இந்தியாவின் ‘விவசாயப் பேரிடர்’ வெறும் விவசாயிகளுக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கும்  பேரிடர் அல்ல.

இது ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேரிடர் ஆகும். இந்தியாவின் சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கூடி தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறார்கள். அந்த வகையில் அது நாகரிகப் பேரிடராகவும் இருக்கக் கூடும். உழுகிற நிலத்தை இழந்து நிற்பது என்பது மட்டுமே விவசாயப் பேரிடரின்  அளவுகோலாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது. இனிமேலும், விவசாய நெருக்கடியை நிலத்தை இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்பது மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது. அது நிச்சயமாக மனித உயிர்கள், வேலைவாய்ப்புகள், மகசூல் ஆகியவற்றைப் பறிகொடுப்பது மட்டுமே அல்ல. இந்தப் பேரிடரானது நம்மிடம் மிச்சம் மீதியிருக்கும் மனித நேயமும் மரித்துக் கொண்டிருப்பதற்கான ஆதாரம். நம்முடைய மானுடம் சுருங்கி கொண்டே வருவதன் சாட்சியம். கடந்த இருபது ஆண்டுகளில் 300,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும், திக்கற்றுத் தவித்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி மக்களின் துயரம் பெருகிக் கொண்டே இருந்த போதும் நாம் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. இந்தத் துயர்மிகுந்த காலத்தில் தான், மனசாட்சியே இல்லாமல் இந்தியாவின் ‘முன்னணி பொருளாதார மேதைகள்’ சிலர் விவசாயம் பேரிடரில்  தவிக்கிறதா என்ன? என்று நக்கல் தொனிக்கப் பேசினார்கள்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் தற்கொலை புள்ளிவிவரங்களை வெளியிடவே இல்லை. அதற்குச் சில ஆண்டுகள் முன்புவரை பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த போலியான புள்ளி விவரங்கள் பெருமளவில் குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்கீடுகளைச் சிதைத்தன. எடுத்துக்காட்டாக, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் ஒரே ஒரு விவசாயி கூடத் தங்கள் மாநிலங்களில் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று புள்ளிவிவரங்களை நீட்டின. கடந்த 2014-ல், 12 மாநிலங்கள், 6 மத்திய ஆட்சிப்பகுதிகள் ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அறிக்கை வாசித்தன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ‘விவசாயத் தற்கொலை’ புள்ளிவிவரங்களில் 2014, 2015 ஆண்டுகளில் மோசடியான வெட்கக்கேடான  கணக்கீட்டு முறைகளைக் கொண்டு தற்கொலைகளின் எண்ணிக்கைகள் குறைத்து கணக்குக் காட்டப்பட்டன. எனினும், களத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன.

இன்னொரு பக்கம், விவசாயிகள், தொழிலாளர்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்ததைப் போல விவசாயிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது போல ஒப்பந்தங்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றி, ஏய்க்கிறார்கள். பண மதிப்பு நீக்கம் விவசாயத்தை உருக்குலைத்தது. பண மதிப்பு நீக்கம் எல்லாப் பக்கங்களிலும் கேட்டையே விளைவித்தது என்று சொல்ல வேண்டியதில்லை. ஊரகப்பகுதிகளில் கோபமும், வலியும் கூடிக்கொண்டே இருக்கின்றன. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் திட்டமிட்டு தீர்த்து கட்டப்படுவதால் விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழிலாளிகளும் கொதித்துப் போயுள்ளனர். இந்தக் கொதிப்பு மீனவர்கள், ஆதிவாசிகள், கைவினை கலைஞர்கள், சுரண்டப்படும் அங்கன்வாடி தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் குமுறிக் கொண்டிருக்கிறது. தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்கள், அரசே தான் நடத்தும் பள்ளிகளை இழுத்து மூடுவதையும், அவற்றுக்குச் சாவு மணி அடிப்பதையும் காண்கிறார்கள். அரசுத்துறை, போக்குவரத்துத் துறை, பொதுத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்களின் வேலைக்கும் வேட்டு வைக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

Vishwanath Khule, a marginal farmer, lost his entire crop during the drought year. His son, Vishla Khule, consumed a bottle of weedicide that Vishwanath had bought
PHOTO • Jaideep Hardikar

விதர்பா பகுதி அகோலா மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாத் குலேவின் மகன் பூச்சி மருந்து குடித்து விட்டார். விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. ஆனால், அரசுகளோ தற்கொலைகளே நடக்கவில்லை என்று பொய்க்கணக்குக் காட்டுகின்றன

இந்த நெருக்கடி என்னவோ கிராமத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை.

பல்வேறு ஆய்வுகள் 2013-14- 2015-16 காலத்தில் வேலைவாய்ப்பில் எண்ணிக்கை அளவிலும், சதவிகித அளவிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பானது விடுதலை இந்தியாவின்  ஆகப்பெரிய பேரிடர் சார் இடப்பெயர்வுகள் தற்போது நடைபெறுவதைப் புலப்படுத்தின . பல லட்சம் ஏழைகள் தங்களுடைய வாழ்வாதாரங்களைத் தொலைத்து விட்டுக் கிராமப்புறங்கள், ஊரக நகரங்கள், நகர்ப்புற கூட்டுப்பகுதிகள், பெருநகரங்கள் நோக்கி அங்கே இல்லாத  வேலைவாய்ப்புகளைத் தேடி பயணித்தார்கள்.   2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விவசாயத்தை முக்கியத் தொழிலாக மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 1991 மக்கள் தொகையை ஒப்பிட்டால் 1.5 கோடி குறைவு ஆகும்.  ஒரு காலத்தில் பலருக்கு சோறிட்ட விவசாயிகள் இன்று வீட்டு வேலைக்காரர்களாகப் பஞ்சம் பிழைக்கிறார்கள். நகர்ப்புற, கிராமப்புற மேட்டுக்குடியினரின் சுரண்டலுக்கு ஏழைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

இந்த அலறல்களை எக்காரணம் கொண்டும் கேட்டுவிடக் கூடாது என்று அரசாங்கம் தன்னால் முடிந்தவரை மல்லுகட்டுகிறது. செய்தி ஊடகங்களும் அவ்வாறே நடந்து கொள்கின்றன.

இந்தப் பிரச்சினைகளை மேலோட்டமாக ஊடகங்கள் கண்டு கொள்கின்றன.இந்த அநீதிகளை,  விவசாயிகள்  ‘கடன் தள்ளுபடிக்கு’ இறைஞ்சுவதாக ஊடகங்கள் சுருக்கி விடுகின்றன. அண்மைக் காலங்களில், குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்தி செலவோடு 50% சேர்த்துத் தரப்படுவதாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள் கோருவதை ஊடகங்கள் கவனப்படுத்துகின்றன. அதே வேளையில், அவை ஏற்கனவே இந்தச் செயல்முறையை அமல்படுத்திவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் அயோக்கியத்தனத்தைக் கண்டு கொள்வதே இல்லை. தேசிய விவசாயிகள் குழு (சுவாமிநாதன் குழு) இன்னும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசியதை கவனப்படுத்தவும் ஊடகங்கள் தவறுகின்றன. தேசிய விவசாயிகள் குழுவின் பல்வேறு அறிக்கைகள் எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தூசு படிந்து கிடக்கின்றன. இப்படிக் கடன் தள்ளுபடி கோரும் விவசாயிகளின் போராட்டங்களைக் கண்டிக்கும் ஊடகங்கள், வங்கிகளை அமிழ்த்தி கொண்டிருக்கும் பெரும்பான்மை வாராக்கடன்கள் கார்ப்பரேட்கள், பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்டவை என்று மறந்தும் மூச்சுவிட மாட்டார்கள்.

மிகப்பெரிய, ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது. இந்தப் போராட்டமானது முழுக்க முழுக்க மக்களை வாட்டி வதைக்கும் பேரிடர் குறித்தும், அதனோடு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து மட்டும் விவாதிக்கும் மூன்று வாரம்/ 21 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வேண்டுமென்று போராட வேண்டும். அதுவும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டமாக அது திகழ வேண்டும் என்று போராட்ட முழக்கம் எதிரொலிக்க வேண்டும்.

Two women sitting at Azad maidanIn Mumbai, covering their heads with cardboard boxes in the blistering heat.
PHOTO • Binaifer Bharucha

பெண் விவசாயிகளின் உரிமைகள், பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ளாமல் விவசாய பேரிடரை தீர்க்கவே முடியாது

எந்தக் கொள்கைகளைக் கொண்டு இப்படிப்பட்ட கூட்டத்தொடரை நியாயப்படுத்துவது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான். அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் “வருமான சமத்துவமின்மைகளைக் குறைப்பது” மற்றும் “அந்தஸ்து, வசதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றில் உள்ள பாகுபாடுகளைக் களைய முனைப்பாகச் செயல்படுவது” ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் “அரசானது நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று வழிகாட்டுகின்றன.

வேலைவாய்ப்புக்கான உரிமை, கல்வி உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை. ஊட்டச்சத்து, பொது நலத்தின் தரத்தை உயர்த்துவது. மேம்பட்ட வாழ்க்கைத்தரத்திற்கான உரிமை. ஆண்கள், பெண்களும் சமமான ஊதியம். நியாயமான, மனிதநேயமிக்கப் பணியிட சூழல்கள். இவை முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகும். உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகள் அளவிற்கு வழிகாட்டு நெறிமுறைகளும் முக்கியமானவை என்று ஒரு தடவைக்கு மேல் சொல்லியிருக்கின்றது.

இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான செயல்திட்டம் என்னவாக இருக்க வேண்டும்? இந்தச் செயல்திட்ட பரிந்துரைகளைச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்/சேர்த்துக் கொள்ளலாம்:

மூன்று நாட்கள்: எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை விவாதிப்பது – இந்த அறிக்கை வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்குழு டிசம்பர் 2004 துவங்கி அக்டோபர்  2006 வரை ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்தது. அவை குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேசியது. அக்குழு கவனப்படுத்திய சில முக்கியப் பிரச்சினைகள் : விவசாய உற்பத்தித்திறன், விவசாயத்தில் லாபம் ஈட்டல், நீடித்து நிற்கும் வளர்ச்சி, தொழில்நுட்பம், தொழில்நுட்ப தொய்வு; வறண்ட நில விவசாயம், விலைவாசி அதிர்ச்சிகள், விலைவாசியை நெறிப்படுத்துவது. விவசாய ஆய்வு, தொழில்நுட்பத்தைத் தனியார்மயப்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். இப்போது உருவாகி கொண்டிருக்கும் சுற்றுச்சூழலியல் பேரழிவை எதிர்கொள்ள வேண்டும்.

மூன்று நாட்கள்: எளியோர் சொல் அம்பலம் ஏறட்டும்.

இந்த நெருக்கடிகளில் நைந்து போயிருக்கும் மக்கள் நாடாளுமன்றத்தில் பேசட்டும். இந்தப் பேரிடர் எவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது என்பதைப் பற்றியும், அது எப்படித் தங்களையும், பல லட்சம் மக்களையும் வாட்டி வதைக்கிறது என்றும் அவர்களின் குரலிலேயே நாடாளுமன்ற மைய மண்டபம் காது கொடுத்து கேட்கட்டும். இந்தப் பேரிடர் விவசாயம் சார்ந்தது மட்டுமல்ல. பகாசுர பாய்ச்சல் காட்டும் மருத்துவ மற்றும் கல்வித்துறை தனியார்மயமாக்கல் ஊரகப்ப்புற ஏழைகளையும், எல்லா ஏழைகளையும் எப்படிச் சின்னாபின்னம் செய்கின்றன என்பதை நாடு அறியட்டும். கிராமப்புற குடும்பங்களின் கடன்களில் அதிவேகமாக வளர்கிற முதன்மையான கடனாக (அல்லது இரண்டாவது வேகமாக வளரும் கடனாகவோ) மருத்துவச்செலவே திகழ்கிறது.

மூன்று நாட்கள்: கடன் தொல்லை.

கடன் தொல்லையானது எக்கச்சக்கமாக வளர்ந்து கொண்டே போகிறது. இதுவே,கணக்கற்ற பல்லாயிரம் விவசாயிகளின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இந்தக் கடன் தொல்லையால் பல லட்சம் மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிலமிழந்து நிற்பது நிகழ்கிறது. நிதித்துறை நிறுவனங்கள் தரும் கடன்கள் குறித்த கொள்கைகளால் கந்துவட்டிக் காரர்கள் மட்டுமே ஏகபோகமாக வாழ்கிறார்கள்.

மூன்று நாட்கள்: இந்தியாவின் ஆகப்பெரும் தண்ணீர் பஞ்சம்

இது வறட்சியை விடப் பல மடங்கு மோசமானது. தண்ணீருக்கு ‘நியாய விலை’ நிர்ணயிப்பது என்கிற பெயரில் அரசானது தண்ணீரை தனியார்மயப்படுத்த முனைப்பாக முயல்வதாகத் தெரிகிறது. குடிநீரைப் பெறுதல், பயன்படுத்தல் சார்ந்த உரிமைகள் அடிப்படை மனித உரிமையாக மாற வேண்டும். இந்த வாழ்விக்க வந்த தண்ணீரை தனியார்மயப்படுத்த அனுமதிக்கக் கூடாது. தண்ணீரைச்  சமூகமே கட்டுப்படுத்த வேண்டும். அது அனைவருக்கும் குறிப்பாக நிலமற்றவர்களுக்குச் சமமான நீர்ப்பயன்பாட்டு அனுமதியை வழங்க வேண்டும்.

மூன்று நாட்கள்: பெண் விவசாயிகளின் உரிமைகள்

இந்த விவசாய நெருக்கடியை  தீர்க்க வேண்டும் என்றால், வயல்களிலும், பண்ணைகளிலும் பெரும்பான்மை பணிகளில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளைக் காக்க வேண்டியது முதன்மையானதாகும். மாநிலங்களவையில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் 2011-ம் ஆண்டில்  அறிமுகப்படுத்திய பெண் விவசாயிகளுக்கு உரிமைகள் வழங்கு சட்ட மசோதா, ( இம்மசோதா 2013-ல் காலாவதி ஆனது) பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவது குறித்த விவாதத்தின் துவக்கப்புள்ளியாக அமையலாம்.

மூன்று நாட்கள்: நிலமற்ற பெண்/ஆண் தொழிலாளர்களின் உரிமைகள்.

நாடு முழுக்கப் பஞ்சத்தால் இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. கிராமங்களோடு மட்டும் நில்லாமல் இந்த இடப்பெயர்வு நகரங்களையும் பாதிக்கிறது. இந்த இடம் பெயரும் மக்களின் தேவைகள், உரிமைகள், அவர்களுடைய பார்வைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே விவசாயத்தில் அரசாங்க முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

மூன்று நாட்கள்: விவசாயம் குறித்த விவாதம்.

இன்றில் இருந்து இருபதாண்டுகள் கழித்து எப்படிப்பட்ட விவசாயம் இந்தியாவிற்குத் தேவை? கார்பரேட்களுக்கு லாபம் தரும் ஒன்றா? அல்லது விவசாயத்தையே நம்பியிருக்கும் சமூகங்கள், குடும்பங்களுக்கு நலன் பயக்கும் விவசாயமா? விவசாயத்தில் தனி நபர் உரிமைகளோடு நின்றுவிடாமல் கேரளாவின் குடும்பஸ்ரீ இயக்கத்தின் சங்க க்ரிஷி (கூட்டு விவசாயம்) முதலிய கூட்டு விவசாய நில உரிமை, கட்டுப்பாடு ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டும். பாதியில் நின்று போன நில சீர்திருத்தத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டும். மேற்சொன்ன விவாதங்கள் தலித், ஆதிவாசிகள் உரிமைகள் குறித்தும் கவனத்தில் கொண்டால் தான் இவை பொருள் பொதிந்ததாகத் திகழும்.

இப்படி ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக எதிர்க்காது. ஆனால், இப்படி ஒரு கூட்டத்தொடர் நடப்பதை யார் உறுதி செய்வது? வஞ்சிக்கப்பட்ட லட்சோபம் லட்சம் மக்கள் தான்.

Midnight walk to Azad Maidan
PHOTO • Shrirang Swarge

நாசிக்கில் துவங்கிய மும்பையை முற்றுகையிட்ட விவசாயிகளின் நடைபயணம் நாடு முழுக்கப் பரவ வேண்டும். இந்தப் பெரும் போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பேரிடரால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் பங்கேற்க வேண்டும்

இந்தாண்டு மார்ச் மாதத்தில், நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி நாற்பதாயிரம் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு நடைபயணம் மேற்கொண்டார்கள். அகங்காரம் மிக்க மகாராஷ்டிரா அரசானது இந்த நடைபயணம் மேற்கொண்ட மக்களை, ‘நகர்ப்புற மாவோயிஸ்ட்’ கள் என்று முத்திரை குத்தியது. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவும் மறுத்தது. மும்பையை வந்தடைந்த இந்த மக்கள் கூட்டம் சட்டசபையை முற்றுகையிட முயன்ற போது அரசாங்கம் அடிபணிந்தது. இப்படித்தான் கிராமப்புற ஏழைகள் அரசாங்கத்தைத் தங்களுடைய வழிக்கு வர வைக்க முடிந்தது.

உச்சகட்ட ஒழுங்கோடு நடந்து கொண்ட நடைபயண நாயகர்களுக்கு மும்பை முழுக்க ஆதரவு பெறுகிறது. நகப்புற பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாமல், நடுத்தர வர்க்கதினர், மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரும் விவசாயிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

இதை நாம் தேசிய அளவில் செய்து காட்ட வேண்டும். 25 மடங்கு பெரிதாக இந்த நடைபயணத்தை நிகழ்த்த வேண்டும். வஞ்சிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் அணி திரட்டிக் கொண்டு நெடுபயணம் நிகழ்த்த வேண்டும். இதைவிட முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், சக மனிதர்களின் துயருக்கு இரங்கும் மனிதர்கள் அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் நிமிர்ந்து நின்று போராடும் மக்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். இப்பெரும் பயணம்  நாடு முழுக்கத் துவங்கட்டும்.  இப்பயணம் தலைநகரில் ஒன்று திரளட்டும். நாம் செங்கோட்டையைச் சென்றடைய வேண்டாம். நாம் ஜந்தர் மந்தரில் மக்கள் திரளால் மலைக்க வைக்க வேண்டாம். நம்முடைய நெடும்பயணம் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க வேண்டும். அதனைக் காது கொடுத்து கேட்கவைப்போம். செயல்பட வைப்போம். ஆம், நீங்கள் டெல்லியை முற்றுகையிட வேண்டும்.

இதைச் சாதிக்கப் பல மாதங்கள் ஆகலாம். இத்தனை லட்சம் மக்களைத் திரட்டுவது எளிய காரியமில்லை. இதைச் சாதிக்க, இந்தியா முழுக்க உள்ள விவசாய, தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் மிகப்பெரிய, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும். இந்தப் பெரும் முயற்சி ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சியாளர்கள், ஊடகம் ஆகியவற்றிடம் இருந்து பெரும் எதிர்ப்புகளை, அடக்குமுறையைச் சந்திக்கும்.

எனினும், இந்தப் பெரும்பயணம் நிச்சயம் நிறைவேறும். ஏழைகளைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். பேரிரைச்சல் மிக்க வர்க்கங்களை விட, ஏழைகளே இந்திய ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இப்படி லட்சோப லட்சம் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகள் கூடும் இடத்தில் அணி திரள வேண்டும். அது வரலாற்றின் உன்னதமான ஜனநாயக போராட்டங்களில் ஒன்றாக அமையும். பகத் சிங் உயிரோடு இருந்திருந்தால், இந்தப் பல லட்சம் தீரர்களைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார் ? இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் கேளாத செவிட்டு செவிகளைக் கேட்க வைக்கக் கூடியவர்கள். காண மறந்த கண்களைக் காண வைப்பவர்கள், பேச மறந்த ஊமைகளைப் பேச வைப்பவர்கள்.

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath