தன்னிடமுள்ள சிறந்த சேலையை அணிந்தபடி அவர் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள வந்திருந்தார். தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மிதிவண்டிப் பயிற்சி முகாமில் கண்ட காட்சி இது. அவர் அங்கு காட்டிய அளவில்லா ஆர்வத்தின் பின்னால் ஒரு காரணமிருக்கிறது. சுரங்கங்களில் கொத்தடிமைகளாக இருந்த அவர் மாவட்டத்தைச் சேர்ந்த 4,000 பேர், தற்பொழுது அதே சுரங்கங்களைக் கட்டுப்படுத்தும் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள். அவர்களுடைய திட்டமிட்ட போராட்டமும், அரசியல் விழிப்புடன் கூடிய எழுத்தறிவும், புதுக்கோட்டையை வாழ்வதற்கு ஏற்ற இடமாக மேம்படுத்தியிருக்கிறது.


கிராமப்புறப் பெண்களின் சிக்கல்கள் என்று எடுத்துக்கொண்டால், சொத்துரிமையும் வளங்கள் மீதான அதிகாரமும்தான் மைய விவாதப் பொருளாக, குறிக்கோளாக இருந்தன; இப்பொழுதும் அவைதான் இருக்கின்றன. கோடிக்கணக்கான கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்றால், இந்த உரிமைகளும் மேம்பட வேண்டும்.

மத்தியப் பிரதேசம், ஜாபுவாவின் கிராம சபையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பெண்கள். உள்ளூர் நிர்வாகத்தில் அவர்களின் அனுபவம் என்பது அவர்களின் அந்தஸ்தையும் சுயமரியாதையையும் உயர்த்தியுள்ளது என்பது உண்மையே. ஆனாலும் அவர்களுடைய சொந்த கிராமங்களில் அவர்களின் செல்வாக்கு என்பது குறைவுதான். அவர்களின் பெயரிலும் கட்டுப்பாட்டிலும் சொத்துக்கள் குறைவாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு அவர்களுக்கு நிலவுரிமை இல்லவே இல்லை. மேலும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல உரிமைகள் கூட அவர்களுக்கு அங்கு கிடையாது. ஒரு தலித் பெண் பஞ்சாயத்துத் தலைவருக்கு அவருடைய வீட்டின் உரிமையாளர் துணைத் தலைவராக வந்தால் எப்படி இருக்கும்? தன்னை விட உயர் பதவியில் இருக்கிறார் என்பதற்காக அந்த தலித் பெண்ணின் சொல்படி அவர் கேட்டுவிடுவாரா? அல்லது அங்கும் ஒரு வீட்டு உரிமையாளரின் தொனியில் அவரைத் தொந்தரவு செய்வாரா? அல்லது ஒரு ஆணாக அப்பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவாரா? இதற்கு முன் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் உடைகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்; வன்புணர்வு செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, அவர்களின் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இவை போன்ற அநீதிகள் நடந்தாலும், கிராம சபைகளில் பெண்கள் அதிசயிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இப்பொழுதே இவ்வளவு சாதனைகள் என்றால், நிலப்பிரபுத்துவ முறை ஒழிந்தால் அவர்களால் இன்னும் என்னவெல்லாம் சாதிக்க முடியும்?


படிப்பறிவு புதுக்கோட்டையில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தின. அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள் எந்த சுரங்கங்களில் அவர்கள் கொத்தடிமையாக இருந்தார்களோ அதே சுரங்கங்களுக்கு அவர்களை முதலாளிகள் ஆக்கின. இந்த வளர்ச்சியின் காரணமாக அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் நிலைமை முன்பைப் போல் இல்லை. தற்பொழுது அவர்கள் தங்களின் உரிமைகளுக்காக எதிர்த்து நின்று போராடக் கற்றுக்கொண்டு விட்டார்கள்!

 நில சீர்திருத்தம் மூலம் கிராமப்புற ஏழைகளோடு சேர்த்து பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாக அவர்களின் நிலவுரிமை, நீர் உரிமை, வன உரிமை ஆகியவை அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மறுவிநியோகம் செய்யப்பட்ட நிலங்களுக்கு உரிமை கொண்டாட அவர்களுக்குக் கூட்டுப் பட்டா வழங்கப்பட வேண்டும். மேலும் அனைத்து நிலங்களிலும் ஆணுக்கு சமமாகப் பெண்களுக்கும் நிலவுரிமை வழங்கப்பட வேண்டும். கிராமத்தின் பொது பயன்பாட்டு இடங்களில் ஏழைகளுக்கும் சம உரிமை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக பொது இடங்கள் விற்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.


இந்த உரிமைகள் எல்லாம் சட்டத்தில் இல்லையென்றால், இந்த உரிமைகள் கிடைக்குமாறு புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சட்டங்கள் இருந்தால் அவற்றை அமல்படுத்துவது கட்டாயம் ஆகிவிடும். இவ்வாறு வளங்கள் தீவிரமாகப் பங்கிடப்படுகையில், நாம் வேறு பல விஷயங்களையும் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு எது திறனுள்ள வேலை, எது திறனற்ற வேலை, எது கடினமான வேலை, எது இலகுவான வேலை, என்று புதிதாக வரையறுக்கப்பட வேண்டும். அதுபோக குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் காரியக்குழுக்களில் பெண் விவசாயக் கூலிகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

 மக்கள் இயக்கங்கள் மூலமே இவையெல்லாம் சாத்தியமாகும். மக்களின் திட்டமிட்ட நடவடிக்கையும், மைய அரசியலில் இவற்றை பேசு பொருளாக்குவதும் மிக அவசியம். மேலும், இந்தியாவின் ஏழைகள் குறித்துப் பேசுகையில், கிராமப்புறப் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களும் அங்கு அங்கீகரிக்கப்பட்டு, விவாதத்தில் அவை முக்கிய இடத்தைப் பெற வேண்டும். கிராமப்புறப் பெண்கள் குறித்துப் பேசாமல் கிராம வாழ்க்கை மேம்பாடு குறித்த உரையாடல்கள் முழுமை பெறாது.

மனிதாபிமான வளர்ச்சித் திட்டங்கள் ஒருபோதும் மக்களின் உரிமைகளுக்கு மாற்று கிடையாது. மற்ற ஏழைகளைப் போலவே கிராமப்புறப் பெண்களுக்கும் கருணை தேவையில்லை. மாறாக அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அந்த உரிமைகளெல்லாம் கிடைப்பதற்காகத்தான் கோடிக்கணக்கான அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 (தமிழில்: விஷ்ணு வரதராஜன்)

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells You can contact the translator here:

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath