uploads/Articles/P. Sainath/Nine decades of non-violence/bhaji_mohammad_nabrangpur_1826_ev.jpg

பாஜி முகமது : மகத்தான தியாகத்தை மென்மையாக தன்னுடைய தோய்ந்து வரும் தோளில் தாங்கிக் கொண்டிருக்கும் முதியவர்


“நாங்கள் கூடாரத்தில் அமர்ந்து இருந்தோம். அதைக் கிழித்து எறிந்தார்கள். நாங்கள் இருந்த பகுதி மீதும், எங்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். நிலத்தைச் சகதியாக்கி எங்களை உட்காரவிடாமல் செய்தார்கள். எனினும், நாங்கள் அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தோம். பிறகு நான் தண்ணீர் அருந்த குழாயை நோக்கி தலையை வளைத்தேன். குழாயில் என்னுடைய தலையை மோதினார்கள். மண்டை உடைந்து, நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்கிறார் பாஜி முகமது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட விடுதலைப் போராட்ட தியாகிகளுள் உயிரோடு இருக்கும் நான்கு, ஐந்து பேரில் பாஜி முகமது அவர்களும் ஒருவர். அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொழுது ஆங்கிலேய அரசு நிகழ்த்திய அடக்குமுறை குறித்துப் பேசவில்லை. (ஆங்கிலேயர் அடக்குமுறைகள் குறித்தும் சொல்ல அவரிடம் அனேக கதைகள் உண்டு.) அவர் அதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்துப் பாபர் மசூதி இடிப்பின் பொழுது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல் குறித்தே மேலே குறிப்பிடுகிறார்.: “அமைதியை நிலைநாட்ட அங்குச் சென்ற நூறு பேர் குழுவில் நானும் ஒருவன்.” ஆனால், அமைதி மட்டும் கிட்டவே இல்லை. தன்னுடைய எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவரைக் கடுமையாகத் தாக்கியதால் பத்து நாட்கள் மருத்துவமனையிலும், வாரணாசியில் ஒரு ஆசிரமத்தில் ஒரு மாதமும் தலையின் காயத்தை ஆற்றுவதற்குத் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர் மீது தாக்குதல் தொடுத்த ஆர்.எஸ்.எஸ். ,பஜ்ரங் தள் அமைப்பினர் மீது துளிகூட வெறுப்பில்லாமல் பேசுகிறார். மாறாத புன்னகை கொண்ட, தீர்க்கம்கொண்ட காந்தி பக்தர் அவர். பசுவதைத் தடுப்புக்கு எதிரான நபரங்கபூர் சங்கத்தின் தலைவராக இருக்கும் இஸ்லாமியர் அவர். “அந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிஜூ பட்நாயக் என் வீட்டுக்கு வந்து இப்படி நடந்து கொள்வதற்குத் திட்டினார். இந்த வயதில் அகிம்சை போராட்டத்தில் உடல்நிலையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கலந்து கொள்வது அவருக்கு வருத்தம் தந்தது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர்த் தியாகிகள் பென்சனை நான் பெற மறுத்த பொழுதும் அவர் என் மீது கடும் கோபம் கொண்டார்.”

பாஜி முகமது இந்தியாவின் அரிய மனிதருள் மாணிக்கங்களுள் ஒருவர். எண்ணற்ற கிராமப்புற இந்தியர்கள் தங்களின் வாழ்க்கையை இந்திய விடுதலைக்காகத் தியாகம் செய்தார்கள். அவர்கள் எண்பது, தொன்னூறு வயதுகளில் மரணமடைந்து விட்டார்கள். பாஜி முகமது 9௦ வயதை நெருங்கி கொண்டிருக்கிறார்.

“நான் முப்பதுகளில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். மெட்ரிக் படிப்பை முடிக்கவில்லை. என் குரு பிற்காலத்தில் ஒரிசா முதல்வரான சதாசிவ் திரிபாதி. காங்கிரஸ் கட்சியின் நபரங்கபூர் பகுதியின் தலைவர் ஆனேன். (அப்பொழுது கோராபுட் மாவட்டத்தின் பகுதி) இருபதாயிரம் உறுப்பினர்களைக் கட்சியில் சேர்த்தேன். எங்கள் பகுதி முழுக்க விடுதலை உணர்வால் உந்தப்பட்டு இருந்தார்கள். அது உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது பெருமளவில் வெளிப்பட்டது.”

நூற்றுகணக்கான மக்கள் கோராபுட் நோக்கி வீரநடை போட்டாலும், பாஜி முகமது வேறு இடத்தை நோக்கி பயணித்தார். “நான் காந்தியை பார்க்க கிளம்பினேன். அவரைப் பார்த்தே விட வேண்டும் என உத்வேகத்தோடு புறப்பட்டேன். எனவே, 350 கிலோமீட்டர்கள் தூரத்தை நண்பர் லக்ஷ்மன் சாஹூவோடு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் கடினமான மலைப்பகுதியில் ஓட்டி ராய்ப்பூரை அடைந்தோம். அங்கே இருந்து ரயிலேறி வார்தாவை அடைந்தோம். சேவாகிராம் நோக்கி பயணித்தோம். எண்ணற்ற பெரிய மனிதர்கள் காந்தியின் ஆசிரமத்தில் இருந்தார்கள். நாங்கள் பதற்றமும், கவலையும் அடைந்தோம். காந்தியை சந்திக்க முடியுமா, எப்பொழுது காண முடியும் என மனம் பதைபதைத்தது. காந்தியின்” என்கிறார் பாஜி முகம்மது.

“தேசாய் எங்களை மாலை ஐந்து மணிக்குக் காந்தியிடம் பேச சொன்னார். மாலை நடைப்பயிற்சிக்கு அவர் வருகிற பொழுது அவரைச் சந்திப்பதாகத் திட்டம், நல்ல திட்டம் என்றும், சாவகசமாகப் பேசலாம் என்றும் என்னை நானே மெச்சிக்கொண்டேன். காந்தி அவ்வளவு வேகமாக நடந்தார். நான் ஓடுகிற வேகத்தில் அவர் நடந்தார். நான் அவரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் “காந்திஜி! கொஞ்சம் நில்லுங்கள். உங்களைக் காண நான் ஓடிஷாவில் இருந்து வந்திருக்கிறேன்.” என்றேன்.

அவர் என்னை ஆராய்கிற தொனியில், “என்ன பார்க்க வந்தீர்கள்? நானும் உங்களைப் போல மனிதன் தானே? இரண்டு கால்கள், கைகள், கண்கள். இதுதானே நானும்? நீங்கள் ஓடிஷாவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுகிறீர்களா?” எனக் கேட்டார். நான் சேர்வதாக உறுதியளித்து உள்ளேன் என்று மட்டும் தெரிவித்தேன்.

“போங்கள். போய் ஆங்கிலேயரின் லத்திக்களைச் சுவையுங்கள் தேசத்துக்காகத் தியாகம் செய்யுங்கள்.” என்று உத்தரவிட்டார் காந்தி. “ஏழு நாட்கள் கழித்துக் காந்தியின் உத்தரவை நாங்கள் நிறைவேற்றினோம்.” என்கிறார் பாஜி முகமது

பாஜி முகமது உலகப்போருக்கு எதிராகச் சத்தியாகிரகத்தை நிகழ்த்தி நபரங்கபூர் மசூதியின் முன்னால் கைதானார். “ஆறு மாத சிறைத்தண்டனையும், அந்தக் காலத்தில் பெரிய அபராத தொகையான ஐம்பது ரூபாயும் விதிக்கப்பட்டது.” என்கிறார்.

அடுத்தடுத்துப் போராட்டங்கள் ஒரு போராட்டத்தின் பொழுது மக்கள் திரண்டு காவல்துறையினரை தாக்க முனைந்தார்கள். “தலையே போனாலும் தாக்குதல் நடத்தக் கூடாது.” என்று பாஜி முகமது மக்களைக் கட்டுப்படுத்தி, தடுத்தார்.

சிறையை விட்டு வெளியே வந்ததும், “அடுத்து என்ன?” எனக் காந்திக்குக் கடிதம் எழுதினார் பாஜி. அவரின் உத்தரவுக்கு ஏற்ப சிறைக்குப் போனார். மூன்றாவது முறை அவரைக் கைது செய்யவில்லை அரசு. இப்பொழுது என்ன செய்வது எனக் காந்தியின் வழிகாட்டுதலை கோரினார் பாஜி. “அதே கோஷங்களை உரக்க சொல்லியபடி மக்களை நோக்கி செல்லுங்கள்.” அறுபது கிலோமீட்டர் தூரத்துக்கு வெறுங்காலில் இருபது-முப்பது மக்களோடு ஒவ்வொரு கிராமமாகச் சென்றேன். அப்பொழுது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வந்தது. அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன.

ஆகஸ்ட் 25, 1942 அன்று நாங்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டோம். நபரங்கபூர் மாவட்டம் பாபாரண்டியில் சம்பவ இடத்திலேயே போலீஸ் துப்பாக்கி சூட்டில் 19 பேர் இறந்து போனார்கள். பலர் காயங்கள் மோசமாகி இறந்தார்கள். முப்பது பேருக்கு மேல் காயமுற்றார்கள். ஆயிரம் பேருக்கு மேல் கோராபுட் மாவட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், தூக்கில் போடப்பட்டார்கள். கோரப்புட்டில் மட்டும் நூறு பேருக்கு மேல் இன்னுயிர் இழந்த தியாகிகள் ஆனார்கள். வீர் லக்கான் நாயக் எனும் ஆங்கிலேயரை எதிர்த்துத் தீரமாகப் போரிட்ட பழங்குடிய தலைவர் தூக்கில் போடப்பட்டார்.”

போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் பாஜியின் தோள்கள் சிதறிப்போயின. “நான் கோராபுட் சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டு இருந்தேன். லக்கான் நாயக்கை பெர்ஹம்பூர் சிறைக்கு மாற்றுவதற்கு முன்னால் நான் பார்த்தேன். அப்பொழுது தான் அவரைத் தூக்கில் போடும் உத்தரவு வந்தது. “உங்கள் குடும்பத்துக்கு ஏதேனும் சொல்ல வேண்டுமா?” எனக்கேட்டேன்.“நான் எந்தக் கவலையும் படவில்லை எனச் சொல்லுங்கள். இவ்வளவு போராடிய விடுதலையைப் பார்க்கத்தான் நான் இருக்க மாட்டேன்.” என்றார் லக்கான்.”

பாஜி விடுதலைக்கு ஒரு நாள் முன்னால் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை தேசத்துக்குள் சுதந்திர காற்றைச் சுவாசித்தபடி அவர் நிறைவாக நடந்தார். அவரின் சகாக்களான சதாசிவ் திரிபாதி (பிற்காலத்தில் ஒரிசாவின் முதல்வர்) உட்படப் பலர் தேர்தலில் நின்று வென்றார்கள். பாஜி தேர்தலிலும் போட்டியிடவில்லை, திருமணமும் செய்துகொள்ளவில்லை.

“எனக்குப் பதவியோ, அந்தஸ்தோ தேவையில்லை. மக்களுக்கு வேறு வகைகளில் சேவை செய்யமுடியும் என்று எனக்குத் தெரியும், காந்தியின் வழியில் நான் செயல்படுகிறேன்.” என்கிற பாஜி பல காலம் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக, தீவிரத் தொண்டராக இருந்தார். இப்பொழுது அவர் எந்தக் கட்சியிலும் இல்லை. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமையாகத் தான் அறியப்பட வேண்டும் என்று பாஜி விரும்புகிறார்.

மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவதைக் கட்சி அரசியல் தடுக்கவில்லை. வினோபா பாவேவின் பூமிதான.இயக்கத்தில் 1956-ல் பங்கு கொண்டார். ஜெயபிரகாஷ் நாராயணனின் போராட்டங்களுக்கும் சமயங்களில் ஆதரவு தந்திருக்கிறார். ஐம்பதுகளில் அவர் இவருடன் தங்கியிருக்கிறார். காங்கிரஸ் தேர்தலில் நிற்க சொல்லி வற்புறுத்தினாலும், ‘மக்கள் சேவை நாற்காலிகளை விட மேலானது.’ எனத் தள்ளியே இருந்துவிட்டார்.

விடுதளைப்போரட்ட வீரரான பாஜிக்கு, “மகாத்மா காந்தியை நேரில் சந்தித்ததே மறக்க முடியாத மகத்தான தருணம். வேறென்ன எனக்கு வேண்டும்/” அவரின் கண்கள் காந்தியின் போராட்டத்தில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தைக் காட்டுகையிலேயே பனிக்கிறது. தன்னுடைய பதினான்கு ஏக்கர் நிலத்தைப் பூமிதான இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்தார். எது விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத தருணம், “எல்லாமே மறக்க முடியாத தருணம் தான். என்றாலும், ஆகச் சிறந்த தருணம் காந்தியடிகளைக் கண்டு, அவரின் குரலைக் கேட்டது தான். அதுவே என் வாழ்வின் மகத்தான நிகழ்வு.” என்கிறார் பாஜி. காந்தியின் கனவுப் பாதையில் நமக்கான தேசத்தை நம் அடையவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருக்கிறது.

அழகிய புன்னகையோடு பாஜி முகமது: மகத்தான தியாகத்தை மென்மையாகத் தன்னுடைய விடுதலைப் போரில் தோய்ந்து போன தோளில் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த தொடரில் மேலும் வாசிக்க

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

( தமிழில்: பூ.கொ.சரவணன்)

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan