“இதை இப்படி மூவாயிரம் முறை தட்ட வேண்டும்”, என்று மீனாட்சி சொல்லியபடி அந்த மண்பானையைத் தட்டுகிறார். நாம் சமையலுக்குப் பயன்படுத்துவோமே, அந்த வடிவில் சுடப்படாத களிமண்ணால் ஆன மண்பானை அது. ஆனால் அது சமையலுக்குப் பயன்படப் போவதில்லை. அதை மீனாட்சி அப்படியே தட்டித் தட்டி ஒரு தாள வாத்தியம் ஆக்கப்போகிறார். அந்தப் பானையைத் தன் மடியில் கிடத்தி, ஒரு பெரிய தட்டைக்கரண்டியால் அதன் பக்கங்களைத் ‘தட் தட்’, என்று தட்டுகிறார். இதோ, தென்னிந்தியாவிற்கு நன்கு அறிமுகமான, கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘கடம்’ வாத்தியம் இங்கு உயர்ந்த தரத்துடன் உருவாகப் போகிறது. ஆம், 63 வயது நிரம்பிய மீனாட்சி கேசவன், கடம் செய்வதில் வல்லவர். மானாமதுரையில் கடம் செய்யும் நபர்கள் அநேகமான அவரும் அவரது குடும்பமுமாகத்தான் இருக்கும்.

 

தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து ஒரு மணி நேரம் காரில் பயணித்தால் மீனாட்சியின் சொந்த ஊரான மானாமதுரை வந்துவிடும். மானாமதுரை ‘கடம்’ வாத்தியத்திற்குப் பெயர் போனது. கடம் செய்யும் கலையை மீனாட்சி தன் கணவரிடமும் மாமனாரிடமும் கற்றார். “15 வயதில் திருமணமாகி இக்குடும்பத்திற்குள் வந்தேன். குறைந்தது நான்கு தலைமுறைகளாக இக்குடும்பம் கடம் செய்து வருகிறது.”, என்கிறார். அவரது மகன் ரமேஷ், “கடம் செய்யும் கலையைக் கற்கக் குறைந்தது ஆறு வருடங்கள் ஆகும். பரம்பரையாகக் குயவர் தொழில் செய்தவரில்லை என்றால் இன்னும் அதிக காலம் எடுக்கும்”, என்கிறார்.

 

“இந்த வேலையின் கடினமான பகுதி என்னவென்றால், கடத்தின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதுதான். வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக அதன் தொனியை மெருகேற்றலாம்”, வலது கையால் பானையை அடித்தபடி மீனாட்சி விளக்குகிறார். இடது கையால் பானைக்குள் ஒரு வட்டக்கல்லைச் சுற்றுகிறார். “உட்புறத்தில் பானை வழுவழுப்பாக இருக்க வேண்டும்; அப்பொழுதுதான் தட்டினால் உடையாது. அதற்காகத்தான் இது”, என்று சொல்லிவிட்டுத் தட்டுவதை நிறுத்துகிறார். அவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. நாற்பது வருடங்களாகக் களிமண்ணை உருட்டி உருட்டி அவரது கைகளில் வலி இருந்துக்கொண்டே இருக்கிறது. அயர்ந்த தன் தோள்பட்டையில் ஆரம்பித்து வலி அப்படியே கை வழியே பயணித்து விரல்களின் முனை வரை பரவுமாம். ஆனால் இதை சொல்லிய அடுத்த நிமிடம் விருட்டென்று மீண்டும் வட்டக் கல்லையும் தட்டைக்கரண்டியையும் எடுத்து, பானையைத் தன் மடியில் கிடத்துகிறார். தட்டுவது தொடர்கிறது.02-IMG_4366-&-4396-AP-When Meenakshi Beats a Pot 3000 Times(STORY).jpg

கடத்தைத் தட்டும் மீனாட்சி (இடது)இந்த வட்டக் கல்லின் மூலம்தான் பானையின் உட்புறத்தை மீனாட்சி வழுவழுப்பாக்குகிறார் (வலது)


மானாமதுரையில் மீனாட்சியின் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால், “பானை செய்கிற அம்மாதானே? விருது எல்லாம் கூட வாங்கியிருக்கிறாரே?”, என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். அவர் பெற்ற விருது என்ன என்று தெரிந்ததும் அதிர்ந்துபோய் விட்டோம். இந்தியக் கலை உலகின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றிருக்கிறார் மீனாட்சி. தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பெரிய சட்டத்தில் ஜனாதிபதியிடமிருந்து மீனாட்சி விருது பெறும் புகைப்படம் அறையில் மாட்டப்பட்டிருந்தது. அருகே மீனாட்சியின் கணவரின் புகைப்படம் மாலையிடப்பட்டிருந்தது. விருதைப் பெற தில்லி சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை ரமேஷ் நினைவுகூர்கிறார், “அது என் அம்மாவுக்கு முதல் விமானப் பயணம். அதனால் உற்சாகமாக, அதே நேரத்தில் அச்சத்துடனும் இருந்தார். 2014 ஏப்ரல் 11-ம் நாள் ஒரு குளிர்சாதனப் பேருந்தில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று மாலை அம்மா ஜனாதிபதியிடம் விருது பெற்றார். முதல் முறையாக ஒரு இசை வாத்தியம் செய்யும் பெண்மணி இந்த விருதைப் பெற்றது அநேகமான அம்மாவாகத்தான் இருக்கும், என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

 


03-IMG_4317-&-4323-AP-When Meenakshi Beats a Pot 3000 Times(STORY).jpg

அகாடமி விருதுடன் மீனாட்சி (வலது). மீனாட்சி ஜனாதிபதியிடமிருந்து விருது பெறும் புகைப்படம் (இடது)


ரமேஷும் ஒரு திறமையான கைவினைக் கலைஞர்தான். அவரது அம்மாவின் கலையைக் கண்டு அவருக்கு அப்படி ஒரு பெருமை. அகாடமி அளித்த ஒரு சிற்றேட்டில், “தரமான கடங்களைச் செய்யும் முறைகளை முழுமையாகக் கற்ற கலைஞர் அநேகமாக மீனாட்சி ஒருவர்தான். அவர் செய்த நூற்றுக்கணக்கான கடங்கள் இன்று கலைஞர்களோடு உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறது”, என்று எழுதப்பட்டுள்ளதைக் காட்டி மகிழ்கிறார்.

 

கடங்கள் மட்டுமல்ல, கடங்கள் செய்யத் தேவையான களி மண்ணும் பயணம் செய்கின்றன. “ஒரு ஐந்தாறு குளங்களிலிருந்து களி மண்ணை எடுப்போம். அவற்றை ஒரு நாள் காய வைத்து, பிறகு வைகை ஆற்றிலிருந்து நுண்மணலை எடுத்து அவற்றோடு கலப்போம். தொனியை மெருகேற்றுவதற்காக அதில் கிராஃபைட்டையும் ஈயத்தையும் சேர்த்து, அதை ஆறு மணி நேரத்திற்கு மிதிப்போம். அது இரண்டு நாட்கள் காய்ந்து வலுவானதும் பானை செய்யத் துவங்குவோம்”, என்று விளக்குகிறார் ரமேஷ்.

 

ரமேஷ் பானையை செய்யும்போது பார்க்க அது எளிமையான வேலை போல் தெரிகிறது, ஆனால் அது எளிமையான வேலையன்று. மின்சக்கரத்தின் முன் உட்கார்ந்து, ஒரு களிமண் உருண்டையை உருட்டி அதன் நடுவில் வைக்கிறார். சக்கரம் சுழலச் சுழலத் தன் கைகளால் அந்த உருண்டைக்கு ஒரு வடிவம் கொடுக்கிறார். ஒரு வடிவத்திற்கு வந்ததும் அதை மடியில் கிடத்தி, தட்டித்தட்டிப் பானையாக்குகிறார். பானை இந்த நிலையில் பதினாறு கிலோ எடை இருக்கும். அவ்வளவு எடை உள்ள ஒரு பொருளைத்தான் மீனாட்சி தன் மடியில் கிடத்தித் தட்டுகிறார். அடுத்த இரண்டு வாரத்திற்கு அப்பானையை நிழலில் காயவைத்து, பிறகு உச்சி வெயிலில் நான்கு மணிநேரம் வைத்து அதை வெம்மையாக்குவார்கள். இறுதியாக அதன்மேல் மஞ்சள் சிகப்புப் பூச்சுகளைப் பூசி சமூக சூளையில் 12 மணி நேரம் சுட்டு எடுப்பார்கள். அப்படிச் சுடும்போது பானை பாதி எடையை இழந்து விடும். அப்பொழுது அதை நம் மடியில் கிடத்தித் தட்டினால் அந்த எட்டு கிலோ எடை கொண்ட முதல்தரமான கடம் அதியற்புத இசையை எழுப்பும்.


04-IMG_4441-&-4474-AP-When Meenakshi Beats a Pot 3000 Times(STORY).jpg

மின்சக்கரத்தைச் சுழற்றும் ரமேஷ் (இடது)களிமண் உருண்டைக்கு வடிவம் கொடுக்கிறார் (வலது)


காலத்திற்கு ஏற்றார்போல் கடம் செய்யும் முறையும் மாறி வந்துள்ளது. இசைக் கலைஞர்கள் விரும்பும் விதமாக அவை செய்து தரப்படும். கனமில்லாமல்சிறியதாகபார்ப்பதற்கு வித்தியாசமான அழகுடன்என்று ஒவ்வொருவரது விருப்பங்களுக்கு ஏற்றார்போல் அவை செய்யப்படும். “அவை எடுத்துச்செல்ல இலகுவானவை”என்று ரமேஷ் சுட்டிக்காட்டுகிறார். இத்தனைக்கும் மானாமதுரை கடங்கள்தான் இருப்பதிலேயே அதிக கனமானவை. நம் சமையல் பானையை விட மும்மடங்கு கனமாகவும் இரு மடங்கு தடிமனாகவும் அவை இருக்கின்றன. இதற்கு மாறாக சென்னையிலும் பெங்களூரூவிலும் கனமற்றமெலிதான கடங்கள் செய்யப்படுகின்றன.

 

செய்யும் உத்தி என்பதைத் தாண்டிமானாமதுரை கடங்களின் தரத்திற்கு அங்கே உள்ள களிமண்ணும் ஒரு முக்கியக் காரணம். ஆனால் துரதிர்ஷ்டவசமாகதரமான களிமண் இன்று செங்கல் சுடுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. இது அங்குள்ள குயவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. ஆனாலும் ரமேஷுக்கு இக்கலையைத் தன் மகள்கள் உட்பட அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பதில் மகிழ்ச்சியே. அவர்கள் இக்குடும்பத்தில் கடங்கள் செய்யப்போகும் ஐந்தாம் தலைமுறையினர். ஒரு கடம் 600 ரூபாய்க்குதான் விலை போகிறது. இதை விட சிறிதாக இருக்கும் ஆடம்பர சீனா கிண்ணம் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் இக்குடும்பம் விடாமல் கடங்கள் செய்யக் காரணம்இது பணத்தைப் பற்றியல்ல என்பதே.


05-IMG_4559-AP-When Meenakshi Beats a Pot 3000 Times(STORY).jpg

இன்னும் ஈரம் காயாத பச்சைப் பானையை ரமேஷ் உள்ளே எடுத்துச் செல்கிறார்


அவர்களின் 160 வருட பாரம்பரியத்தை விட்டுவிடாமல் இருக்கவே அக்குடும்பம் விரும்புகிறது. “எனக்குப் பத்து வயது இருக்கும்போது அமெரிக்காவிலிருந்து ஒரு பத்திரிகையாளர் எங்கள் வீட்டிற்கு வந்தார்”, என்று நினைவுகூர்கிறார் ரமேஷ். “இவ்வளவு குறைவாகத்தான் சம்பாதிக்கிறோமா என்று அதிர்ந்துபோன அவர், என்னையும் என் சகோதரிகளையும் ஊட்டியில் உள்ள கான்வென்ட் பள்ளியில் சேர்க்க உதவுவதாகச் சொன்னார். ஆனால் என் தந்தை மறுத்துவிட்டார். நாங்கள் பானை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் முடிவாக இருந்தது”. ரமேஷின் இளமைக் காலத்தில் அவருக்குப் பானை செய்யச் சொல்லிக்கொடுத்தது 90 வயது நிரம்பிய அவரது தாத்தாதான். “இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை அவர் கடம் செய்துக்கொண்டுதான் இருந்தார்”, என்று ரமேஷ் சொல்ல, மீனாட்சி இடைமறித்து, “என் மாமனார் அவரைப் புகைப்படம் எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை; அதனால்தான் அவர் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்”, என்கிறார். குற்ற உணர்ச்சியுடன் என் கேமராவைக் கீழே வைக்கிறேன்.

 

லாபம் குறைவாக வந்தாலும் இத்தொழிலை லாபநோக்கோடு பார்க்காமல் தன் கலைச் சேவையாகவே பார்க்கிறார் மீனாட்சி. பல காலத்திற்குப் பக்கவாத்திய இசைக்கருவியாகவே பயன்பட்ட கடம், இன்று பல நிகழ்வுகளில் முதன்மை வாத்தியமாக வாசிக்கப்படுகிறது; மீனாட்சி செய்த பல கடங்கள் இன்று பல நிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்றுள்ளார். ரமேஷ்தான் எல்லா தகவல்களையும் நமக்குத் தருகிறார். அவரது அம்மாவிற்கு இப்படியெல்லாம் பேசிப் பழக்கமில்லை. அகாடமி விருது பெற்ற பிறகு நடந்த நேர்காணல்கள் அனைத்தும் மீனாட்சியை அதிகம் பேசாத, தன்னைப் பற்றித் தானே பேச சங்கடப்படுகிற பெண்மணி என்றுதான் வருணித்தன. “சென்ற வருடம் நடந்த அகில இந்திய வானொலி நேர்காணல்தான் என் அம்மா கொடுத்த முதல் நீண்ட நேர்காணல். அதில் என் தந்தைக்கு என்ன குழம்பு பிடிக்கும் என்பது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”, என்று சிரிக்கிறார் ரமேஷ்.

 

அவரது தொழில் குறித்து நம்மிடம் குறைவாகவே பகிர்ந்துக்கொள்கிறார் மீனாட்சி. கடம் செய்வது அவர்களின் முக்கிய வருவாயாக இல்லை. அவர்கள் பல வகையான மண்பாண்டங்களை செய்கிறார்கள். அவை சமையல் செய்ய, சித்த மருந்துகள் தயாரிக்க என்று பல வகைகளில் பயன்படுகின்றன. அதிலிருந்துதான் அவர்களுக்கு நிலையான வருமானம் வருகிறது. மீனாட்சி, அவர் மகள் கே.பரமேஷ்வரி, மகன் ரமேஷ், ரமேஷின் மனைவி மோகனா ஆகியோர், மேலும் சிலரின் உதவியோடு வருடத்திற்கு சுமார் 400 கடங்களை உருவாக்குகிறார்கள். அதில் பாதியைத்தான் விற்க முடியும்; மீதி தொனி சரியாக அமையாமல் வீணாகும். பானைகள் சுடப்பட்ட பின்னரே அதன் தொனி சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்க முடியும்; அதனால் அவற்றை மீட்டுருவாக்க முடிவதில்லை. சில சமயம், பார்க்க நன்றாக இருக்கும் கடங்கள் வாசிக்கத் தகுதியற்றவையாக இருக்கும்.

 

“இந்தத் தொழிலுக்குப் பொருளாதார உதவி என்றெல்லாம் எதுவும் இல்லை. அரசாங்கம் இக்கலையை ஆதரிப்பதில்லை. மேலும், இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கும் அரசு, இசைக்கருவிகளை உருவாக்கும் எங்களை ஊக்குவிப்பதில்லை”, என்று வருத்தப்படுகிறார் ரமேஷ். ஆனாலும் இத்தனை சவால்களைத் தாண்டி, தன் குடும்பம் இன்றும் பல பேருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்பதில் அவருக்குப் பெருமையே.

 

நாங்கள் அங்கே செல்லும்போது மதிய நேரம்; மழை லேசாகத் தூறிக்கொண்டிக்க, வெளிமுற்றத்தில் பாதி காய்ந்த நிலையில் இருந்த பானைகளை அவர்கள் உள்ளே எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே அறைகள் முழுவதும் மண்பாண்டங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உயர அடுக்கப்பட்டிருக்கின்றன. வானம் மந்தமான சலனத்துடன் மழை பெய்யப் போகும் அறிகுறியைக் காட்டுகிறது. வெயில் போனதால் அவர்களின் பணி தடைபட்டுவிட்டது. ரமேஷ் சாவகாசமாக ஒரு கடத்தை மடியில் கிடத்தி வாசிக்க ஆரம்பிக்கிறார். அவரது கை கால் முழுவதும் பச்சைக் களிமண்; ஆனால் பார்க்க அது சந்தனத்தைப் பூசியதுபோல் இருக்கிறது. கடத்தின் வாய் அருகே தன் விரல்களால் ஒரு தட்டு தட்டுகிறார். ‘டிங்’ என்று ஒரு கூர்மையான ஒலி எழும்புகிறது. “நான் முறைப்படி இசைக் கற்றவன் இல்லை”, என்கிறார் தன்னடக்கத்துடன். ஆனால் தொனி சரியாக அமைகிறதா என்று சரிபார்க்கும் அளவிற்கு இசையறிவு கொண்டவராகவே அவர் இருக்கிறார்.

 

“பல தாள வாத்தியங்கள் மிருகத் தோல்களால் ஆனவை. ஆனால் பஞ்ச பூதங்களால் ஆன ஒரே வாத்தியம் கடம் மட்டும்தான். பூமியிலிருந்து களிமண் எடுத்து, தண்ணீரைக்கொண்டு அதை வடிவமாக்கி, அதை சூரிய வெயிலில் காற்று அடிக்கும்போது காயவைத்து, பின்னர் அதை நெருப்பில் சுட்டு உருவாக்குகிறோம்”, என்று ரமேஷ் விளக்குகிறார். ஆனால் அவர் மனித உழைப்பை அவற்றோடு சேர்த்துச் சொல்லவில்லை. அவர் சொல்லத் தேவையே இல்லை. ஏனெனில், நாம் அங்கு காதால் கேட்பதெல்லாம் வீட்டிற்குள்ளே தாழ்வாரத்தில் மீனாட்சி கடத்தைத் தட்டிக்கொண்டிருக்கும் ஒலியைத்தான். பக்கங்கள் வழுவழுப்பாகவும், சுருதி பிசகாமலும் அமையும் வரை அந்த கடத்தை மீனாட்சி தட்டிக் கொண்டே இருக்கிறார், கை வலியைப் பொருட்படுத்தாமல்.


06-IMG_4398-AP-When Meenakshi Beats a Pot 3000 Times(STORY).jpg

வீட்டில் மண்பாண்டங்கள் உயர அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனகடங்கள் மட்டும் நாற்காலியில் வைக்கப்படுகின்றன.


இக்கட்டுரையின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணவும்.

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells You can contact the translator here:

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan