசு பரிசு அறிவித்தது குறித்து கூறிய அவர் “ஆனால் தற்போது, சட்டத்தின் காரணமாக ஒருவர் புலியைத் தொடக்கக்கூட முடியாது” என்றார். நிதை போன்று சுந்தர்பன் பகுதியில் வசிக்கக்கூடிய பிறரும், மாநில அரசு மக்களை விட புலிகளையே அதிகம் காப்பதாக சில சமயம் உணர்கின்றனர். “ஏன் சில சமயம் புலியின் தூக்கத்தை கெடுத்து விடுவோம் என்று கூட காட்டுக்குள் செல்ல முடியாது” நகைச்சுவையாக கூறினார் அவர். ஆனாலும், புலியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் தான் அவர். அரசின் வனமேலாண்மை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள வன பாதுகாப்புக் குழுவின் உள்ளூர் குழுவின் உறுப்பினராகவும்  உள்ளார். “ஒருவேளை புலிகள் அழிந்துவிட்டால், சுந்தர்பனும் அழிந்துவிடும். மக்கள் காடுகளுக்குள் சென்று காடுகளை அளிப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் நிதையின் சிறிய மற்றும் குறுகலான வீட்டுக்குச் சென்றோம். அங்கு தரையில் வைக்கப்பட்டுள்ள  அலுமினிய பாத்திரங்களிலும்,கேன்களிலும் தேனைச் சேகரித்து வைத்துள்ளார். “கேவ்ரா, கோரன், ஹோல்சி போன்ற மரங்கள் மற்றும் மலர்களைப் பொறுத்தும், பருவகாலத்தைப் பொருத்தும் அதன் நிறம் மற்றும் சுவை மாறுபடக்கூடியது. ஆனால்,வணிக நோக்கில் கிடைக்கும் உங்களின் தேனின் நிறமும் சுவையும் வருடம் முழுவதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்” என்றார்.

PHOTO • Urvashi Sarkar

அலுமினியப் பாத்திரங்களில் தேன்  சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் நிறமும், சுவையும் மரம், மலர் மற்றும் பருவகாலத்தைப் பொறுத்து வேறுபடக்கூடியது. ஆனால், வணிக நோக்கில் கிடைக்கும் தேனின் சுவையும் நிறமும் வருடம் முழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது

பொதுவாக, 15 நாட்களைக் கொண்ட ஒரு தேன் சேகரிப்பு பயணத்தில் 6-7 பேர் வரை பங்கு பெறுகின்றனர். இதன் வழியாக ஒவ்வொருவரும் 1-1.5 குவிண்டால் தேன் வரை சேகரிக்கின்றனர். எனினும், மௌலிக்கள் சேகரித்த தேனில் பெரும்பகுதியை அரசு நிர்ணயித்த விலையில் வனத்துறையினருக்கு விற்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டு அரசு நிர்ணயித்த விலை கிலோவுக்கு 115 ரூபாயாக இருந்ததாகவும், அதேவேளையில் ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு அந்த தேனை சந்தையில் விற்ற வனத்துறை கிலோ  300 ரூபாய்க்கு விற்றதாகவும் சஞ்சித் கூறினார். மேற்கு வங்க மாநில வன மேலாண்மை கூட்டுறவு நிறுவனம் தேனை சுத்திகரித்து மௌபன் தேன் என்று விற்பனை செய்கிறது.

இதேவேளையில் இந்தாண்டு சேகரிக்கப்பட்ட அனைத்து தேன்களுக்கும் பதிலாக, மௌலிக்கள் குறிப்பிட்ட அளவு வழங்கவேண்டுமென வனத்துறை தனித்துவமான ஓதுக்கீட்டு அளவை முன்வைத்துள்ளது. “எங்கள் குடும்பம் அரசின் ஓதுக்கீடு அளவை முன்பே எட்டிவிட்டதால், எங்கள் குடும்பத்திடமிருந்து வனத்துறையினர் தேனைப் பெறவில்லை” என்று சஞ்சித் தெரிவித்தார். எனவே, அவரும் அவரது குடும்பமும் அவர்களின் உபரி தேன் உற்பத்தியை தாங்களே விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேற்கொண்டு கூறுகையில், “நாங்கள் 80 -90 வரை சேகரித்தோம். அது அருகில் உள்ள கிராமங்களில் 200-250 கிலோ வரை விலை போகும். இதுவே கொல்கத்தாவில் விற்றால் அதிக விலை கிடைக்கும்”. என்று தெரிவித்தார்.

கடந்தாண்டுகளைக் குறித்து தெரிவித்த சஞ்சித், ”நாங்கள் ஐந்து கிலோ மட்டுமே வீட்டிற்கு எடுத்து செல்ல முடியும். மீதமுள்ளவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்கள் படகுகளில் தேனை ஒளித்துவைத்துள்ளோமா என்று சோதனை இடுவார்கள். ஒருவேளை நாங்கள் சந்தையில் விற்கும் போது பிடிபட்டால், எங்கள் படகுகளைக் காவல்துறை பறிமுதல் செய்துவிடுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சஞ்சித்தும் அவரது தந்தையைப் போன்று மீனவராகவும், தேன் சேகரிப்பாளராகவும் உள்ளார். அவர் ஒவ்வொரு வருடமும் 2-3 மாதங்கள் பெங்களூரு மற்றும் சென்னைக்கு கட்டிடப்பணிகளுக்காகச் செல்கின்றனர். இதன் வழியாக நாளொன்றுக்கு 350-400 ருபாய் வரை  வருமானம் ஈட்டுகின்றனர். “எனது தந்தையும் அவரது நண்பர்களும் சுந்தர்பன் பகுதியில் மட்டுமே பணிபுரிந்தனர். அவர்கள் இந்தக் காடுகளின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தனர்.   அது இல்லாமல் அமைதி இராது என்றும் கூறினர். ஆனால், என் தலைமுறை வெளியிடத்திற்கு வேலைக்குச் செல்கிறது. மீன் பிடித்தல் மற்றும் தேன் சேகரிப்பு மட்டுமே செய்து எங்கள் குடும்பத்திற்கு எவ்வாறு நாங்கள் உணவளிக்க இயலும்?” என்றார் அவர்.

சஞ்சித் அவரது குடும்பத்தின் வருமானத்திற்கு உதவுவதற்காக இளநிலை கலை படிப்பிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டார். தற்போது அவருக்கு கல்வி கற்பிக்கும் நிலையில் 18 மாதங்கள் நிறைவடைந்த மகன் ஒருவன் இருக்கிறான். ”என் மகன் மிகவும் ஆபத்தானக் காடுகளுக்குள் செல்லக்கூடாது” என்று குறிப்பிட்டார்.

ஆனாலும், பெரும் நகரங்களுக்கு இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஏமாற்றப்படவோ அல்லது கொலைக்கு உள்ளாகவே அதிகவாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றே நிதை நம்புகிறார். அவரை பொறுத்தவரை  சுந்தர்பனில் உள்ள அபாயங்களே அவருக்கு விரும்பத்தக்கதாக உள்ளது.

PHOTO • Urvashi Sarkar

41 வயதான நிதை ஜோடர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேன் சேகரிப்பாளராக அவரது தந்தையுடன் காடுகளுக்குச் சென்று வருகிறார்

கடந்த 2015 ஆம் ஆண்டு, சுந்தர்பன் பகுதியில் தேன் சேகரிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைக் குறித்து மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் பிரதிமா மண்டல், அவர்கள் சந்தித்து வரும் அபாயங்கள் குறித்து மேற்கோள்காட்டி பேசினார். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நிதி ஓதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டிருப்பின் அதுகுறித்து அறிந்துக்கொள்வது ஒருவேளை மிகச் சமீபமாக இருக்கலாம். ஆனாலும், பல ஆண்டுகளாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த தக்ஷின்பங்கா மத்ஸ்யசிபி போரம் (மேற்குவங்க மாநில மீனவர்கள் கூட்டமைப்பு) அமைப்பின் தலைவர் பிரதிப் சட்டர்ஜி, “இங்கு சில முன்னேற்றங்கள் நடந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை மௌலிகளுக்கு ஒரு கிலோ தேனிற்கு  42 ரூபாய் மட்டுமே வழங்கியது; தற்போது ஒரு கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் மேலாக வழங்கப்படுகிறது. மேலும்,கூடுதலாக அவர்களிடம் உள்ள தேனை சந்தையில் விற்கவும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தேனைச் சேகரிக்க 15 நாட்களுக்கு வனத்துறை அளித்திருந்த ஒருமுறை முன்அனுமதிச்சீட்டு  அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வனத்துறை இதேபோன்று இரண்டு முன்அனுமதிச்சீட்டை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதனாலும் காடுகளுக்குள் வேலைக்கு செல்லும் நபர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். “அவர்களது தனிப்பட்ட நபரின் பாதுகாப்பு அல்லது குழுவின் பாதுகாப்பு குறித்து எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை”. எனவே, நிதையைப் போன்றவர்கள் அடர் மற்றும் அபாயகரமான காடுகளில் எவ்வித பாதுகாப்புமின்றி பணிபுரிவது தொடர்ந்துக் கொண்டே  இருக்கிறது.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்.

Urvashi Sarkar is an independent journalist and a 2016 PARI Fellow.

Other stories by Urvashi Sarkar
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan